சித்தர் வழியில் தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிகள் 15மரபு விக்கி இருந்துசங்கர நாராயண சுவாமிகள் -தெட்சணாமூர்த்தி சுவாமிகள் -1
மானிடராய் பிறப்பது அரிது. அதனினும் குறை நீங்கிப் பிறப்பது மிக அரிது. அரிதாய்க் கிடைக்கப் பெற்றமானிடப் பிறவியில் அடையத்தக்கவை எது? இன்பத்தை அடைய வகையறிய வேண்டும்.அதனைத்தான் எல்லோரும் விரும்புவது. அத்தகைய மார்க்கம் பெரியோர்களின் ஆசியும்,சித்தர்கள்-ஞானிகளின் அருளும், தெய்வ வழிபாடும்,கருணையும், தானதருமமும், நற்காரியங்களுமாகும். பக்தி மார்க்கங்களைப் பின்பற்றவும், துன்பம் நீங்கி இன்புற்று வாழவும் அவ்வப்போது ஞானிகளும் சைவப் பெரியோர்களும்,சித்தர்களும் அவதரித்து மக்கள் நலம் பெற அருள் மொழிகளை அள்ளித் தந்துள்ளார்கள். இன்றும் தமிழ்நாட்டில் பல பாகங்களில் மகான்கள் ஜீவசமாதி அடைந்து அப்பகுதி வாழ் மக்களுக்கு அருள்பாலித்து,பிரசித்து வருவதை இன்றும் நாம் அறிந்து வருகிறோம். நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் வட்டம் இராஜபாளையத்திற்கு அருகில் பனையூர் என்ற கிராமத்தில் அகஸ்தியர் அருளைப் பெற்ற சங்கர நாராயண சுவாமிகள்- தெட்சணாமூர்த்தி சுவாமிகள் (தந்தையும்-மகனும்) என்னும் சாதுக்கள் ஜீவசமாதி அடைந்துள்ளார்கள்.
பாண்டிய வள நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சங்கரன் கோயிலுக்கு அண்மையில் [இராஜபாளையம்] வடமேற்கு திசையில் பஞ்சத் தலங்களில் ஒன்றாகிய வாயுத் தலமாக விளங்கும் தென்மலை என்ற சிற்றூரில் வாழ்ந்த வேளாளர் குலத்தைச் சேர்ந்த வெண்ண பெருமாள் பிள்ளை--பாடகவல்லி என்னும் தம்பதியர்களுக்கு திருவருளால் பிறந்தவரே தவத்திரு சங்கர நாராயண சுவாமிகள். இவர் சங்கரேஸ்பரர் திருவருளால் பிறந்தவராகையால் சங்கர நாராயணன் என்னும் பெயர் சூட்டப்பெற்றார். இவருக்கு அருணாசலம்,கந்தசாமி என்னும் இரண்டு சகோதரர்களும் உண்டு. சங்கர நாராயணர் பள்ளியில் கல்வி பயிலும் போது ஒருநாள் பள்ளியின் வெளியிலிருந்து, சங்கர நாராயணா! என்று அழைத்த குரலைக் கேட்ட மாத்திரத்தில் உள்ளத்தில் தன்னை அறியாது ஓர் உணர்வுடன் ஆசிரியரிடம் விடைபெற்று வெளியில் வந்தார். ஒரு வயோதிகமான முனிவர் நிற்பதைக் கண்டார்.அருள் கனிந்த அம்மகானுபாவரின் திருஷ்டியால் மனம் கனிந்து நெகிழ்ந்து அம்முனிவரின் பாதகமலங்களில் வீழ்ந்து வணங்கி நின்றார். ஊருக்குமேல் பாரிசத்திலுள்ள குளத்திற்கு அழைத்துச் சென்று கரைமேல் இருக்கச் சொல்லிவிட்டு தண்ணீருக்குள் மூழ்கிய முனிபுங்கவர் வெளியில் வெகுநேரமாக வராததை அறிந்த சங்கர நாராயணர் திடுக்கிட்டு ஒன்றும் புரியாதவராய் வீட்டை நோக்கிப் புறப்பட்டார்.
