சித்தர் வழியில் தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள் 15 A

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

சங்கர நாராயண ஸ்வாமிகள்-தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள் 2


தேவர் குலத்தில் உதித்த அம்மையார் அடியார்களுக்கு அழுது படைப்பதைச்  சாலச் சிறந்தது என்பதை உணர்ந்தவர்கள் ஆவார்கள். அதன்படி நினைத்த போதெல்லாம் சுவாமிகளுக்கு ஐந்து கல் தொலைவைக் கடந்து நடந்தே வந்து வணங்கி அமுது படைப்பார்கள். ஒரு ஞானிக்கு உணவளித்தல் லட்சம் அடியார்களுக்கு உணவளித்த பலனுண்டு என்ற நம்பிக்கை உள்ளம் படைத்தவர். 'சில சமயங்களில் இன்று ஆகாரம் இங்கு தயார் செய்ய வேண்டாம், வெளியிலிருந்து வரும்' என்று சுவாமிகள் சொல்லி விடுவார்கள்.அதன்படியே சிறிது நேரத்திற்குள் புன்னைவனத்தம்மாள் அமுதுடன் வந்து சேர்ந்து விடுவார்கள். இதைப்போன்று பல நிகழ்ச்சியை அறிந்த அங்குள்ள அன்பர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் முக்காலமும் அறிந்த ஞான சித்தர் என்பதை அறிந்து பயபக்தியுடன் சுவாமிகளிடம் பணிந்து அணுகினார்கள்.


திருநெல்வேலியில்  மிக்கேல் என்ற கிறிஸ்து பெரியார் தட்சணாமூர்த்தி சுவாமிகளிடத்தில் நேராக சந்திப்பின்றி மானசீகமாகவே இரண்டு பேர்களும் தொடர்பு கொண்டிருந்ததாக அறியப்படுகின்றது விஞ்ஞான காலத்தில் டெலிவிஷன் எப்படியோ அதுபோன்று ஞான சித்தர்களின் சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன.இதற்கு சான்று தட்சணாமூர்த்தி சுவாமிகள் ஒடுக்கத்திற்கு வடபாகத்தில் கொல்லன் பட்டறை உள்ளது. ஒருநாள் அங்கு மிக்கேல் பெரியார் வந்து ஒருசெப்புக்காசை பட்டறையில் ஊதி பாதிக்காசைத் தங்கமாக்கி ஒருவரிடம் கொடுத்து தட்சணாமூர்த்தி சுவாகிகளிடம் கொடுக்கும்படி அனுப்பி வைத்தார்கள்.அதை வாங்கிய சுவாமிகள்அக்காசை புன்னவனத்தம்மாளிடம் கொடுத்தார்கள். பணிவன்புடன் பெற்றுக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் மல்க நமஸ்கரித்து சுவாமிகள் திருக்கரத்தால் யந்திரமாக எழுதி என் குடும்பத்தில் எந்த விதமான நோய் நொடி பிணிகள் அணுகாவண்ணம் இரசிக்க வேண்டுமென்று பிராத்திக்க,தட்சணாமூர்த்தி சுவாமிகளும் அவ்வண்ணம் எல்லா நன்மைகளையும் அடையப் பெறுவாய் என்றும் இரக்ஷாபந்தன யந்திரம் எழுதி கொடுத்தார்.


