சங்கரன் கோயில் சங்கர நாராயணர் 6

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

வந்திருந்த அடியாரில் ஒருவர் திடீரெனத் தன் காலில் விழுந்ததும் சேதுபதி மன்னர் திகைத்துப் போனார். வணங்கிய பொன்னம்பலத்தா பிள்ளை எழுந்தார். உடனேயே,


“சேதுபதியென்று நர சென்மமெடுத்த தாய் கமல
மாதுபதிக்குன்னையன்றி வாயாதே- நீதிபதி
நீயே விசயரகுநாதனினையீன்ற
தாயே யருட்கோசலை!”


என்று சேதுபதி அரசர் விசயரகுநாத சேதுபதியைக் குறித்து ஒரு பாடல் பாடினார். தாங்கள் யார் என விசாரித்தார் சேதுபதி அரசர். மேலும் ஏன் இந்தப் பாட்டைப் பாடி என்னைப் புகழ்கிறீர்கள் என்றும் கேட்டார். பொன்னம்பலத்தாபிள்ளை தம் சுய அறிமுகத்தைச் செய்து கொண்டார். சேதுபதி அரசரின் புகழைப் பற்றிக் கேள்விப் பட்டு அவரைத் தரிசிக்கும் ஆவலில் இருந்ததாகவும், பழநியாண்டவனின் அருளால் இன்று இது நிகழ்ந்ததாகவும் கூறினார். அரசருக்கு இவர் தான் பொன்னம்பலத்தா பிள்ளை என அறிந்தது ஒரு ஆச்சரியம் எனில் அவர் தம்மீது ஒரு பாடல் புனைந்ததும், அதில் தம் தாயைக் கோசலை என்ற பெயரில் விளித்ததும் மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏனெனில் அரசரின் தாயின் பெயர் உண்மையிலும் கோசலை ஆகும். ஆனால் பொன்னம்பலத்தா பிள்ளையோ அதை அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை. அந்தப் பாடலில் அவர் சேதுபதி அரசரின் தாயைக் கோசலை என விளித்தது முற்றிலும் தற்செயலாகும். ராமரைப் பெற்றெடுத்த கோசலைக்கு நிகரானவள் என்ற புகழ்ச்சியான சொற்களுக்காகவே சொல்லி இருந்தார் பொன்னம்பலம் பிள்ளை. ஆனால் விஜய ரகுநாத சேதுபதி அரசருக்கோ ஆச்சரியத்திலும் ஆச்சரியம். தன் தாயின் பெயர் இந்தப் பொன்னம்பலத்தா பிள்ளை எவ்விதம் அறிந்தார்? உண்மையிலேயே இவர் மிகுந்த பக்திமானாகவும், சிறந்த கடாக்ஷம் நிறைந்த வித்வானாகவும் இருக்கிறார். அதனால்தான் அவருக்கு நம் அன்னையின் பெயரும் தெரிந்திருக்கிறது. மன்னரின் மனம் மிக மிக மகிழ்ந்தது. இவர் ஸ்தானாதிபதியாக இருக்க உண்மையிலேயே சொக்கம்பட்டி ஜமீன் அதிர்ஷ்டம் செய்திருக்கிறது என்றும் எண்ணிக் கொண்டார். பொன்னம்பலத்தா பிள்ளையோ, தம் மனதில் ஏதோ பட்டதால் சொன்னதாகக் கூறினார். அரசருக்கு அவரிடம் மேலும் மதிப்பு அதிகமாயிற்று.


