கோவிலூரில் தொண்ணூற்றாறு ஊர் நகரத்தார்களும் கூடிய எழுச்சி மிகு மாநாடு!
சித்ரபானு ஆண்டு சித்திரைத் திங்கள் 20 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி (3-5-02 முதல் 5-5-02 வரை) மூன்று நாட்கள் நடைபெற்ற எழுச்சிமிகு மாநாட்டினைக் காணக் கண்கோடி வேண்டும்.
இது மாநாட்டு விழாவிற்கு வந்தவர்கள் வராதவர்களிடம் சொல்லிச் சொல்லி மகிழும் அளவிற்கு மாநாடு சிறந்தோங்கியது.
முதல்நாள் மாநாடு : முதல்நாள் நிகழ்ச்சி மாலை 6-00 மணிக்குத் துவங்க வேண்டும் என்பது ஏற்பாடு. அன்று காலை 10-00 மணியிலிருந்தே நகரத்தார் பெருமக்கள் திருவிழாவிற்குச் செல்லும் மகிழ்ச்சியோடு ஆச்சிகளும், குழந்தைகளும் ஆர்வத்தோடு கூடத்தொடங்கினர்.
பிரம்மாண்டமான பந்தல்: மண்டபத்தில் தான் மாநாட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது என்றாலும் அரங்கத்திற்கு வெளியே சுமார் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் மாபெரும் அலங்காரப் பந்தலை எழிலோடு நிமாணித்திருந்தனர். பந்தலில் உள்ள நாற்காலிகளில் அமர்ந்தபடியே நிகழ்ச்சிகளைக் காணும் வண்ணம் வண்னத் தொலைக்காட்சிப் பெட்டிகள் அதிக அளவில் அலங்காரப் பந்தலில் தயாராக இருந்தன.
குடும்பம் குடும்பமாக: பேருந்துகளிலும், சிற்றுந்துகளிலும், இரண்டு சக்கர வாகனங்களிலும் அலைஅலையாய்...அணி அணியாய்...குடும்பம் குடும்பமாய் கோவிலூரில் திரளத் தொடங்கியது நகரத்தார் வெள்ளம். அனைத்துச் சாலைகளும் கோவிலூர் நோக்கியே பயணப்பட்டன.
விழா நாயகர்: அன்று மாலை சுமார் 5-30 மணி அளவில் விழாக்குழுவினருடன் துறவுக் கூட்டத்திலிருந்து காவியுடை தரித்த நகரத்தாரின் மண்டேலா சீர் வளர் சீர் நாச்சியப்ப சுவாமிகள் அழைத்து வரப்பட்டார். அருள்மிகு நெல்லை அம்மன் உடனாகிய கொற்றவாளீஸ்வார் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப் பெற்றது. இறையருளோடு மாநாட்டு அரங்கத்திற்கு வருகை தந்தனர். கூட்டத்தினரின் பலத்த கரவொலிகளின் நடுவே விழாநாயகர் மேடையில் ஆசி வழங்கியவாறு அமர்ந்தார். முக்கியப் பிரமுகர்களும் மேடையில் இருக்கையில் அமர்ந்தனர். இறைவாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
ஆன்மிக குருவின் அருளுரை; கோவிலூர் ஆதீனத்தின் 12 ஆவது குரு மகா சன்னிதானம் சீர் வளர் சீர் நாச்சியப்ப அடிகள் ஆற்றிய அருளுரையில், "தென்னாட்டில் கோவிலூர் மடம்" ஒன்றுதான் வேதத்தைத் தமிழில் கற்றுத் தருகிறது. "வேதாந்தம்" எனபப்டுவது ஒருமதம் என நினைக்கிறார்கள். தமிழகத்தில் ஓதுவார்கள் பற்றாக்குறை உள்ளது. காரணம் சம்பளம் குறைவாக இருப்பதாலும் அப்பாவின் தொழிலுக்கு மகன் வர வேண்டாம் என நினைத்து இளைஞர்கள் கம்ப்யூட்டர் கல்விக்குச் சென்று விடுகிறார்கள். கோவிலூர் ஆதீனத்தில் பயின்ற 100 ஓதுவார்கள் தற்போது நல்ல வேலைகளில் உள்ளனர். 80 பேருக்கு நாதஸ்வரம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. சிற்பக் கலைப் பயிற்சியும் பயிற்றுவிக்கப் படுகிறது.
