சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம்! அஹோபிலம் 1

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
AhobilamRoute.jpg
ஆந்திரப் பிரதேசத்தில் அஹோபிலம் உள்ளது. கர்னல் மாவட்டம், நந்தியால் தாலுகாவைச் சேர்ந்த இந்த அஹோபிலத்திற்குச் செல்ல நேரடி ரெயில் வழி இல்லை. அருகே இருக்கின்றது என்று சொல்லப் படும் இரு ரயில் நிலையங்கள், மும்பை-சென்னை வழியில் உள்ள கடப்பாவும், பங்களூர்-விசாகப் பட்டினம் வழியில் வரும் நந்தியால் நிலையமும் ஆகும். சென்னையில் இருந்து செல்வதென்றால் கடப்பா வரையில் ரெயிலில் சென்று அங்கிருந்து கிட்டத் தட்ட 110 கி.மீ. உள்ள அஹோபிலத்துக்குப் பேருந்துகளில் தான் செல்ல வேண்டும். சென்னையில் இருந்து நேரடியாகப் பேருந்துகள் இருப்பதாய்த் தெரியவில்லை. எங்கிருந்து சென்றாலும் அல்லகட்டா என்னும் ஊரைக் கடந்து அங்கிருந்தே 24 கி.மீ. தூரத்தில் உள்ள அஹோபிலத்தை அடைய வேண்டும். அல்லகட்டாவில் இருந்து அஹோபிலம் செல்ல பேருந்துகள், வேன்கள் கிடைக்கின்றன.


நாங்கள் சுற்றுலாத் திட்டத்தின் மூலம் சென்றோம். ஓம் ட்ராவல்ஸ் என்ற பயண அமைப்பாளர்கள் ஏற்பாடுகள் செய்யும் சுற்றுலாத் திட்டத்தின் மூலம் சென்றோம். இவர்கள் இந்தியாவின் பல சுற்றுலாத் தலங்களுக்கும் அழைத்துச் செல்கின்றனர். நாங்கள் முதன்முதலாய் அஹோபிலத்துக்குச் செல்லவே இவர்களை அணுகினோம். தன்னந்தனியாகவோ, அல்லது இருவராகவோ சென்றால் கொஞ்சம் கஷ்டம் தான். முழுக்க முழுக்கக் காட்டுப் பயணம். காட்டில் சிங்கங்கள் இல்லை என்கின்றனர். ஆனாலும், சிறுத்தைகளும், கரடிகளும் மிகுதியாக இருப்பதாய்க் கூறுகின்றனர். ஆகவே குழுவாகப் பயணம் செல்வதே சிறந்தது. 23 அக்டோபர் 2008 ஏற்பாடு செய்யப் பட்ட பயணத்திட்டத்தில் செல்ல நினைத்து முன்பணம் கட்டி இருந்தோம். ஆனால் அதற்குச் சரியாகப் பத்து நாட்கள் முன்னதாய் எனக்குக் கையில் அடிபட்டுக் கைக்கட்டுப் போட்டு 21 நாட்கள் எடுக்கக் கூடாது என்று சொல்லி இருந்ததால் போக முடியவில்லை. பயண அமைப்பாளர்கள் முன்பணம் எவ்வளவு கட்டினாலும் திரும்பத் தரமாட்டோம் என்று எழுதியே கொடுத்துவிடுகின்றனர். ஆகவே பணம் கிடைக்காது என்று தெரிந்தாலும், வேறே யாராவது உறவினர்கள் செல்லட்டும் எனக் கேட்டுப் பார்த்தோம். யாரும் தயாராக இல்லை. ஆகவே பயண அமைப்பாளரிடமே யோசனை கேட்டதில் ஜனவரி 23-ம் தேதி மீண்டும் ஒரு குழு செல்ல இருப்பதாயும், எங்கள் பணத்தை அதற்கு முன்பதிவு செய்து கொள்ளுவதாயும் கூறினார். கொஞ்சம் ஆறுதல் அடைந்தோம்.