அவரை அமரச் செய்து பேச யத்தனித்த மன்னனிடம் தம்முடன் வந்த அனைவருக்கும் அந்த மரியாதை கிட்டவேண்டும் என பொன்னம்பலத்தா பிள்ளை சொல்ல, அரசர் இன்னும் வியப்பில் ஆழ்ந்தார். இப்படிப்பட்ட ஒரு ஸ்தானாதிபதி இருந்தால் மக்களுக்கு எவ்வளவு மன நிறைவு என்ற எண்ணமும் ஏற்பட்டது மன்னருக்கு. பொன்னம்பலத்தா பிள்ளையுடன் வந்தவர்களில் முக்கியமான சிலருக்கு ஆசனம் அளிக்கச் செய்தார். அரசர்களுக்கு முன் சரியாசனத்தில் அமருவது என்பதே நடக்காத அக்காலகட்டத்தில் சேதுபதி அரசரோடு சரியாசனத்தில் பொன்னம்பலத்தா பிள்ளை அமர்ந்தார். இருவரும் சற்று நேரம் பொது விஷயங்களைப் பேசிக் கொண்டனர். சேதுபதி அரசருக்குப் பொன்னம்பலத்தா பிள்ளையின் அறிவாற்றல் வியப்பில் ஆழ்த்தியது. இவரைப் பற்றிக் கூறும் அனைத்தும் உண்மையே அன்றிக் கட்டுக்கதை அல்ல என்பதையும் புரிந்து கொண்டார். அவரைச் சில நாட்கள் அங்கே தங்கச் சொன்னார். இசைந்த பிள்ளையும் சிலநாட்கள் அங்கே தங்கிக் கொண்டு அங்கிருந்தே பழநிக்குப் போய் முருகனை மனமார வேண்டிக் கொண்டு மீண்டும் ராமநாதபுரம் வந்தார். பின்னர் தம்முடன் வந்தவர்களில் சிலரை மட்டும் இருக்கச் சொல்லிவிட்டு மற்றவர்களை அவரவர் இருப்பிடம் அனுப்பினார். தக்க தருணம் பார்த்துக்கொண்டு காத்திருந்தார்.


ஒருநாள் மன்னரிடம் பேசும்போது, “இந்த சமஸ்தானத்தின் பெரிய கோயில்களைத் தரிசிக்கத் தமக்கு ஆசை என்றும் முக்கியமாய் திரு உத்தரகோச மங்கையைத் தரிசிக்கவேண்டும் என்றும் மணிவாசகப் பெருமான் உருகி உருகிப் பாடிய பல திருப்பாடல்களையும் பாடி அந்தப் பெருமானை வழிபட ஆசை என்றும் தெரிவித்தார். மஹாராஜாவும் இசைந்து அரண்மனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு பொன்னம்பலத்தா பிள்ளையை திரு உத்தரகோச மங்கையை தரிசித்து வரும்படி அனுப்பி வைத்தார். பொன்னம்பலத்தா பிள்ளைக்கு மனம் படபடத்தது. தாம் மேற்கொண்ட கைங்கரியம் நல்லபடியாக முடியவேண்டும். அதற்கு அந்தப் பெருமானே உதவ வேண்டும். உண்மையில் உத்தரகோச மங்கையின் மற்ற மூர்த்தங்களை விட அங்கே தற்சமயம் குடி இருக்கும் சங்கரன் கோயில் நாயகரை அல்லவோ காணவேண்டும்? அதற்காகத் தானே தாம் வந்திருப்பது??? வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகக் கோயிலுக்குச் சென்றார் பொன்னம்பலத்தா பிள்ளை.


ஒவ்வொரு சந்நிதியாகத் தரிசனம் செய்தார். ஆலயக் குருக்களை ஒவ்வொரு மூர்த்தமாகச் சொல்லித் தரிசனம் செய்து வைக்குமாறும் மூர்த்தங்களின் சிறப்புகள், வரலாறு போன்றவற்றையும் தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொண்டார். அவ்வாறே ஒவ்வொரு மூர்த்தமாகத் தரிசனம் செய்து வைக்கப் பட்டது. ஆயிற்று. இதோ, வந்தாயிற்று. இதோ, இதோ, இங்கே இருக்கிறாரே சங்கரன் கோயில் நாயகர். பொன்னம்பலத்தா பிள்ளை எதுவுமே தெரியாதது போல் ஒன்றுமே கேட்காமல் குருக்கள் முகத்தைப் பார்த்தார். குருக்களும், “இவர் சங்கரநயினார் கோயிலின் நாயகர்” என்று சொல்லி மூர்த்தத்தை அறிமுகம் செய்து வைத்தார். பொன்னம்பலத்தா பிள்ளையின் மனம், உடல், என அனைத்தும் பதறியது. என்றாலும் மனதைக் கட்டுப் படுத்திக்கொண்டே, “சங்கரன் நயினார் கோயிலின் நாயகரா? இங்கே எப்படி வந்தார்?” என்று மீண்டும் எதுவுமே தெரியாதது போல் கேட்டார். குருக்கள் விளக்கிச் சொன்னார். பொன்னம்பலத்தா பிள்ளையின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பெருகியது. ஒரு க்ஷணம் அந்த நாயகரை எடுத்துக் கொண்டு ஓடிவிடலாமா என்று கூடத் தோன்றியது. சீச்சீ, ஒரு அரசன் தம் அரசை இழந்துவிட்டு மாற்று நாட்டு அரசனின் கீழ் இருப்பது போலல்லவா நம் நாயகர் இங்கே வந்து இருக்கிறார்?? என்ன கொடுமை இது? அவருக்குரிய சிறப்புகளை எல்லாம் விட்டு விட்டு, இங்கே வந்துவிட்டாரே? ஐயனே, உனக்கே இது ஏற்புடையதாய் உள்ளதா?” அடுத்த கணம் அவர் எண்ணமெல்லாம் ஒரு அழகான தமிழ்ப்பாடலாக உருவெடுத்தது.


