சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம்! அஹோபிலம் 2

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம்- அஹோபிலம் 2

திருமங்கை ஆழ்வார் காலத்திலே இருந்தே இந்தச் சிங்கவேள் குன்றம் என்னும் அஹோபிலம் செல்ல முடியாத ஓர் இடமாகவே இருந்து வந்துள்ளது.


அங்கண்ஞாலமஞ்ச அங்கோரளரியாய் அவுணன்
பொங்க வாகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம்
பைங்கணானைக் கொம்பு கொண்டு பத்திமையால், அடிக்கீழ்ச்
செங்கணாளியிட்டிறைஞ்சும் சிங்கவேள் குன்றமே.

அலைத்த பேழ்வாய் வாளெயிற்றோர்க்களரியாய், அவுணன்
கொலைக்கையாளன் நெஞ்சிடந்த கூருகிராளனிடம்
மலைத்த செல் சாத்தறிந்த பூசல் வன்துடிவாய் கடுப்ப,
சிலைக்கை வேடர்த்தெழிப்பறாத சிங்கவேள் குன்றமே.


இப்போதும் கரடி, சிறுத்தைகள், புலி போன்ற துஷ்ட மிருகங்கள் காட்டினுள் மறைந்து இருப்பதாகவே சொல்கின்றனர்.காட்டினுள் செல்ல வழிகாட்டி இல்லாமல் செல்ல முடியாது. நாம் செல்லும் பயண அமைப்பாளர்களே வழிகாட்டிகளையும் ஏற்பாடு செய்து தருகின்றனர். தனியாகச் செல்லுவது அவ்வளவு உசிதம் அன்று. அஹோபிலம் மடமே வழிகாட்டிகளையும் ஏற்பாடு செய்து தருகின்றது. அதற்கு முந்நூறு ரூபாயில் இருந்து செலவு ஆகும். அஹோபிலம் மடத்தின் தொலை பேசி எண்கள்: 08519- 252025, 252045.


ஒன்பது நரசிம்மர்களில் முதலாவது ஜ்வாலா நரசிம்மர் எனச் சொல்கின்றனர். ஆனால் பயண வசதிக்காக நாங்கள் முதல் நாள் பயணத்தில் ஜீப் என்று பெயரளவில் சொல்லப் படும் வாகனம் செல்லுமிடத்தில் உள்ள நரசிம்மர்களையே தரிசித்தோம். டிராக்டர் போன்ற வாகனங்கள் மட்டுமே செல்லக் கூடிய கரடு, முரடான மலைப்பாதை. பாதைனு சும்மாச் சொல்றேன். உண்மையில் அந்த வண்டிகள் சென்று, சென்று ஏற்பட்டதொரு அடையாளமே அவை. அவற்றில் தான் செல்லவேண்டும். என்றாலும் இந்தப் பாதை கொஞ்சம் பரவாயில்லை எனலாம். இதுக்கு அப்புறம் வரும் பாருங்க ஒரு பாதை. உடம்பையே உலுக்கி எடுக்கும். தூசி பறக்கும். வட மாநிலங்களில் வரும் புழுதிய்புயல் தான் ஏற்பட்டுவிட்டதோ என்ற ஐயம் வரும். இத்தகையதொரு கடினமான பயணங்களிலே முதலில் நாம் தரிசிப்பது சத்ரவடநரசிம்மர் ஆகும்.

2ahobilam4.jpg

இந்த ஒன்பது நரசிம்மர்களிலேயே மிக மிக அழகானவர் இவரே. குடையைப் போலக் கவிந்த ஆலமரத்தடியில் வீற்றிருப்பதால் இவர் சத்ரவட நரசிம்மர் எனப்படுகின்றார். சுந்தர புருஷனாக, ஆடை, அலங்காரங்கள், ஆபரணங்கள் தரித்து நரசிம்மர் நம்மைப் பார்த்து "எங்கே வந்தே?" என்று கேட்கும் நம் தாத்தாவைப் போல் சிரித்துக் கொண்டு காட்சி அளிக்கின்றார். தேவ சபையில் உள்ள ஆஹா, ஊஹூ என்னும் இரு கந்தர்வர்களும் கோபத்தினால் கொந்தளித்துக் கொண்டிருந்த நரசிம்மத்தின் கோபத்தைத் தம் இசையால் போக்கியதாகவும், அவர்கள் இசையைக் கேட்டு மகிழ்ந்த வண்ணம் இவர் காட்சி அளிப்பதாகவும் ஐதீகம். சங்கு, சக்கரங்களைத் தரித்துக் கொண்டு. வலதுகீழ்க்கரம் அபய முத்திரையும், இடது கீழ்க்கரம் தொடையில் பதிந்து தாளம் போட்டுக் கொண்டிருக்கும் வண்ணமாகவும் காட்சி அளிக்கின்றது. ஆலயத்தின் நுழைவாயிலில் ஆஹா, ஊஹூ இருவரின் உருவங்களும் அமையப் பெற்றிருக்கின்றன.