Ahobilam.jpg

மெல்ல மெல்ல ஜனவரியும் வந்தது. கிளம்பும் நாளும் வந்தது. என்னோட அண்ணா(பெரியப்பா பையர்) வுக்கு ஜனவரி 23 அன்று தான் சஷ்டி அப்தபூர்த்தி திருக்கடையூரில். அங்கே சென்றால் திரும்பி வந்து கிளம்பமுடியாது என்று முன்னரே தெரிந்து கொண்டு அவர்களிடம் மன்னிப்பு மிக வேண்டிக் கேட்டுக் கொண்டு, அன்று கிளம்பினோம். அசோக் நகரில் வந்து பேருந்தில் ஏறிக் கொள்ளச் சொல்லி இருந்தார். ஆகவே அசோக் நகர் சென்றோம். பேருந்தைக் கண்டு பிடித்தோம். நாங்க தான் முதல் ஆட்களாய் போயிருக்கின்றோம் எனப் புரிந்தது. பேருந்து கும்பகோணம் "ரதிமீனா" நிர்வாகத்தைச் சேர்ந்தது. சரி, கொஞ்சம் வசதியாய் இருக்கும் என ஆறுதல் அடைந்தோம். எவ்வளவு தப்புனு போகும்போது தான் புரிந்தது. ஒவ்வொருவராய் வந்ததும் பேருந்தில் ஏறிக் கொண்டோம். பயண அமைப்பாளர் இப்போத் தான் உட்காருமிடம் ஒவ்வொருத்தருக்காகச் சொல்ல ஆரம்பித்தார். அநேகமாய் அனைவருமே முன்னம் பக்கம் கேட்க அவரோ எதுவுமே பேசாமல் அவர் இஷ்டத்துக்கு உட்கார வைத்தார். இதிலே ரொம்ப வயசானவங்க எல்லாம் பின்னால் போய் உட்காரும்படியும் சின்னவங்க எல்லாம் முன்னாலே உட்காரும்படியும் ஆகியும் அவர் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. ஒரு பக்கத்து இடம் பூராவும் சைதாப்பேட்டையில் ஏறுகிறவங்களுக்கு என்று ஒதுக்கி விட்டார்.


என்னோட கையைக் காரணம் ஏற்கெனவே காட்டி இருந்தாலும் கடைசி சீட்டே கொடுத்தார். நான் பிடிவாதமாய்ப் போக மறுத்து முன்னால் இருந்த மூவர் அமரும் சீட் ஒன்றில் அமர்ந்துவிட்டேன். கொஞ்சம் சொல்லிப் பார்த்துவிட்டு பேருந்தில் அனைவரும் ஆட்சேபிக்கவே பேசாமல் இருந்துவிட்டார். ஆனாலும் பேருந்தில் இடநெருக்கடி அதிகம். யாருக்குமே முன்னாலோ, பின்னாலோ உட்கார வசதியாகவே இல்லை. கைப்பிடிகள் கிடையாது. உடைந்து கிடந்தன. அவற்றைச் சரிசெய்யவே இல்லை. பேருந்து திரும்பும்போதெல்லாம் ஓரத்தில் உட்கார்ந்திருந்த நானும், என்னைப் போன்ற மற்றவர்களும் பிடிக்க ஆதாரமில்லாமல் ரொம்பவே கஷ்டப் பட்டோம். என்றாலும் ஓட்டுநர் மிகத் திறமைசாலி. கிட்டத் தட்டப் பத்துமணி நேரம் ஆகும் பிரயாணத்தை அவர் எட்டு மணி நேரத்துக்குள் கொண்டு வரப் பார்த்து ஓரளவு வெற்றியும் பெற்றார். காலை 6-30 மணி அளவில் அஹோபிலம் ஊர் போய்ச் சேர்ந்தோம். அங்கே போய் இறங்கிக் கொண்டு எங்களுக்கென ஏற்பாடு செய்திருக்கும் அறைகளுக்குக் காத்திருந்தோம்.


நாங்க எப்போவும்போல் தனி அறைக்கு முன்கூட்டியே சொல்லி வைத்திருந்தோம். அஹோபிலம் மடத்திலும் அறைகள் கிடைக்கும். திருப்பதி தேவஸ்தானமும் அறைகள் வாடகைக்குக் கொடுக்கின்றன. எதிலே தங்குவதாய் இருந்தாலும் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். இல்லை எனில் ரொம்பக் கஷ்டம் அறைகள் கிடைப்பது. அறையை ஜன்னல் கதவில் இருந்து எல்லாவற்றையும் திறக்காமல் இருத்தல் நலம். முன்னோர்கள் சர்வ சகஜமாய் வருவார்கள். அஹோபிலம் ஊர்க்காரர்கள், "எங்க வானரங்கள் ரொம்பவே சாதுவாக்கும்! உங்க ஷோலிங்கர் வானரங்களைப் போல கிடையாது!" என்று பெருமை அடித்துக் கொண்டாலும், நமக்குப் பயமாகவே இருக்கின்றது. எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தது ISCON அமைப்பாளர்கள் கட்டியுள்ள தங்கும் விடுதியில். அறை வாடகை 250 யில் இருந்து 300 -க்குள் இருக்கலாம். அஹோபிலம் மடம் அவ்வளவுதான் வாங்குகின்றனர். என்றாலும் இங்கே கொஞ்சம் அதிகம். 400ரூ. கொடுத்தோம். அறைகள் நன்கு பராமரிக்கப் படுகின்றன. இது தவிர சாப்பிடும் உணவு விடுதிகள் எதுவும் இல்லை. ஆகவே தனியாய்ப் போனால் சாப்பாடு ஒரு பிரச்னை தான். மடத்தில் அன்னதானம் இரு வேளை நடக்கின்றது. அதைத் தெரிந்து வைத்துக் கொண்டு போகலாம்.


