காந்தி

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 எனக்குச் சரியாக ஞாபகமில்லை. 1944-ம் வருடமாக இருக்கவேண்டும். அக்கால ஞாபகங்கள் கொண்ட காந்தீயவாதிகள் தான் சரியாகச் சொல்லமுடியும். நான் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சின்ன ஊர், நிலக்கோட்டையில் படித்து வந்தேன். எங்கள் பள்ளி சௌராஷ்டிரா உயர்நிலைப்பள்ளி. என் மாமா அதன் தலைமை ஆசிரியர். அங்கு பட்டு நெசவும், ஆர்.எஃப் ஹார்வி மில்லிலிருந்து பெற்ற நூல் வியாபாரமும் செய்து வந்த சௌராஷ்டிரர்களில் அந்த ஊரிலேயே பெரும் பணக்காரராக இருந்த ஒரு குடும்பத்தினர் நடத்தி வந்த பள்ளி அது. அது தவிர மளிகை போன்ற வியாபாரங்களில் இருந்த நாடார்கள் நடத்தி வந்த ஒரு பள்ளியும் உண்டு. நாடார் உயர்நிலைப் பள்ளி.


        காந்தி மதுரைக்கு வரப்போகிறார் என்ற செய்தி பலமாக அடிபட்டுக்கொண்டிருந்தது. சென்னையிலிருந்து அவருக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரயிலில் தான் மதுரை செல்லப் போகிறார். ரயில் பூராவும் ஒரே காங்கிரஸ் தொண்டர்களாக இருப்பார்கள், காந்தியுடன் ராஜாஜியும் உடன் வரப்போகிறார் என்றெல்லாம் செய்திகள் ஒவ்வொரு செய்தியும் துணுக்குகளாக ஒவ்வொருவரிடமிருந்து வந்து பரவும். அப்போது  நிலக்கோட்டையில் இருந்த பஞ்சாயத்துக்கு உடமையான ஒரு பார்க்கில் ஒரு ரேடியோப் பெட்டி வைத்திருந்தார்கள். அதுதான் எங்களுக்கு செய்தி தரும் ஒரே இடம். பத்திரிகைகள் வாங்குவது, படிப்பது அவ்வளவாகப் பரவியிருக்கவில்லை. அந்தப் பார்க்கில் உள்ள பொது வாசக அறையில் தினம் மாலை போய் பத்திரிகை படிக்கலாம். அல்லது அவ்வப்போது பஸ் ஸ்டாண்டில் இருக்கும் ஹோட்டலில் ரேடியோப் பெட்டி இருந்தது. அதில் பாட்டுக்களுக்கிடையே செய்திகளும் வரும். கேட்டவர் எங்கள் தெருக்காரராக இருந்தால் செய்திகள் கிடைக்கும். அவருக்கு சுவாரஸ்யமானதை சொல்லிச் சிரித்து விட்டுப் போவார்.


        காந்தி வரப்போகிறார் என்றால் பார்க்காமல் எப்படி இருப்பது?. ஆனால் மதுரைக்கு அல்லவா வருகிறார். யார் மதுரைக்குப் போவது? இப்போது பார்க்கவில்லை என்றால் பின் எப்போது அவரைப் பார்க்க முடியப்போகிறது? எப்பவோ நம் வாழ்நாளில் ஒரு  தடவை காந்தி நம்ம ஊர் பக்கமாகப் போகிறார், பார்க்கவில்லை என்றால், பின்னால் யாரும் கேட்டால் என்ன முகத்தை வைத்துக் கொண்டு "இல்லை, முடியலை" என்று பதில் சொல்லப் போகிறோம். மதுரைக்கு ரயிலில் தானே போகிறார், கொடைக்கானல் ரோடு வழியாகத்தானே ஐயா போகணும்? கொடைக்கானல் ரோடு போய் பாத்துடலாமே?" என்று யோசனைகள். மதுரை 32 மைல் தூரம். கொடைக்கானல் ரோடு இதோ 5 மைல் தான். காலை கொஞசம் எட்டிப் போட்டா ஒரு மணி நேரத்திலே போய்ச் சேர்ந்துடலாம். ஆனால் வண்டி நிக்கணும், எவ்வளவு நேரம் நிக்குமோ. இதென்ன செங்கோட்டா பாஸஞ்சரா, ஒவ்வொரு ஸ்டேஷனிலேயும் நின்று நின்று போகறதுக்கு. இப்படிப் போனா, அவர் என்னிக்கு மதுரைக்குப் போவார், என்னிக்கு டெல்லி போய்ச் சேருவார்.? அவருக்கு எத்தனையோ வேலை!" இப்படியாகக் கேள்விகள், பதில்கள், சமாதானங்கள் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தன.


