கீரை வகைகள் 6

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

வல்லாரைக்கீரை:

Indexvallarai.jpg

இதிலே செரடோனியம் இருக்கிறது. ஊட்டச் சத்து நிறைந்தது. பலகீனம், ஞாபகமறதியைப் போக்குகிறது. நரம்பு, மூளைக்கு பலத்தைத் தரும் குணமுள்ளது. இதை அடிக்கடி சாப்பிடாமல் வாரம் ஒரு முறை பருப்புடன் அல்லது துவையலாகச் சாப்பிடலாம் சிறு குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நினைவாற்றலைப் பெருக்க உதவும். அலுவலகப் பணியில் இருப்பவர்களும் உண்ணலாம். ஆனால் இந்தக் கீரையை அளவோடு உண்ண வேண்டும். அதிலும் மனநலம் பாதிப்படைந்தவர்கள் தக்க சித்த மருத்துவர் ஆலோசனைக்குப் பின்னரே இதைச் சாப்பிடலாம்.


வல்லாரைக்கீரைத் துவையல்:

ஒரு கட்டு வல்லாரைக்கீரை, மி.வத்தல், நான்கு அல்லது ஐந்து, புளி ஒரு நெல்லிக்காய் அளவு, உப்பு, பெருங்காயம், கடுகு, உளுத்தம்பருப்பு. வதக்க எண்ணெய்.

கடாயில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு முதலில் கடுகையும், உ.பருப்பையும் நன்கு வறுத்துத் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்னர் மிளகாய் வற்றலைப் போட்டு வறுத்துக்கொண்டு, வல்லாரைக்கீரையைப் பொடிப்பொடியாக நறுக்கி வதக்கிக் கொள்ளவும். உப்பு, புளி சேர்த்துக்கொண்டு மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும். சூடான சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்துக்கொண்டு துவையலைப் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம்.


சாதாரணக் கீரை மசியல் மாதிரி உப்பு, பெருங்காயம்போட்டு மசிக்கலாம். அல்லது பாசிப்பருப்புப் போட்டு, மிளகாய் வற்றல், தேங்காய், சீரகம் அரைத்துவிட்டும் செய்யலாம்.


அரைக்கீரை:

Imagesaraikeerai.jpg

இது மலச்சிக்கலுக்கு நல்ல மருந்து. அதோடு இதில் தாமிரச் சத்து, இரும்புச் சத்து, கால்சியம், தாது உப்புக்கள் நிறைந்தது. எல்லாருமே எப்போதுமே சாப்பிடலாம். என்றாலும் பிரசவம் ஆன பெண்கள் தினசரி து.பருப்புச் சேர்த்து நெய் விட்டுச் சாப்பிட்டு வந்தால் குழந்தைக்குப் பால் சுரக்கும். உடலுக்குக்குளிர்ச்சியையும், வலிமையையும் தரும். தாது பலம் பெருகும்.


நன்கு மசித்துச் சாப்பிடலாம். தேங்காய் அரைத்துவிட்டும் சாப்பிடலாம். புளி சேர்த்தும் சாப்பிடலாம். எல்லாமே ருசியாக இருக்கும்.


முளைக்கீரை:

Imagesmulaikeerai.jpg

இதில் தண்டும் தனியாக உண்ணலாம். கீரையும் உண்ணலாம். சிலர் தண்டைத் தனியாகவும், கீரையைத் தனியாகவும் சமைப்பார்கள். இதில் தாது உப்புக்களும் வைடமின் ஏ சத்தும் உள்ளது. உடல் தளர்ந்து போனவர்களும், சதைப்பிடிப்பு இல்லாதவர்களும் அடிக்கடி சாப்பிடலாம். ஆஸ்த்மா நோயாளிகள், சைனஸ் தொந்திரவு உள்ளவர்கள் சாப்பிடுவது நல்லதல்ல. ஏனெனில் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.


கீரையைப் பொடிப்பொடியாக நறுக்கிக் கொண்டு கல்சட்டி, அல்லது வெண்கல உருளி அல்லது நான் ஸ்டிக் பாத்திரத்தில் போட்டுக் கொஞ்சமாக நீர் விட்டுக் கீரையை நன்கு வேக வைக்கவும். எந்தக் கீரையை வேக வைத்தாலும் மேலே தட்டுப் போடாமல் வேக வைக்க வேண்டும். நன்கு வெந்து கீரையை மசித்ததுமே உப்புச் சேர்த்தல் நல்லது. உப்புத் திட்டமாக இருக்கும். மசிக்கையில் பச்சை சீரகம், பெருங்காயம் சேர்க்கலாம். ஒரு சிலர் து.பருப்பும் வேக விட்டுச் சேர்ப்பார்கள். பின்னர் கடுகு, உ.பருப்புத் தேங்காய் எண்ணெய்/சமையல் எண்ணெய்(தே. எண்ணெய் விருப்பம் இருந்தால்) தாளிக்கலாம்.


--Geetha Sambasivam 12:19, 29 செப்டெம்பர் 2011 (UTC)



பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

"https://marabuwiki.org/index.php?title=கீரை_வகைகள்_6&oldid=8322" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 29 செப்டெம்பர் 2011, 12:24 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,203 முறைகள் அணுகப்பட்டது.