கால தந்திரம்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

காலதந்திரம்

காலவுணர்வுகளும் இலக்கிய வகைகளும்
முனைவர் கி.லோகநாதன் 1996

முகவுரை

நெடிய தமிழ் இலக்கிய வரலாற்றில் தொல்காப்பியக் காலந்தொடங்கி இலக்கியங்களை ஆய்ந்து அவற்றைப் பல்வேறு வகையில் வகைப்படுத்தி உள்ளனர் நம் தமிழ் புலவர்கள். இலக்கியங்கள் அகத்தே அவற்றின் அமைப்பியல்புகளைத் தருவதாக இருப்பனவற்றை இலக்கணம் என்றனர். "கண்' என்றால் காணவருவது என்றும் அறிவும் என்றும் பொருள்படும். இலக்கியங்களில் பயிலுவதாய் அவற்றைப் புரிந்துகொண்டு மகிழ உதவுவனவே இலக்கணங்கள் போலும். ஓர் இலக்கணம் சொற்படுத்தப்பட, அதனை ஒட்டி ஓர் இலக்கிய மரபும் தோன்றுகின்றது. பிறகு வரும் இலக்கணப் புலவர்கள் இதனையே ஆயுதமாகக் கொண்டு நல்ல பல இலக்கியங்களை அங்கீகரிக்க மறுத்துள்ளது ஓர் வரலாற்று உண்மையாகும். புதுமையான குறள் யாப்பில் அமைந்த திருக்குறளை கடைச் சங்கத்தார் அரங்கேற்ற மறுத்தார்கள் என்றோர் கதையுண்டு. இதேப் போன்று 14ஆம் நூற்றாண்டு கச்சியப்பரின் கந்தபுராணத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆயினும் என்னவோ இருக்கின்ற இலக்கண வரம்புகளை மீறி எத்தனையோ இலக்கிய வகைகள் பண்டும் தோன்றியுள்ளன, இன்றும் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. காட்டாக இன்று புதியதாக தமிழில் உருவாகிக் கொண்டிருக்கும் மிசித்திர இலக்கியங்கள்.
மரபு வழிப்பட்ட இலக்கிய/இலக்கண ஆராய்ச்சிகளை 17ஆம் நூற்றாண்டு 'மாறனலங்காரம்" வரை பெரும்பாலும் அணிகளைக் கண்டே வகை படுத்தியுள்ளதைக் காணலாம். அணிகளை சொல்லணிகள் பொருளணிகள் என்று இருவகைபடுத்தி, இவற்றின் வழியே இலக்கிய உத்திகளைக் கண்டு அதன்வழி இலக்கியங்களை வகைப்படுத்தித் தெளிந்தனர்.
ஆனால் இத்தகைய ஆய்வுகள் இலக்கியங்களைப் பற்றிய முழுமையான (இது முடியும் ஒன்றா?) அறிவினையும் தெளிவினையும் தருவதாக இல்லை. சுருதி என்றும் ஆகமம் என்றும் புராணமென்றும் திருமுறைகள் திவ்விய பிரபந்தம் என்றும் வருவதெல்லாம் தத்தமக்குரிய உத்தி வகைகளை கொண்டிருப்பன எனினும் ஏன் இவை இவ்வாறு அழைக்கபடுகின்றன என்பதற்கு இத்தகைய இலக்கன நூற்களில் தெளிவான இலக்கணங்கள் இல்லை. இலக்கியங்கள் ஆழமான அனுபவங்களின் வெளிப்பாடுகளாக அமைந்துவிட, இந்த அனுபவங்களை வகைப்படுதினாலே ஒழிய, இவற்றைபற்றிய மெய்யறிவு சித்தியாகாது. இந்த ஆழமான அனுபவங்களை நோக்கும்போது அங்கு பல்வேறு வகைப்பட்ட காலவுணர்வுகள் இருப்பதைக் காண்கின்றோம்
காட்டாக நவீனம் என்றும் அதற்குப் புறம்பாக எழுந்துள்ள பின்நவீன கலைப்படைப்புக்களையும் பார்க்க, முன்னதில் சுட்டுகால வுணர்வு (நியூட்டனின் என்று மாறா காலம்) வலுவாக இருக்க, அதனின் என்றும் மாறா விதிகள் பல உளவாக அறிவு செல்ல, இந்த கட்டுப்பாட்டை உடைத்தெரியும் பின்நவீன இலக்கியப் படைப்புக்கள், மானிட பார்வைகட்கும் அவறின் நெகிழ்ச்சிகட்கும் உணர்ச்சிகட்கும் முதன்மை தருவதாக ஆகவே குறிப்புக்கால வுணர்வினை மையமாகக் கொண்டுள்ளதாகத் தெரிகின்றது.
காலவுணர்வினை ஓர் பொருளாக்கி ஆய்ந்தவர்கள் உலகில் மிகச் சிலரே. பாரத கண்டத்தில் இதனை திறம்படச் செய்தவர் தொல்காப்பியர்; மேற்கில் பண்டு அரிஸ்டாட்டில் என்ற கிரேக்க தத்துவ ஞானி , சமீப காலத்தில் HenRi Bergson, Heidegger போன்றோர். தொல்காப்பியர் கண்ட காலதத்துவத்தை பழுதற தெரிந்து கொண்டு அதன்வழி இலக்கியங்களை ஒஉருவாறு வகைபடுத்திலே இச்சிறு நூலின் நோக்கு. முதற் பகுதியில் காலவியல்பினை தெரித்துவிட்டு, இரண்டாம் பகுதியில் இலக்கிய வகைகளை கணிக்க முற்படுகின்றேன்.
இந்நூல் நூலிய அறிவியற் பனுவல் என்பதின், அதற்குரிய நடை தொல். மரபியல் விளக்கியவாறு உரையொடு வரும் சூத்திர நடை என்பதின், அவ்வாறே செல்கின்றது.
அன்பன் கி.லோகநாதன்
1: காலவியல்பு
சூ.1.