        எனக்கு இவையெல்லாம் பெரியவர்கள் பேசும் பேச்சுக்கள். கேட்கலாம். அவ்வளவோடு சரி. மாமா போவாரா, என்னையும் அழைத்துப் போவாரா என்பதெல்லாம் நினைப்பிலேயே இல்லாத விஷயங்கள்.


        திடீரென்று, மாமா சொன்னார். " நீ வேணா, மத்தப் பசங்களோட போய்க்கோடா "என்றார். அவ்வளவு தான். எங்கே? எதற்கு? என்ற விஷயங்கள் அந்த அனுமதியில் சொல்லப்படவில்லை. அது தான் என் மனசில், நிலக்கோட்டையிலேயே எல்லார் மனசிலும் இருக்கும் என்ற நினைப்பு அவருக்கு. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மாமா மிக சாது. பயங்கள் அவருக்கு மிக அதிகம். ஆனால் அசாத்திய முன் கோபி. 25 ரூபாய் சம்பளத்தில்  ஆறு பேர் கொண்ட குடும்பத்தை சமாளிக்கப் படும் பாட்டில் கோபம் அடிக்கடி வெடித்து வெகு சீக்கிரம் அடங்கியும் விடும். நாங்கள் துணிச்சலோடு எதுவும் வழக்கத்தை மீறிச் செய்து விட மாட்டோம். அவருக்கு இது வழக்கத்தை மீறிய காரியம். சின்னப் பசங்க என்று எங்களுக்கு ஒரு சலுகை வாழ்வில் ஒரு நாளைக்கு கிடைத்துள்ளது என்று நினைத்துக் கொண்டேன். எனக்கு இது ஒரு துணிகரச் செயல் தான். சந்தைக்கு, கோவிலுக்கு, ஓடைக்கு, பள்ளிக்கூடத்துக்கு என்று சுற்றி வந்துகொண்டிருந்த எனக்கு கொடைக்கானலுக்குத் தனியாக மகாத்மா காந்தியைப் பார்க்கப் போவது என்பது பெரிய காரியம். அது பற்றிப் பின்னால் நிறைய தடவை நிறைய சொல்லிப் பெருமைப்பட வேண்டிய விஷயம். இதோ இன்று மாலை மத்தியான சாப்பாட்டுக்குப் பிறகு நடக்கப்போகிறது! பெருமையாக இருந்தது. கர்வம் என்று கூடச் சொல்லலாம்.


         "பசங்க கூட போ" என்றார். அப்போதும் எனக்குத் துணை வேண்டும் என்று தான் அவர் நினைப்பு இருந்தது. பேசிக்கொண்டே போகலாம். குஷியாக இருக்கும். ஆனால் யார் வருவார்கள் என்று தேடினேனா, அல்லது யாரும் தான் சேர்ந்து கொண்டார்களா என்றெல்லாம் எனக்கு இப்போது நினைவில் இல்லை. என் நினைவில் இருப்பதெல்லாம், பல தெருக்களிலிருந்தும் மூலைகளிலிருந்தும் கூட்டம் கூட்டமாக ஜனங்கள் விரைவாகப் போய்க்கொண்டிருந்தார்கள். பக்கத்து கிராமங்களிலிருந்தும் மக்கள் வந்து சேர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் எனக்குத் தெரிந்த பஸ் போகும் ரோடில் வந்து சேரவில்லை. குறுக்கே சந்தைப் பேட்டையைக் கடந்து, ரோடைக் குறுக்கே வெட்டி, வயல்கள் ஊடே, போய்க்கொண்டிருந்தார்கள். எல்லோரும் தனித் தனியாகவும், நாலைந்து சேர்ந்தும், பேசிக்கொண்டே விரைந்து கொண்டிருந்தார்கள். காந்தி பற்றித் தான் பேச்சு. வண்டி நிக்குமா, நிறுத்துவாங்களா, எவ்வளவு நேரம் நிக்கும், ஸ்டேஷன் மாஸ்டர் கிட்ட கேட்கணுமா, இப்படியான பேச்சுக்கள். நிலக்கோட்டையே காலியானது போலத் தான் தோன்றியது. நிலக்கோட்டை மாத்திரம் என்ன, சுற்று வட்டாரத்தில் இருந்த கிராமங்களும் காலியாகிக்கொண்டிருந்தது போலத்தான் இருந்தது, அடுத்தடுத்து வந்து சேர்ந்து கொண்டிருந்த கூட்டத்தைப் பார்க்கும் போது.  எல்லோரும் குறுக்கு வழியாகப் போய்க்கொண்டிருந்தார்கள். இது வரை நான் அறிந்திராத, புதிய வழி. ஒற்றையடிப் பாதையாக இருந்தது அது.