மாங்கனி காத்த மகான்


ஒரு சமயம் ஒரு வயோதிக அம்மையார் ஸ்ரீ தட்சணாமூர்த்தி சுவாமிகளுக்கு மாங்கனி கொண்டு வரும் போது நடைபாதையில் மாலை நேரமாகியதால் ஒரு கிராமத்தில் தங்க வேண்டியதாயிற்று. அங்குள்ள ஒரு வீட்டில் பழங்களைக் கொடுத்து எலி கடிக்காமல் பத்திரப்படுத்திக் கொடுக்கும்படி அம்மையார் கேட்டுக்கொள்ள அப்போது வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த ஒரு பையன் ஸ்ரீ தட்சணாமூர்த்தி சுவாமிகள் எலி கடிக்காமல் பழத்தைப் பார்த்துக்கொள்ளட்டுமே என்று சொல்ல அப்படியே சும்மா வைத்து விட்டார்கள்.காலையில் அந்த அம்மையார் பழங்களைப் பெற்று கொண்டு பனையூர் சென்று சுவாமிகளை வணங்கி மாம்பழத்தைக் கொடுக்க,'இரவெல்லாம் எலி விரட்டவைத்துவிட்டாயேஎன்று சொன்னதைக் கேட்டவுடன் அந்த பையன் சொன்னதை நினைந்து அகம் மகிழ்ந்து பயபக்தியோடு வணங்கி நின்றார். பக்தர்களின் பயனறியும் ஞானயோகி என்பதற்கு இந்நிகழ்ச்சி  ஓர் எடுத்துக்காட்டு.


ஸ்ரீ தட்சணாமூர்த்தி சுவாமிகளும் சிவஞானமும்


பனையூருக்கு தென் திசையில் மூன்று கல் தொலைவில் நெல்கட்டுஞ்செவல் என்னும் கிராமம் ஜமீனைச் சார்ந்த ஊர். அங்கிருந்து ஒரு அம்மையார் ஸ்ரீ தட்சணாமூர்த்தி சுவாமிகளின் மீது பக்தி கொண்டு தன் குமாரன் சிவஞானத்தை அழைத்துக்கொண்டு பனையூர் வந்து ஸ்ரீ தட்சணாமூர்த்தி சுவாமிகளை தரிசித்துத்  திருவடி பணிந்து அடியாளுக்கு உபதேசம் செய்து அனுக்கிரகம் செய்யும்படி வேண்டினார். சுவாமிகள் மந்திரம் ஒன்றை உபதேசித்து சில நாட்கள் கழித்து வரப்பணித்தார்கள். பயபக்தியுடன் ஏற்றுச் சென்றார்கள். பின் சில நாட்கள் சுவாமிகளைத் தரிசிக்க தன் மகனை அழைத்துக்கொண்டு பனையூர் வந்து வணங்கினார்கள். அம்மையாரிடம் உபதேசித்த மந்திரத்தைக் கூறும்படி வினவினார்.அம்மையார் கொஞ்சம் தயங்கவே,மகன் சிவஞானம் தங்குதடையின்றி மந்திரத்தைச் சொல்லக் கேட்ட சுவாமிகளுக்குக் கனிவு உண்டாகி தவஞானம் தான் சிவஞானமாக அமையப் பெற்றுள்ளான்.


ஆகவே ஞானம் கிட்டும் அருளுரை செய்ததை சிரமேற் கைகுவித்த வண்ணம் சுவாமிகளை விழுந்து வணங்கி விடைபெற்று தாயும்,மகனும் சென்றார்கள். அன்று முதல் சுவாமிகளின் அருளுரையால் நெறிகளை நழுவா வண்ணம் இல்லற வாழ்வில் ஈடுபாடு கொண்டும் நாளிடையில் ஞான சித்தராக விளங்கி மக்களால் சிவஞான சுவாமிகள் என்றும் அழைக்கப் பெற்றார்.ஒரு சமயம் இட்டை கூடியிருந்த போது அசைவற்ற நிலையில் சுவாசம் இயங்காததை அறிந்த பெற்றோர்கள் அந்நிலை அறியாதவர்களாய் சிவஞானத்தின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதை திரிகாலம் உணர்ந்த ஸ்ரீ தட்சணாமூர்த்தி சுவாமிகள் அறிந்து தனது அண்ணன் சேனாபதி பண்டிதரை அழைத்து, நெல்கட்டுஞ் செவலில் சிவஞானத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது, தாங்கள் சீக்கிரம் அங்கு சென்று இந்த மந்திரத்தை சிவஞானத்தின் செவியில் ஓதும்படி அனுப்பி வைத்தார்கள். சேவாபதி பண்டிதர் வருவதை அறிந்த யாவரும் சற்று திகைத்து நின்றனர். சேனாபதி வேகமாகச் சென்று சிவஞானத்தின் செவியில் ஓதுவதை யாவரும் உற்றுக் கவனித்த வண்ணமாய் நின்றனர்.