பட்டாசாரியார் அனைவருக்கும் தீர்த்தம், சடாரி போன்றவை சாதிக்கின்றார். இந்தச் சத்ரவட நரசிம்மர் சூரியனால் ஏற்படும் சகல தோஷங்களையும் போக்கும் வல்லமை கொண்டவர் எனச் சொல்கின்றார்கள். நாட்டின் தலைமைப் பதவி, மற்றவர்களுக்கு ஆணையிடும் அதிகாரம், நீதிபரிபாலனம் போன்றவற்றைத் தவறாமல் செய்யும் வல்லமை போன்ற சிறப்புகளை வழங்கும் பெருமை கொண்டவர். பத்மாசனக் கோலத்துடனேயே பேரழகுக் கோலத்தோடு, இதழ்களில் சிரிப்போடு காட்சி தருகின்றார். அடுத்ததாய்த் தான் மிக, மிகக் கஷ்டமான பயணம் என்னதான் ஜீப்பிலே சென்றாலும் பயணம் மிகக் கடினம்.

Forestroute.jpg

ஒரு ஜீப்பிற்கு ஒன்பது பேர் என ஐந்து ஜீப்புகளில் சென்றோம். அவை எப்படி அந்தத் தடங்களில் ஓடுகின்றன என்பதே ஒரு ஆச்சரியம் தான். ஒரு இடத்தில் மேட்டிலிருந்து பள்ளத்தில் குதிக்கும் ஜீப் மற்றொரு இடத்தில் முன் பக்கத்துச் சக்கரங்கள் இரண்டின் உதவியோடு மட்டுமே செல்லுகின்றது. அனைவரும் முன்னால் வளைகின்றோம். பின்னர் செங்குத்தான மேடு வருகின்றது. ஜீப் இப்போது மேட்டில் ஏறுகின்றது. அனைவரும் பின்னால் சரிகின்றோம். இன்னும் ஒரு இடத்தில் இடது பக்கச் சக்கரங்கள் உதவியோடு மட்டுமே செல்லவேண்டி உள்ளது. இந்த அழகில் இரு பக்கமும் காடாக வளர்ந்திருக்கும் மரங்களின் கிளைகள், இலைகள் போன்றவை உரசி ஜன்னல் பக்கம் உட்கார்ந்திருக்கும் நபர்களுக்குச் சிரமத்தை உண்டாக்குகின்றது. ஜீப்பில் ஏறும்போது டிரைவர் பக்கத்து சீட்டோ, அல்லது நடுவிலோ இடம் கிடைக்கவில்லை எங்களுக்கு. பின்னால் நாலு பேர் அமரும் சீட்டில் தான் கிடைத்தது. கொஞ்சம் வருத்தமாய் இருந்தது. ஆனால் அது எவ்வளவு வசதியாப் போச்சு என்று பிரயாணத்தின் போதே புரிந்தது.


ஜீப் துள்ளித் துள்ளிக் குதிக்கும்போதெல்லாம் நல்லவேளை நான் உட்பக்கமாய் உட்கார்ந்து கொண்டேன் என நினைத்துக் கொண்டேன். என் பக்கத்தில் அமர்ந்த ம.பா.வுக்கும் சரி, எதிரே அமர்ந்திருந்த ஒரு தாத்தாவுக்கும் சரி, சமாளிக்கவே முடியலை. பக்கத்தில் இருந்த அவங்க பையர் இடம் மாறி உட்கார முயற்சித்தாலும் நடக்கவில்லை. எப்படியோ இருவரும் சமாளித்தார்கள். கீழே விழுந்துவிடுவோமோ என்ற எண்ணம் பலமுறை தோன்றியது. கொஞ்ச தூரம் போனதும் ஜீப் நின்றது. டிரைவர் அனைவரையும் இறங்கச் சொன்னார். கூட வந்த ஜீப்களும் நின்று அனைவரும் இறங்கினார்கள். ஆனால் கோயில் என்னமோ வரலை.
Pavana narasimhar route.jpg


இதோ தெரியுது பாருங்க, புழுதி பறக்கிறது. இது நாங்க எடுத்த படம் இல்லைனாலும் பாவன நரசிம்மர் கோயிலுக்குச் செல்லும் வழியில் இப்படித் தான் புழுதி பறக்கும் வண்டியிலே போகும்போது. நடக்கவே முடியாத அடர்ந்த காட்டுப் பகுதியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார் இந்த சிங்கராஜா. ஏன் தெரியுமா? அவர் கல்யாண மாப்பிள்ளையாக்கும். மனைவியோடு தனிமையாகக் கொஞ்சிட்டு இருப்பார். தொந்திரவு வேண்டாம்னு தான். ஆனால் மனைவி வழி சொந்தங்கள் அங்கேயே இருக்கிறவங்களும் இருக்காங்க. கீழேயும் இருக்காங்க. அப்படி ஒருத்தர் தான் எங்களுக்கு வழிகாட்டியாக வந்த சுப்பராயுடு. மிக மிக அற்புதமான மனிதர். இவரைப் பற்றிக் கடைசியில் பார்க்கலாம். இப்போ பாவன நரசிம்மர் பற்றி.


