திருக்களர் ஆணடவர் எனப்படும் மகான் வீரப்ப ஸ்வாமிகள்
நடமாடும் தெய்வமாக நம்மிடையே நூறாண்டுகள் வாழ்ந்த காஞ்சிப் பெரியவர், 1972 கல்கி தீபாவளி மலரில் கோவிலூர் மகான் வீரப்ப சுவாமிகள் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்கள்.
புண்ணியம் செய்தவர்களைப் பற்றி எண்ணுவதாலும் பேசுவதாலும் கேட்பதாலும் நமக்கும் அவர்கள் புண்ணியத்தில்பங்கு கிடைக்கிறது. இந்தக் கதை கேட்பதால் வீரப்ப சுவாமிகளின் சிவ புண்ணியத்தில் எல்லோருக்கும் பங்கு கிடைக்கிறது.
இப்படிப் பாராட்டி வணங்கப் பெற்றவரும் கோவிலூர் ஆதீனத்தை ஐந்தாம் பட்டமாகப் பொறுப்பேற்று அலங்கரித்தவரும் ஆகிய வீரப்ப சுவாமிகள் புது வயலில் (1848 ஆம் ஆண்டில்) கீலக ஆவணி 12 ஆம் நாளில் அருணாசலம் செட்டியாருக்கும் உமையாள் ஆச்சிக்கும் ஒரே தவமகனாகப் பிறந்தார்கள்.
பத்தாவதாண்டில் வெளிநாடு சென்று பொருளீட்டத் தொடங்கி பொருளிலும் அதைத் தேடும் வழிகளிலும் விருப்பமின்றி, பொய்ப் பொருளை விட்டு மெய்ப்பொருள் தேட விழைந்து தாய் நாடு திரும்பி புது வயல் வீரப்பையா, அழகப்பையா ஆகியோருடன் தொடர்பு கொண்டார்கள். அழகப்பையா கொடுத்த பட்டினத்தார் பாடல்களும், அஞ்ஞவதைப் பரணி என்ற வேதாந்த நூலும் ஆன்ம பக்குவத்துக்கு அடிப்படியாக அமைந்தன.
இல்லற விருப்பின்றித் துறவு வாழ்க்கை வாழ நினைத்து, மணமாகாமல் துறவியாகக் கோவிலூர் சென்றார்கள். மடாலயத்தில் சிறுவர்களைச் சேர்ப்பதில்லை என்ற வழக்கத்தை மாற்றி, மூன்றாவது மடாதிபதியான கருணாநிதி என்ற சிதம்பர ஞான தேசிக சுவாமிகள் இவரைச் சேர்த்துக் கொண்டார்கள். இதற்குப் பெரிதும் காரணமாக இருந்தவர் பொன்னம்பல ஞான தேசிகர். இவர் வீரப்ப சுவாமிகளுக்குப் பாடம் சொல்லி விளையும் ஞானத்தை முளையிலேயே அறிந்து கொண்டவர்.
தக்க வயதில் பொருள் வைத்த சேரியில் உள்ள உகந்த லிங்க ஞான தேசிகர் மடத்தில் தலைமை ஏற்றிருந்த சட்டையப்ப சுவாமிகளிடம் துறவறம் பெற்றுப் பிச்சை ஏற்றுக் கோவிலூரை அடைந்த வீரப்ப சுவாமிகள், வேதாந்தப் பாடநூல்கள் பதினாறையும் பாடம் கேட்டார்கள். கால்நடையாகக் காளையார் கோயில் சென்றும் சிதம்பரம் சென்று வணங்கியும் சிதம்பரம் ஞான தேசிக மடத்தில் பிச்சை ஏற்றுண்டும், இடையறா நிட்டையில் ஆழ்ந்தும் 12 ஆண்டுகளில் தவசீலராகத் திகழ்ந்தார்கள்.
திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் தவத்திரு சுப்பிரமணிய தேசிகர் சிதம்பரம் வந்த போது வீரப்ப சுவாமிகளைப் பாராட்டி, வேதாந்தம் கேட்டுத் திருநீற்றுப் பை வழங்கி ஆசீர்வதித்தார்.