சற்று நேரத்தில் தூங்கி விழித்தவர் போல் எழுந்து அங்கு குழுமியிருந்தவர்களைப் பார்த்து அஞ்ஞானம் மாய்ந்து ஞானம் பிழைத்துக்கொண்டது என்று குருநாதரை தரிசிக்கப் புறப்பட்டு சென்றார்.ஸ்ரீ தட்சணாமூர்த்தி சுவாமிகளின் பாதகமலங்களை வணங்கி, மரணப்பிணியினின்று ஆட்கொண்ட கருணைக்கடலே! ஞானச்சுடரே!என்று வணங்கிய சிவஞானத்தை இன்று முதல் தவஞானமாக விளங்குவாயாக என்று  அருள்மொழி மொழிந்ததை அறிந்த மற்றவர்கள் செய்த தவற்றை உணர்ந்து எண்ணி வருந்தினர். ஸ்ரீ தட்சணாமூர்த்தி சுவாமிகள் சிவஞானத்தின் மரண பயத்தை அகற்றி,ஞான சித்த மூர்த்தி என்று வாழ்த்தினார். மரணப்பிடியின்று தடுத்தாட்கொள்ளும் தவவலிமை பொருந்திய மகான்கள் இன்றும் அவ்வப்போது ஆங்காங்கே அவதரித்து பல வியக்கத்தக்க நிகழ்ச்சிகளை புராணம்,இதிகாசம், சித்தாந்தம் என்னும் சாஸ்திரங்களின் மூலமாகவும்,இன்றும் பல இடங்களில் ஞான மூர்த்திகளாக அவதரித்து மக்களின் வினைகளை குறைத்தும், நோய் பிணினின்றும், உலக நன்மைக்காகவும் தங்களை அர்ப்பணித்து வருகிறார்கள். ஸ்ரீ தட்சணாமூர்த்தி சுவாமிகளின் அருளாசி பெற்ற சிவஞான சுவாமிகள் பல ஆண்டுகளுப்பின் சமாதி அடைந்த நாள் மார்கழித் திங்கள் பதினாறாம் நாளாகும். இன்றும் குருபூஜை நடத்தி வருகிறார்கள்.


அற்புதங்கள்


இன்னும் பல அற்புதங்கள் சுவாமிகள் செய்தாக அறிகின்றோம். ஒரு பார்ப்பனப் பெண்ணுக்குப் பேய் கொண்டமையால் சுவாமிகள் கொடுத்த விபூதி கொடுக்க குணமாகியது. அப்பெண் அவளின் வீட்டில் உள்ள உத்திரக்கட்டையைக் கொண்டு வந்து பேச்சியம்மன் என்ற கோயிலைக் கட்டியதாக உள்ள வரலாறு அப்பெண்ணின் பக்தி உணர்வைப் புலப்படுத்துகிறது.


