சதாசிவ பிரம்மேந்திராள் 1

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
Indexsadasivar.jpg
சதாசிவ பிரம்மேந்திரர் பற்றி அனைவரும் அறிந்திருக்கலாம். இந்தக் கலியுகத்தில் நாம சங்கீர்த்தனமே பகவானை அடையும் வழி என்று  வலியுறுத்தியதோடு அல்லாமல் அதற்கேற்ற கீர்த்தனைகளையும் இயற்றியவர் இவர். இவருடைய “மானஸ சஞ்சரரே” பாடல் மிகவும் பிரசித்தமானது. இவர் தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தில் தெலுங்கு அந்தணக் குலத்தில் பிறந்தார். தந்தையார் பெயர் சோமநாத அவதானி, தாயார் பெயர் பார்வதி அம்மாள். பெற்றோர் சூட்டிய பெயர் சிவராமகிருஷ்ணன். குருவான
பரமசிவேந்திரரிடம் மந்திர யோகம், மகாயோகம் முதலானவற்றைக் கற்றார். குரு இவருக்கு தீட்சையும் கொடுத்து, “சதாசிவம்” என்னும் தீட்சா நாமத்தையும் அருளினார். ஒரு முறை இவர் ஏதோ குருவிடம் பேச, அப்போது ஏதோ கவனமாய் இருந்த குரு, “வாயை மூடு!” என்று இவரிடம் கட்டளையிட, அன்றிலிருந்து இவர் வாய் திறந்து பேசவில்லை. பேச்சு நின்றது. குருவிடம் கற்ற யோக அனுபவங்களைப் பரிபூரணமாய்க் கைவரப் பெற்ற இவர், பல வருடங்கள் உலகப் பார்வையில் இருந்து தன்னை மறைத்துக்
கொண்டு வாழ்ந்தார். மந்திரசித்திகள் கைவரப் பெற்றது, அவதூதராக உலகத்தினருக்குத் தோன்ற ஆரம்பித்தார்.


ஒரு சமயம் தஞ்சாவூருக்கு அருகே இருந்த புன்னைவனக் காட்டில் சதாசிவர் யோக நிஷ்டையில் அமர்ந்திருந்தார். அப்போது தஞ்சையை ஆண்டு வந்த மன்னன் மராட்டி அரச வம்சத்தைச் சேர்ந்த சஹாஜி என்பவன். இவனுக்கு ஒரு பெண்குழந்தை இருந்தது. அந்தக் குழந்தையுடன் ராமேஸ்வரம் சென்று தரிசனம் செய்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தான் மன்னன். அப்போது குழந்தையின் கண்களில் இருந்து திடீரென ரத்தம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தது. அரண்மனை வைத்தியர் வந்து பார்த்தார். சுற்று வட்டாரங்களில் இருந்த பல்வேறு விசேஷமான வைத்தியர்கள் வரவழைக்கப் பட்டனர். ஆனால்
குழந்தையின் கண் சரியாகவில்லை. கண் நோய் நீங்குவதற்காக சமயபுரம் மாரியம்மனுக்கு நேர்ந்து கொண்டு, தங்கத்தில் கண் செய்து வைப்பதாய் மன்னர் பிரார்த்தித்துக் கொண்டார்.


அன்றிரவு அவர் கனவில் ஓர் பெண் குரல், “ நான் இங்கேயே இருக்கிறேனே? நீ ஏன் சமயபுரம் செல்லவேண்டும்?” என்று கேட்க, விழித்த மன்னர் மறுநாள் தன் மந்திரி, பிரதானிகளிடம் தன் ஆட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எங்கே அம்மன் எழுந்தருளி இருக்கிறாள் என்பதைக் கண்டுபிடிக்க நாலாபுறமும் ஆட்களை அனுப்புமாறு கட்டளையிட்டான். ஆனால் யாருக்கும் அம்மன் கோயில் எதுவும் தென்படவே இல்லை. ஆனால் சில சிறு பெண்குழந்தைகள் ஓர் இடத்தில் உள்ள சிறு புற்றுக்கு வேப்பிலை வைத்து, அதை மாரியம்மன் என்று பெயர் சூட்டி விளையாடுவதைக் கண்டனர். உடனேயே மன்னனிடம்
கூற மன்னனும், தன் பரிவாரம் புடை சூழ அங்கே வந்தான். வந்த மன்னன் கண்களில் ஒரு புன்னை மரத்தடியில் கண்மூடி யோக நிஷ்டையில் இருந்த சதாசிவர் கண்ணில் பட்டார்.