அதையறிந்த முனிபுங்கவர் தண்ணீருக்கு மேல் வந்து சங்கர நாராயணா! என்று அழைத்தார்.வியந்து திரும்பினார்.அருகில் வந்து குளத்தங்கரையிலுள்ள விநாயகர் முன்னிலையில் அமரச் செய்து ஞானோபதேசம் செய்வித்து பின்னர் பொதிகை மலையை நோக்கி நின்று மறைந்தார். இவ்வாறு சங்கர நாராயணருக்கு ஞான வாழ்வில் நாட்ட மேற்படச் செய்த முனிபுங்கவர் ஸ்ரீ ராமகிரி என்னும், பொதிகைமலை ஞானியான அகத்தியரே ஸ்ரீராமகிரி முனிபுங்கவர் என்னும் திருப்பெயர் நின்றார் என்று சொல்லப்படுகிறது. சங்கர நாராயணருடைய வாழ்க்கையில் ஞானகுருவாகத் தோன்றியவர் தென்னாட்டுச் சித்தர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். ஞானோபதேசம் பெற்ற அன்று முதல் சங்கர நாராயணர் பள்ளிச் செல்வதை விட்டு தான் உபதேசம் பெற்ற குளத்தங்கரையிலுள்ள விநாயகர் கோவில் முன் அமர்ந்து தவம் செய்து வரலானார். அன்று முதல் சங்கர விநாயகர் என்று சான்றோர்கள் வழிபாடு செய்து வரலாயினர்.ஞான குருவின் திருவருளாலும் தமது தவவலிமையாலும் யான் எனது என்னும் பற்றுக்களை நீக்கி உலகியல் இன்பங்களில் வெறுப்படைந்து மனதின் கண்ணே எப்போதும் குருநாதரின் நினைவாகப் புலன்களைத் தன் வசப்படுத்தித் தவத்திலே தன்னை மறந்த நிலையை உணர்ந்தவராகக் காணப்பட்டார்.
மகன் துறவு வாழ்வில் நாட்டங் கொண்டிருப்பதைப் பெற்றோர்கள் அறிந்திருந்தும் குடும்பத்தில் மூத்த பிள்ளையாக உள்ளபடியால் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்தார்கள். இதையறிந்த சங்கரநாராயணர் பெற்றோர்களின் முயற்சிக்குச் செவி சாய்க்காததை அறிந்து மிகுந்த சஞ்சலம் அடைந்தவராக இருந்தார்கள்.இந்நிலையில் ஞானகுருவாகிய இராமகிரி முனிவர் ஞான திருட்டியால் அறிந்து, சங்கர நாராயணின் பெற்றோர்களுடைய மனக்கவலையை நீக்கும் பொருட்டு பொதிகையில் இருந்து தென்மலைக் கிராமத்திற்கு வந்து சங்கர நாராயணர் முன் தோன்றினார். குருநாதரைக் கண்டவுடன் தண்டம்போல் சாஷ்ட்டாங்க வீழ்ந்து நமஸ்காரம் செய்து வணங்கி நின்றார். பெற்றோர்களும் மனமகிழ்ந்து ஞானகுருநாதரை தரிசித்து, எங்கள் மன விருப்பத்தை நிறைவேற்றி வைக்கும்படி பிரார்த்திக்கின்றோம் என்றனர். சங்கர நாராயணா! இல்லற வாழ்வில் பயனை அறிவாயாக. குடும்ப வாழ்வில் ஈடுபாடுள்ளவர்கள் மனம்,வாக்கு,காயம் ஆகியவற்றால் தூயவராகி நின்று துறவியரைவிட மேலான பதவிகளைப் பெற முடியும். என்று விளக்கினார். நமது திருவருட்செல்வர்கள் பலரும் நல்லறமாய் இல்லற நெறியில் ஈடுபட்டவர்கள்தானே என்று அறிவுறுத்திக் கூறினார்.
சங்கர நாராயணருக்குச் சில ஐயப்பாடுகள் தோன்றின.குரு நாதரை வணங்கி குருநாதா தங்கள் உபதேசத்திற்கிணங்க நான் இல்லறம் நடத்தச் சித்தமாய் இருக்கிறேன். ஆனால் ஒரு தொழிலும் தெரியாத நான் குடும்ப பரிபாலனம் நடப்பதற்கு யாது செய்வது? அப்படி வாழுங்காலத்தில் உலக பந்த பாசங்களில் சிக்குண்டு மீளும் வழியறியாது போய் விட்டால் என் செய்வது? என்றுரைந்து மயங்கிய போது குருநாதர் சங்கர நாராயணரை நோக்கி, உன் குடும்ப வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களை சமமாகப் பாவித்துப் பழகிக்கொள்வாயாக; எதனையும் ஐயமறத் தெளிந்து அறிந்து கொள்' தெளிந்த சிந்தனையுடன் இருக்கப் பழகுக; ஆசைகள் காட்டிய வழியில் சென்று விடாது மனதைக் கட்டுப்படுத்திக் கொள்; பயத்தைச் சுட்டு விடுக; படிப்படியாக பஞ்ச பூதங்களும் உனக்கு அடிமையாகும்!' என்று அறிவுரை செய்து வானத்தை இவ்வுலகிலிருந்து தீண்டும் வகை உணர்த்தினார்.