அதில் ஆங்காங்கே இன்னும் பல ஒற்றையடிப் பாதைகளும் சேர்ந்து கொண்டன. அது பற்றியெல்லாம் அவர்கள் அன்று கவலைப்படவில்லை. ஒற்றையடிப்பாதையின் வழியே தான் போவது என்பது அந்தக்கூட்டத்திற்குச் சாத்தியமில்லை. என் ஞாபகத்தில் சில குன்றுகளையும் அவற்றின் ஊடே செல்லும் கணவாய் வழியாகவும் சென்றோம். மூன்று மைல் தூரம் என்று சொல்லிக்கொண்டார்கள். கடைசியாக கொடைக்கானல் ரோட் ஸ்டேஷன் தாண்டியோ அல்லது அதற்கு முன்னதாகவோ தண்டவாளத்தின் ஒரு பக்கமாக மக்கள் குழுமியிருந்ததைப் பார்த்து அவர்களோடு நாங்களும் சேர்ந்து கொண்டோம். தண்டவாளம் ஒரு ஆள் உயரத்தில் இருந்தது. கீழே வயல் பரப்பு. பரப்பில் குழுமியிருந்த எங்களைப் பார்த்து ஜனங்கள் வந்தவண்ணம் இருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் கூட்டம் பெருகிக் கொண்டிருந்தது அங்கு யார் குழுமச் சொன்னார்கள்? அங்கு வண்டி நிற்கும், காந்தி வெளியே வந்து எங்களைப் பார்ப்பார் என்று எப்படித் தெரியும்? யார் சொல்லி இதெல்லாம் நடக்கிறது என்பதெல்லாம் தெரியவில்லை. சாதாரணமாக இப்படிக் கூட்டம் கூடும் இடத்தில் போலீஸ்காரர்கள் கெடுபிடி இருக்குமே. அதுவும் இல்லை. காங்கிரஸ் தொண்டர்கள் தான் கூட்டத்தை ஒழுங்கு படுத்துகிறார்களோ என்றால் அதுவும் இல்லை. யாராவது முதலில் சொல்லியிருக்கவேண்டும். முதலில் கண்ட கூட்டத்தைப் பார்த்து வருபவர்களும் கூட்டத்தில் சேர்பவர்களாக இருக்கும். சுற்றி மாட்டு வண்டிகளில் வந்தவர்கள், சைக்கிளில் வந்தவர்கள் என ஆங்காங்கே மாட்டு வண்டிகளை நிறுத்தி மாடுகள் அவிழ்த்து விடப்பட்டிருப்பதும் தெரிந்தது. ஏதோ சந்தைக்கு, திருவிழாவுக்கு வந்தவர்கள் மாதிரி தான் தாமே ஒரு ஒழுங்கற்ற ஒழுங்கில் எல்லாம் பரவியிருந்தன. சல சலப்பும், இரைச்சலும் இருந்தபோதிலும், ஏதும் கலவரமில்லை. தமக்குள்ளேயே ஒரு கட்டுப்பாடும் ஒழுங்கும் தாமே உருவாகிக் கொண்டன போலும். ஒரு பரபரப்பு, எதிர்பார்ப்பு, காணக்கிடைக்காத ஒன்றைக் காணும் உற்சாகம். ஆனால் கோஷங்கள் இருந்ததாக நினைவில்லை. அந்தப் பகுதியில் அவ்வளவு பெரிய கூட்டத்தை நான் கண்டதில்லை. நிலக்கோட்டை மாரியம்மன் பங்குனி உற்சவக் கூட்டத்தையும் சேர்த்து. அந்த வயதில் அது தான் நான் பார்த்த பெரிய ஜனத்திரள்.