நிகர்நிலைப் பல்கலைக் கழகம் ஒன்றைத் துவங்கி சுமார் 10 கலைகளில் பாடமும், பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. நகரத்தார் சமுதாய வளர்ச்சிக்காக 'நகரத்தார் நல்வாழ்வு அறநிலை'(Nagaraththar Welfare Trust) துவங்கப்படவுள்ளது. இந்த அறநிலைக்கு ரூபாய் 7 கோடி நிதி சேர்த்திடும் திட்டமும் உள்ளது எனக் கூறிய சுவாமிகள் இந்த அறநிலைக்குத் தனது சார்பில் ரூபாய் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படுகிறது என்று கூறியதும் கூட்டத்தினரின் மகிழ்ச்சி ஆரவாரம் அடங்க வெகுநேரமாயிற்று. மேலும் சுவாமிகள் தனது அருளுரையில்...நகரத்தார் சமுதாய மக்களில் ஒரு பக்கம் வசதி படைத்தவர்கள், மற்றொரு பக்கம் வசதியற்றவர்கள் என்ற நிலையில் தான் வாழ்ந்து வருகிறார்கள். அந்த வசதியில்லாதவர்களைக் கவனிக்க வேண்டும் என்பதே நோக்கம். பணக்காரன், ஏழை என்ற பாகுபாட்டை மாற்ற வேண்டும் என்பதே என்னுடைய முக்கியத் திட்டம். நகரத்தாரில் உள்ள சுமார் 35,000 புள்ளிகளில் புள்ளி ஒருவருக்குக் குறைந்த பட்சம் ரூ 1000/- வீதம் அறநிலைக்கு வழங்க வேண்டும். வசதியுள்ளவர்கள் அதிகமாகத் தரலாம். கட்டாயம் கிடையாது. ஏழுகோடி ரூபாய் சேர்ந்தால் இளைஞர்களின் உயர்கல்விக்கு நிச்சயமாக உதவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இப்போது வசதியற்ற 600 முதியோர்களுக்கு மாதந்தோறும் கோவிலூர் ஆதீனம் உதவி வருகிறது.
நம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் தள்ளிவிடக் கூடாது... அவர்களுக்கு உதவுவது நமது தலையாய கடமை என்ற எண்ணம் வளர வேண்டும். உண்மையிலேயே பெற்றோர்களை வைத்துக் காப்பாற்ற முடியாது கஷ்டப்படும் பிள்ளைகள் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பலாம். அப்படிப்பட்ட முதியோர்களுக்குத் தான் உதவிடும் திட்டம் உள்ளது. இந்தத் திட்டத்திற்கு வெளிநாடுகளில் உள்ள நம்மவர்கள் எல்லாம் அள்ளித் தருவதாக உறுதி கூறி இருக்கிறார்கள்.
நம் சமுதாயத்தில் மூன்று நாள் நடைபெற்ற திருமணங்கள் இப்போது ஒருநாள் மட்டும் நடைபெறுவதாக மாறி இருக்கிறது எனும் இந்த மாற்றம் வரவேற்கக் கூடியதே. என்னுடைய சம்பாத்தியத்தில் நிறைய வட்டி வருகிறது. அந்த வட்டியை நல்ல காரியங்களுக்கும் நகரத்தார் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த வட்டியைச் செலவு செய்ய முடிவெடுத்திருக்கிறேன்.
