கொங்கு நாட்டு மகளிருக்கான சடங்குகளும், சம்பிரதாயங்களும்மரபு விக்கி இருந்து
பவள சங்கரி
இயற்கையின் படைப்புகளிலேயே மிகவும், உன்னதமானது பெண் இனம். அனைத்து உயிரினங்களுக்கும் தனிப்பட்டதொரு மென்மையையும், அழகையும் அள்ளி வழங்கியிருப்பது கண்கூடு. அந்த வகையில் மனிதப் பிறவியில் இந்தப் பெண் இனம் பல வகையான உணர்வுகளுக்கும், அதற்குரிய சூழலுக்கும் ஆட்படுவதும் இயற்கை. இந்த இயற்கையின் விநோதத்தை அதீதமாக காட்சிப்படுத்த நினைப்பது மனிதர்களுக்கேயுரிய இயல்பாக இருப்பதே நம் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளின் முக்கிய அம்சமாக இருக்கிறது. இதில் பெரும்பாலும் நன்மைகளும், தீமைகளும் சமமாகக் கலந்து இருப்பதே நிதர்சனம். வளர்ந்து விட்ட நாகரீகத்தில் மற்றைய சில நாடுகளில் ஓரளவிற்கு இதெல்லாம் கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், நம் இந்திய கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் இதெல்லாம் இன்றும் வழமையாகத்தான் இருக்கிறது. வாழையடி வாழையாக கடைபிடிக்கப்படும் பழக்க வழக்கங்கள் பல அர்த்தமுள்ளதாக இருப்பினும், சில வேண்டாதவையாகவும் தேவையற்றவைகளாகவும் உள்ளது.
பொதுவாக பெண்களின் பருவக் காலங்களை , பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை மற்றும் பேரிளம்பெண் என ஆறு வகைகளாகப் பிரித்துள்ளனர். பேதைப் பருவம் என்பது ஏழு வயது வரையிலான குழந்தைப் பருவம். பெதும்பை என்பது பதினொரு வயது வரையிலான ஒரு பருவம். அடுத்து வருவதுதான் மங்கை எனும் பூப்படையும் பருவம். மடந்தை என்பவள் திருமண வயதில் இருக்கும் பத்தொன்பதிற்கும் மேற்பட்ட பருவத்தினள். அரிவை எனும் பருவம் இருபத்தைந்து வயதான தாய்மைப் பருவம். தெரிவை என்பது உலகம் அறிந்த முப்பது வயதிற்கும் மேலான பருவம். அடுத்து நாற்பது வயதுப் பருவமான உலக ஞானமும், அனுபவமும் பெற்ற பேரிளம் பெண் என்பது. இதன் அடிப்படையிலேயே நம்முடைய பெரும்பான்மையான சம்பிரதாயங்கள் அமைந்திருக்கின்றன. ஒரு பெண்ணின் வாழ்நாளில் முக்கியமாக நான்கு வகையான சடங்குகள் இடம்பெறும்.இதில் முதலில் அங்கம் வகிப்பது ’பூப்பு நன்னீராட்டு விழா.’. பெண் குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்திற்கு தயாராகும் நிலையை அறிவிக்கும் விழா என்றே சொல்லலாம். சுரப்பிகளின் செயல்பாடுகளால் பலவிதமான மன மாற்றங்கள் மற்றும் உடல் மாற்றங்களும் ஏற்பட்டு பெருங்குழப்பத்தை ஏற்படுத்தும் பருவம் இது. இந்த விழாக்கள் மூலமாக் உற்றார், உறவினர், சொந்த, பந்தங்கள் என அனைவரும் கலந்து ஒன்று கூடி அப்பெண்ணை வாழ்த்துவதோடு, அப்பருவத்தின் முக்கியத்துவத்தை, எதிர்வரும் காலங்களில் அவள் எச்சரிக்கையுடன் வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்தக்கூடிய ஒரு கலாச்சார பாதுகாப்பு விழாவாகவும் அமைகிறது.