இந்நிலையில் கோவிலூர் மடத்தின் நான்காவது பட்டத்தில் எழுந்தருளியிருந்த இராமசாமி ஞானதேசிகர் 1883-ஆம் ஆண்டில் பரிபூரணம் அடைந்தார்கள். அப்பொழுது அவர்கள் கோவிலூர் ஆண்டவர் அருள் வாக்கின்படி தமக்குப் பின் வீரன் வருவான் என்று குறிப்பால் உணர்த்தினார்கள்.
இதையறிந்த பொன்னம்பல சுவாமிகள் வீரப்ப சுவாமிகளிடம் கோவிலூர் ஆதீனத்தைப் பாதுகாத்து வளர்க்க வீரமாமுனிவராகிய தங்களைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்? என்று கேட்டுத் தலைமை ஏற்கக் கூறினார்கள். என் துறவு வாழ்க்கைக்கு இத்தலைமைப் பதவி ஒரு பொன் விலங்கு என்று மறுத்த வீரப்ப சுவாமிகள், சிதம்பரத்தில் இருந்தால் தம்மைக் கட்டாயப்படுத்துவார்கள் என்று நினைத்து வளவனூரில் சண்முக ஞான தேசிகர் மடத்தில் ஒளிந்து கொண்டார்கள். தலைமைப் பதவி அவருக்காகத் தவம் செய்தது. பொன்னம்பல சுவாமிகள் தக்க பெரியார்களை அனுப்பி, அவரைச் சிதம்பரத்துக்கு அழைத்து வந்தார்கள். கோவிலூர் ஆதீனத்தைக் கொண்டல்லவோ நாம் கடைத்தேறினோம். அதை நாம் பேணாமல் கைவிட்டால் நாம் கடைத்தேற நல்வழி கிடைக்குமா எனக் கேட்டு, வீரப்ப சுவாமிகளைச் சம்மதிக்கச் செய்து கோவிலூரில் பட்டம் கட்டி, பொன்னம்பல சுவாமிகள் புண்ணியம் பெற்றார்கள். இராமனுக்கு இலக்குவனாக இருந்து வீரப்ப சுவாமிகளுக்கு உயிர்த்துணையாக விளங்கினார்கள்.
வீரப்ப சுவாமிகள் வீரசேகர ஞான தேசிக சுவாமிகளாகப் பட்டமேற்றபின் கோவிலூரில் பல திருப்பணிகள் செய்தார்கள். கைலாசக் கொட்டகை, பிரம்ம சபை, குருபூஜைக் கட்டு, நெற்களஞ்சியம், மலர் மண்டபம் ஆகியவற்றைத் தமக்கே உரிய கலையுணர்வோடு கட்டினார்கள். ஊருணியில் கற்படித்துறைகள் கட்டி அடியார்கள் வசிக்க ஆசிரமங்களும் கட்டினார்கள்.
சிருங்கேரி மடாதிபதி சச்சிதானந்த சிவாபிநவ நரசிம்ம பாரதி சுவாமிகள் இராமேசுவர யாத்திரை வந்து இராமநாதபுரத்தில் தங்கியிருந்த பொழுது, அவர்களைக் கோவிலூருக்கு அழைத்து வந்து ஒரு மாத காலம் தங்கச் செய்து சிறப்பாக உபசரித்தார்கள். அப்போழுது அவர் சிருங்கேரி சாரதாம்பாள் ஆலயத்தைக் கருங்கற்பணியாக நீங்கள் ஆக்கித் தரவேண்டும், இது உங்கள் கடமை என்று கூற வீரப்ப சுவாமிகள் நகரத்தார்களை வரவழைத்து ரூபாய் ஐம்பதாயிரம் சேர்த்து சிருங்கேரி மடத்தில் கொடுத்துக் கருங்கல் திருப்பணி செய்து திருக்குட நன்னீராட்டும் செய்தார்கள். இதனால் வீரப்ப சுவாமிகளுக்குச் சிருங்கேரி மடத்தில் சிருங்கேரி சுவாமிகளுக்குச் சமமாகப் பொற்பீடம் அளித்துப் பாராட்டினார்கள்.
வீரப்ப சுவாமிகள் கோவிலூரில் கொற்றவாளீசர் திருக்கோயிலைப் புதுப்பித்துத் தம்முடைய அறுபதாவது வயதில் 1908 இல் திருக்குட நன்னீராட்டும் செய்தார்கள்.
