கோவிலூர் திருக்கோயிலின் அமைப்பு
வை. ஜானகிராம ஸ்தபதி, மாமல்லபுரம்
நாட்டுக்கோட்டை நகரத்தாரின் திருத்தலங்களில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியவற்றுள் கோயிலூர் திருத்தலமும் ஒன்றாகும்.
இங்கு அமைந்துள்ள ஶ்ரீ திருநெல்லை அம்பாள் உடனமர் கொற்றவாளீசர் ஆலயம் சுவாமி சந்நிதிக் கருவறை நாட்டுக்கோட்டை நகர திருத்தலங்களில் மற்றெங்கும் இல்லாச் சிறப்புடையதாகும். கருவறை முக மண்டபம் மஹா மண்டபம் இவை பிற்காலச் சோழர் பாணியை ஒத்த கட்டிடச் சிற்ப அமைப்பை உடையனவாகும்.
அதிஷ்டானம், பாதம், பிரதஸ்தரம் இவைகளின் வர்க்கங்கள் மிகுந்த வேலைப்பாடுடன், சகலவிதமான அலங்கார பூஷணங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.
கருவறை பிரஸ்தர மட்டம் வரை கருங்கற்களாலும், அதன் மேல் அமையப்பட்ட விமானம் செங்கல் சுண்ணாம்பினால் கட்டப்பெற்று 3 தளங்களுடன் கூடிய விமானம் அமைக்கப்பட்டு உன்னதமான தோற்றத்துடன் உள்ளது.
இரண்டு கருவறைகளைச் சுற்றிலும் நீராழிபத்தியுடன் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. கோடைகாலத்தில் இறைவன் இறைவியர்க்குக் குளிர்ச்சியூட்டுவதற்காக இந்த ஏற்பாடு உள்ளது.
திருநெல்லை அம்பாள் ஆலயம், சோமாஸ்கந்தர் ஆலயம், இவற்றின் கருவறை மேல் மட்டமான பிரஸ்தரம் வரை கருங்கற்களினால் பூரண வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டு முழு அளவு மெருகு ஏற்றப்பட்டுள்ளது, இவ்வாலயத்துச் சிறப்புக்களில் இது குறிப்பிடத் தக்கது.
சுவாமி உள்ள கருவறையின் முன்புறமுள்ள மகாமண்டபத்தின் வடக்குப் பகுதியில் தெற்கு நோக்கிய வண்ணம் ஆடல் வல்லானின் திருவுருவம் அமையப் பெற்றுள்ளது. அதன் எதிரே தெற்கு நோக்கிய வண்ணம் 18 அணி ஒட்டித் தூண்களுடன் கூடிய மண்டபம் உள்ளது. இந்த 18 தூண்களிலும் சுண்டு பாதத்தின் முன்னே யாழிகளுடன் கூடிய தோற்றம் கண்ணையும் கருத்தையும் கவரவல்லது.
அம்பாள் சந்நிதியில் மகாமண்டபத்தின் முன்னே பிராகார பத்தியின் அருகில் 10 தூண்கள் உள்ளன. இவற்றில் அமைக்கப்பட்ட சிற்பங்களாவன.
வடக்கே உள்ள தூண்களில்
1. மார்க்கண்டேயர்
2.கங்காளநாதர்
3. வீரபத்திரர்
4. ஊர்த்துவதாண்டவ மூர்த்தி
5. உமையுடன் ரிஷபத்தின் மீதமர்ந்த சிவன்
6. மயில் மீது அமர்ந்த வடிவத்தில் ஷண்முகம்
7. வீர சேகர பாண்டியரின் திரு உருவம்
தெற்கே உள்ள தூண்களில்
1. மூஷிக வாகனத்தில் லக்ஷ்மி விநாயகர்
2. கோவிலூர் ஆண்டவர் தரையில் படுத்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்வது
3. மீனாக்ஷி கல்யாணத் தோற்றம்.