மொழித்திறன் முயன்று நன்முறை முட்டறுக்க
கட்டறுத்து வீடுகாட்டுங் கண்ணுதல் ஞானம்
(இ-ள்)
கண்னுதல் ஞானமாவது, காலக்கடப்பு செய்து அறிகின்ற , கரந்துரு அறிதிறத்தின் நுதல்விழி காட்சியின் எழு அறிவு விளக்கங்களாகும். இதுவே அகத்துச் செறிந்து, பெறப்படும் அறிவினை எல்லாம் சுட்டுணர்வினதாக்கும் அணுத்துவத்தை (finitude) போக்கும் ஞானமாகும். அதற்கோர் வழி காலவுணர்வோடு வரும் மொழித்திறனையும் (linguistic competence) அதனோடு வரும் ஏனைய திறன்களையும் ஆய்ந்து அவற்றின் மூலத்தை, ஏன் அவ்வாறு இருக்கின்றது என்ற தெளிவினை பெறுதலால் ஆகும் என்றவாறு.
சூ.2
வெளிப்பட வந்துள மொழித்திறன் வழியே
வெளிப்பட வாரா மறையினை அறிதல்

(இ-ள்)
இது எவ்வகை ஆய்வு எனில், நூலியல் அறிவியல் ஆய்வு ஆகும். இங்கு வெளிப்பட்டு நிற்கும் இலக்கியப் படைப்புக்களை, மொழியாக்கங்களை, கலைப்படைப்புக்களை இரட்டுரு நூற்களாகக் கொண்டு ஆய்ந்து புறவுருக்களிலிருந்து புதையுருக்களுக்கு ஊடுறுவிச் சென்று மொழித்திறனை ஓர் திறனாக நிறுத்துகின்ற மறைகளை, மறையாக நின்றிலங்கி அறிவின் தெளிவுகட்கு ஓர் வடிவம் அமைத்துத் தருகின்ற அந்த கருக்களை கண்டறியும் ஆய்வு ஆகும்.
சூ3.
பெயர்ச்சொல் வினைச்சொல் என்றிருபாற் பிரிவில்
பெயர்நிலைச் சொல் காலங்கடந் தமைக்காட்ட
வினைநிலைச் சொல் காலங் காட்டும்
(இ-ள்)
எல்லா கிளவிகளும் பெயர்ச்சொல் வினைச்சொல் என்ற இருவகைச் சொற்களால் இயன்றதே. இவற்றில்:
"வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங்காலை காலமொடு தோன்றும்"
என்று கூறி தொல்காப்பியர், வினைசொற்கட்கு வேற்றுமை ஒதுக்கலும் காலவுணர்வோடு வருதலுமாகிய இருபண்புகளை இலக்கணங்களாக எடுத்துரைக்கின்றார். பெயர்ச் சொற்கட்கு வேற்றுமை உருபுகளை ஏற்கும் பண்பொடு காலக்குறிப்பின்றி (வினையாலடையும் பெயர்களைத் தவிர்த்து) நிற்கும் பண்பினையும் இலக்கணங்களாகக் கொள்கின்றார். இங்கு காலக்குறிப்பின்றி நிற்பதை விரித்து "காலங்கடந்தமை" எனப்படுகிகின்றது.
(தொடரும்)1
2.
சூ 4:
உண்மை யென்றுகொளூஉ நிலையாற் கடந்தமை
உணர்த்தப் படும்உறூஉ வென்பதாற் காலம்
(இ-ள்)
இவ்விளக்கம் இயக்கவிலக்கண கோட்பாடுகள் பற்றி எழுந்தவை. பெரும்பாலான கிளவிகள் சிலவற்றை உண்மையென மேற்கொண்டே புதிதாக ஒன்றை கிளக்கும். காட்டாக " பூனை பால் குடித்தது" எனும் போது, 'அது பூனை" 'அது பால்" " அது அதனைக் குடித்தது" என்ற மூன்று கிளவிகளில், முதல் இரண்டையும் உண்மையென மேற்கொண்டே, புதிதாக உறுத்தப்படுவதாக"குடித்தது" என்று வருகின்றது. இம்மூன்றும் அணுக்கிளவிகள் என, அவற்றின் புணர்ப்பால் எழுவன திரள்மொழிகள் எனப்படும். அணுக்கிளவிகள் தவிர்த்து ஏனைய திரள்மொழிகள் அனைத்தும், உண்மை என்று கொளப்பட்ட (அது பூனை, அது பால்) மொழியை அல்லது மொழிகளை கொளூஉ ஆக்கி, அதாவது ஐயப்பாட்டிற்கு இடமின்றிய உண்மைகள் என மேற்கொண்டு, அதன் கண் நிலவும் பொருட்களைத் தேர்ந்து (பூனை, பால்) வேற்றுமைப் படுத்தி (பூனை, பாலை) உரிதாய் அதற்கொன்று சார்த்திடும் பண்பில் உறூஉ நிலை தோன்றிட( குடித்தது: the asserted), முன்னையது பெயர்ச்சொல்லாக பின்னையது வினைச்சொல்லாக இலக்கண வடிவு எடுக்கின்றது. உண்மையென்று மேற்கொள்ளப்படுவதால் காலங்கடந்தமையும், உண்மையா அல்லவாவென்று நிறுத்தற்கு ஏதுவாக உலகில் உறுவதாக உணர்த்தப்படுதால் காலக்குறிப்பும் வருகின்றது.
இவற்றின் விரிவையெல்லாம் எனது இயக்கவிலக்கண கட்டுரைகளிலும் " உயர்ஞானப் பனுவல்" எனும் சிறு நூலிலும் கண்டு கொள்க.
சூ: 5
முத்திமுன் னறிவின் முகிழ்வது காலம்
முத்தியுங் கிட்ட முடிந்தது காலம்.