      வண்டி வந்துகொண்டிருந்தது மெதுவாக. கூட்டத்தைப் பார்த்து நிற்கச் சொல்லியிருக்கவேண்டும். அது காறும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் தம் இயல்பில் எழுந்து நிற்கத் தொடங்கினர். அவசியமே இல்லை. உட்கார்ந்திருந்தாலும் சரி, நின்றாலும் சரி அந்த உயர இருப்புப் பாதையில் மேல் நிற்கும் வண்டியிலிருப்பவர்களை தாராளமாக வெகு தூரம் வரை பார்க்கமுடியும். ஒரே பரபரப்பு அலையாகக் கூட்டம் முழுதும் பரவியது. ஒரு வண்டியின் முன் கட்டப்பட்டிருந்த சிறிய மேடையின் முன் காந்தி வந்து நின்றார். பக்கத்தில் கருப்புக் கண்ணாடி அணிந்திருந்த ராஜாஜி. இன்னும் யாரோ நினைவில் இல்லை. வந்து நின்றதும், அவர் கைகூப்பியதும் கூட்டம் முழுதுமே தம் கைகளை தலைக்கு மேல் கூப்பி வணங்கியது. கூட்டத்தின் சலசலப்பில் கூப்பிய கைகளுடன் மகாத்மா காந்திக்கு ஜே என்று திரும்பத் திரும்ப கோஷம் எழுந்தது மயிர்க் கூச்சலிட வைத்தது. காந்தி முன் நின்றது, ஏதோ பழனி ஆண்டவர் சன்னதியில் திரை விலகி ஆண்டவருக்கு தீபாராதனை நடப்பது போலத்தான், கூட்டம் முழுதுமே தன் நினைவின்றி தலைக்கு மேல் கைகூப்பியதும், கோஷங்கள் எழுப்பியதும். நிலக்கோட்டைக்குப் பக்கத்துப் புண்ய க்ஷேத்திரம் பழனி தான். கூட்டம் முழுதிலும் ஒரு புல்லரிப்பு பரவியதை உணரமுடிந்தது. காந்தி ஏதோ சில வார்த்தைகள் சொன்னார். காந்தி சொல்லச் சொல்ல, ராஜாஜி தமிழில் அதைத் திருப்பிச் சொன்னார். ஆதலால் காந்தி ஆங்கிலத்தில் தான் பேசியிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு நினைவில் இல்லை. ஒரு சில நிமிடங்கள் தான். காந்தி திரும்பக் கூட்டத்தைப் பார்த்துக் கைகூப்பி உள்ளே சென்று விட்டார். மற்றவர்களும் தொடர, வண்டி மெதுவாக நகர ஆரம்பித்தது.


 கூட்டம் மெதுவாகக் கலைய ஆரம்பித்தது. 'என்ன நிறமுங்கறேன்! தங்கம் மாதிரில்லே ஜொலிக்குது!  "அவர் ஒரு வார்த்தை சொல்லட்டும்.  உலகமே கேட்குதுங்க' என்று அவரவர்க்குத் தோன்றியதைப் பேசிக்கொண்டு வந்தார்கள். மாட்டு வண்டிகள் ரோடு வழியாகத் திரும்பிக் கொண்டிருந்தன. திருவிழாக் கூட்டம் போலத்தான் நான் வீடு திரும்பியபோது அஸ்தமிக்கும் நேரமாக இருந்தது. எனக்குப் பிறகு தான் மாமா வீடு வந்தார். ஸ்கூல் மானேஜரோடு அவர் மாட்டு வண்டியில் சென்றிருக்கிறார். 'என்னங்க, நிலக்கோட்டையே இல்லே வந்திருச்சி! என்று மானேஜர் சொன்னார் என்று மாமா சொன்னார். அதன் பிறகு  இரண்டு நாட்களுக்கு காந்தியைத் தரிசனம் செய்த அந்த அனுபவம் பற்றித்தான் நிலக்கோட்டையில் பேச்சு இருந்தது.


