சிற்பச் சிறப்பு மிக்க திருக்கோயில்
கம்பன் அடிப்பொடி
கோவிலூர் என்பது வனப்பு மிக்க ஒரு சிற்றூர். கட்டிடக் கலையில் துறை போக்கியவர்கள் எல்லாம் கண்டு மகிழ்ந்து வியந்து பாராட்டும் மேம்பாடு, நோக்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் அழகும், சிற்பச் செறிவும் நிறைந்த திருக்கோயில், கண்கவர் மைய மண்டபத்துடன் கூடிய, பேரழகு பிலிற்றும் திருக்குளம்; நேர்மையும், செம்மையும் கூடிய மாட வீதிகள்; கட்டிடப் பொலிவின் ஒருமைப்பாட்டை உணர்த்தும் வகையில் நாற்புறமும அமைக்கப் பெற்ற கட்டிடங்கள் அல்லது சுவர்கள். பற்றாகன்ற பண்பினர் தங்கி, ஓதி அவனருள் நாடி, அமைதியுள் ஆழ்ந்து நற்றவம் புரி நன்மடம், இவை எல்லாம் சேர்ந்தது தான் கோவிலூர்.
இப்பொழுது உள்ள கோவிலூர் என்பது தமிழ்நாட்டில் 10 ஆவது நூற்றாண்டில் மிகப் பிரபலமாக இருந்த கழனிவாயில் என்ற ஏழகப் பெருந்தெருவின் ஒரு பகுதியாகும். இந்த ஏழகப் பெருந்தெருவில் பல ஆலயங்கள் அன்று பிரபலமாக விளங்கின. அவற்றுள் கொற்றவாள் ஈசர் கோயில் என்னும் ஆலயமும் ஒன்று மற்றொன்று ஏழகப் பெருமாள் விண்ணகரம்.
இவை அல்லாமல் கொற்றவை கோயில்கள் சிலவும் இங்கு இருந்தன. இன்றைய தினம் பிரபலமாக உள்ள காரைக்குடி நகரம் இதனுடைய ஒரு பகுதியே ஆகும்.
இன்று வரலாற்றுப் பெருமை மிக்கதும், மிக்க வீரம் செறிந்ததுமான ஏழகப்பெரும்படை இங்குதான் இருந்தது. அந்தப் பெரும்படைதான் மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கும் குலசேகர பாண்டியனுக்கும் நடைபெற்ற பெரும்போரில் சதுர்வேதமங்கலம் என்று இன்று வழங்கும் மட்டியூருக்குப் பக்கத்தில் பொருதி சோழப்படைக்குப் பெருஞ்சேதத்தை உண்டாக்கியதாகும். இந்தப் படை அக்காலத்து முறைப்படி தன வணிகர்களைச் சார்ந்து அவர்களால் பேணிப் பரிபாலிக்கப்பட்ட படையாகும்.
இவ்வாறு வரலாற்றுப் பெருமை மிக்க ஊரில் ஏற்கெனவே இருந்த சிவபெருமானுக்குப் பத்தாம் நூற்றாண்டில் இருந்த வீர பாண்டியன் என்னும் மாவீரம்மிக்க மன்னன் தன்னுடைய கொற்றவாள் தொலைந்து போனது பிறகு கிடைக்க அருள் புரிந்ததற்காக ஒர் ஆலயம் எடுப்பித்து அந்தப் பெருமானுக்குக் கொற்றவாள் ஈசர் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தான்.
அந்தச் சிறு ஆலயம் பலவகையில் பழுது பட்டிருந்ததை எண்ணி மனம் வருந்திய கோவிலூர் ஆண்டவர் என்று புகழ் பெற்ற ஶ்ரீலஶ்ரீ முத்துராமலிங்க ஞான தேசிக சுவாமிகள் மிக்க சிரத்தை எடுத்துக் கொண்டு அற்புதமான இந்த ஆலயத்தை அமைப்பதற்கு அடிக்கோலி ஏராளமான பொருட்செலவில் ஒரு பகுதியை நிறைவேற்றி முற்றிலும் நிறைவேறுமுன் அவர்கள் விதேக முக்தி அடைந்தார்கள்.
அவர்களுக்குப் பிறகு பீடாதிபதிகளாக வந்த ஶ்ரீலஶ்ரீ துறவு சுவாமிகளும் ஶ்ரீலஶ்ரீ கருணாநிதி சுவாமிகளும் தொடர்ந்து திருப்பணியை நடத்தி வந்தார்கள்.
திருக்களர் ஆண்டவர் என்று பாராட்டப்பெறும் ஶ்ரீலஶ்ரீ வீரப்ப ஞான தேசிக சுவாமிகள் மேலும் திருப்பணியை விரித்துத் திருக்குளம், மைய மண்டபம், திருவீதிகள், ரதமேருக்கள், ரத கூடங்கள் ஆகியவற்றையும் அமைத்துப் பிற்காலத் திருப்பணிக்கு ஓர் எடுத்துக்காட்டாக இக்கோவிலை நிர்மாணித்தார்கள். அவர்கள் காலத்தில் அதாவது 1908 இல் மிகக் கோலாகலமாகத் திருக்குட நீராட்டு விழா நடைபெற்றது.