(இ-ள்)
காலவுணர்வு யாண்டும் நின்று நிலவா அசத்துபொருளாகும். மானிடச் சிந்தையில் அது வலுவான இடத்தைபெற்றிருப்பதற்குக் காரணம் ஆன்மாக்கள் அகத்தே முத்தியைப் பற்றி முன்னறிவு இருப்பதே யாகும். முத்தி முன்னறிவாவது, தான் பல பாசத்தளைகளில் கட்டுண்டு அணுத்துவப் பட்டு சிற்றறிவினனாக அபூர்ணனாகத் திகழ்கின்றவன், ஆயினும் தனது சொரூபம் பரிபூரணத்தின் முத்தி நிலையே , அதனை நோக்கி அறிந்தோ அறியாமலோ உழன்று கொண்டிரூப்பவன் என்ற அறிவினால் வரும் ஞானத்தெளிவாகும். இதுபெரும்பாலார்க்கு இருளில் கிடக்கும் மறைஞானமாகவே விளங்கும். ஆயின் ஏதாவதோர் வகையில் தன்னின் மேலான பூரணநிலை எதிர்காலத்தில் கிடப்பதாக நுதிப்பித்து (projected) , நுதிக்கப்படும் தன்னின் ஓர் எதிர்நிலை வடிவை வலுவாகப் பற்றிக் கொண்டு அது தானாக உழைக்கின்ற போது , எதிரதை மையமாகக் கொண்ட குறிப்புக்கால உணர்வு தோன்றுகின்றது. எதிரே இருப்பது என்ற குறிப்பில் இக்கால உணர்வு தோன்றுவதால், இது குறிப்புக்கால உணர்வு (temporality, the psychological time etc) ஆகின்றது. இந்தக் குறிப்புக்காலத்தில் வலுவாகக் கிடக்கும் போதே, சூரியனின் பாரிப்பு போன்ற உலக நிகழ்ச்சிகளை "இப்பொழுது இது, முன்பு அது, பிறகு இது" என்றெல்லாம் கணித்து உணரப்படும் அனைவருக்கும் பொதுவாய சுட்டுக்காலம்(the objective, physical time consciousness that can the SAME for all) அறிவில் ஆகின்றது.
வந்து நிற்கும் நுதிப்பினையும் வேறு எந்த நுதிப்புக்களும் தோன்றிடாது ஒழித்துவிடும் பரிபூரணத்தின் முத்திநிலை வந்தடைய, நுதிப்பொன்றினைப் பற்றி அது தானாக வேண்டும் என்ற வேட்கைப்பட்ட முனைப்பொடு இருக்கும் இருப்பு நிலை (the Being state) ஒழிய, குறிப்புக்கால உணர்வும் இல்லாதுபோக, எவ்வகைக் கால வுணர்வும் அறிவில் தோன்றாதொழிகின்றது.
தொல்காப்பியரும் காலவுணர்வு குறிப்பினும் வினையினும் இருபாற்றினதாக வரும் என்பதொடு, இந்த குறிப்பொடு கொள்ளும் மெய்ந்நிலை உடைய அதன் உலகியல் தோற்றம் என்று மிகத் தெளிவாகக் கூறுகின்றார்.
"காலந் தாமே மூன்றென மொழிப"
"இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்றா
அம்முக் காலமும் குறிப்பொடு கொள்ளும்
மெய்ந்நிலை யுடைய தோன்ற லாறே"
"குறிப்பினும் வினையும் நெறிப்படத் தோன்றி
காலமொடு வரூஉம் வினைசொல் எல்லாம்
உயர்திணை குரிமையும் அஃறினைக் குரிமையும்
அம்மூ வுருபின தோன்ற லாறே"
எனவரும் சொல்லதிகார சூத்திரங்களைக் காண்க.
(தொடரும்)2
3.
சூ. 6
மெய்கண்டா னாயினாங் காலங் கடந்தமை
அதனிற் றோன்றுங் காலத்தின் மெய்மை
(இ-ள்)
காலத்தின் மெய்மையாவது, அது சத்தல்ல அசத்து என்பது. அந்த மெய்யறிவு எப்படி சித்திக்குமெனில், மெய்யுணர்வையே தேர்ந்து செல் மெய்கண்டானாகி, மெய்யுணர்வினையே வளர்த்துச் செல்ல, அஞ்ஞான நீக்கத்தின் அதனோடு காலவுணர்வும் கழன்று வர, அதுபொழுது காலம் அசத்து எனும் காலத்தைப் பற்றிய மெய்யறிவு சித்திக்கும். சிவஞானத் தெளிவினை நெருங்கிச் செல்ல காலம் கழன்று விழும். ஏனெனில் சிவஞானம் சுட்டுணர்வு இறந்து நிற்கின்ற ஞானம் என்பது, சிவஞானம் துய்க்கின்றபோது காலவுணர்வு கழன்றே அது தூய்க்கப்படும் என்பதாம். இந்த சிவஞான திருச்செலவில், காலவுணர்வு கழன்று வர, அதனின் அது தனித்து ஓர் பொருளாகக் காணப்பட்டு அதன் உண்மைதான் யாதென்று புரிய வரும் என்பதாம். சுட்டுணர்விலேயே கிடக்க காலம் என்றும் அழியாத ஓர் நித்திய வத்துவாகவேத் தோன்றி அதனுள்ளேயே ஆன்மாக்கள் உழலுமாறு செய்யும் என்பதாம்.
சூ. 7
சத்தறிவி லில்லா வொன்றாய் அசத்திற்
சந்தித்து உளதாய் அறியவருவது காலம்.
(இ-ள்)
காலந்தான் என்ன என்று இங்கு அதன் மெய்யியல்பு விளக்கப்படுகின்றது. அறிவு சத்தறிவென்றும் அசத்தறிவென்றும் இருவகைப் படும். மெய்கண்டானாகி காலவுணர்வு தாக்காது நின்று அறிகின்ற அறிவெலாம் சத்தறிவு அல்லது சிவசத்தறிவு. இத்தகைய அறிவின் முன், மெய்கண்டார் விளம்பியவாறு :"சத்து எதிர் சூனியம்" ஆகும், அது என்று சுட்டதற்கு ஒன்றுமில்லாதுபோம். அதற்குப் புறம்பானதும் உள்ளதுபோற் றோன்றி இலதாகுவதெல்லாம் அசத்து. இவ்வாறு சத்தறிவின் போது இலாததாய் , அசத்தறிவின் போது இருப்பதாய் தோன்றும் இயல்பிற்று காலம் என்பதாயிற்று. இன்னும் இதன் விரிவையெல்லாம் எனது "திருநெறித் தெளிவு" எனும் நூலிற் காண்க.