-- ஸ்ரீ குருநாதரின் திருவருளால் பெற்றோர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் பொருட்டு சங்கர நாராயணர் தனது திருமணத்திற்கு இசைவு கூறினார். தவத்தின் பயனாக தவசிமுத்தம்மாள் என்னும் பெண்மணியை உற்றார், ஊரார்கள் வாழ்த்தத் திருமணம் இனிது நிறைவு பெற்றது. இல்லறத்தில் நாட்டமில்லாது தவநிலையில் வாழ்ந்து வந்ததை அறிந்த மக்கள் சங்கர நாராயண சாமிகள் என்று எல்லோராலும் அழைக்கப்பெற்றார். இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன. இதுகாறும் மக்கட்பேறு வாய்க்கவில்லையே என்று பெற்றோர்கள் குருநாதரையும் இறைவனையும் பிரார்த்தனை செய்து மிகவும் மனச்சோர்வு அடைந்தனர். சூரிய உதயத்தில் சங்கர நாராயண சுவாமிகள் வயல் வழியாகச் சென்று கொண்டிருந்த சமயம் பசு கன்றைத் தேடி வருவது போல் குருநாதர் இராமகிரியார் உழுத சேற்று நிலத்தில் நடந்து வருவதை அறிந்து சீடர் எதிர்நோக்கி விரைந்து சென்று சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கி எழுந்து நின்றபோது உடம்பில் சேறு ஒட்டாததை அறிந்த குருநாதர் நிஷ்க்காமிய சுடரே உன் நிமித்தம் இங்கு வந்துள்ளேன் என்றார்.பின் குருவும்,சீடரும் இல்லத்திற்கு சென்றார்கள்.
குரு நாதரை தவசிமுத்தம்மாள் வரவேற்று பாதத்தில் விழுந்து வணக்கம் செய்து வணங்கி,நிற்க - அது சமயம் சங்கர நாராயண சுவாமிகளின் பெற்றோர்கள் வெளியூர் சென்று விட்டதால் தவசி முத்தம்மாளை அன்று தான் மனதில் நினைவு கொண்டு குருநாதருக்கு அமுது தயார் செய்யும்படி உத்தரவுவிட்டார். தவசிமுத்தம்மாள் ஆனந்தம் பொங்க சிறிது நேரத்திற்குள் சமையலை முடித்து உணவருந்தும்படி பணிவன்புடன் அழைக்க மனமகிழ்ச்சியோடு அமுது படைத்தார் தவசிமுத்தம்மாள்.முன்பு கூறியபடி இல்லற வாழ்வில் நின்று ஆன்ம லாபத்தை பெறுவார் என்று அருள் புரிந்து தத்துவ நிலையை உணர்த்தி. தெளிந்த மனதுடன் இருப்பாயாக என்று சொல்லி மறைந்தார். வெளியூர் சென்றிருந்த பெற்றோர்கள் வந்ததும் நடந்த நிகழ்ச்சிகளை தவசிமுத்தம்மாள் கூற, 'அம்மா...நீ கொடுத்து வைத்தவள். குருநாதருக்கும் உன் நாயகனுக்கும் பல ஆண்டுகளுக்குப் பிறகு அமுது படைத்த நிகழ்ச்சியைக் காணக் கொடுத்து வைக்கவில்லையே'என்று வருந்தினார்கள்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு முறையே தவசி முத்தம்மாளுக்கு நான்கு ஆண் மக்களும்,ஒரு பெண் மகவும் பிறந்தனர்.வேலுச்சாமி,இராமசாமி, சேனாபதி,தட்சணாமூர்த்தி, ஆச்சியம்மாள் இவர்களுக்கு தந்தையாகிய சங்கர நாராயண சுவாமிகளே குருவாக விளங்கினார். இவர்கள் வைத்தியம்,சிலம்பம்,மாந்தீரிகம் போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்று விளங்கினார்கள். சில ஆண்டுகளுக்குப் பின் தவசிமுத்தம்மாள் இறைவனடி சேர்ந்தார். குருநாதர் முன் கூறியது போல் நான்காவது மகனாகிய தட்சணாமூர்த்தியிடம் குழந்தைப் பருவத்திலேயே ஞான மார்க்கத்திற்குரிய குணாதிசயங்களை அறிந்த தந்தை சங்கரநாராயண சுவாமிகள் அப்பிள்ளையை தமது அருகிலேயே வைத்து போதனை அளித்து வந்தார். தந்தையைப் போல் இளமையிலேயே தவவலிமை பெற்று வரலாயினார்.