கோவிலூர்த் திருப்பணியை மேற்பார்வை செய்த போது ஒரு நிகழ்ச்சி நடந்தது. அவர்கள் காலுக்கடியில் ஒரு கருநாகம் சீறிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்தவர்கள் வீரப்ப சுவாமிகளிடம் ஐயா தங்கள் காலடியில் கருநாகம் படம் எடுத்து ஆடுகிறது. தங்களைத் தீண்டி விடும் போலத் தெரிகிறது. பாதுகாப்பாக இருங்கள். என்று கூறினார்கள். பாம்பு தீண்டியது. அதன் ஆயுள் முடிந்தது. சுவாமிகள் எழுந்து வந்தார்கள். பாம்பு பிறவிப் பெருங்கடலில் கரையேறிவிட்டது.
கோவிலூரைக் கலை மலிந்த ஊராக மாற்றிய வீரப்ப சுவாமிகள் இணையற்ற செயல் திறன் உடையவர்கள். அவரை ராஜரிஷி என்று அழைப்பர். மாணாக்கர்களுக்கு முறையாகக் கற்பித்தார்கள். கோவிலூர் மடத்தின் ஆறாவது பட்டம் ஏற்ற தேனிப்பட்டி அண்ணாமலை ஞான தேசிக சுவாமிகளும் ஏழாவது பட்டம் ஏற்ற தேவகோட்டை மகாதேவஞான தேசிக சுவாமிகளும், வீரப்ப சுவாமிகளின் சீடர்களே ஆவர். இவர்கள் கோவிலூரில் வேதாந்த மணம் பரப்பியவர்கள். அண்ணாமலை ஞான தேசிகர் காலத்தில் 18 புராணங்களும் வடமொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. தமிழ் இலக்கிய வரலாற்றில் கோவிலூர் மடம் தனியிடம் பெற்றது. வீரசேகர ஞான தேசிகர் காலத்தில் கோவிலூர் மடத்தில் தங்கிப் பாடம் கேட்ட அடியார் கூட்டம் மிகவும் அதிகமாக இருந்தது.
வீரப்ப சுவாமிகளின் மாணாக்கர்களில் சாதி இன வேறுபாடின்றிப் பல சான்றோர்கள் குறிப்பிடத்தக்க புகழ் பெற்றனர். மண்டபப் பட்டு வேங்கமபசல ரெட்டியார், சித்தலக்கரை வெள்ளியங்கிரி முனிவர், வேட்டைக்காரன்புதூர் சுப்பையா சுவாமிகள், மலையாளத்து நாராயண சுவாமிகள், வேதாரண்யம் வியாகரண பண்டித சிவானந்த சுவாமிகள், மதுரை பிரம்மானந்த சுவாமிகள் மடாதிபதி சோமசுந்தர சுவாமிகள், பசுபதி கோயில் சிதம்பர சுவாமிகள், மழபாடி சதாசிவ சுவாமிகள், வேப்பஞ்சேரி சூறாவளி சொக்கலிங்க சுவாமிகள், பஞ்ச நதிக்குளம் வைத்தியலிங்க சுவாமிகள், சின்னம ரெட்டிப்பட்டி அருணாசல சுவாமிகள், நாட்டரசன் கோட்டை மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள், திருப்புவனம் காசிகானந்த ஞானாசார்ய சுவாமிகள், முதலிய எண்ணற்ற துறவிகள், வீரப்ப சுவாமிகளிடம் பாடம் கேட்டார்கள். இவர்களில் பலர் தங்கள் ஊர்களில் மடங்களை நிறுவினார்கள். இல்லறத்தில் இருந்தவர்களும் வீரப்ப சுவாமிகளிடம் வேதாந்தப் பாடம் கேட்கும் பேறு பெற்றார்கள். காரைக்குடி வேங்கடாசலய்யா, சுப்பிரமணியய்யா, குடை ஐயா, குமரப்பையா, மெய்யப்பைய்யா, கோட்டையூர் அழகப்பையா, தேனிபட்டி அடைக்கப்பய்யா ஆகியோர் இல்லற அடியார்களாகப் புகழ் பெற்று விளங்கினார்கள்.