சூ.8
நிகழ்ச்சி யாண்டும் நீளுதற் றன்மையின்
அழுந்தி மலத்தால் அதுவதுவாகி யகன்றேகாண
அதுவென் றறிவுடன் சுட்டின் முக்காலம்
(இ-ள்)
எவ்வாறு அசத்தறிவின் மாட்டு காலவுணர்வு தோன்றுகிறது என்பதை விளக்க வெழுந்தது இச்சூத்திரம். உலகத்து நிகழ்ச்சிகள் அனைத்தும் நெகிழ்ந்து நெகிழ்ந்து வரம்பின்றி ஒன்றழிய ஒன்று தோன்றி ஒடியாது செல்லும் திறத்தன. பிறப்பெடுக்கும் ஆன்மாக்கள் சுட்டுணர்வு பட்டனவாய் இந்நிகழ்சிகளை சுட்டரங்குகள்வழி , இதுவென்றும் இதனை அடுத்து இதுவென்றும் படுத்தும் போது காலவுணர்வு தோன்றுகின்றது. இது தவிர்க்க முடியாததும் ஆகும். அகத்துச் செறிந்துள்ள அறியாமை இருளின் காரணமாக, ஞான வெளிச்சமாகத் தோன்றும் காட்சிப்பொருட்களைப் பற்றி அழுந்தி சார்ந்ததின் வண்ணமாய் அதுஅதுவாகி விரிந்து, அதனின் அஞ்ஞானம் போக்கும் அதேபொழுது, ஆமைபோல் தன்னுள்தான் மடங்கிக் கிடப்பது ஒழித்து வெளியாகி அகன்று அகன்று செல்கின்றது ஆன்மா. அதுபொழுது தன் அகநிலைத் தோற்ற மாற்றங்களைக் காண குறிப்புக் காலவுணர்வும், சலனத்து உலகியல் பொருட்களின் நிகழ்ச்சிகளை முன் பின்னாகிக் கணிப்பதின் சுட்டுக்கால வுணர்வும் அரும்புகின்றது என்பதாம். இதனால் சலனத்து உலகு இல்லையெனில் எவ்விதக் காலவுணர்வும் தோன்றாது என்றவாறுமாம். மேலும் காலவுணர்வுத் தோன்றுதற்கு ஆன்மாக்களின் அகத்தே அஞ்ஞான இருள் செறிந்திருப்பதும்ளின்னொரு காரணமாகின்றது.
சூ.9
நீளுதற் றன்மையின் நீடிய வான்மா
நின்றிடு தன்னிலை நினைக்க வெதிர்
நிகழ்ச்சி பிறகவண் வர நிகழ்வு
அதற்கு முன்னென் பதொடு இறப்பு
(இ-ள்)
இனி சுட்டுக்காலவுணர்வு ஏன் எதிர்வு, நிகழ்வு, இறப்பு என்றவாறு முத்திசை கொண்டதாய் விளங்குகிறது என்பதை இச்சூத்திரம் விளக்குகின்றது.
ஆணவமலத் தாக்கத்தால் அறியாமை இருள் அகத்தே செறிந்திருக்க, அதனை நீக்குவான் பொருட்டு பாரம்பரியமாக வரும் உலகத்து நிகழ்ச்சிகளொடு தொடக்குற்று அதுவதுவெனப் பற்றி ஆன்மா தன்னுளிருந்து வெளியாகி விரிந்து நீண்டிட, அதுபொழுது தன்னை இவ்வாறு விரிக்கப்பட்ட நிலையை உணர , அது பொழுது எதிர் எனும் காலவுணர்வு தோன்றும். "சூரியன் நாளை உதிக்கும்", "இன்னும் சிறிது நேரத்திற்குப் பிறகு இரவு இல்லாது போம்" என்றெல்லாம் வரும் மொழியாக்கங்கள் இத்திறத்தனவாகும். இவ்வாறு எதிர்பார்த்து நிற்கின்ற ஓர் நிகழ்ச்சி , வெற்றுக் கற்பனையாய் போகாது உள்ளதென்று உணரும் வகையில் மெய்யாக, அது எதிர்பார்த்த ஒன்று நிகழ்வுறும் காலம் என்பதால் அது நிகழ் காலம் ஆகின்றது. இவ்வாறு எதிர்பார்த்த ஒன்று நிகழ்கின்றபொழுது அறிவு அதன்மேல் குத்தி நின்று அதனையே சுட்டின் மையமாக்கி, அதற்குப் பின்வரு நிலைகளை எதிரது என்றும், முன் கழிந்தவை இறந்தவை என்றும் நிகழ்ச்சி ஓட்டங்கள் சுட்டுகாலவுணர்வில் முறைப்படுத்தப் படுகின்றன. உலகத்து நிகழ்ச்சிகளினோடு ஒன்றித்து வேறற நின்று ஒன்றாகி, தான் அதுவாகியே நின்று அதனை சுட்டின் மையமாகக்கொண்டு இத்தகைய முத்திசைக் காலவுணர்வு தோன்றுவதால், இது சுட்டுக்காலம் எனப்படுகின்றது.
சு.10
மேற்செப் பியபண்பிற்று நிகழ்ச்சி காலத்தின்
நீட்சியின் பகுதி வகுத்து வகைசெய்ய
எழுந்ததும் இறக்கும் இனஞ்சேர் கணங்களின்
தாரையாய் காணும் தன்மையும் உண்டே
(இ-ள்)
நிகழ்ச்சி காலத்தை மையமாகக் கொண்டெழும் சுட்டு காலத்தை, அறிவினில் மிகமிகத் துல்லியமாக நுணுக்கமாக பகுத்துக்கொண்டே போக, அதன் எல்லையில் பண்டைய புத்தர்கள் கண்டவாறு, காலமென்பது தோன்றியதும் அழியும் கணங்களின் தொடர்ச்சியாய், ஒடிவின்றி ஓடிக்கொண்டூ இருக்கும் காலவணுக்களாய் காணவரும் என்க. இது சுட்டுகாலவுணர்வின் இன்னொரு நிலைப்பாடுதானே தவிர, காலங் கடத்தல் அல்ல என்பதாம்.