ஒரு பெண் பருவமடைதலை, ‘பூப்பு நன்னீராட்டு விழா’ என்று கொண்டாடும் மரபு சார்ந்த பழக்கம் ஆதிகாலந்தொட்டு தொடர்ந்து வழக்கத்தில் இருந்துள்ளது. ’பூப்பு நன்னீராட்டு விழா’ என்ற சொல் வழக்கு இடைக்காலத்தில் தோன்றியிருக்கலாம். ஆரம்பத்திலிருந்து ‘தெரட்டி’ அல்லது திரட்டிச்சீர்’ என்ற சொல்லாட்சியே வழக்கில் இருந்துள்ளது. ’தெருட்டு’ என்ற சொல்லிற்கு ‘விவரம் அறிதல்’ என்ற பொருள் உண்டு. விவரம் அறியும் பருவம் என்பதை அறிவிக்கும் விதமாக இவ்விழா கொண்டாடப்படலாம். ‘தெருட்டு’ என்ற சொல் நாளடைவில் மருவி தெரட்டி’ அல்லது ‘திரட்டி’ என்று வழங்கப்பட்டிருக்கலாம். இந்தத் திரட்டிச் சீரில் தாய்மாமன் பங்கு இன்றியமையாதது. வளமைச் சடங்குகளின் ஒன்றாகக் கருதப்படும் இது மேளதாளங்களுடன், பட்டுப்புடவைகள் சீர் வரிசைகள் எனப் பெரும் கொண்டாட்டமாக விளங்கும் பெரும்பாலும் வீடுகளில் செய்யப்படும் இச்சடங்குகள், இடப்பற்றாக்குறை காரணமாக திருமண மண்டபம் போன்ற பொது இடங்களிலும் நடைபெறும் வழமையும் உள்ளது. தீட்டு கழிக்கும் சடங்கு’ என்றும் இதனைக் கூறுகின்றனர். பிட்டு செய்து சுற்றி தீட்டுக் கழிப்பது முக்கியமான வழக்கமாக இருந்து வருகிறது. இந்தச் சடங்குகள் செய்யாமல் ஒரு பெண்ணை மணமேடையில் ஏற்ற முடியாது என்ற பழக்கம் இன்றளவிலும் பெரும்பாலும் கடைபிடிக்கப்படுகிறது. கொங்கு நாட்டிற்கேயுரிய தனிப்பட்டதொரு மரபு விழாவாகவே இது இருந்து வருகிறது.
அடுத்து வருவது, திருமணச் சடங்குகள். திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமானதொரு நிகழ்வு. சமூகத்தில் ஒரு தனிப்பட்ட மதிப்பை அளிக்கக்கூடியதும் அதுதான். ”திருமணம் ஆனவர்கட்கு மாங்கலிய வரி வாங்கும் கொங்குச்செப்பேடு ஒன்று திருமணம் ஆகாதவர்களைப் ‘பயலாள்’ என்று குறிக்கிறது” என்கிறார் புலவர் ’கல்வெட்டு’ இராசு அவர்கள்.கொங்கு சமுதாயத்தில், குறிப்பாக கொங்கு வேளாளர் சமூகத்தில் திருமணச் சடங்குகள் மிகவும் வித்தியாசமானது. மிகப் பழமையான பண்பாட்டிற்கு உரியதாம். முதலில் பெண்ணிற்கும், மாப்பிள்ளைக்கும் ஜாதகம், மற்றும் மற்ற பொருத்தங்கள் பார்க்கும்போதே சகுனங்கள் பார்ப்பது முக்கியமாகக் கருதப்படுகிறது. அதாவது, பூனை குறுக்கே வருவதோ, விறகுக் கட்டை சுமை எதிரே வருவதோ நல்ல சகுனம் அல்லவாம். கழுதை கத்துவது, வண்ணான், (சலவைத் தொழிலாளி) அழுக்கு மூட்டை, சவம் போன்றவைகள் எதிர் வருவது நல்ல சகுனமாம். பறவை, விலங்கு போன்றவைகள் வலம் போக வேண்டுமாம். பொருத்தம் நல்லபடியாக அமைந்தால் அடுத்து நிச்சயதார்த்தம் பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் மண ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். திருமண ஓலையும் வாசிக்கப்படும்.
“ஆல் போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப் பதினாறு பேறு பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என்று உச்சந்தலையில் 3 முறை இட்டு வாழ்த்துவார்கள்.
மங்கல நாண் சூட்டி திருமணம் முடிந்த பிறகும் பல்வேறு சடங்குகள், சம்பிரதாயங்களுடன், விருந்து மற்றும் சாந்தி முகூர்த்தம் என்று பட்டியல் நீளும். இதன் பிறகு இறுதியாக உற்றார், உறவினரின் விருந்தோம்பலுடன் விழா இனிது நிறைவேறும். தற்காலத்தில் இதில் பெருமளவிலான சடங்குகள் சுருங்கி, கோவிலில் திருமணம் செய்து, மண்டபத்தில் வரவேற்பு வைத்து எளிதாக முடித்து விடுகிறார்கள். கோவிலில் வைக்கும் திருமணத்திற்கு சடங்குகளும், சம்பிரதாயங்களும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதும் ஐதீகம்.
