கோவிலூர் ஆதீனப் பதிவுகள் பதிவு 9

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

கோவிலூர்ப் புராணம்  (தொடர்ச்சி)

திரு கி.வா. ஜகந்நாதன் 


மெய்யறி வின்ப ரூபம்
மேயபூ ரணியே போற்றி
பொய் அகல் சிவத்தின் நீங்காப்
புண்ணியப் பொருளே போற்றி,
ஐயபல் சக்தி ஆகி
அடியாரைக் காப்பாய் போற்றி,
மையகல் அடியார் எண்ணம்
முடித்திட வல்லாய் போற்றி!"

காமரு கூந்தல் போற்றி
கவின் பொழி வதனம் போற்றி,
மாமரு விழிகள் போற்றி,
வண்தொடிக்கரங்கள் போற்றி,
தேமரு கொங்கை போற்றி,
சிறுகிய மருங்குல் போற்றி,
நாமரு புகழ்சால் நெல்லை 
நாயகி திருத்தாள் போற்றி!"

நெல்லைக் காத்ததனால் அம்பிகைக்கு நெல்லை நாயகி என்ற திருநாமம் உண்டாயிற்று.  சிவகுப்தனும் சுதன்மையும் இறுதியில் சிவபதம் அடைந்தார்கள்.

****************************************************************************************************

மதுராபுரியை ஆண்ட சூரதன்மா என்பவனுடைய மனைவி சுகுணை என்பவள்.  சமண சமயத்தினர் அங்கே வந்து அரசனைச் சமணன் ஆக்கினார்.  அவன் சைவத்தைப் புறக்கணித்துச் சமண சமயத்தைப் பரப்பலானான்.  சமணர்களுக்கே ஆதரவு தந்தான்.  அது கண்டு வருந்திய சுகுணை அவனுக்குப் பலவகையில் அறிவுரை புகன்றும் அவன் கேட்கவில்லை.  அரசன் இறந்தான்.  அவனுடன் சுகுணையும் உயிர் நீத்தாள்.

சுகுணை அகளங்கபுரத்து மன்னன் மகளாகப் பிறந்தாள்.  சூரதன்மாவும் சாகலபுரத்து மன்னன் மகனாகப்பிறந்தான்.  அவனுக்கு முற்பிறவியிற் செய்த பாவத்தால் குட்ட நோய் வந்தது.  மன்னன் மகளாகப் பிறந்த சுகுணைக்கு மணப்பருவம் வந்ததும், சுயம்வரம் நடைபெற்றது.  பல தேசத்து அரச குமாரர்களும் வந்திருந்தனர்.  சாகலபுரத்து மன்னன் மகனாகப் பிறந்து குட்ட நோயால் வருந்திய சூரதன்மாவும் வந்தான்.  அவன் தன் முற்பிறவியில் கணவனாக இருந்தவன் என்பதை உணர்ந்த மன்னன் மகள் யாவரும் நகைக்கவும் மன்னன் வருந்தவும் அவனுக்கே மாலையிட்டாள்.  அவனும் அவளும் சாகலபுரத்தை அடைந்தார்கள்.  மருந்துகளால் அவனுடைய நோய் தீரவில்லை.  அந்தப் பெண்மணி அவனுடன் தல யாத்திரையாகப் புறப்பட்டுக் காசி முதலிய ஊர்களுக்குச் சென்றும் நோய் தீரவில்லை.  இறுதியில் சமிவனம் அடைந்து மதுபுஷ்கரிணியில் நீராடவே அவனுடைய நோய் தீர்ந்தது.

**********************************************************************************************

காளிபுரத்தில் இருந்த வீரசேனன் என்னும் பாண்டியன் வேட்டையாடக் கானகம் சென்றான்.  அங்கே கண்வ முனிவர் ஆசிரமத்துக்கருகில் ஒரு கவரிமானைக் கண்டு அதன் மேல் அம்புவிட அது இறந்து போயிற்று.  கண்வர் வளர்த்த மான் ஆதலால் முனிவர் அது இறந்ததை அறிந்து வருந்தி மன்னனைப் பார்த்துக் கோபத்துடன், "நீ வேடனாகித் திரிக!" என்று சாபமிட்டார்.  உடனே அவன் வேடனாகி மிருகங்களை வேட்டையாடிக் கொண்டு காட்டில் திரிந்தான்.  