4. தில்லைக்காளியின் சிற்பம்ம்
5. மீனாக்ஷி திக்விஜய சிற்பம்
6. சாரதாம்பாள், திரு உருவம்
7. சரஸ்வதி சிற்பம்
இந்த விக்ரஹங்கள் சப்த சுவரம் (ஏழு வகை ஓசைகள்) எழுப்பக்கூடிய கற்களைக் கொண்டு வடிக்கப்பட்டவை. மேற்குறிப்பிட்ட 14 சிற்பங்களும் மிகுந்த வேலைப்பாடுகளுடன் திருவுருவ அங்கங்களின் பரிமாணங்கள் மிகச் சிறப்பான முறையில் செதுக்கப்பட்டுள்ளன. இவை யாவும் நாயக்கர் பாணியில் உள்ளது இவ்வாலயத்தின் சிற்பச் சிறப்புக்கு எடுத்துக் காட்டாகும்.
நான்கு பக்கங்களிலும் அமைந்துள்ள நீண்ட பிராகாரங்களில் இரண்டு பக்கங்களிலும் அணி ஒட்டித் தூண்கள் உன்னதத் தோற்றத்துடன் உள்ளன.
மூலத்தானங்களுக்கும் பரிவார தேவதைகளுக்கும் 11 விமானங்களும் 2 சாலா ஹாரமும், கயிலாசநாதர் சந்நிதி மீது சாலா கோபுரமும் நடராசர் சந்நிதி, அம்மன் சந்நிதி, சுவாமி சந்நிதி மூன்றின் மீதும் கோபுரங்களும் அமைந்துள்ளன.
தெற்குப் பிரகாரத்தின் திருமதில் உட்புறத்தில் 63 நாயன்மார்கள் வண்ண ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளனர்.
கோயிலின் முன்புறம் கிழக்குத் திக்கில் சதுரவடிவான தெப்பம் உள்ளது. அதன் மையப்பகுதியில் நீராழி மண்டபம் 8 பட்டை வடிவில் 16 தூண்களுடன் அமைக்கப்பட்டு அதன் மீது 3 அடுக்குகளுடன் கூடிய விமானம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபம் பண்டிகை விருத்த வடிவில் அமையப் பெற்றுள்ளது. மண்டபத்தின் சுற்றளவு 120 அடி இருக்கும். நீர் மட்டத்திற்கு மேல் மண்டபத்தின் உயரம் 45 அடி உள்ளது. தெப்பக்குளத்தை வெளிப்புறமாகச் சுற்றி வந்தால் ஒரு கிலோ மீட்டர் நடந்ததற்குச் சமமாகும்.
நாட்டுக்கோட்டை நகரத் திருத்தலஙக்ளிலே இங்கே ஊருணி நடுவே நீராழி மண்டபம் கவின்மிகு தோற்றத்துடன் அமைந்திருப்பது இவ்வாலய அழகுகளில் சிறப்புடையதாகும்.
ஆலயத்தின் வெளியே சுவாமி கோயிலின் முன்பு கிழக்கேயும் நடராஜர் சந்நிதியின் முன்பு தெற்கேயும் மண்டபங்கள் அமைத்து அதன் மீது சாலாஹாரம் அமைத்திருப்பது சிறந்த வேலைப்பாட்டை எடுத்துக்காட்டுவதாகும்.
விமானங்களிலும் கோபுரங்களிலும், சாலாஹாரங்களிலும், சிவ மூர்த்தங்களும் சிவபுராணச் சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
நடராசர் சந்நிதி மீதுள்ள வண்ணக் கோபுரம் தெற்குப் பார்த்துக் காரைக்குடி குன்றக்குடிச் சாலையில் செல்லுவோர் கவனத்தை ஈர்க்கிறது. தக்ஷிணாமூர்த்தி. கோபுரம் தாங்கிகள், புதுமையான வேலைப்பாடுடன் செய்யப்பட்டுள்ள--வாலி சுக்கிரீவன் போர்க்காட்சிகள் ஆகியவை கம்பீரமாக உள்ளன. கண்ணனின் லீலைகள் கவர்ச்சியான சுதை வேலைகளாக உள்ளன.
சாலாஹாரம் அமைக்கப்பட்டுள்ள மண்டபம் 26 தூண்கள் உடையது. தூணின் உயரம் 12 அடி கொடுங்கை, கோபிகை முதலியவற்றின் உயரம் 2 அடி இருக்கும். மண்டபத்தின் பரப்பளவு 750 சதுர அடி. சாலஹாரத்தில் நடராசர், காளி, ரதி, மன்மதன் முதலிய சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் ஈர்ப்பன.
ஏனைய கோபுரங்களுக்குச் சுனோசெம் பெயின்டு செய்யப்பட்டுள்ளது.