பொதுவாக கருவுற்றிருக்கும் பெண்கள் பிரசவ காலம் குறித்த அச்சத்துடனே இருப்பார்கள். ஏற்கனவே அனுபவம் பெற்ற தாய்மார்கள், நெருங்கிய உறவினர்கள் ஒன்றுகூடி, அவருக்கு இறை நம்பிக்கை மற்றும் சடங்குகள் மூலம அதனைத் தெளிய வைத்து அவரை மனரீதியாக பிரசவத்திற்கு தயார் செய்கிறார்கள். ஒரு சில குடும்பங்களில் பிரசவம் எளிதாவதற்காக மருந்து கொடுக்கும் வழக்கமும் உண்டு. வயிற்றில் இருக்கும் குழந்தை ஆறாம் மாதத்திற்கு மேல் வெளியுலகத் தொடர்பை, அதாவ்து ஓசைகள், சூடு, குளிர்ச்சி போன்ற அனைத்தையும் உணர ஆரம்பிக்கின்றது. தாய் அணிந்திருக்கும் கண்ணாடி வளையல்களின் ஒலியினால் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாகவும், குழந்தைக்கு உறவுகளின் அண்மையும் மகிழ்ச்சியான சூழலை உருவாக்குவதோடு தாயின் மன நிலையில் ஏற்படும் உற்சாகமும் வளரும் குழந்தைக்கு நன்மை பயக்கக்கூடியதாகிறது.
மணப்பெண் போன்று அலங்காரம் செய்து உயர்ந்த மேடையில் அமரச்செய்து, தாய் வீட்டு சீதனங்களுடன், பலவகை இனிப்புகள், பழ வகைகள் இவைகளுடன், சந்தனம், குங்குமம் அறுகரிசி, பன்னீர் போன்றவைகளுடன் நலங்கு வைத்து, மங்கல ஆரத்தி எடுத்து, வளையல் அணிவித்து, கலந்து கொள்ளும் பெண்களுக்கும் தாம்பூலமும் வளையல்களும் கொடுப்பார்கள். பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்து, அப்பெண்ணை கணவன் வீட்டிலிருந்து தாய் வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். குழந்தை பிறந்தவுடன், நல்லநாள் பார்த்து சீருடன் சென்று மீண்டும் கணவன் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். பெண்மைக்கும், தாய்மைக்கும் செய்யும் மிகச் சிறந்த மரியாதைப் பண்பு இது. இதனால் அந்தப் பெண்ணின் மனநிலையில் ஏற்படும் நம்பிக்கையும், நல்ல சிந்தனைகளும், வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தும்.
கணவனை இழந்த துக்கத்தில் நொந்து போயிருக்கும் பெண்ணை ஈவு, இரக்கமே இல்லாமல் சடங்குகள் என்ற பெயரில் செய்யக்கூடியவைகள் கொடுமை. இன்று பெரும்பாலும் அவைகள் தவிர்க்கப்பட்டு வருவதும், கணவனை இழந்த பெண்களும், பொட்டு வைத்துக் கொள்வதும், சாதாரணமாக உடுத்துவதும் பழக்கத்தில் வந்து கொண்டிருப்பதும் ஆறுதலான விசயங்கள். வெண்ணிற ஆடையோ, காவி ஆடையோ உடுத்தும் வழமை பெரும்பாலும் மாறிவிட்டதும் குறிப்பிடத்தக்கது. மனித வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு சடங்குகளும், சம்பிரதாயங்களும் மட்டுமே பொறுப்பாக முடியாது என்ற விழிப்புணர்வும் ஏற்பட்டிருப்பதன் விளைவு வருந்தச் செய்யும் தேவையற்ற சடங்குகளின் நிராகரிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று, பெருகி வரும் காதல் மணங்களும், பெற்றோர் சம்மத்ததுடன் நடைபெறும் பிற மத, இன, மொழியின் கலப்புத் திருமணங்களாலும், பல சம்பிரதாயங்கள் மறைந்து கொண்டிருக்கின்றன என்பதும் நிதர்சனம்.
உசாத்துணை : திருமணச் சீர்கள் பற்றிய விவரங்கள், புலவர் இராசு அவர்களின் “கொங்கு வேளாளர் சீர்களும், இலக்கியங்களும்” என்ற நூல். |