துஷ்ட தேவதை


ஒடுக்கத்திற்கு சிறிது தூரத்தில் வீரபத்திர கோயில் உள்ளது. அந்தத் தேவதை அதன்வழியாகச் செல்லும் பெண்கள் பயப்படுபடி சில சேட்டைகள் புரிந்து வருவதைத்  தாங்காது ஊரிலுள்ள பெரியவர்கள் இது குறித்து ஸ்ரீ தட்சணாமூர்த்தி சுவாமிகளிடம் அறிவித்து அருள் புரிய வேண்டினர். ஒருநாள் அத்தேவதையை அழைத்து இம்மாதிரி துஷ்டத்தனம் செய்யாதிருக்கும்படி எச்சரித்தார்.சில நாட்களுக்கு பின் மீண்டும் தனது துஷ்டத் தனத்தை ஆரம்பித்தது. மீண்டும் அந்தப் பெரியவர்கள் சுவாமிகளிடம்சென்று முறையிட்டனர். அத்தேவதைக்கு இனி விலங்கிட்டால்தான் சரிவரும் என்று எண்ணிய சுவாமிகள் ஒரு நூலை எடுத்து முடிச்சுப்  போட்டார். அதை அறிந்த தேவதை இனி நடக்க இயலாது என்று உணர்ந்து சுவாமிகளிடம்மன்னிப்புக்  கோரியது. ஆனால் போட்டால் போட்டதுதான் என்று சுவாமிகள் கூறிவிட்டார்கள்.திகைப்புற்ற அத்தேவதை திருவிழாக் காலங்கலில் வீதியுலாவிற்காவது நடந்து செல்ல தடையில்லா அருள் புரியும்படி வேண்டுகோளுக்கு இணங்கும்படி கேட்க அவ்வண்ணமே அருள் வரும் சமயம் உனது சரீரம் பூமியில் விழும், அப்போது அங்குள்ள யாரேனும் ஒடுக்கத்தின் விபூதி போட்டால் எழுந்திருப்பார் என்று கட்டளை இட்டார்கள். அதன்படியே இன்றும் நடந்து வரும் காட்சியை வருடாந்திர திருவிழாவின் போது கண் கூடாகக் காணலாம் என்கிறார்கள்.


மையோட்டம் பார்த்த நிகழ்ச்சி


பனையூருக்கு மேற்கே சிவகிரி என்ற ஊரில் போத்தலிங்கம் என்னும் ஒரு மிராசுதார் புகழுடன் வாழ்ந்து வந்தார். அவருடைய குழந்தைக்கு உடல் நலக்குறைவால் பல வைத்தியம் செய்தும் பயனில்லாததை அறிந்து பனையூர் சென்று ஸ்ரீ தட்சணாமூர்த்தி சுவாமிகளை எப்படியாவது அழைத்து வந்தால் குழந்தை பிழைக்கும் எனக்கருதி வில வண்டியுடன் பனையூர் வந்து சுவாமிகளை வணங்கி குழந்தையின் நிலையை அறிவித்து காத்தருளும்படி மிகவும் பணிவன்புடன் வேண்டினார்கள். சுவாமிகள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியில் செல்வதில்லை. இருப்பினும் குழந்தையின் பொருட்டு இசைவு கூறி நாம் மாலையில் வருவோம் என்று கூறி வில் வண்டியைத்  திருப்பிகொண்டு போகும்படி அறிவித்து விட்டார்கள். அந்தி நேரத்தில் சுவாமிகள் புறப்படுவதை அறிந்த மையோட்டம் பார்க்கும் ஓர் அன்பர் சுவாமிகள் எப்படிச் செல்கிறார் என்ற நிகழ்ச்சியை மையோட்டத்தில் பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்தவாறு சென்று கொண்டிருந்தார்கள்.


மிராசுதாரர் தெட்சணாமூர்த்தி சுவாமிகளின் வருகையை எதிர்பார்த்த வண்ணம் இருக்கும் போது சுவாமிகள் வருவதை அறிந்து மன மகிழ்ச்சியுடன் வரவேற்று வணங்கி, உபசரித்து குழந்தையை சுவாமிகளின்திருவடி முன் வைத்து வணங்கி நின்றனர்..,