 நிலக்கோட்டை அப்படி ஒன்றும் அந்தக் காலத்தில் அரசியல் உணர்வுகள் மிக்க இடம் இல்லை. இதற்கு முன் திராவிட கழகக் கிளை ஒன்று தொடங்குவதற்கோ என்னவோ, பெரியார் வந்திருந்தார்; வந்து நாடார் உயர்நிலைப்பள்ளிக் கட்டிடத்தில் தங்கியிருந்தார். நாங்கள் பள்ளிப் பையங்களுக்கு அவரைப் பார்க்க ஆவல். ஒரு மகரிஷிபோல இருந்தது அவர் தரையில் உட்கார்ந்து ஏதொ எழுதிக் கொண்டிருந்தார். நிலக்கோட்டைச் சுவர்களில், "தன்மான திராவிடா, இன்னமுமா உறக்கம்?', "ஆரியனே வெளியேறு", "பார்ப்பன ஆதிக்கம் ஒழிக! என்ற வாசகங்கள். பெரியார் தவிர இரண்டு பெயர்கள் அடிபட்டன. தளபதி சி.என். அண்ணாதுரை, எம்.ஏ. பின் டபிள்யூ. பி. சௌந்திர பாண்டியன், அவ்வளவு தான். சௌந்திர பாண்டியன் தேனீக்காரர் என்று நினைக்கிறேன். அதன் பிறகு இரண்டு நாட்களுக்கு தெருப்பசங்கள் "காந்தி வந்தாராம், பூந்தி தின்னாராம், வாந்தி எடுத்தாராம்" என்று கத்திக்கொண்டு திரிந்தார்கள். யார் இவர்களுக்கு இப்படி சொல்லிக்கொடுத்தது என்று தெரியவில்லை. ஒரு முறை காமராஜ் வந்து ஒரு சின்னக் கூட்டத்தில் பேசியிருக்கிறார், ஒரு தெரு முனையில். அவ்வளவு தான். அங்கு ஏதும் எந்தக் கட்சி அலுவலகமும் இருந்ததை நான் பார்த்தது கிடையாது. ஒரு சின்ன அறையில் வாசக சாலை திறந்திருந்தார்கள். அதில் அனேகமாக திராவிட கழகப் பத்திரிகைகள் கிடக்கும். எதற்காக இவ்வளவும் சொல்கிறேன் என்றால், அந்த ஊரே திரண்டு மூன்று மைல் குறுக்கே கடந்து இடையில் வண்டியை நிறுத்தி மகாத்மாவை தரிசனம் செய்யக் கிளம்பியது என்றால், அதற்கான அரசியல் போதனையை ஊட்டிய கட்சி அலுவலகங்கள் ஏதும் இருந்ததில்லை. மாறாக, ஏதும் ஒரளவுக்கு இருந்தது என்றால் அது பெரியார் வந்ததன் நிமித்தம் சுவர்களில் கோஷங்கள் எழுதப்பட்டதும், வாசக அறை ஒன்று திறக்கப்பட்டதும் தான். இது நிலக்கோட்டையைக் காலி செய்து கொடைக்கானலுக்கு இட்டுச் சென்றிருக்காது.