மந்திரி முதலியோர் அரசன் வராததை அறிந்து அவன் மகனாகிய இராசசேகரனை மன்னனாக்கினார்.

வேடனான அரசன் பல இடங்களில் திரிந்து சமிவனம் வந்தான்.  மது தீர்த்தத்துக்கு அருகில் ஒரு மர நிழலில் தங்கினான்.  அந்தத் தீர்த்தத்தில் இருந்த மீன்கள், "இவன் நம்மைக் கொடியாகக் கொண்ட பாண்டியன், இவன் பாவத்தைப் போக்குவோம்." என்று தம்மில் பேசிக் கொண்டு, துள்ளிக் குதித்தன; அப்போது அந்த நீர் மேலே பட்டதும், அவனுக்குக் கொலை புரியும் எண்ணம் நீங்கியது.  புண்ணிய நினைவு உண்டாயிற்று.  அந்தத் தீர்த்தத்தில் மூழ்கி வேட்டுருவம் நீங்கி இறைவனையும் இறைவியையும் இறைஞ்சினான்.

காளியாபுரத்திலிலுள்ளவர்கள் இதனை அறிந்து அவனை வந்து கண்டு தம் நகருக்கு அழைத்து ஏகினர்.  மகன் அரசாள, அவன் யோகம் துய்த்து வாழ்ந்தான் பிறகு சிவபதம் அடைந்தான்.  அன்று முதல் மதுபுட்கரிணிக்குச் சாபவிமோசனம் என்ற பெயரும் அமைந்தது.

**************************************************************************************************************

இந்த வரலாறுகளையெல்லாம் அகத்திய முனிவர் வாயிலாகக் கேட்ட வீரபாண்டியன் திரிபுவனேசனை வழிபட்டான்.  அகத்தியர் அவனுக்குப் பிரம ஞானம் உபதேசித்தார்.  அவன் இறுதியில் விதேக முக்தியை அடைந்தான்.

சொற்கலை, பொருட்சுவை மலிய இந்தப் புராணத்தை இயற்றி இருக்கிறார்,பிள்ளை அவர்கள்.  வேதாந்த மடத்தைச் சார்ந்த கோயிலாதலின் அத்துவித வேதாந்தக் கருத்துக்களையும் பரிபாஷைகளையும் அங்கங்கே அமைத்திருக்கிறார்.  வருணனைகளும் ஐந்திணை இயல்புகளும் இருதுக்களின் இயல்பும், துதிகளும் இப்புராணத்தில் வருகின்றன.

பாயிரத்தில் கோயிலூர் வேதாந்த மடத்தின் முதல் ஞானாசிரியரைப் போற்றுகிறார்.

மேயபெருங்கழனி நகர் கோயிலூர் எனும் பேர்
மேவ இறை ஆலயத்தை விரித்த அருட் பெரியோன்
பாயபுனல் திரண்டாலி ஆயதெனச் சுத்த
பரப்பிரமம் இவ்வுருக் கொண்டுற்றதெனும் புரணன்,
ஆயபுகழ் வேதாந்த சிரவணம் செய்துலகில்
அளவிலர்சை தன்னியமா சுப்புரிந்த அறவோன்
தூய முத்தி ராமலிங்க தேசிகன் என்றுரைக்கும்
சோதிலிங்க சொரூப னென்னும் சோதியை ஏத்தெடுப்போம்

இந்நூலைச் செய்வித்த சிதம்பர தேசிகனைப் பற்றி ஒருசெய்யுளில் சொல்கிறார்.