இந்நிலையில் சங்கர நாராயண சுவாமிகளுக்கு தமது குருநாதரை தரிசிக்க வேண்டும் என்ற அவா உண்டாயிற்று. வைராக்கிய சித்தத்துடன் பொதிகை மலைக்குச் சென்றார். குருநாதரைக் காணும் வகையறியாது திகைத்தபோது இருள் சூழ்ந்த நேரமாகியதை அறிந்து குருநாதர் சீடரின் முன் ஒரு ஜோதியை தோற்று வித்தார். குருநாதரே ஜோதிவடிவாக அருட்காட்சி அளித்துள்ளார் என்று மனோதிடமடைந்து ஜோதி முன் செல்ல சங்கர நாராயண சுவாமிகள் பின் செல்ல அந்த ஜோதி பேரொளியானது.சிறிது தூரத்தில் ஒரு குகையின் அருகில் சென்று மறைய ஸ்ரீ ஞானகுரு இராமகிரிநாதர் சிவசொரூபமாகக் காட்சி அளித்தார். அதைக் கண்ட சங்கர நாராயண சுவாமிகள் குருநாதரை வணங்கி அகமகிழ்ந்து நின்றார். சீடனின் தவநிலையை அறிந்த குருநாதர் அருளுரை கூறி, 'இனிச் சிரமமில்லாது நாமே வந்து காட்சி கொடுப்போம்' என்றும்,நாளைக் குறிப்பிட்டு தென்மலைக் கிராமத்தை விட்டு நீங்கி [தாலையூர்] இப்போது பனையூர் என்ற இடத்தைக் குறிப்பிட்டுக், 'குடில் அமைத்துக் கொள்வாயாக' என்றும், நாம் கூறியவாறு சித்திரைத் திங்கள் இருபதாந் தேதியன்று ஊரின் மேற்பாரிசத்தில் வந்து காட்சி அளிப்பதாகவும் அருளுரை செய்து அனுப்பி வைத்தார்.சங்கர நாராயண சுவாமிகளுக்கு ஆப்த நண்பராக தென்மலையில் தன்னுடன் இருந்த சுப்பிரமணிய சுவாமி என்ற சாது உறுதுணையாக இருந்துள்ளார். இந்த நிகழ்ச்சிகளை அவரிடம் கூறியுள்ளார்.