கோவிலூர் ஆதீனம் என்றும் உதவிடும் ஒரு ஆலயமாக சாசுவதமாக இருக்கும் என்பதை மட்டும் நிச்சயமாகக் கூறிக் கொள்கிறேன். என்று சுவாமிகள் கூறியதும்...சமூகச் சிந்தனையும், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாட்டை மாற்ற வேண்டும். இளைஞர்களின் கல்விக்கும், முதியோர்களின் அந்தக் கடைசி வாழ்க்கைக்கும் உதவ வேண்டும் என்ற சிந்தனை கொண்டவராக மடாலயத்திலிருந்து மறுமலர்ச்சி கொண்ட ஒரு மகா புருஷர் நகரத்தாருக்குக் கிடைத்திருக்கிறார் என்பதைக் கூட்டத்தினர் முகத்தில் தோன்றிய நம்பிக்கை ஒளியில் காண முடிந்தது.
மேலும் அருளுரையாற்றிய அருளாளர், "சமூகப் பணிகளோடு நின்றுவிடாமல் இலக்கியப் பணியையும் ஆற்றப் போகிறேன். சங்க இலக்கியங்களான தொல்காப்பியம், மணிமேகலை, சிலப்பதிகாரம், அகநானூறு, புறநானூறு இன்னும் பிற இலக்கியங்களையும் சாதாரண மக்களும் படிக்கக் கூடிய அளவிற்கு எளிய தமிழில் வடித்து, நூலாக அச்சிட்டு மக்கள் பதிப்பாக வெளியிடப்படும் என்றபோது... மெல்லத் தமிழ் இனி வாழும்" என்று நம்மவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமுதாயமே பெருமைப் படக்கூடிய அளவிற்கு அனைவரின் கண்களுக்கும் மடாலயத்திலிருந்து ஒரு சீர்திருத்தத் தூதுவராக, தமிழன்னையின் மைந்தராக தரிசனம் தந்தார்.
சங்க இலக்கியங்களை மக்கள் பதிப்பாக வெளிவருவதற்கு முனைவர் தமிழண்ணல் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படவுள்ளது என பலத்த கரவொலிகளில் அதிர அரங்கத்தில் இவ்வாறு அருளுரை நிகழ்த்தினார்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள்: காலை 9--30 மணிக்கு ஆன்மிக அரங்கம் தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு வி.என். சிதம்பரம் செட்டியார் அவர்கள் தலைமையேற்றிருந்தார்கள். அன்று தான் அக்னி நக்ஷத்திரம் தொடங்கிய நாள் ஆனால்....அன்று முழுவதும் அடைமழை பொழியத் தொடங்கியது. வெயிலின் வெப்பத்திற்குப் பதிலாக..... குற்றாலத்தில் நடைபெறும் சாரல் விழாவைப் போன்று இரண்டாம் நாள் நிகழ்ச்சி துவங்கியது. ஆன்மிக அரங்கத் தலைமையுரையாற்றிய வி.என். சிதம்பரம் செட்டியார் அவர்கள் "நகரத்தார் மாநாட்டை அந்த வருண பகவானே நேரில் வந்து வாழ்த்துவதாக நினைக்கிறேன்." கொளுத்தும் அக்னி வெயிலுக்குப் பதிலாகக் குளிரில் நனைந்தபடியே நடைபெறும் இவ்விழாவிற்கு வருணன் வந்ததால் தான் கோவிலூர் மாநகரமே குளிர் நகரமாக மாறிவிட்டது.
கோவிலூர் ஆதீனம் அவர்கள் சன்னிதானத்தில் எல்லாரும் சமம்தான், தலையாய மக்களைத் தந்த தலையாய சமூகம் எனும் பொருளில் பேராசிரியப் பெருமக்கள் உரையாற்ற விருக்கிறார்கள். படித்தவர்கள் நிறைந்த இந்த சபையில் படிக்காதவனாகிய நான் பேசுகிறேன் என்றால் படித்தவனும், பாமரனும் சுவாமிகள் சன்னிதானத்தில் ஒன்று என்பதற்கு நானே உதாரணம்.
நான் படிக்கவில்லையே தவிர படிப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அனுபவங்களால் பட்டறிவு...பட்டப்படிப்பு அறிவுக்குச் சமம் என்பார்கள்.... நான் நிறையவே அனுபவப் பட்டவன் தான். ஆகவே, நான் தலைப்புக்குள் போகவில்லை.
(தொடரும்)