மேலாய துறவினுக்கோர் துணையாகி உள்ளான்,
விரிந்து பல புவனமும் காண்றிடு சோற்றிற் கண்டோன்
நாலாய மறைமுடிவின் பொருள் விளங்க எடுத்து
நல்மாணவர்க்கருளித் தன்மயமாக்கிடுவோன்;
பாலாய சிவ தருமம் பற்றப்பாலிப்போன்;
பரப்பிரம சுவாநுபூதியிற் சிறந்த மேலோன்,
நூலாய யாவும் உணர்ந்த தவர்மனுவினெடுத்து
நுவலுமொரு சிதம்பர தேசிகனெனும்மா பெரியோன்


வேதாந்தக் கருத்துக்களை இவர் ஆளுவதற்குச் சில உதாரணங்கள்

"பளிங்குப் பாறையில் யானையின் வடிவத்தைக் கண்டு வேடர்கள் யானையென்றெண்ணி வேலை எறிந்து, பிறகு உண்மையை உணர்ந்து நாணுவார்கள்.  அவித்தையையுடையவர்கள் கற்பிதப் பிரபஞ்சத்தை உண்மையென்று கருதி அழலிலிட்ட மெழுகு போல் உருகி, பின் உண்மை தெரிந்து அவா அற்று நாணுதல் போல இருக்கிறது இந்தக் காட்சி?" (நாட்டுப் படலம் 23)

"தத்துவமசி என்பதிலுள்ள மூன்று பதங்களின் உண்மையை முறையாக விசாரம் செய்து பிறகு நிஷ்டை கூடி, எல்லாவற்றையும் தாமாகக் கண்டு இரப்பவர்கள் பலர்.  அவர்களுக்குப் பணி செய்வதை மேற்கொண்டு நிற்கும் குழாங்கள் ஒருசார் இருக்கும். (திருநகரம்.70)

சூத முனிவரைச் சொல்லும்போது:

"சத்திய ஞானானந்த நிட்களமாய்த்
தற்பர சொரூபமாய் விபுவாய்
நித்திய நிமல நிரஞ்சன முதலாய்
நிறைவுறு பேரொளிப் பிழம்பாய்
மெத்திய உயிரின் அபேதமாய் என்றும்
விளங்கிடும் ஒருபர சிவமே
பொத்திய தான் என்றுணர் தரு துணிபோன்
புகழ்மிகு சூதமா முனிவன்"

என்று பாராட்டுகிறார்.  சிவமே தான் என்றுணர்ந்தவன் என்பதில் அத்வைதக் கருத்து அமைந்திருக்கிறது.

உபநிடதப் பொருள் உரைத்த படலத்தால் முழுக்க முழுக்க அத்வைத வேதாந்தக் கருத்துக்களையே சொல்கிறார்.

பிரமத்தை உணரும் உபாயம் எதுவோ அதுவே பிரம வித்தை, அதைப் பற்றிய விரிவான கருத்துக்கள் இப்படலத்தில் வருகின்றன.  பரிபூரணமாய், சச்சிதானந்த சொரூபமாய், பரம அத்துவிதப் பிரத்தியக பின்னமாய் ஒளிரும் பிரமத்தை உணர்தர முக்கியமாகச் சொல்லப்பட்ட உபாயமே பிரம வித்தை (52) என்பது ஒரு பாட்டின் பொருள்.

"கும்பம் முதலிய காரியங்கள் காரணமாகிய மண்ணே ஆவது போலவும், அரவு மாலை தடி முதலிய தோற்றங்கள் கடைசியில் கயிறாக முடிவது போலவும் ஜீவேசுவர ஜகத்தாய்த் தோன்றும் நானாவித நாம ரூபஜகத்தென்பதுவும் அகண்ட பரிபூரண சச்சிதானந்த சுத்த பரமாத்துவித பரமசிவ சொரூபமேயாம்' (73) என்று ஒரு பாட்டுச் சொல்கிறது.

இவ்வாறு கோவிலூர்ப் புராணம், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றின் பெருமையையும், இறைவனுக்கும், இறைவிக்கும் பல திருநாமங்கள் உண்டான வரலாற்றையும், இங்கே வழிபட்டுப் பேறு பெற்றவர் கதைகளையும் சொல்கிறது.  இடையே சிவபெருமான் துதியும், அம்பிகை துதியும் வருகின்றன.  நாடு, நகரம், ஆகியவற்றின் சிறப்பு, ஐந்திணைகளின் வருணனை முதலிய இலக்கிய அமைதியுள்ள பகுதிகளையும் இதில் காணலாம்.

கோவிலூர்ப் புராணம் முடிந்தது.


--Geetha Sambasivam (பேச்சு) 09:48, 4 ஜனவரி 2014 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 4 ஜனவரி 2014, 09:48 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,436 முறைகள் அணுகப்பட்டது.