மன்னன் அவரைப் பணிவோடு வணங்கி, “இங்கே மாரியம்மன் கோயில் இருப்பதாய்க் கனவில் வந்தது. ஆனால் புற்று ஒன்று தான் இருக்கிறது. அதுவும் குழந்தைகள் விளையாடும் புற்றாய்த் தெரிகிறது. கோயில் எங்கே உள்ளது என்பதைத் தாங்கள் கண்டறிய வேண்டும்.” என்று வணங்கி நின்றான். பிரம்மேந்திரர் கண் திறந்து பார்த்து, “அந்தப் புற்றே கோயில்! அவளே மாரியம்மன்!” என்று அருளிச்
செய்தார். “ஐயனே! இந்தப் புற்றில் அம்மனின் உருவம் இல்லையே?” என மன்னன் வேண்ட, பிரம்மேந்திரரும் மன்னனைப் புனுகு, ஜவ்வாது, சந்தனம் ஆகியவற்றைக் கொண்டுவருமாறு பணிக்க. மன்னனும் அவ்வாறே அந்தப் பொருட்களைத் தயார் செய்தான். அவற்றை அங்கிருந்த மண்ணுடன் சேர்த்துப் பிசைந்து மாரியம்மனின் உருவை உருவாக்கினார் பிரம்மேந்திரர். கூடவே ஜன-ஆகர்ஷண யந்திரமும் எழுதி அம்மன் முன்னால் வைத்தார். மன்னனை இவற்றுக்கு வழிபாடு நடத்தும்படி சொல்ல மன்னனும் அவ்வாறே வழிபட்டான். குழந்தையின் கண்களும் பூரண குணம் அடைந்தது.

Indexsadasivasamadhi.jpg

அருகில் உள்ள புதுக்கோட்டை சமஸ்தானத்து மன்னர்களான தொண்டைமான்களின் வம்சாவழியில் விஜயரகுநாதத் தொண்டைமான் என்பவர் சதாசிவ பிரம்மேந்திரர் காலத்தில் ஆட்சி புரிந்து வந்தார். சாஸ்திர, சம்பிரதாயங்களைப் பின்பற்றுவதிலும், பெரியோர்களைப் பேணுவதிலும், சாது, சந்நியாசிகளை வணங்கி ஆலோசனை கேட்பதிலும் இயல்பாகவே மன்னருக்குப் பற்று மிகுந்திருந்தது. பிரம்மேந்திரரின் செயல்கள் அனைத்தும் அவர் காதிலும் விழ, மன்னன் இவர் பெரிய மஹான் என்பதை அறிந்து
கொண்டான். அவரைத் தன் அரண்மனைக்கு அழைத்து வந்து வைத்துக்கொள்ள விரும்பினான். ஆனால்
அவதூதர் ஆன பரப்பிரும்மத்தை ஒரு கட்டுக்குள்ளாக எவ்வாறு கொண்டுவருவது? மன்னன் ஒரு பல்லக்கைத் தயார் செய்து, தானும் கூடவே குதிரையில் சென்று, பிரம்மேந்திரர் இருக்குமிடத்தைத் தேடிக் கண்டு பிடித்து அரண்மனைக்கு எழுந்தருளுமாறு வேண்டினான். ஆனால் அரண்மனைக்கெல்லாம் ஆசைப்படும் மனிதரா சதாசிவ பிரம்மம்?? பதிலே பேசாமல் அங்கிருந்த முள் காட்டில் சென்று அமர்ந்தார். மன்னனும் விடாமல் பின் தொடர்ந்தான். தன்னுடன் வராவிட்டாலும் பரவாயில்லைத் தன்னைச் சீடனாய்
ஏற்றுக் கொண்டு அனுகிரஹிக்கவேண்டும் என மிகவும் வேண்டினான்.

