கோவிலூர் ஆதீனப் பதிவுகள் பதிவு 25

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
இருள் அகற்றும் ஈசான்ய மடம், திருவண்ணாமலை

ரமண மகரிஷிக்கும் ஈசான்ய மடத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து ஒரு சமயம் தவத்திரு இராமநாத அடிகள் செவி வழிச் செய்தி ஒன்றை என்னிடம் குறிப்பிட்டார்.  கடுந்தவம் கிடந்த ரமணர், தம் கடும்பசிக்கு உணவு கிடைத்தால் மிதமாக உண்டு உடம்பைப் பாதுகாத்துக் கொண்டார் என்பது சாதாரண இயற்கை நிகழ்ச்சி தான்.  அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் ஈசான்ய மடத்திற்கும் வந்து, அங்கே கிடைத்த பிரசாதத்தை உண்டு களைப்பாறினாராம்.

இம்மடத்துடன் ரமணர் கொண்ட தொடர்பு குறித்து வேறொரு செவி வழிச் செய்தியையும் ஶ்ரீ இராமநாத அடிகள் வெளியிட்டதாக ஆனந்த விகடனில் "அருணாசல மகிமை" என்ற தலைப்பில் வந்த தொடர் கட்டுரை ஒன்றில் 'பரணீதரன்' குறிப்பிட்டிருக்கிறார்.  மடத்திலேயே பகவத் கீதையைப் பற்றிய ஆராய்ச்சி வகுப்பு ஒன்று நடந்து கொண்டிருந்த சமயம். அப்பொழுது எழுந்தருளிய ரமண பகவான், இராமநாத சுவாமிகளுக்கு முன்பு தலைவராக இருந்த தவத்திரு நடேச சுவாமிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, இரண்டு மூன்று கீதை சுலோகங்களுக்கு புதுமையான பொருள் கூறி கேட்போரை வியப்பில் ஆழ்த்தினாராம்.

'இருளே உலகத்து இயற்கை' என்று தொடங்கும் பிரசித்தமான ஒரு பாட்டை தமிழறிஞர்கள் நினைவு படுத்திக் கொள்ளலாம்.  அப்பாட்டிலே, 'இருள் அகற்றும் கைவிளக்காகக் கற்ற அறிவுடைமை"யைச் சுட்டிக் காட்டுகிறார், ஆசிரியர்.  ஈசான்ய மடம் போன்ற மடாலயங்களில் தலைவர்களும் ஞானக் கைவிளக்குகளாகத் திகழ்ந்து, இருளூடே மருண்டு திரிந்து அல்லற்படுவோருக்கு நெறி காட்டியதுண்டு.

ஞானக்கை விளக்குகள் சில ஈசான்ய மடத்தில் தோன்றுவதற்கு முன் காரணர் கந்தப்ப தேசிகர் என்ற ஞான தீபம் தான்.  இத்தேசிகர் பிள்ளைப் பிராயத்திலேயே 'குழந்தை மனிதனின் தந்தை' என்ற புதை பொருளோடு கூடிய ஆங்கில வாக்கிற்கு ஓர் இலக்கியமாகத் திகழ்ந்தாராம்.  ஆழ்ந்து அகன்ற நுண்ணறிவு அப்பொழுதே மிளிரத் தொடங்கி விட்டது.

"குழந்தை குருநாதன்" என்று டாக்டர் மான்டிசோரி கூறுகிறாரே, அத்தகையதொரு சிறப்புக் குருநாதனாக இருந்தாராம் கந்தப்ப தேசிகர்.  சாதாரண அறிவு வளர்ச்சியில் மட்டுமல்ல, தவயோகப் பற்றிலும் ஓர் இயற்கை மேதையாகத் திகழ்ந்தார். இக்குழந்தைக் குருநாதர் என்பர்.

அதிசயச் சிறுவரின் உள்ளம் சிவயோகத்திலும் விச ஞானத்திலும் சிவ பூஜையிலும் ஈடுபடலாயிற்று.