(தொடரும்)3

4
சூ. 11
நிகழ்ச்சி நீட்சி தானும் பெறவே
தன்னை விட்டுத்தான் வெளியாகி நீளுங்கால்
தானலா தன்னிலை தனக்கயலா நிற்க
அதுநான் ஆவேன்றா சையவதி யும்வர
ஆயிற்று ஆங்கே அகற்றுதற் கரிதின்
குறிப்புக் கொளுயிரின் குறிப்புக் காலம்
(இ-ள்)
உலகியல் சுட்டுகாலத்தை, பொதுமையின் அனைவருக்கும் உடன்படக் கூடிய முறையில் ஓர் மையப்புள்ளியின் கணக்கிட்டு அறியக்கூடிய இந்த உலகியல் காலத்தை (world time, physical time) அறிந்திட உலகத்தில் பற்பல சலனங்கள் வழியாக மெய்யாகும் நிகழ்ச்சிளோடு அழுந்தி அவையேத் தானாகி நின்று தனை விட்டு வெளிவந்து நீட்சி அடைதல் வேண்டியதாயிற்று. இனி அவ்வாறு புற நிகழ்ச்சிகளோடு ஒன்றித்து தான் அவையேயாகி நிற்பதிலிருந்து கழன்று, தன்னையேத் தான் மறித்து நோக்கிக்காண, தான் ஓர் நுதிப்பினைப் பற்றி (mental projection) அது தானாக வேண்டும் என்றவோர் முனைப்பில் கட்டுண்டு கிடப்பதை ஆன்மாக்கள் அறிவரும் என்றவாறு. இதுவே, தான் பற்பல வேட்கைக்கு ஆளாகி நிற்பதாகும். தான் இன்றலா ஆயினும் தான் ஆகக்கூடிய இப்பொழுது தனக்கு அயலாக இருக்கின்ற தன்னின் ஓர் எதிர்நிலை கண்களிற் பட கருத்தைக் கவ்வ, அதுநான் ஆகவேண்டும் என்ற முனைப்பும் எழ, அதன்வழி அத்தகைய குறிப்புக்களோடு பற்பல வினைகள் பிறக்கின்றன. இவ்வாறு குறிப்பொன்றினைப் பற்றித் தான் அதுவாகி நிற்கின்றபோது, அதுதான் ஆகவேண்டும் என்னும் முனைப்பு இன்னும் மெய்யாகதிருக்க, இன்னும் தான் அது ஆகவில்லை என்ற உளக்குறிப்போடு வரும் காலவுணர்வே குறிப்புக்காலம் என்பது (Temporality , psychological time)
தொல்காப்பியரும் காலத்தை சுட்டுகாலமென்றும் குறிப்புக்காலமென்று வேறுபடுத்தி, இவ்வாறே அவற்றிற்குள்ள வேறுபாட்டை கண்டுள்ளார் என்றும் தெரிகின்றது. இங்கு வரும் சுட்டுக்காலத்தை , அங்கு அவர் "பொருள் நிகழ்வு காலம்" என்கின்றார். காண்க:
இறப்பே நிகழ்வே எதிரது என்னும்
திறத்தியல் மருங்கில் தெரிந்தனர் உள்ளம்
பொருள் நிகழ்வு உரைப்பது காலமாகும் (1428)

மேலும் இதற்கு வேறாக,
அன்மையின் இன்மையின் உண்மையின் வன்மையின்
அன்ன பிறவும் குறிப்பொடு காலம் (699)
என்கின்றார்.
குறிப்பது ஒன்றினைக் கருதி அதனை அடையவேண்டும் என்ற முனைப்பொடு நிற்பது. காண்க:
நாட்டம் இரண்டும் அறிவு உடன்படுதற்குக்
கூட்டி உரைக்கும் குறிப்புரை யாகும் (1042)
குறிப்பே குறித்தது கொள்ளு மாயின்
ஆங்கவை நிகழும் என்மனார் புலவர் (1043)
இங்கு ஒன்றினை நாடி நிற்றலாகிய நாட்டம், குறிப்பாகின்றது. இதுவே தன்னது நிலையாக நுதிக்கப்பட்ட வொன்றினை தான் பற்றி தான் அதுவாக ஆய்நிற்க எழும் முனைப்பு நிலையும் ஆகும். இப்படிப்பட்ட குறிக்கொள் நிலையில் (intentional states of Being) தோன்றுகின்ற காலவுணர்வே குறிப்புக் காலம் என்றாயிற்று.
இனி இது ஏன் "அகற்றுதற் கரிதின்" என்று விதந்தோதப்பட்டதோ வெனின், நுதிக்கப்பட்ட நிலையைத் தான் அடைய , பின்னொரு நுதிப்பு உண்டாகி புதியப் புதிய உளக்குறிப்புகள் கடலலைகள் தோன்றிக் கொண்டே இருக்கும் என்பதின் என்க.
சூ. 12
இதுவே தரும்
பொருள்நிகழ்வு காலம் போற்றும் பெற்றிமை
(இ-ள்)
தானலாவோர் நுதிப்பினைப் பற்றி தானதுவாகும் முனைப்பிலே எழும் குறிப்புக்கால உணர்வு, ஆன்மாக்களை வெளி இழுத்து புறத்துறு நிகழ்ச்சிகளில் பதிய வைப்பதோடு மட்டுமிலாது, ஒன்றினில் ஒன்று தோன்றி ஓடியவாறு கிடக்கும் பொருள் நிகழ்வுகளை முறைப்படுத்தி, இப்பொழுது முன்பு பின்பு என்று கணித்து சுட்டுக்காலத்தோடு காண்கின்ற திறத்தைத் தருகின்றது என்பதாம்.
(தொடரும்)4
5
இனி இவ்வாறு வரும் குறிப்புக்காலமும் வேறோர் வகையில் முத்திசைப்படும். அதனை விளக்குதற்கு முன்பு
வினை என்றால் என்ன, அங்கு காலவுணர்வு எப்படி வருகின்றது என்பது விளக்கப்படுகின்றது.