Indexsamadhi.jpg

மன்னன் பக்தியைக் கண்ட சதாசிவரும், அங்கேயே இருந்த மணலிலேயே தக்ஷிணாமூர்த்தி மந்திரத்தை எழுதிக் காட்டினார். மன்னனும் மந்திரத்தைக் கற்றுக் கொண்டதோடல்லாமல் அந்த மணலையும் வெகு சிரத்தையாகவும், பக்தியுடனும், தன் மேல் துண்டில் எடுத்துச் சென்று அரண்மனையில் ஒரு தங்கப் பேழையில் வைத்துப் பூஜை அறையில் வழிபடத் தொடங்கினார். அந்த மணல் வழிபாடு இன்றளவும் புதுக்கோட்டை புராதன அரண்மனையில் உள்ள தக்ஷிணாமூர்த்தி ஆலயத்தில் நடந்து வருவதாகவும், இந்த ஆலயம் கிழக்கு ராஜவீதியில் உள்ள சாந்தநாத ஸ்வாமி ஆலயத்தின் அருகே இருப்பதாகவும்
சொல்லுகின்றனர். மேலும் இவர் தனது அவதூதநிலை பிறர் கண்களில் புலப்படாமல் இருக்கப் பல்வேறு மிருகங்களின் உருவத்தை எடுத்துக் கொள்ளுவார் என்றும் சொல்லுகின்றனர். இதைப் பற்றித் திருநெல்வேலியில் உள்ள திருக்குற்றாலத்துக்குச் சென்ற ஆங்கிலேய அதிகாரி ஒருவர் தான்  நேரிடையாகப் பார்த்த அனுபவம் என்று எழுதி இருக்கிறார். அந்த அதிகாரி திருக்குற்றாலத்திற்குத் தன் குடும்பத்தினருடன் சென்று குளித்துக் கொண்டிருந்தார். கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில்
வியாபாரம் செய்த காலம் அது. கி.பி. 1744-ம் ஆண்டு. குற்றாலம் அப்போது சிறிய கிராமம் மட்டுமில்லாமல் சுற்றிலும் அடர்ந்த காடுகளும் இருந்தன.


கிராமத்து மக்கள் ஐந்தருவியில் குளித்து குற்றாலநாதருக்குப் படையல் செய்து வழிபடுவார்கள். அதைத் தவிர வேறு ஜனநடமாட்டம் அங்கே அந்தக் காலகட்டத்தில் கிடையாது. இந்த அதிகாரி தன் குடும்பத்தோடு குளிக்கும்போது அந்த இடத்தில் இருந்து சற்றுத் தொலைவில், புதர்களுக்கு மத்தியில் ஒரு உயரமான பாறை இருந்தது. குளிக்கும்போது தற்செயலாக ஆங்கிலேய அதிகாரியின் பார்வை அந்தப் பாறையின் மீது பட, அங்கே ஒரு நிர்வாண மனிதன் நிற்பதைக் கண்டார். யாரோ காட்டுவாசி, வம்பு செய்ய வந்திருக்கிறான் என எண்ணிக் கொண்ட அந்த அதிகாரி உடனேயே கரைக்கு வந்து தன் துப்பாக்கியை எடுத்து அந்த மனிதனைக் குறி பார்த்துச் சுட்டார். என்ன ஆச்சரியம்?? அந்த நிர்வாண மனிதன் நின்ற இடத்தில் இப்போது ஒரு பெரிய பிரம்மாண்டமான புலி நின்று கொண்டு சாவகாசமாய்க் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தது. தன் கண்ணெதிரேயே மனிதனைக் கண்ட அந்த அதிகாரி, இப்போது மனிதன் புலியாக மாறியதைக் கண்டதும் பேச்சே வராமல் வாயடைத்து நின்றார். பின்னர் பலரையும் விசாரித்துப் பிரம்மேந்திரரைப் பற்றித் தெரிந்து கொண்ட அந்த அதிகாரி, தனது சுயசரிதையில் இது பற்றிக் குறிப்பிட்டதோடல்லாமல், “உண்மையிலேயே ஞானிகளும், சாதுக்களும் உள்ள ஆன்மீகநாடுதான் இந்தியா!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.


கரூரில் வசித்த வைதீகக் கனபாடிகள் ஒருவர் திருப்பதி போக ஆசைப்பட்டும் போகமுடியாமல் பெருமாளைத் தரிசிக்க முடியாமல் இருந்தார். அவர் பிரம்மேந்திரரை அணுகி, “ஸ்வாமி, திருப்பதி செல்வதும், பெருமாளைத் தரிசிப்பதும் மிகக் கஷ்டமான ஒன்றாய் இருக்கிறது. தாங்கள் இவ்வூரின் அருகே உள்ள மலைக்காட்டில் குடி இருக்கும் தான் தோன்றிப் பெருமாள் என்னும் பெயர் கொண்ட தானாகத் தோன்றிய ஸ்வயம்பு மூர்த்தியைத் தரிசித்தால் திருப்பதி சென்ற பலன் வரவேண்டும் என்று
ஆசீர்வதியுங்கள். நான் அந்தப் பெருமாளைத் தரிசிப்பதோடல்லாமல், மற்றவர்களும் பயனடைவார்கள்.” என்று பிரார்த்தித்தார். பிரம்மேந்திரரும் ஆசிகளை வழங்கியதோடு தான் தோன்றி மலையப்பருக்கு ஜன-ஆகர்ஷண யந்திரம் ஒன்றையும் எழுதி வழிபட்டார். அன்றிலிருந்து திருப்பதிக்குச் சென்று வந்த பலன்கள் மட்டுமில்லாமல் வேண்டுவோர் வேண்டியதைக் கொடுக்கும் தான் தோன்றிப் பெருமாள் என அனைவரும் பலன் பெற்று வருகின்றனர். ஒவ்வொரு வருஷமும் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமையில் அந்த ஊர் மக்கள் சதாசிவ பிரம்மேந்திரர் ஜன ஆகர்ஷண யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு  வழிபாடு செய்யப் பட்ட நாளாகச் சிறப்பாய்க் கொண்டாடி வருகின்றனர்.