புணர்ந்த பாவமெலாம் பரி பூரணம்

உணர்ந்த ஞானி விழிபட ஓடுமே

என்பது போல் சுவாமிகளும் தமது திருவருள் பார்வையால் பஞ்சாட்சரமாகிய திருநீற்றைத் தடவியவுடன் குழந்தையின் பிணி நீங்கியதை அறிந்த மிராசுதாரும் குடும்பத்தாரும் மிகுந்த மனமகிழ்ச்சி அடைந்து, வணங்கி காணிக்கை வைத்தனர். சுவாமிகள் காணிக்கையை ஏற்றுக் கொள்ளாமல் குரு பூஜை அன்று அடியார்களுக்கு அன்னதானம் செய்யும்படி ஆணையிட்டுப்  புறப்பட்டார்கள். மறுநாள் மையோட்டம் பார்த்த அன்பர் ஒடுக்கத்திற்கு வந்து ஒன்றும் அறியாதவரைப் போல் வணங்கினார். சுவாமிகளின் மகிமை அறியாது பரிசோதித்த பலன் கைமேல் கிட்டியது. சுவாமிகள் திருநீற்றை அன்பரின் நெற்றியில் வைத்தவுடன் மையோட்டம் மாயமாய் மறைந்து விட்டது. தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரினார்.



மந்திரவாதியின் மமதை


பனையூரில் மந்திரவாதி ஒருவர் இருந்தார். அவ்வூரில் செட்டியார் ஒருவர் எண்ணெய் ஆட்டும் தொழிலை செய்து வந்தார். மந்திரவாதி அங்கு போய் எள் புண்ணாக்கு கேட்கவே கொடுத்தார். அடிக்கடி கேட்கவே, 'இப்படி எங்களுக்கு தொல்லைகள் கொடுக்ககூடாது!' என்றார் செட்டியார். மந்திரவாதி கோபமாகப் போய்விட்டார். ஒரு நாள் திடீரென செக்கின் உலக்கை இரண்டாகப் பிளந்துவிட்டது. மீண்டும் ஓர் உலக்கை தயார் செய்து ஓட்டும் போது மீண்டும் அதே நிலை ஏற்பட்டதை அறிந்து மந்திரவாதியின் செய்கைதான் என்று உணர்ந்து மனவேதனை அடைந்து என்ன செய்வதென்று அறியாது திகைப்படைந்தார் செட்டியார். அது சமயம் தெட்சணாமூர்த்தி சுவாமிகளின் நினைவு வந்து ஒடுக்கத்திற்குச் சென்று சுவாமிகளை வணங்கி முன் நடந்ததை சொன்னார். அதற்கு சுவாமிகளும் கருணை கூர்ந்து ஆவன செய்வோம். மீண்டும் ஓர் உலக்கை தயார் செய்து தொழிலை ஆரம்பிக்கும்படி ஆசி கூறியதை கேட்டு மனசாந்தி அடைந்து சென்றார்.


சில நாட்கள் கழித்து செக்கு ஆட்ட ஆரம்பித்தார்.முன் போலவே உலக்கை பிளப்பதை அறிந்து மனவேதனையுடன் தெட்சணாமூர்த்தி சுவாமிகள்தான் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினார். அப்போது சுவாமிகள் சுவாமிகள் திடீரென இரண்டு கரங்களையும் இறுகப் பிடிக்கவே உலக்கை ஒன்று சேர்வதை அறிந்தார். இதனைக் கண்டு ஆனந்தமடைந்த செட்டியார் ஒடுக்கத்திற்கு வந்து சுவாமிகளை வணங்கினார். அங்கிருந்த அன்பர்கள் சுவாமிகள் இரு கரங்களை இறுகப் பிடித்த காரனத்தை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார்கள். சிறிது நேரத்தில் மந்திரவாதி ஒடுக்கத்திற்கு வந்து தெட்சணாமூர்த்தி சுவாமிகளை வணங்கி தங்கள் கரத்தால் நான் தாங்ககொண வேதனை அடைந்து விட்டேன். மன்னிக்க வேண்டுகிறேன் என்று பிரார்த்தனை செய்தான். ஏழை மக்களைத்  துன்புறுத்தக் கூடாது என்று எச்சரித்து அனுப்பிவைத்தார். ஒடுக்கத்திற்குச் செட்டியார் காணிக்கையாக அபிஷேகத்திற்கும், தீபத்திற்கும் எண்ணெய் கொடுத்து வந்தார். இன்றும் அவரது வாரிசுதாரர்கள் தொடர்ந்து எண்ணை கொடுத்துவருகிறார்கள்.