சூ.13
நிகழ்சியிற் பட்டு நீடிய வான்மா
நிகழ்ச்சியிற் கழன்று நினைத்தேக் காண
தன்னின் நாட்டம் தானங்குக் கண்டு
தன்னையுங் கண்டுதான் செய்வினையுங் காணும்
(இ-ள்)
ஒருவன் ஓர் வினையினைச் செய்யும்போது, அவ்வினையோடு முற்றிலும் அழுந்தி அது தானாய் நிற்கின்றமையின், தான் பின்புலப்படுத்தப்பட்டு இருப்பதின், தன்னை அறியாதே நிற்கின்றான். இவ்வாறு ஓர் நிகழ்ச்சியில் அழுந்தி அதுவாகி நின்று நீண்டிடும் ஆன்மா, அதனின்று கழன்று தன்னை முற்புலப்படுத்தி, தான் ஆய்நின்ற வினை செய் நிலையையே பொருளாக்கி சிந்திக்க, தான் செய்த வினைக்கு அடிப்படையாக விருந்த குறிப்பாகிய நாட்டத்தையும், அதனை தனதாகக் கொண்டிருந்த தன்னையும், அந்தக் குறிப்பினை அடையும் முகத்தான் செய்யப்பட்ட வினையினையும் பொருளாகக் காண்பான் என்பது.
சூ. 14
நாட்டம தூர்ந்து நடத்திடு வுறுதியுடன்
கூட்டிய நிகழ்ச்சித் தொடர்ச்சியே வினை
(இ-ள்)
இப்படிப்பட்ட சிந்தனையில் எழுகின்ற வினையினைப் பற்றியத் தெளிவு யாதென்று விளக்கியது.
நாட்டமொன்று தோன்றி பெயராது உறுதியாக நின்று ஆன்மாவைத் தனதாக்கி வலித்து முயக்க, நாடப்பட்டதை மெய்யான ஒன்றாக்கிட , விடாது பற்பல நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து தோற்றுவித்து கூட்டுவித்து ஓர் ஒருமையுடன் கூடிய தொடர்ச்சியின தாக்கலே வினை செய்வதென்பது. "உணவு உண்ண வேண்டும்" என்னும் நாட்டமுடையவன், அந்த நாட்டத்தில் தவறாது நின்று அதனை மெய்யாக்கியே ஆகவேண்டும் என்ற உறுதியுடன் நின்றாலே ஒழிய, மனைவியை விளித்தல், உண்ண அமர்தல் , அதற்குமுன் கை கழுவல், உணவு படைக்கப்பட அதனை உண்ணல், பசி நீங்காவரை இன்னும் வேண்டுமெனல், நிங்கியதும் போதுமென்று எழல் என்பனப் போன்ற அடுத்தடுத்து வரும் பலவற்றை செய்யான் என்க. இவ்வாறு நாட்டமதூர்ந்து நலியாது நின்று அஞ்ஞான்று நிகழாவொன்றினை நிகழவைக்க, அங்கு வினை எனப்படுவது மெய்ப்பொருளாய்த் தோன்றுகின்றது என்று அறிக.

சூ.15
உள்ளதாய் ஆயின் வெளிப்படா திருந்ததாய்
வன்மையி னாக்கம் வயங்குநல் வினை
(இ-ள்)
இங்கு 'வன்மை' என்பது சூக்கும நிலையின் (pure potentilaity) உள்ளதை வெளியாக்கி உளதாக்கும் அதாவது தூலமாக்கும் திறன்.
ஒருவன் ஓர் வினையினை மெய்யாக்க, தன்னைப்பற்றியும் ஒன்றினை உணர்த்துகிறான். அது யாதெனின் அந்த வினை மெய்யாகும் வரை, அகத்திலே உள்ளதாய் ஆனால் சாதாரண காட்சிக்கு அகப்படாது ஆகவே வெளிப்படாதிருந்த வொன்று அனைவரும் காண வெளிப்பட்டு நிற்க, அவனது ஓர் வல்லமை அனைவருங் காண வெளியாகி நிற்கின்றததுவே யாம். நுண்ணிய நூலொன்றை யாத்தப் பிறகே ஒருவனை நுனித்தகு புலவன் என்கின்றோம். நல்ல கவிதைகளை படைப்போனையே நற்கவி என்று பாராட்டுகின்றோம்.
இவ்வாறே நல்லது அல்லது என்ற எல்லா வினைகள் மாட்டும்---- சூக்குமமாய் கிடப்பது தூலமாக்கும் திறன் வினைசெய் திறன் என்பதாம்.
(தொடரும்)5
6
சூ. 16
வன்மையின் நிகழ்ச்சி வாய்ப்பது கருதி
வையகம் பரவும் வளர்வின் கண்ணே
உதிப்ப தறிவில் உலகியற் காலம்
(இ-ள்)
உலகியற் காலம் எனினும் பொருள் நிகழ்வு காலம் எனினும் ஒன்றே. உலகத்து மெய்யாகின்ற நிகழ்ச்சிகளைப் பற்றி எழுகின்ற காலவுணர்வு என்பது. சுட்டுக்காலமும் இஃதே. இதன் தோற்றத்தை முன்பு விளக்கியாயிற்று. இப்பொழுது வேறொரு கோணத்தில் மீண்டும் விளக்கப்படுகின்றது.
வினையெனப் படும் நிகழ்ச்சி, ஆன்மாக்களின் வன்மை எனுந் திறத்தின் மெய்பெற்று இலங்குகிறது. அதுபொழுது உலக ஒட்டத்திற் பட்டு அதில் பரந்து செல் திறத்தின் ஆன்மாக்கள், அதில் நீண்டு நீண்டு உயர்வதின் பொருட்டு வையகமே தானாகப் பற்றி அழுந்தி புல்லி வளர்வதின் கண், அவ்வாறு உலகோடு ஒன்றித்து நிற்கின்றபோது , உலகியல் காலமாகிய சுட்டுக்காலம் தோன்றுகின்றது என்பது. ஓடியபடி இருக்கும் உலகத்தோடு ஒட்டுமாறு செய்யும் இந்த வினை செய் வன்மை இல்லையெனின் சுட்டுக்காலம் இல்லை என்றது.
இதற்கு வேறாக வன்மையை யொட்டி சுட்டுக்காலத்திற்கு மூலமாகிய குறிப்புக்காலத்தின் தோற்றம் அடுத்து விளக்கப்படுகின்றது.
