கீரை வகைகள் கறிவேப்பிலை 3

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
Imageskarivepilai.jpg
கறிவேப்பிலை:


சாதாரணமாக வளர்க்க இயலாது இதை. மிகக் கவனத்துடன் வளர்க்க வேண்டும். கருகப்பிலைக்கன்று போல் குழந்தை என்ற சொலவடை உண்டு. ஆகவே கருகப்பிலைக் கன்றைக் குழந்தையைக் கவனமாய் வளர்ப்பது போல் வளர்க்கவேண்டும். இந்தக் கறிவேப்பிலை உடல்நலத்துக்கு மிகவும் நன்மையைத் தரும் ஓர் இலை. முக்கியமாய் இன்றைய இளம்பெண்களின் சின்ன வயது நரையைப் போக்கும் தன்மை கொண்டது. உணவாக உட்கொண்டாலோ அல்லது இலையைப் பறித்து விழுதாக அரைத்து எண்ணெயோடு சேர்த்துத் தேய்த்துக்கொண்டாலோ தலை மயிர் அடர்த்தியாக வளரும் என்பதோடு சீக்கிரம் நரையும் தோன்றாது.


எல்லா வயதினரும் எப்போதும் தடையின்றிச் சாப்பிடும் ஒரு கீரை இது. இதில் இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, விட்டமின் ஏ மற்றும் சி ஆகிய சத்துக்கள் இருக்கின்றன. கறிவேப்பிலை சாம்பாரில், ரசத்தில், கூட்டில், வடை, அடை ஒரு சில பொரியல்கள் போன்றவற்றில் மணத்துக்காகச் சேர்ப்பதுண்டு. பின்னர் அதைத் தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால் கறிவேப்பிலையைக் குழம்பாக வைத்துச் சாப்பிட்டாலோ துவையலாக அரைத்துச் சாப்பிட்டாலோ பலன் அதிகமாய் இருக்கும் என்பதோடு இலையைத் தூக்கியும் எறியவேண்டாம்.


கறிவேப்பிலைக் குழம்பு: புளி ஒரு எலுமிச்சை அளவு எடுத்துக் கொண்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இரண்டு கிண்ணம் புளி நீர் இருந்தால் போதும்.


கறிவேப்பிலை ஒரு கிண்ணம் உதிர்த்தது, மிளகாய் வற்றல் நான்கு, மிளகு ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் ஒரு சின்ன துண்டு. உப்பு, மஞ்சள் பொடி, தாளிக்க எண்ணெய், கடுகு.
மிளகாய் வற்றல், மிளகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றைக் கொஞ்சம் எண்ணெய் விட்டு வறுத்துக்கொண்டு அந்தக் கடாயிலேயே கறிவேப்பிலையையும் போட்டு வறுத்துக்கொள்ளவும். எல்லாவற்றையும் நீர் விட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும். புளி நீரில் தேவையான உப்புப் போட்டுக் கரைத்து வைத்துக்கொள்ளவும்.


அடி கனமான வாணலி அல்லது உருளி, அல்லது நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு கடுகு போட்டு வெடித்ததும், மஞ்சள் தூள்சேர்த்துக் கரைத்து வைத்திருப்பதைக் கொட்டவும். நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வருகையில் கீழே இறக்கவும். சூடான சாதத்தோடு கலந்து சாப்பிடவும். இதை குளிர்சாதனப் பெட்டியில் சில நாட்கள் வரை வைத்திருக்கலாம். கெடாது.

Imagesvepilaikari.jpg

கறிவேப்பிலைத் துவையல்:


கறிவேப்பிலை இரண்டு கிண்ணம், மி.வற்றல், ஆறு, இஞ்சி ஒரு துண்டு, மிளகு ஒரு டீஸ்பூன்(தேவையானால், போடாவிட்டாலும் பரவாயில்லை) புளி ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு, உப்பு தேவையான அளவு, உளுத்தம்பருப்பு, ஒரு டீஸ்பூன், கடுகு ஒரு டீஸ்பூன் வறுக்க எண்ணெய்,
வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், இஞ்சி, பெருங்காயம், மிளகு ஆகியவற்றை வறுத்துக் கொள்ளவும், கடுகு, உளுத்தம்பருப்பு வறுத்துத் தனியாக வைத்துக்கொள்ளவும். பின்னர் அந்த வாணலியிலேயே கறிவேப்பிலையையும் போட்டு வதக்கவும்.


பின்னர் மிக்சி ஜாரில் கடுகு, உளுத்தம்பருப்பு தவிர மற்ற அனைத்தையும் போட்டுக் கொஞ்சமாக நீர் ஊற்றி அரைக்கவும். நன்கு அரைபட்டதும், எடுக்கும் முன்னர் கடுகு, உ.பருப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றிவிட்டு எடுத்து சாதத்தோடு கலந்து சாப்பிடவும்.  இதையே வறுத்துக்கொண்டு நீர் சேர்க்காமல் பொடியாக அரைத்து எடுத்து வைத்துக்கொண்டால் கறிவேப்பிலைப் பொடியாகவும் பயன்படுத்தலாம்.


--Geetha Sambasivam 11:40, 3 ஜூலை 2011 (UTC)



பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 3 ஜூலை 2011, 12:09 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,334 முறைகள் அணுகப்பட்டது.