தீவிர வேதாந்த மனப்பான்மையும் கந்தப்பருக்கு வாய்த்திருந்தது.

'24 மணி நேரமும் வாழ்வதெப்படி?' என்பது குறித்து ஓர் அருமையான சிறு நூல் ஒன்றை நான் ஒரு சமயம் வாசிக்க நேர்ந்தது.  கந்தப்ப தேசிகரோ அல்லும் பகலும் அனவரதமும் ஞானவாழ்வு வாழத் தொடங்கி விட்டாராம்.  தமது அன்னையாரின் அனுமதி பெற்றுக் கந்தப்பர் தீர்த்த யாத்திரை செய்து தம் அறிவையும் அனுபவங்களையும் பெருக்கிக் கொண்டு பாசபந்தங்களைக் கடந்து சென்று ஞானப் பெருநெறியிலே மேலே மேலே சென்று கொண்டிருந்தார் எனத் தெரிய வருகிறது.

நடராஜப் பெருமானின் அருளால் இவர் குரு தரிசனம் பெற்றார்.  ஒரு சித்த புருஷரான ஶ்ரீ மெளன சுவாமிகளை அடைந்து தம்மை முழுக்க முழுக்க அவர் பணிக்கு அர்ப்பணம் செய்தார். தம் குருவிடம் விடைபெற்றுக் கொண்டு முடிவில் மெளன தவம் இயற்றுவதற்கு இசைந்த இடமாகத் திருவண்ணாமலையைத் தேர்ந்தெடுத்தார்.

இவர் திருவண்ணாமலையைத் தேர்ந்தெடுத்தார் என்று கூறுவதைக் காட்டிலும் திருவண்ணாமலையே இவரைப் போன்ற ஞானிகளைத் தேர்ந்தெடுத்து 'வாருங்கள், வாருங்கள்' என்று வரவழைத்துக் கொண்டது எனக் கருதலாம்.

கந்தப்ப தேசிகர் மலைக்குகை ஒன்றில் தவம் கிடந்து மனக்குகையில் ஒடுங்கி வாழும் இரகசியத்தைத் தெரிந்து கொண்டாராம்.  இவருக்குப் பணி செய்தவர்கள் பலவகைப் பேறுகள் பெற்றதாக இவரது வாழ்க்கை வரலாற்றுச் செய்திகள் கிடைத்திருக்கின்றன.  அப்பேறுகளைப் பெறலாம் என்ற பேராசையால் இவருக்குத் தொந்திரவு கொடுத்த லெளகிகர்களைக் கண்டு அஞ்சியது தேசிகரின் ஞான உள்ளம்.  இந்த நிலையில் ஶ்ரீ தேசிகர் திருவண்ணாமலைக்குத் தென்மேற்கிலுள்ள ஒரு குளக்கரையில் நிஷ்டை கூடி இருந்தார்.  அங்கே மாடு மேய்ப்பவர்களின் பராமரிப்பைப் பெருஞ்செல்வர்களின் உபசாரங்களைக் காட்டிலும் உவந்து ஏற்றுக் கொண்டார்.

ஞான தேசிகர் சமாதி நிலையில் இருக்கும்போது ஒரு புலி வந்து பாதுகாப்பாக இருந்ததென்றும், புலியை இவர், 'அண்ணாமலையாரே' என்று அன்புடன் அழைப்பார் என்றும் சொல்லுகிறார்கள்.  புலிக்கு அஞ்சாத ஞான இதயம் லெளகிகப் புலிகளுக்கு அஞ்சிச் சமாதியில் ஆழ்ந்திருந்தது.  இதைக்காட்டிலும் என்ன அதிசயம் இருக்க முடியும்?

ரமண ரிஷியின் ஞானம் வெள்ளையரையும் வசீகரித்தது என்பதை நாம் அறிவோம்.  அப்படியே அக்காலத்துக் கலைச்சுடராக இருந்த ஒரு வெள்ளைத் துரையையும் கவர்ந்தன ஈசான்ய ஞான தேசிகரின் ஞானமும் அருளும்.