வேதம், உபநிடதம் முதலான வைதீக சமய நூல்களை எல்லாம் சிக்கறத் தெளிந்து, அத்துவித உண்மைகளை அற்புதமாக உணர்த்தும் வேதாந்த சாத்திரங்களில் எல்லாம் மேதா விலாசம் பெற்று தேவராதி தோத்திரப் பனுவல்களில் தோய்ந்து, அன்பும் அறிவும் செறிந்து குளிர்ச்சி மிக்க ஒளியான தண்கதிர் பரப்பிய ஞான பானுவாகத் திகழ்ந்தவர்கள் திருக்களர் ஆண்டவர் அவர்கள்..
தத்துவ சாத்திர, தோத்திரக் கடலில் மட்டுமின்றி பயிர்க்கலை, தொழிற்கலை, கட்டிடக் கலை சிற்பக் கலை முதலான பிற பல கலைகளில் எல்லாம் தோய்ந்து முக்குளித்து முத்தெடுக்கும் பேராற்றல் பெற்றுப் பல்சுவைச் செம்மலாக ஒளிர்ந்த பெருமை திருக்களர் ஆண்டவர் அவர்களுக்கே உரியது. அந்த அறிவின் விளக்கமே கோவிலூரின் அமைப்பு.
திருக்களர் ஆண்டவருக்குப் பிறகு, தற்பொழுது பீடாதிபதியாக விளங்கும் ஶ்ரீலஶ்ரீ இராமநாத ஞான தேசிக சுவாமிகளின் பெருமுயற்சியால் இக்கோயிலின் க்ஷீரணத்தாரணத் திருப்பணி தொடங்கப் பெற்றது. தனவணிகர்கள் தாராளமாக அளித்த லட்சக்கணக்கான அறக்கொடையின் மூலமாக கோயில், திருக்குளம் முதலிய அனைத்தும் முற்றிலும் பழுது பார்க்கப் பெற்று வண்ணம்ம் பூசப் பெற்றுள்ளது. ஆகம சாஸ்திர ரீதியாக, சிறந்த சிவாசாரியார்கள் பலர் கூடி நான்கு நாள் ஆறு வேளை ஆகம பூஜை செய்து 21--04--1978 வெள்ளிக்கிழமை காலை சுமார் 10 மணிக்கு திருக்குட நீராட்டு விழா சம்பிரமமாக நடைபெற்றது.
பிற்காலக் கோயில்களில் இந்தக் கோயில் அமைப்பைப் போன்ற கோயில் தமிழகத்திலேயே கிடையாது. கோயிலுக்கு முன்னேயுள்ள திருக்குளத்தின் பொலிவும், அதிலுள்ள மைய மண்டபமும் இதற்கு நிகர் இதுவே என்று சொல்லத்தக்கவை..
அம்மன் திருவுண்ணாழியும் திருக்கல்யாண மண்டபமும் பூரண சிற்பங்கள் அடங்கியனவாய் முழுதும் பாலிஷ் செய்யப்பட்டிருக்கின்றன. வரலாற்றுப் பெருமை மிக்க கொற்றவாள் ஈசரும், கயிலாசநாதரும் திருநெல்லை அம்மனும் நித்திய கல்யாணி அம்மனும் உள்ளம் கவரும் மூர்த்திகளாகும்.
பிராகாரங்களுடன் திருமாளிகைப் பத்திகளும் கோயில் மண்டபங்களும் முற்றிலும் மயன்மத நூல் அடிப்படையில் அமைக்கப் பெற்றவை.
ராஜகோபுரங்கள் நாயக்கர் பாணியைச் சார்ந்தவை. தூண்களில் உள்ள போதிகை முதலியவை நகரத்தார் பாணியைச் சார்ந்தவை. ஒவ்வொரு தூணிலும் விநாயகர், சுப்பிரமணியர், மீனாட்சி திருக்கல்யாணம், நடராச தாண்டவம், காளி நர்த்தனம் முதலிய பல சிற்பங்கள் இங்கு உள்ளன. அத்துடன் முன்னாளில் கோயில் எழுப்பிய வீரபாண்டியன் உருநாட்டும், பிற்காலத்தில் இதை இவ்வளவு விரிவாக ஆக்கிய மகான் கோவிலூர் ஆண்டவர் உருநாட்டும் திருநெல்லை அம்மன் சந்நிதியில் தூண்களில் காணப்பெறுகின்றன.
ஒவ்வொரு கோட்டமும், கோட்டத்தில் உள்ள மாடங்கள், கூடுகள், பஞ்சரங்கள், கும்ப பஞ்சரங்கள் முதலியவையும் வேலைப்பாடுகள் மிக்கவை. அதிஷ்டானத்திலிருந்து கிழீவம் வரையிலும் மிக அழகிய நுணுக்கமான சிற்பத் திறனுடன் விளங்குகின்றன. இவற்றையெல்லாம் ஆற அமர்ந்து சென்று பார்த்தால் இக்கோயிலின் மதிப்பை இன்று இரண்டு கோடிக்கு மேல் கணிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
வேறு எந்தச் சிவன் கோயிலிலும் இல்லாத முறையில் ஆடவல்லான் என்னும் ந்நடராசப் பெருமான் சந்நிதி சுமார் 200 அடி நீளமுள்ள மண்டபம் உடையதாகப் பெரு வீதியிலிருந்து முற்றும் காணத்தக்கவாறு அமைக்கப் பெற்றுள்ளது. திருமதிலுக்கு வெளியே முகசாலையுடன் அமைந்ததும் வண்ணச் சுதையுடன் கூடியதுமான அழகு மிக்க ராஜகோபுரத்துடனும் கூடிய அமைப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.