இவ்வளவு புகழ் பெற்ற வீரப்ப சுவாமிகள் விருப்பு வெறுப்பு இல்லாதவர். ஆனால் அவருக்குத் திடீரென்று கோபம் வந்துவிடும். அப்பொழுது அவர் கொடுக்கும் சாபம் பலித்துவிடும். இதனால் அவரைத் துர்வாச முனிவர் என்பார்கள். இந்தக் கோபம் தீர என்ன வழி? என்று தம் நண்பர் சுப்பராய அய்யரிடம் கேட்டார் சுவாமிகள். பதினெட்டுப் புராணங்களையும் படித்த சுப்பராய அய்யர், துர்வாச முனிவர் தம்முடைய கோபத்தைப்போக்கிக் கொள்ள தவம் செய்து சாந்தம் பெற்ற திருத்தலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருத்துறைப் பூண்டிக்கு அருகில் உள்ள திருக்களர் என்ற தலம் என்று அந்த ஊர்த் தல புராணத்தின் அடிப்படையில் கண்டு பிடித்தார். வீரப்ப சுவாமிகளிடம் கூறினார். வீரப்ப சுவாமிகள் அங்கே சென்று பார்த்தார். அம்பல வாணர் முன்னால் துர்வாச முனிவர் சிரித்தபடி இருப்பதைக் கண்டார். மனம் ஈடுபட்டது. ஆலயத் திருப்பணிக்கு வழி பிறந்தது. வீரப்ப சுவாமிகள் கட்டளையிட்டார்கள். இயல்பாகவே திருப்பணிக்கு அள்ளிக் கொடுக்கும் நகரத்தார்கள் சுவாமிகள் கட்டளையிட்டதால் இன்னும் அதிகமாகக் கொடுத்தார்கள்.
நீருளார்கயல் வாவி சூழ் பொழில் நீணமடமாவயல் ஈடுமாமதில்
தேரினார் மறுகில் விழமல்கு திருக்களருள்
ஊருளார் இடு பிச்சை பேணும் ஒருவனே ஒளிர் செஞ்சடைம்மதி
ஆர நின்றவனே அடைந்தார்க்கருளாயே.
என்று திருஞான சம்பந்தர் பாடிய திருக்களர் ஆலயத்தின் திருப்பணியைத் தொடங்கிய வீரப்ப சுவாமிகள், தம் திருக்கரங்களால் உளி கொண்டு கொத்தித் தச்சு வேலை தொடங்கி அருளினார்கள். மூன்றாண்டுகளில் சுமார் நான்கு லக்ஷ ரூபாய் செலவில் திருப்பணி நிறைவேறித் திருக்குட நன்னீராட்டும் (1911) செய்யப் பெற்றது. இதன் பிறகு வீரப்ப சுவாமிகள் கோபத்தை வீரபத்திரர் வாங்கிக் கொண்டு விட்டார். சுவாமிகள் அமைதியே வடிவமாக ஆலயத்தில் பணி செய்தார்.
திருக்களர் ஆலயத்தில் திருவிழா நடத்தத் தீர்மானித்த சுவாமிகள் அதற்காக மரத்தேர் செய்ய ஏற்பாடு செய்தார். தேர் செய்த பின் தேர்த்திருவிழாவுக்கு ஏற்பாடும் செய்யப் பெற்றது. மரத்தச்சர்கள் தேரை இழுக்கும் முன் ஆட்டை பலி கொடுக்க வேண்டும் என்றார்கள். சுவாமிகள் மனம் ஒப்பவில்லை. நான் சொல்கிறபடி தேரை இழுங்கள், இடையூறு வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்றார்கள். மக்கள் கூடித் தேர் இழுக்கத் தேர் கிளம்பியது. திருக்கோயிலே அசைந்து வருவது போலத் தெரிந்தது. எந்த வேற்றுமையுமின்றி ஊர்மக்கள் அனைவரும் கூடி தேரை இழுத்தார்கள். சமுதாய ஒற்றுமைக்கு அடிப்படை அமைத்த தேர்த்திருவிழாவில் குலுங்கி வந்த திருத்தேர், பாதி வழியில் திடீரென்று நின்று விட்டது. நகரவில்லை. எல்லா முயற்சிகளும் தோற்றுப் போய் விட்டன. எல்லோரும் சுவாமிகளிடம் வந்தார்கள். பரம்பரைப் பழக்கம் பலி கொடுப்பது. அதைச் செய்யாததால் தடை ஏற்பட்டு விட்டது. இனிமேலாவது பலிகொடுக்கச் சம்மதியுங்கள் என்றார்கள். கருணையே உருவான சுவாமிகள்," நீங்கள் ஓர் ஆட்டைப்பலி கொடுத்தால் அழுவதற்கு ஆட்டுக் குட்டி இருக்கும். ஆட்டுக்குட்டியை பலியிட்டால் அழுவதற்கு ஆடு இருக்கும். ஓர் உயிர் போகும்போது இன்னொரு உயிர் துன்பத்தை அனுபவிக்கும். இது இறைவன் திருவுள்ளத்துக்குச் சம்மதமாக இருக்காது. எனவே எல்லோரும் சென்று இறைவனிடம் முறையிடுங்கள்."