இந்த ஞானப் பரம்பரையில் வந்திருக்கும் ஶ்ரீ இராமநாத அடிகளின் சீரிய நன் முயற்சியால் இப்பொழுது நடைபெற்று வரும் சேவாஸ்ரமத்தின் சமூகப் பணிகளைக் காலத்திற்கு ஏற்ற நல்லறப் பணிகளாக நாம் வரவேற்கிறோம்.  இந்த ஆசிரமம், அநாதைப் பிள்ளைகளுக்கு ஓர் இல்லம் அமைத்துள்ளது. இங்கே உலகியலுடன் தெய்வ நெறியும் இணைந்து அறிவுடன் அறப்பற்றும் வளர்த்து வருகிறது.  இது அண்ணாமலையாருக்கு மிகவும் உவப்பான அருமைப்பணிகளில் ஒன்றாக அறிஞர்கள் மதிப்பர்.

இங்கு பட்டத்தில் இருந்த மடாதிபதிகள் விபரம்:

1. தவத்திரு இராமலிங்க சுவாமிகள்

2. தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள்

3. தவத்திரு சொரூபானந்த சுவாமிகள்

4. தவத்திரு மகாதேவ சுவாமிகள்

5. தவத்திரு சதானந்த சுவாமிகள்

6. தவத்திரு மகாதேவ சுவாமிகள் (பிறகு கோவிலூரில் ஆதீனகர்த்தராக எழுந்தருளியவர்கள்)

7. தவத்திரு நடேச சுவாமிகள்

8. தவத்திரு இராமநாத சுவாமிகள் (1971 முதல் கோவிலூர் ஆதீனகர்த்தராக எழுந்தருளி இருந்தவர்கள்)

9. தவத்திரு கந்தசாமி சுவாமிகள்

இங்கு சாதுக்களுக்கு அன்னம் பாலிக்கப்படுகிறது.

திருக்கார்த்திகைத் திருவிழாவின் போது நகரத்தார்களுக்கு விருந்தும் நடத்தப்படுகின்றன.

சேவாசிரமம் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் பாலர் பள்ளியும் தொடக்கப்பள்ளியும் நடத்தப்பட்டு வருகின்றன.

நகரத்தார்களுக்குத் திருவண்ணாமலைக் கோயிலில் தொன்று தொட்டு இருந்து வரும் ஈடுபாடு மிகுதியாவதற்கு ஈசான்ய மடம் பெரும் காரணமாக இருந்து வருகிறது எனலாம்.

ஆறாவது பட்டம் மடாதிபதியாக இருந்த சதானந்த சுவாமிகள் மடத்தைப் பெரிதும் வளர்ச்சி பெறச் செய்தார்கள்.  ஒன்பதாவது பட்டம் மடாதிபதியாக இருந்த ஶ்ரீ--ல--ஶ்ரீ இராமநாத சுவாமிகள் வேதாந்தம் பயின்றது இந்த மடத்தில் தான்.  இவர்கள் 23 ஆண்டுகள் இங்கு மடாதிபதியாக இருந்த காலத்தில் மடம் பெரிதும் வளர்ச்சியடைந்தது.  அண்ணாமலையார் கோவில் திருப்பணிகளுக்கும் சேவாசிரமம் மூலம் உண்டி கொடுத்து உயிர் கொடுக்கவும் இந்த மடம் நிலைக்களனாக இருந்திருக்கிறது.

கந்தசாமி சுவாமிகள் பரிபூரணம் அடைந்த பின் கோவிலூர் மடாதிபதிகள் நேரடி மேற்பார்வையில் இருந்து வருகிறது.

நம் மடத்தின் பால் ஈடுபாடுடைய அன்பர்களால் பெளர்ணமி அன்றும் உண்டி வழங்கப்படுகின்றது.


--Geetha Sambasivam (பேச்சு) 11:41, 30 ஏப்ரல் 2014 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 30 ஏப்ரல் 2014, 11:41 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,572 முறைகள் அணுகப்பட்டது.