“புற்றெங்கே, புன்னை வனமெங்கே பொற்கோயிற்
சுற்றெங்கே நாக சுனையெங்கே – இத்தனையும்
சேரத்தாமங்கிருக்கத் தேவ நீதான்றனித்தித்
தூரத்தே வந்ததென்ன சொல்!”


பொன்னம்பலத்தா பிள்ளையின் கண்களில் இருந்து கண்ணீர் வெள்ளமாய்ப் பெருகி வந்தது. நெடுநேரம் அங்கேயே நின்று கொண்டு மனம் உருகிப் பாடிக்கொண்டிருந்ததையும், கோயில் நிர்வாகிகளும், அர்ச்சகர்களும் கண்டுகொண்டனர். பின்னர் ஒருவாறு சமாளித்துக் கொண்ட பிள்ளைவாள் மற்ற சந்நிதிகளையும் தரிசனம் செய்து முடித்துக்கொண்டு ராமநாதபுரம் போய்ச் சேர்ந்தார். அவர் கிளம்பும் முன்பே கிளம்பிய கோயில் அதிகாரி ஒருவர் ராமலிங்க விலாசத்தில் சேதுபதி மன்னரைக் கண்டு உத்தரகோச மங்கையில் நடந்த நிகழ்வுகளைச் சொல்லிவிட்டார். மன்னர் எதுவும் பேசவில்லை. பொன்னம்பலத்தா பிள்ளை திரும்பிவந்ததும், பிரயாணத்தின் செளகரியம், அசெளகரியம் பற்றி மன்னர் விசாரித்தார். பிரயாணம் வசதியாகவே இருந்ததாகவும், கோயிலிலும் தரிசனம் நன்கு கிட்டியதாகவும் பிள்ளைவாள் சொன்னார். சேதுபதி மன்னர் விடாமல், “தாங்கள் கவிஞராயிற்றே? அங்கே ஏதேனும் தோத்திரப் பாடல் புதிதாய்ப் புனைந்தீரா?” என்று பிள்ளையிடம் கேட்டார். பிள்ளை அவர்களின் மனதுக்குள் இது தான் தக்க சமயம், நம் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளவேண்டும் என்று தோன்றியது.


உடனேயே சாமர்த்தியமாய் மன்னரிடம், “அங்கே புதுசாய் வந்திருக்கிறாராமே ஒரு மூர்த்தி?? அவரைத் தரிசித்தேன். அப்போது அங்கே என் கேள்விகளை ஒரு செய்யுளாகச் சொன்னால், என்ன ஆச்சரியம்? அதற்கு விடையும் கிடைத்தது மற்றொரு செய்யுளாக.” என்று ஆச்சரியம் குறையாதவர் போல் சொன்னார். உண்மையில் இப்போது மன்னருக்குத் தான் ஆச்சரியம். “என்ன சொல்லுங்கள், உங்கள் கேள்வியாக எழுந்த செய்யுளையும், அதன் விடையாக வந்த செய்யுளையும் சொல்லுங்கள், கேட்கலாம்.” என்றார் மன்னர்.பொன்னம்பலம் பிள்ளை, “புற்றெங்கே” என்று ஆரம்பித்துத் தான் பாடிய செய்யுளைச் சொன்னார். பின் எதுவுமே அறியாதவர் போல் இதன் விடையாகக் கிடைத்த செய்யுள் இது, என்று சொல்லிவிட்டு மற்றொரு செய்யுளைச் சொன்னார். அந்தச் செய்யுள்:


”விள்ளுவமோ சீராசை வீடுவிட்டுக் காடுதனில்
நள்ளிருளிற் செண்பகக்கண் நம்பியான் – மெள்ளவே
ஆடெடுக்குங் கள்வரைப் போலஞ்சாதெமைக் கரிசற்
காடுதொறு மேயிழுத்தக்கால்!”

சீராசை என்பது சங்கரநயினார் கோயிலைக்குறிக்கும்.