இதைத் தவிர, முஸ்லீம் சுல்தான் ஒருவன் வீதி உலா வந்து கொண்டிருந்த சமயம் தன் அவதூதக் கோலத்தோடு பிரம்மேந்திரர் சென்று கொண்டிருந்தார். தன்னை மதிக்காமல் எவனோ நிர்வாணமாய்ச் செல்கின்றானே? எனக் கோபம் கொண்ட சுல்தான் தன் வீரர்களை விட்டு பிரம்மேந்திரரின் கைகளை வெட்டச் சொல்ல, அவர்களும் பிரம்மேந்திரரின் ஒரு கையை வெட்டினார்கள். ரத்தம் பெருக ஆரம்பித்தது. ஆனால் இது எதுவுமே தெரியாமல், எந்தவித வேதனையோ, வருத்தமோ படாமல் பிரம்மம் சென்று கொண்டிருந்தது. சுல்தான் வாயைப் பிளந்து கொண்டு ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டிருக்க பிரம்மம் தன் வழியில் சென்றது. உடனேயே அவனுக்கு இது சாதாரணப் பிறவி அல்ல என்பது புரிய அவரைத் தன்னிடம் அழைத்துவரச் சொன்னான். வீரர்களும் சென்று அவரை அழைத்துவர, தான் கையை
வெட்டியதையும், வெட்டுப் பட்ட கையையும் சுல்தான் காட்ட, பிரம்மேந்திரர் அந்தக் கையை வாங்கி, ஏதோ பிய்ந்ததை ஒட்டுவது போல் அதனிடத்தில் வைக்க, ஆஹா, அற்புதம் நடந்தது அங்கே! கை ஒட்டிக் கொண்டுவிட்டது. உடனேயே சுல்தான் அவர் கால்களில் விழுந்து மனமார மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். அவனை ஆசீர்வதித்துவிட்டு பிரம்மேந்திரர் தன் வழியில் சென்றார்.

Index2samadhi.jpg

இம்மாதிரிப் பல சித்திகள் கைவரப் பெற்ற பிரம்மேந்திரர் யோகசமாதி அடைந்த நாள் வைகாசி சுத்த தசமி1750-ம் ஆண்டு. காவிரிக்கரையில் உள்ள நெரூர் என்னும் ஊரில் யோகசமாதி அடைந்தார். பொதுவாய் இவரைப் போன்ற அவதூதர்களின் சமாதி மேலே கோயில் கட்டுவது வழக்கம். ஆனால் நெரூரில் சமாதிக்குப் பனிரண்டு அடிக்குக் கீழ்த்திசையில் கோயில் அமைந்துள்ளது. இதே போல் இந்த மஹான் இங்கே சமாதி அடைந்த அதே சமயத்தில் மானாமதுரை, கராச்சி போன்ற ஊர்களிலும் சமாதி அடைந்ததாய்ச் சொல்லப் படுகிறது. ஒவ்வொரு வருஷமும் நெரூரில் வைகாசி சுத்தபஞ்சமி அன்று தொடங்கி சுத்த தசமி வரை தொடர்ந்து வைதீக முறையில் உற்சவம், ஆராதனைகள் நடைபெறும். முக்கிய ஆராதனை அன்று நாமசங்கீர்த்தனம் தொடர்ந்து ஒலிக்க, பக்தர்களுக்கு அன்னதானமும்,
பக்தர்கள் சாப்பிட்ட இலையில் வேண்டுதல் செய்து கொண்ட பக்தர்களின் அங்கப் பிரதக்ஷிணமும் நடைபெறும். நாம சங்கீர்த்தனம் என்றாலே சதாசிவ பிரம்மேந்திரர்தான் நினைவில் வருவார். அவர் இன்னமும் ஜீவசமாதியில் இருந்து கொண்டு நாமசங்கீர்த்தனம் செய்து வருவதாய் அந்த அதிஷ்டானம் சென்று வந்தவர்கள் அதன் சாந்நித்தியத்தின் மூலம் தெரிய வருவதாய்ச் சொல்கின்றனர்.

--Geetha Sambasivam 08:31, 24 ஆகஸ்ட் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 24 ஆகஸ்ட் 2011, 08:43 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,345 முறைகள் அணுகப்பட்டது.