வண்டியை விட்டுக் கீழே இறங்கச் சொன்னாங்கனு சொல்லி இருந்தேன் அல்லவா? இது வரை வந்த பாதைகளில் நம்ம எலும்புகள் கழன்று போச்சு என்றால், இங்கே அதை விடக் கொடுமை. வண்டி தன் நாலு சக்கரங்களிலும் செல்லாது. ஒன்று முன் சக்கரத்தில் ஒன்றாலோ அல்லது பின் சக்கரத்தில் ஒன்றாலோ மேலே ஏறிக் கீழேயும் இறங்கணும். பாதையோ என்றால் கேட்கவே வேண்டாம். நடந்தால் முட்டிகள் அன்றே தேய்ந்து போயிடும். அதுவும் முட்டி வலி என்றால் என்னனு தெரியாத என் கணவருக்கு இதுக்கு அப்புறம் முட்டியே தேய்ந்து போய் இன்னமும் வலி இருக்கு முட்டியில். அவ்வளவு கடினமான கரடு, முரடான பாதைகள்.


ஆனாலும் நாங்க ஐந்து வண்டியில் இருந்த மொத்தம் 45 பேரும் இறங்கி நடந்தோம். பக்கத்தில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு ஜீப்கள் தொடர்ந்தன சில அடி தூரத்தில். கிட்டத் தட்ட ஒரு ஃப்ர்லாங்காவது இப்படிப் போகவேண்டி இருக்கு. நமக்குத் தான் கஷ்டம், ஆனால் அக்கம்பக்கம் உள்ள மக்கள் முதல் நாளே புறப்பட்டு இந்தக் கடினமான பாதையில் கிட்டத் தட்ட ஏழு கிலோமீட்டர்கள், போகவரப் பதினான்கு கிலோ மீட்டர்கள் பயணம் செய்து, அங்கேயே மரத்தடியில் இரவைக் கழித்து நரசிம்மரை வழிபடுகின்றனர். நாமோ? என்னிக்கோ ஒருநாள் பயணமே முடியலை. கொஞ்சம் வெட்கமாகவே இருந்தது. ஆனால் என்ன அதிசயம்??? அங்கே மாமிச வாடை வருகின்றதே? ஏதேனும் நாட்டார் கோயில் இருக்கோ?? ம்ஹும் இல்லையே? அப்போ இந்த மாமிசம்?? அங்கே ஏறிச் சென்று பார்த்தால் தெரிகிறது.


இதோ ஏறிக் கொஞ்சம் சுமாரான பாதைக்கு வந்துட்டோமே. இனிக்கொஞ்ச தூரத்தில் கோயில் தான். கோயிலில் பட்டாசாரியார் இருப்பாரோ? இருப்பார் என உறுதி அளிக்கின்றார் நம் வழிகாட்டி. ஜீப்கள் கொஞ்ச தூரத்திலேயே நின்றுவிடுகின்றன. நடக்க மட்டுமே ஏற்படுத்தப் பட்ட பாதைகள். வழியெங்கும் சுற்றுப் புற மக்கள் கொண்டுவந்து பலி கொடுத்த ஆடு, கோழி, சேவல்களின் மிச்சங்கள். பலிகளை நரசிம்மர் ஏற்கின்றாரா என்ன?? ஆஹா! ஏற்பார், ஏற்பார், தாராளமாய் ஏற்பார். அதுவும் தன் அன்பு மனைவிக்காக ஏற்கின்றார். நரசிம்மர் இங்கே மாப்பிள்ளை ஆச்சே?