குருநாதன் ஆணைப்படி குடில் அமைத்து முன் போலவே பிணி முதலிய பாவ நோய்களுள்ள மக்களுக்கு குருநாதன் அருளிய ரக்ஷாபந்தன யந்திரம் எழுதிக் கட்டியும்,அதில் வரும் பொருளைக் கொண்டு சுகஜீவனம் செய்து கொண்டும், தந்தையும்,மகனும் நிஷ்ட்டையிலிருந்தும் தவம் செய்து வரலானார்கள். சித்திரைத் திங்கள் 20-ஆம் நாள் சங்கர நாராயண சுவாமிகள் குருநாதர் முன் அருளியபடி காட்சிக் காண எதிர்நோக்கி நின்றார். குறிப்பிட்டபடி குருநாதர் எழுந்தருளி காட்சி அளித்தார். வணங்கி வரவேற்று ஆஸ்ரமத்திற்கு அழைத்து வந்து அன்னம் பாலித்து மஹேஸ்வர பூஜை செய்வித்து உபசரித்துஅனுப்பி வைத்தார். [அன்று முதல் இன்று வரை ஆண்டுதோறும் சித்திரை திங்கள் 20-ஆம் நாள் மேளதாளத்துடன் சங்கர நாராயண சுவாமிகளுக்கு வெள்ளிக் கும்பமும் வைத்து அபிஷேகம்,அலங்காரம்,அன்னதானமும், மஹேஸ்வரப் பூஜையும் நிகழ்த்திய பின்,மாலையில் இரக்ஷாபந்தன் யந்திரம் கட்டுதலும்,அதனை மக்கள் அணிந்து பாவநோய் அகல பிராத்தனை செய்துக்கொள்வதும் இன்றும் மிகச் சிறப்பாக விழா கோலத்துடன் நடந்து வருகிறது]
கி.பி 1835 கார்த்திகை மாதம் 24-ஆம் நாள் சில முக்கிய அன்பர்களை அழைத்து தனது ஜீவசமாதி குறித்து அறிவித்தார்.விடிவதற்குள் சமாதி செய்து முடிக்க வேண்டும் என்று ஆனையிட்டு ஜமீனுக்குத் தெரிவிக்கும்படி கூறிவிட்டு, நிஷ்டையில் அமர்ந்துவிட்டார். ஜீவசமாதியாகக் குறிப்பிட்ட இடம் ஊரின் பாகமாகவும்,ஜமீனைச் சார்ந்த நிலமாகவும் இருப்பதாலும், ஜமீன்தார் இதனை ஏற்றுக்கொள்வரா என்ற ஐயப்பாட்டுடன் மகன் தட்சாணமூர்த்தி பனையூர் கிராமத்திற்கு தெற்கு மூன்று கல் தொலையிலிருக்கும் நெல்கட்டுஞ் செவல் கிராமத்திற்கு புறப்பட்டு சென்றார். அரண்மனைக்கு ஒரு சோதி வடிவம் வந்து கொண்டிருப்பதாக ஜமீந்தார் பார்வைக்குப் பட்டது. வடதிசையிலிருந்து சோதி அரண்மனை நோக்கி வந்தமையால் அது ஒடுக்கத்திலிருந்து தட்சாணமூர்த்தி சுவாமிதான் என்று அறிந்து என்ன நடக்குமோ என மனக்கவலை அடைந்தார்கள்.ஊரின் சமீபம் வந்ததும் சோதி மறைந்து சாந்த சொரூமாக சாது வருவதை அறிந்து மகிழ்ச்சியடைந்தார்.
ஒடுக்கத்தின் நிலையை அறிந்து தங்களுடைய ஜமீன் இடத்தில் ஒரு ஞானி சமாதி அமைவது என்றால் அது பூரவ புண்ணியம் என்றும்,அது ஜமீன் செய்த புண்ணியம்,அதைச் சார்ந்த மக்களுக்கும், கிராமத்திற்கும் நன்மை அடையச் செய்வதுதான் ஞானியின் சித்தம் என்று அறிந்து மகிழ்ச்சி அடைந்து ஒப்புதல் அளித்தார். சங்கர நாராயண சுவாமிகளின் ஜீவ ஒடுக்கத்திற்கு வேண்டிய காரியங்களை மகனாகிய தட்சாணமூர்த்தி சுவாமிகளே செய்தார். அப்படியே வரும் நாட்களிலும் செய்து வந்தார். தட்சாணமூர்த்தி சுவாமிகளுக்கு பல அன்பர்கள் அமுது படைத்து அருளாசி பெறுதல் போன்ற தெய்வீக மார்க்கங்களில் உள்ளம் கலந்து உவப்பெய்தி ஈடுபாடு உடைவர்களாகவும்,நற்பயன்களைப் பெற்றிட மகானாகிய சுவாமிகளில் மேல் அன்புள்ளம் பெருக வணங்கி நின்றனர்.
திருகால ஞான சித்தர். ஸ்ரீ தட்சணாமூர்த்தி சுவாமிகளுக்கு அழுது படைத்து நல்லாசி பெற்றவர்கள் பலர். அவர்களுள் ஒருவரே புன்னவனத்து அம்மையார். சுவாமிகளிடத்தில் அளவு கடந்து அன்புள்ளங் கொண்டவர் .பனையூருக்கு வடமேற்கு திசையில் ஐந்து கல் தொலையில் இராயகிரி என்ற ஊரைச் சார்ந்தவர். பெரு நிலக்கிழாரான போத்திலிங்கத் தேவரின் அன்னையும் ஆவார்கள். தொடரும்.
எழுதித் தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்.
--Geetha Sambasivam 13:46, 12 மார்ச் 2011 (UTC) |