என்று சொல்லிவிட்டு நிறுத்தினார். மன்னர் முகத்தையே பார்த்தார். மன்னருக்குப் புரிந்துவிட்டது. சங்கரன் கோயில் நாயகர் உத்தரகோச மங்கைக்கு வந்த வரலாறைப் பிட்டுப் பிட்டு வைக்கிறார் பொன்னம்பலத்தா பிள்ளை என்பதைப் புரிந்து கொண்டார். மீண்டும் அந்த மூர்த்தம் சங்கரன் கோயிலையே போய்ச் சேரவேண்டும் என்ற தமது ஆசையையும் அவர் இந்த வெண்பா மூலம் வெளிப்படுத்தியதைப் புரிந்து கொண்டார். பிள்ளையைப் பார்த்து, “ மிகச் சாதுர்யமாக நடந்து கொண்டிருக்கிறீர்கள் பிள்ளை அவர்களே! பாராட்டுகிறேன். ஆனாலும் நாயகருக்கு இங்கே என்ன குறை?? கரிசற்காடாக இருந்தாலும் அவருக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. வேளா வேளைக்கு எல்லாம் நடந்தே வருகிறது. கரிசற்காட்டிற்கு வரும்போது அவஸ்தைப் பட்டார் போல! இப்போது செளகரியமாகவே உள்ளார்” என்று முடிக்கப் பார்த்தார்.


பிள்ளை அவர்களோ, “அரசே, உமக்குத் தெரியாதது இல்லை. அவரவர் இடத்தில் அவரவர் இருத்தலே சிறப்பன்றோ? சங்கரன் கோயில் நாயகரைத் திரும்ப அங்கேயே சேர்ப்பிப்பதே முறை” என்று மீண்டும் வேண்டினார். என்ன தோன்றிற்றோ அரசரும் திடீரென, “சரி, உம் விருப்பம் அதுவானால் அப்படியே செய்துவிடலாம்.” என்று சொன்னார். பொன்னம்பலத்தா பிள்ளையின் ஆனந்தம் சொல்லி முடியாது. அரசர் உத்தரவின் பேரில் தக்க உபசாரங்களுடனும், மரியாதைகளுடனும், கொடி, ஆலவட்டம், குடை போன்ற பரிவாரங்களுடனும் சங்கரன் கோயில் நாயகர் உத்தரகோசமங்கையிலிருந்து எழுந்தருளினார். அவருடன் தாமும் போவதாய்க் கூறி பொன்னம்பலத்தா பிள்ளை மன்னரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு மூர்த்தத்தைப் பின் தொடர்ந்து தாமும் சென்றார். முன்னால் ஒரு ஆளை அனுப்பி நாயகர் திரும்ப வருவதையும், சந்திக்கும் இடம் திருமங்கலம் என்றும் சொல்லி ஆறை அழகப்ப முதலியாருக்குச் செய்தி அனுப்பினார். முதலியாரும் மேள, தாளங்களுடனும், சிவாச்சாரியார்களுடனும், மற்ற முக்கிய உத்தியோகஸ்தர்களுடனும், தாமே நேரில் சென்று சங்கரன் கோயில் நாயகரை மட்டுமின்றிப் பொன்னம்பலத்தா பிள்ளையையும் எதிர்கொண்டு வரவேற்றார். கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகப் பிள்ளை அவர்களைத் தம் நிலையையும் மறந்து இறுகக் கட்டிக் கொண்டு வாய்விட்டு அழுதார் ஆறை அழகப்ப முதலியார். அனைவரும் நாயகரைத் தரிசித்து மனம் உருகிப் பிரார்த்தித்ததோடல்லாமல், விம்மி, விம்மியும் மெய்ம்மறந்தனர்.


பொன்னம்பலத்தா பிள்ளையை வாழ்த்தினார்கள் அனைவரும். நாயகர் மீண்டும் சங்கரன் கோயிலில் தம் யதாஸ்தானத்துக்கு எழுந்தருளினார். அதன் பின்னர் பொன்னம்பலத்தா பிள்ளையின் இந்தச் செயலால் கவரப்பட்ட ஆறை அழகப்ப முதலியார், அதிகாரி, ஏவலாளர் என்ற வேறுபாடின்றி அனைவரோடும் சுமுகமாய்ப் பழகவும் இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்துவிட்டது. நாயகரும் தம் இடத்துக்கு வந்துவிட்டார்.


--Geetha Sambasivam 11:41, 21 ஏப்ரல் 2011 (UTC)




பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 21 ஏப்ரல் 2011, 11:41 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,979 முறைகள் அணுகப்பட்டது.