"மறுபடியும் இழுத்துப் பாருங்கள். தேர் ஓடவில்லையானால் பலி கொடுங்கள். ஆட்டையோ, கோழியையோ பலி கொடுக்க வேண்டாம். என்னை பலியிடுங்கள். ஈசனுக்கு பலியாக இந்த வாழ்வு முடிந்து போகட்டும். எனக்காக அழுவதற்கு அம்மாவும் இல்லை. குழந்தையும் இல்லை. தேரைச் செய்வதற்குக் காரணமான நானே அது ஓடுவதற்கும் பொறுப்பாகிறேன். "என்றார். எல்லோருக்கும் மனம் உருகி விட்டது. சுவாமிகள் பலியாகக் கூடாது என்ற எண்ணம் தீவிரமாகியது. பிரார்த்தனை செய்து தேரை இழுத்தார்கள். தேர் நகர்ந்தது. வேகமாக வந்து நிலை சேர்ந்தது. இறைவன் கருணையை நினைத்துக் கதறி அழுது கண்ணீர் விட்டார் சுவாமிகள். தேரில் கற்பூர ஆராதனை நிகழ்ந்தது. சுவாமிகள் கண்களில் அருவி பெருகியது. ஆனந்தமும் பக்தியும் கரை கடந்தன. சுவாமிகள் இந்த உணர்வோடு இறைவனிடம் இரண்டறக் கலந்து விட்டார்கள்.
அரஹர மஹாதேவா என மங்கல முழக்கத்துடன் அந்த ஆன்மாவைக் கொற்றவாளீசர் இணைத்துக் கொண்டார். விரோதிகிருது (1911) ஆண்டு வைகாசி மாதம் 12 ஆம் நாள் விசாகத் திருநாளில் இந்த அற்புதம் நிகழ்ந்தது. அப்பொழுது சுவாமிகளுக்கு வயது 63. அறுபத்து மூவரின் பக்தியும் வைராக்கியமும் தொண்டும் சுவாமிகளிடம் இணைந்திருந்ததைக் காட்ட இந்நிகழ்ச்சி 63 ஆம் ஆண்டில் நடந்ததோ என்னவோ, யார் அறிவார்? எல்லாச் செயல்களுக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டுமல்லவா? ஆண்டவன் இரத யாத்திரையைத் தொடர்ந்து அடியவர் இரத யாத்திரை நிகழ்ந்தது. திருக்களரில் சுவாமிகளுக்குச் சமாதிக் கோயில் கட்டப் பெற்றது. ஆண்டு தோறும் வைகாசி விசாகத்தில் குரு பூஜை நிகழ்ந்து வருகிறது. தேர் இழுத்த திருக்கரங்கள் சிவபெருமான் திருவடிகளைப் பற்றிக் கொண்டு அடியார்களுக்கு ஆசி கூறி வருகின்றன. தம் உயிரையே பணயம் வைத்துத் தேர்த் திருவிழா நடத்திய வீர சேகரர் வரலாறு உண்மையிலேயே ஒரு வீர(ன்) வரலாறாகத் திகழ்கிறது. எனக்காக அழுவதற்கு அம்மாவும் இல்லை குழந்தைகளும் இல்லை என்று கூறிய சுவாமிகள் மறைந்தபோது பல்லாயிரக்கணக்கான அம்மாக்களும் குழந்தைகளும் சான்றோர்களும் கதறி அழுதார்கள். ஒரு வீட்டுக்காக வாழாமல், உலகத்துக்காக வாழும் உத்தமர்களுக்கு, அவர்களால் பயன்பெற்ற உலகம் கண்ணீர் விடுவதைத் தவிர, வேறென்ன கைம்மாறு காட்ட முடியும்?