சூ. 17
வன்மையாய் நின்று வையகத்து நிகழ்ச்சியாய்
வெளிப்பட்ட பொருளென விளங்குத லிறப்பு
வெளிப்படுத்து நிகழ்ச்சி விளங்குதல் நிகழ்வு
வெளிப்படா வன்மையின் வியல்பு எதிர்வே
(இ-ள்)
குறிப்புக்காலம் முத்திசைப்படும் வகை விளக்கப்படுகின்றது. பொருளொன்று தோன்றாது சுத்த வன்மையாக அல்லது சாத்தியமாக (pure potentiality) நிற்பதொழித்து வெளிப்பட்டு தோன்றிவிட்ட ஒன்றாய் ஓர் பொருள் நிற்க அது இறந்த கால குறிப்புக்காலவுணர்வினைத் தேற்றும். இருளிலிருந்து , இல்லாமை நிலைமையிலிருந்து அல்லது சுத்த வன்மை நிலையாகிய சூக்கும நிலையில் தொடர்வதை கெடுத்து வெளிப்படுத்தி தூலமாய் நிற்குமாறு நிகழ்ச்சி ஆய்வருங்கால், தோன்றும் காலவுணர்வு குறிப்புக் கால நிகழ் காலமாகும். இவ்வாறு தூலம் ஆகாது சூக்குமான சுத்த வன்மையாகவே நின்று எதிர்படும் எதிர்படும் என்ற நினைவினை தோற்றுவித்துக் கொண்டே இருக்கும் நிலையில் சனிக்கும் காவுணர்வே குறிப்பின் எதிர்காலம் என்றாகும். தோன்றுதல், திதிபடுதல், அழிதல் பின் தோன்றல் என்பது அந்தமாதியாய் வருதலாகும். இவ்வாறு உலக நிகழ்ச்சிகள் வருவதைக் கண்டு, தோன்றிவிட்டது, தோன்றிக்கொண்டிருக்கின்றது, இனி தோன்றும் என்றவாறு நிகழ்ச்சியொன்று மெய்யாதலை நோக்கிக் கணிக்கும் காலமும் குறிப்புக்காலமாகி மேல் விளக்கியவாறு முத்திசைப்படும் என்றவாறு.
சூ. 18
'விடு' 'கொண்டிரு' 'கொள்' எனுமவை
உடைமை கொள்வழி தற்கொண்ட துரைத்து
குறிப்பின் வழியால் கூறுங் காலம்
அவதிநிலை தோற்றும் ஆன்மக் காலமங்கு
கொண்டமை கூறும் கொள்நிலை இறப்பு
கொள்கின்ற நிலையைக் கூறுவது நிகழ்வு
கொள்ள விருக்குங் கோள்நில எதிர்வு
(இ-ள்)
குறிப்புக் காலவுணர்வின் தோற்றத்தை இன்னும் விளக்கியவாறு.
ஒருவன் இச்சைகள் வாய்ப்பட்டு உலகத்து பொருட்களோடு பற்பல கிழமை வகைகளில் உறவு படுத்தும்[போது, அதனைக் கொண்டேன், விட்டேன், கொளவிருக்கிறேன் என்பன அவனின் உலகத்தோடுற்ற இருப்பு நிலைகளை (states of Being in the world) விளக்குவன. இவற்றில் ஒன்றினைத் தனதென கொண்டுவிட்ட நிலை இறப்பாக, கொள்கின்ற நிலை நிகழ்வாக, கொளவிருக்கும் நிலை (intentional state) எதிர்வு என்றாகின்றது. தொல்காப்பியர் இந்த குறிப்புக் காலத்தை கீழ்வரும் சூத்திரங்களில் இன்னும் விரிவாக விளம்புகின்றார்.
698.
அதுச் சொல் வேற்றுமை உடைமா யானும்
கண்ணென் வேற்றுமை நிலத்தி னானும்
ஒப்பி னானும் பண்பி னானுமென்று
அப்பால் கால்ங் குறிப்பொடு தோன்றும்
699.
அன்மையின் இன்மையின் உண்மையின் வன்மையின்
அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும்
என்ன கிளவியும் குறிப்பே காலம்
மேலும் இத்தகைய குறிப்புக்கால உணர்வு எவ்வாறு கிளவிகளில் வெளிப்படும் என்பதை உணர்த்தும்போது, அதனை இவ்வாறு விரிக்கின்றார்.
705.
இன்று இல உடைய என்னுங் கிளவியும்
அன்று உடைத்து அல்ல என்னுங் கிளவியும்
பண்புகொள் கிளவியும் உளவென் கிளவியும்
பண்பி னாகிய சினைமுதற் கிளவியும்
ஒப்பொடு வரூங் கிளயொடு தொகைஇ
அப்பாற் பத்தும் குறிப்பொடு கொள்ளும்
இங்கு விரிக்கப்பட்ட கிளவிகள், காலக்குறிப்பொடு கூடிய இடைச்சொற்களைக் கொண்டிராது தோன்றுங் குறிப்புவினைச் சொற் கிளவிகளாகும். "வானம் நீலம்" (The sky IS blue) என்பது வானம் நீலமாய் இருக்கின்றது என்றவாறு இருப்புநிலை தெரிக்கும் கிளவியாகும். பண்புகொள் கிளவி எனினும் ஒவ்வும். "பேய்கள் உண்டு" "பேய்கள் இல்லை" என்பனபோன்றவும் இத்தகையதே . பிறவற்றினையும் இவ்வாறு விரித்துக் காண்க. இங்கெல்லாம் தோன்றி நிற்கும் காலவுணர்வு, சொல்வானின் அவதிநிலை (existential states) தோற்றும் ஆன்மக் காலமாகும். (psychological time or temporality)
((தொடரும்)6
7.
இனி இப்படிப்பட்ட கிளவிகள் தோன்றுதற்கு அடிப்படையாய் இருக்கின்ற குறிப்புக்காலவுணர்வின் தோற்றத்தை பற்றி இன்னும் ஆழமான சில கருத்துக்கள் அடுத்து வரும் சில சூத்திரங்களில் விளக்கமுறுகின்றது.