Pavana narasimhar1.jpg

இந்த மேடு ஏறி மேலே சென்றால் கோயில் தான். கிருத யுகத்தில் இந்த மலைத் தொடர்களில் இருந்த வேடர்கள் செஞ்சு என அழைக்கப் பட்டனர். மலைவாழ் மக்கள் ஆன இவர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். காட்டில் வேட்டை ஆடுவது மட்டுமே தொழில் இவர்களுக்கு. வெளி உலகுடன் அவ்வளவு தொடர்பு இல்லை. அந்தக் குடும்பங்களில் ஒன்றில் தோன்றியவள் தான் செஞ்சுலட்சுமி என்னும் இளம்பெண். இவளைத் திருமகளின் அவதாரம் என்றே கூறுகின்றனர். திருமகளின் அம்சங்கள் அனைத்தும் நிரம்பப் பெற்ற இவள் அழகைப் பார்த்து மயங்கி இவளைத் திருமணம் செய்யத் துடித்த ஆண்கள் அனைவரையும் இவள் மறுத்தாள். தன் இயல்புக்கு ஏற்ப அவள் மனம் அந்த நாராயணனையே மணக்க எண்ணியது. ஆனால் காட்டுவாசியும், வேடர் குலத்தில் பிறந்த இயல்புக்கும் ஏற்ப நரசிம்மத்தையே விரும்பியது இவள் மனம். பிரஹலாதனைக் கொன்று கோபத்துடன் அலைந்து கொண்டிருந்த நரசிம்மம் இவளைப் பார்க்க, அனைவரும் கண்டு பயந்த நரசிம்மம் இவள் மனத்தை ஈர்க்க, அங்கே தோன்றியது தெய்வீகக் காதல்.


தேவர்களும் கண்டு அஞ்சும் தன் நரசிம்மத் திருவுருவைக் கண்டு அஞ்சாத இவளே, தன் தக்க துணை எனத் தெளிந்த நரசிம்மமும், அவளை மணக்க இசைய, அந்த மலைவாழ் மக்களுக்குப் பெரும் அந்தஸ்தும், கெளரவமும் ஏற்பட்டது. தன் பிரியமான மனைவிக்காகவே மாமிச உணவை வேட்டையாடிக் கொண்டு வந்து கொடுத்து அவளைச் சாப்பிடச் செய்தாராம் இந்த நரசிம்மர். தங்களில் ஒருத்தியான செஞ்சுலட்சுமி, நரசிம்மரின் கரம் பற்றியதைக் குறித்துக் கர்வம் மிகக் கொண்ட அந்த செஞ்சு இன மக்கள் தங்கள் செஞ்சு லட்சுமிக்குப் பிரியமான உணவு என்ற காரணத்தாலே இன்றும் அவளுக்கு இதைப் படைத்துக் கொண்டிருக்கின்றார்கள். சனிக்கிழமைகளில் இங்கே அதிகம் பலி இருக்கும் என்று சொல்கின்றனர். நாங்கள் சென்றதும் சனியன்றே. ஆகவே மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. அநேகமாய் டிராக்டர்களிலேயே வருகின்றனர்.


பவன நதிக்கரையில் கை, கால்கள் சுத்தம் செய்து கொண்டு மேலே ஏறினோம். நரசிம்மர் ஆதிசேஷன் குடையின் கீழ், தன் மனைவியான செஞ்சு லட்சுமியை இடது தொடையில் இருத்திய வண்ணம் காட்சி அளிக்கின்றார். சங்கு, சக்ர,தாரியாய், சாந்த சொரூபத்தில் சுக ஆசனத்தில் வலது காலைத் தொங்க விட்டு, இடக்காலை மடித்துக் காட்சி அளிக்கின்றார். வலக்கீழ்க்கரம் நாடி வந்த நமக்கு அபயம் அளிக்க, இடக் கீழ்க் கையால் மனைவியைக் கட்டி அணைத்திருக்கின்றார். இந்தப் பாவன நரசிம்மரைத் தரிசித்தால் ராகுவால் ஏற்படும் தோஷங்கள் விலகுகின்றன. தேவையற்ற கற்பனைகள், கெட்டஎண்ணங்கள், கொடுங்கோலாட்சி மற்றும் இஷ்டத்துக்கு நடப்பது போன்ற கெட்ட குணங்களைப் போக்கும் வல்லமை கொண்டவர். அடுத்து நாம் தரிசிக்கப் போவது மாலோல நரசிம்மர்.


மென்றபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன்
பொன்றவாகம்வள்ளுகிரால் போழ்ந்தபுனிதனிடம்,
நின்றசெந்தீமொண்டுசூறை நீள்விசும்பூடிரிய,
சென்றுகாண்டற்கரியகோயில் சிங்கவேள்குன்றமே. 1

முனைத்தசீற்றம்விண்சுடப்போய் மூவுலகும்பிறவும்,
அனைத்துமஞ்சவாளரியாய் இருந்தவம்மானதிடம்,
கனைத்ததீயும்கல்லுமல்லா வில்லுடைவேடருமாய்,
தினைத்தனையும்செல்லவொண்ணாச் சிங்கவேள்குன்றமே.

வழக்கம்போலப் பாசுரங்கள் கிடைத்த வண்ணம் போட்டிருக்கேன். நன்றி.


--Geetha Sambasivam 15:42, 10 பெப்ரவரி 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 12 பெப்ரவரி 2011, 08:43 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,103 முறைகள் அணுகப்பட்டது.