எங்களுக்கு நாங்கள் கொடுத்த பணத்திலேயே காலை காபி, காலை உணவு, மதியம் சாப்பாடு, சாயங்காலம் காபி அல்லது டீ, இரவு உணவு அடங்கியது. மடத்தில் இருந்து சமைத்து எடுத்து வந்தார்கள். ஆகவே செல்லும்போது உங்களுக்கு ஏற்ற பயணத்திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போ காலை ஆகாரம் முடிச்சுக் குளிச்சுக் கிளம்பியாச்சு நரசிம்மர் தரிசனத்துக்கு. அங்கேயும் மின் தடை ஆற்காட்டாருக்குத் தம்பி தான் அங்கே மின்சார அமைச்சர் போல. காலை 6 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும் மின்சாரம் வராது. குளிக்க வெந்நீர் முதல் நாள் கொடுக்க முடியலை. மறுநாள் காலை சீக்கிரமே எழுப்பிக் கொடுத்துவிட்டார்கள். இனி முதலில் அஹோபிலம் கோயில் வரலாற்றைப் பார்ப்போம். பின்னர் பயண அனுபவமும் நடு நடுவே வரும்.


நம் நாட்டில் ஒவ்வொரு மலைக்கும், ஒவ்வொரு நதிக்கும் புனிதம் உண்டு. வடக்கே இமயத்தில் ஆரம்பித்தால் தெற்கே கன்னியாகுமரி வரையிலும் ஒரே மாதிரியான கதைகள், காவியங்கள், புராணங்கள். அதிலும் தென்னாடு இதில் தனித்துவம் வாய்ந்தது என்றே சொல்லலாம். மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அழகு கண்ணையும், கருத்தையும் கவர்ந்து கொள்ளும் திருமணம் ஆகப் போகும் இளம்பெண்ணைப் போல் அழகு கொஞ்சினால், கிழக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைகள், பக்குவமடைந்த, மனமுதிர்ச்சி அடைந்த பெண்ணைப் போல் கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர்கள் ஆன்மீகத்துடன் நெருங்கிய சம்பந்தம் கொண்டது. இயற்கையின் சுந்தரம் மட்டுமின்றி, ஆன்மீகத்தின் புனிதமும் சேர்ந்தது கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர். இந்தக் கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களையே மஹா சர்ப்பம் ஆன ஆதிசேஷன் சுருண்டு படுத்திருப்பதாய்ச் சொல்லுகின்றனர். அவரின் தலைப்பகுதி திருப்பதியும், மத்திய உடல் பகுதி அஹோபிலம் என்றும், நீண்டு சுருட்டி வைக்கப் பட்ட வால்பகுதி ஸ்ரீசைலம் எனவும் சொல்லுவார்கள்.

BeluNarasimha.jpg

திருப்பதிக்கு மலை எறித் தரிசிக்க குறைந்தது 4 மணி நேரம் ஆகும்.மலை ஏறி விடலாம். ஸ்ரீசைலம் சென்று தரிசிக்கும்படியாகவே இருப்பதாய்ச் சொல்லுகின்றனர். ஆனால் அஹோபிலம் அப்படி இல்லை. மிகுந்த மன உறுதியும், உடல் உறுதியும், உள்ளார்ந்த பக்தியும் இருந்தாலே செல்லமுடியும் எனச் சொல்கின்றனர். ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மற்ற அவதாரங்களில் இருந்தும் மாறுபட்டது நரசிம்ம அவதாரம். கண நேரத்தில் பக்தனின் வேண்டுகோளுக்காகத் தோன்றி, குறைவான நேரமே இருந்து தான் எதற்காக வந்தோமோ அதை முடித்துக் கொண்டது இந்த அவதாரம் மட்டுமே. மற்ற அவதாரங்களில் உலகத்து மக்களுக்காகவும் தேவர்களின் அபயக் குரலுக்காகவுமே எடுக்கப் பட்டு வந்தது. ஆனால் நரசிம்ம அவதாரமோ ஒரு சிறு பையனின் உண்மையான பக்திக்காகவும், வேண்டுகோளுக்காகவும், உண்மையை நிலை நாட்டுவதற்கு எடுக்கப் பட்டது. உக்கிர ஸ்வரூபமாய் எடுக்கப் பட்ட நரசிம்மரைப் பார்க்கும்போதே ஹிரண்யகசிபு அச்சம் கொண்டான். ஆனால் பிரஹலாதனுக்கோ பெருங்கருணையே நரசிம்ம வடிவெடுத்து வந்திருப்பதாய்த் தோற்றம் அளித்தது. சற்றும் அஞ்சாமல் வணங்கி நின்றான். இப்பேர்ப்பட்ட அவதார புருஷனைத் தரிசிக்கும் எண்ணத்துடன் கருட பகவான் முன்னொரு காலத்தில் இம்மலைப் பிராந்தியத்தில் தவம் இருந்தார். கருடனின் தவத்துக்குப் பரிசாக நரசிம்மர் இங்கே காட்சி அளித்தார் ஒரு மலைக்குகையில். இனி ஒவ்வொரு மலைக் குகையாகச் சென்று பார்க்கலாமா??


--Geetha Sambasivam 13:20, 7 பெப்ரவரி 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 7 பெப்ரவரி 2011, 13:26 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,315 முறைகள் அணுகப்பட்டது.