சூ. 19
நிகழ்ச்சி உண்மையினை நினைவரு பொழுதும்
அவதி தன்னிலை ஆகும் பொழுது
வன்மை வெளிப்பாட்டு வையகப் பொழுதும்
கொண்டமை மெய்தரும் கோள்நிலைப் பொழுதும்
பெத்தநிலை சுட்டும் பெற்றிமை யாலே
பெத்தம் முத்தம் பேதநல் லறிவில்
தோன்றிடுங் காலத்தின் துகளில் குறிப்பே
(இ-ள்)
தான் முத்திநிலை அடையாது இன்னும் பெத்த நிலையிலேயே கிடக்கின்றோம் என முத்தி முன்னறிவோடு , முத்தி என்பது தான் ஆகக்கூடியதாக எதிரே நிற்கும் அவ்வுணர்வோடு வருவது குறிப்புக்கால உணர்வு என்பதை இன்னும் விளக்கியவாறு. பெத்தமும் முத்தமும் தன்னிலைகள் என்று ஒருங்கே அறிந்து இன்னும் பெத்தத்தில் கிடக்கிறோம் என்ற உணர்வோடு வருவது குறிப்புக்கால உணர்வு. பெத்தநிலை விட்டு முத்தநிலைப் பெயர, கால உணர்வு அதற்கேற்ப கழன்று செல்கின்றது. பெத்தநிலையை சுட்டுவன யாதெனில், உலகத்தில் நின்று நிகழ்ச்சி ஆய் விட்டதை அறிந்து அதனை உண்டென்றும், ஆய்விடாதவற்றை அல்லை என்று கூறும் பொழுதும்; அது தானல்லை அது தானாதல் வேண்டும் என்ற நாட்ட அவதிநிலை (intentional states of Being) தோன்றிய பொழுதும்; சூக்கும வடிவில் வனமையாய் நின்றது (pure potentiality) இப்பொழுது தான் செய் வினைவழி வையகத்து மெய்யாக தூலமாக் ஆய்விட்ட பொழுதும்; கிழமை படுத்தி அது தன்னது, பிறரது, அது தனக்கு அல்லது பிறருக்கு என்றவாறு காணுவதையெல்லாம் தனதாக்கிக் கொள்ள விழையும் கோள்நிலைகளிலும் இன்னும் இதனைப்போன்ற பிறநிலகளிலும் ஓர் ஆன்மா கிடக்கும் போது அது முத்தி அடையாது பெத்தத்தில் இன்னும் கட்டுண்டு கிடப்பதைக் காட்டும். இத்தகைய இருப்புநிலகட் படும் ஆன்மா குறிப்புக்கால உணர்வோடு செயற்படும் என்றவாறு.
சூ. 20
பெத்தநிலை யறிவிற் பிரிந்திடாது காலம்
முத்திநிலை யடைய முகிழா தொடுங்கும்
மோனநிலை யொடுசின் முத்திரையே மொழியாம்.
(இ-ள்)
காலவுணர்வு எவ்வாறு படிப்படியாகக் கழன்று விழும் என்பதை விளக்கியவாறு. பெத்தநிலையில் பார்வை பொறிலியப் பார்வையாகவே இருக்க,காலவுணர்வும் உலகியல் சுட்டுக்காலமாகவே இருக்கும். பிறகு கண் திறக்க நூலியப் பார்வை வர, குறிப்புக்கால உணர்வும் உண்டென்று அறியவரும். அதன்பின் ஞான விழி திறக்க நுதலியப் பார்வைவும் சித்திக்க, குறிப்புக்கால உணர்வின் கழற்சி தொடங்கும். அதன் பிறகு பார்வை இன்னும் இன்னும் ஆழமாகச் செல்ல, சிவப்பார்வை பரப்பார்வை அருட்பார்பவை என்றெல்லாம் பார்வைகள் பெயர்ந்து வர, குறிப்புக்கால உணர்வின் வலு இன்னும் இன்னும் குறைந்து, முடிவில் முத்தி நிலையின் பார்வையற்றப் பார்வை வந்தமைய காலவுணர்வு முற்றிலும் கழன்று விழுந்து அறிவில் இல்லாது போம் என்றவாறு. இப்படிப்பட்ட ஞான யாத்திரையில் உண்டாகும் காலக்கழற்சிக்கு ஏற்ப மொழியும் மாறிவரும். தொடத்தில் மொழி வைகரியாக இருக்க , அதன்பின் நூலியப்பார்வையோடு உள்ளத்து நாட்டங்களின் மொழியாகிய பைசந்தி தோன்றும், பற்பல கனாவுருக்களோடு மெய்யாகும். அதன்பின் மத்திமைமொழி விளங்கிட, அங்கு புராண உருக்களின் மொழி பயிலும். அதன் பின் சூக்குமைமொழி விளங்கிட, மந்திர யந்திர வடிவங்கள் திகழும் மொழி மெய்யாகும். அதன் பின் அதிசூக்குமை விளங்க அது "நமசிவாய' போன்ற மந்திரங்ளோடு சிவஞானத்து ஒங்காரமே மொழியாகும். அதன் முடிவில் காலவுணர்வு முற்றிலும் கழன்று விழ, அசபா மந்திரங்களின் மோனமே மொழியாகி சின்முத்திரையே அதன் உலகியல் காட்டாக நிற்கும் என்றவாறு.
இப்படிப்பட்ட மொழிகளுக்கு ஏற்ப இலக்கியங்களும் எழும் என்பதின், இலக்கியங்களை வகைபடுத்தற்கு காலவுணர்வின் ஆய்வு வேண்டப்படுவதாயிற்று. பெரும்பால இலக்கியங்கள் வகரி மொழி பட்டது எனினும், ஏனைய ஆழ்மொழிகளின் தாக்கத்தால் வெவ்வேறு இலக்கிய பண்புகள் பெறும் என்றவாறு.


காலதந்திரம்: முதற் பகுதி முற்றும்





பங்களிப்பாளர்கள்

Ulagankmy

"https://marabuwiki.org/index.php?title=கால_தந்திரம்&oldid=4413" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 24 ஜனவரி 2011, 07:24 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,367 முறைகள் அணுகப்பட்டது.