சிறுபெண் வடிவில் செல்லியம்மன்


ஸ்ரீ தெட்சணாமூர்த்தி சுவாமிகள் மாதாந்திர பெளர்ணமி பூஜை செய்து முடிந்தவுடன் கிராம தேவதையாகிய செல்லியார் அம்மனைச்  செல்லமாக செல்லி என்று அழைத்ததும் சிறு பெண் குழந்தை வடிவில் வந்து சுவாமிகள் தரும் மல்லிகைப் பூப்பந்தத்தை பெற்றுச் செல்வதை சில பக்தர்களின் கண்ணிற்குத் தெரிந்ததை அறிந்து இக்காட்சியால் மன மகிழ்ச்சி அடைந்தார்கள். தவ வலிமை பெற்ற யோக ஞானிகளின் குரலுக்கு உலக அன்னை இசைந்து பூஜையை ஏற்றுக் கொள்ளுவது என்றால் சத்தியத் தாயின் தண்ணருள் பெற்றவர்கள் என்பதற்கு இந்நிகழ்ச்சியே சான்று என வணங்கி மகிழ்ச்சியடைந்தார்கள். அன்று கல்லாலின் கீழே அமர்ந்து தென் திசை நோக்கி ஸ்ரீ தெட்சணாமூர்த்தியாக ஆலம் உண்ட சிவபெருமான் சரியை,கிரியை,யோகம்,ஞானம் ஆகிய நான்கு நெறிகளைச் சனகாதியர் நால்வருக்கு உபதேசித்தார். ஞான நெறியை மேலான நிலையில் சின்முத்திரை காட்டிச் சொல்லாமல் சொன்னார். அத்தகைய பெருமானின் பெயரை கொண்ட தெட்சணாமூர்த்தி சுவாமிகள் தவ மூர்த்தியாகவும், யோக சித்தராகவும் விளங்கினார்.


சமாதி நிலை.


ஸ்ரீ தெட்சணாமூர்த்தி சுவாமிகள் முக்கியமான அன்பர்களை அழைத்து இன்று நமக்கு சமாதி நிலை வரப்பெற்ற படியால் அதற்குரிய செய்முறைகளைத்  தெரிவிக்கிறோம்.அதன்படி செய்யவும் என்று அறிவித்து 1890 ஆண்டு[தமிழ் விக்ருதி கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி] குருவாரம் அமரபக்ஷம் சதுர்த்தசி அமாவாசை நாளில் தீபம் வைத்து நிஷ்ட்டை கூடுவதற்குமுன், ஒடுக்கமாகி  நாற்பதாம் நாள்இடது பாகத்தில் புற்று வளரும்.அது குறிப்பிட்ட அளவோடு நிற்கும்.அதைச் சேதப்படாமல் காத்துக் கொள்வீர்களாக என்று அறிவுரை செய்து சிவ சொரூபமாக ஜீவ சமாதி நிலையில் மவுன குருவாக அமர்ந்தார்கள். பலரும் தரிசித்து வணங்கி நின்ற நாளாகிய 28-ஆம் நாள் சமாதிக்கு முறைப்படி பூஜையும் அன்னதானங்களும் அடியார்களுக்கு மகேஸ்வர பூஜையும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.


பனையூர் என்பது நெல்லை கட்டபொம்மன் மாவட்டத்திலுள்ள சங்கரன்  கோவிலுக்கு வடமேற்கில் 2 மைல் தூரத்திலும், கரிவலம் வந்த நல்லூருக்கு மேற்கே 4 மைல் தூரத்திலும் இருக்கிறது. இராஜபாளைத்திலிருந்து செல்லலாம்


எழுதித் தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்


--Geetha Sambasivam 14:07, 12 மார்ச் 2011 (UTC)




பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 17 மார்ச் 2011, 11:55 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,007 முறைகள் அணுகப்பட்டது.