 1946-ம் வருடம் நான் மதுரை சேதுபதி ஹை ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அரசியல் நிகழ்வுகளின் பரபரப்பும் சூடும் மதுரையில் படிந்துள்ளதை நான் உணர முடிந்தது. நான் இருந்தது சிம்மக்கல் பகுதியில். ஒரு நாள் வைகைக்கு அக்கரையில் தல்லாகுளம் தமுக்கம் மைதானத்தில் அருணா ஆசஃப் அலி வந்து பேசப்போகிறார் என்று சொன்னார்கள். எங்களுக்கு எல்லாம் ஜெயப்பிரகாஷ் நாராயணும், அருணா ஆசஃப் அலியும் வானத்திலிருந்து குதித்த தேவர்கள். ஆங்கிலேயர்களை வதைக்கச் சொல்லி அனுப்பப்பட்டவர்கள். இப்படி ஒரு பிம்பம் மனதில். ஹஸாரி பாக் ஜெயிலிலிருந்து தப்பித் தலை மறைவாகிவிட்ட அவர்களை போலீஸால் பிடிக்க முடியவில்லை. போலீஸிடம் சரண் அடையும்படி மகாத்மாவின் கட்டளை பிறந்த பிறகே அவர்கள் அகப்பட்டார்கள். எங்கள் கண்களுக்கு அவர் மறுபிறப்பெடுத்த ஒரு ஜான்ஸி ராணியாகத் தோற்றமளித்தார். அந்த வீராங்கணை மதுரைக்கு வருகிறார். தமுக்கம் மைதானத்தில் கூட்டம் நிரம்பியிருக்கிறது. முத்துராமலிங்கத் தேவரும் வரப்போகிறார் என்று சொன்னார்கள். காத்திருந்தோம் ஆவலோடு. தேவரின் பேச்சைக் கேட்க வேண்டும். அருணா ஆஸஃப் அலியைப் பார்க்கலாம். அவர் குரலைக் கேட்கலாம். வேறென்ன அங்கு யாருக்குப் புரியும்? ஆங்கிலமோ, ஹிந்தியோ எதில் பேசினால் என்ன? தேவர் வரவில்லை. இருட்டத் தொடங்கிவிட்டது. கடைசியில் அருணா ஆஸஃப் அலி வந்தார். அவர் பேசியதை யாரோ தமிழில் மொழிபெயர்த்தார்கள். பத்துப் பதினைந்து நிமிடம் ஆகியிருக்கும். மழை தூற ஆரம்பித்தது. வலுக்கக் கூடும். கூட்டம் கலைய ஆரம்பித்தது. அப்போது அருணா ஆஸஃப் அலி பேசியது மொழி பெயர்ப்பில் எங்களுக்குக் கேட்டது " சுதந்திரப் போராட்டம் ஆரம்பித்ததிலிருந்து எத்தனையோ பேர் சிறையில் அடைபட்டார்கள். தடியடி பட்டார்கள். துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தார்கள். ஆனால், இங்கு உங்களை எல்லாம் இந்த தூறல் விரட்டியடிக்கிறதே" என்று சொன்னதை மொழிபெயர்ப்பில் கேட்ட ஜனங்கள் நகரவில்லை. நின்ற இடத்திலேயே நின்று விட்டார்கள்.


 கோடைஇடி என முழங்கவில்லை. அடுக்கு மொழி அவர்களை மயக்கவில்லை. ஏதோ ஒரு அம்மையார் ஹிந்தியில் பேச அதை மொழிபெயர்த்தவர் தமக்குத் தெரிந்த தமிழில் சொல்ல அந்த வார்த்தைகள் அந்தப் பெரும் கூட்டத்தைக் கட்டுப் படுத்தியது. இப்போதெல்லாம் டெல்லியானாலும் சரி, தமிழ் நாடானாலும் சரி, லாரியில் காசும் கொடுத்துச் சாப்பாடும் போட்டு, ஊரைச் சுற்றிப் பார்ப்பதற்கு வசதியும் செய்து கொடுத்தால் தான் தலைவர்களுக்கு கூட்டம் கூடும். அதைத் தன் கட்சியின் பலமாகப் பறை சாற்றுவார்கள். சில இடங்களில் உட்கார நாற்காலி இல்லையென்றால் கூட்டம் சேர்வதில்லை. அன்று காந்தி  தொப்பி போட்டவர்கள் எல்லாம் எங்களுக்கு தேவர்கள். வானத்திலிருந்து வந்தவர்கள். ஒரு ஒல்லி நோஞ்சான் மனிதர் தில்லியிலிருந்தோ, சபர்மதி ஆஸ்ரமத்திலிருந்தோ தன் மெல்லிய குரலில் இந்தியாவைத் தன் குரலுக்காகக் காக்கவைத்துக் கொண்டிருந்தார். பி.எஸ் ராமையா தன் மணிக்கொடிக்காலம் நினைவுகளில் ஒரு சம்பவம் பற்றிச் சொல்லியிருப்பார். ஒரு நாள் இரவு இரண்டாம் ஆட்டம் சினிமாப் பார்த்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்களாம், ராமையாவும் அவரது சகாக்களும். அப்போது அவருக்குப் பின்னாலிருந்து ஒரு குடிசை முன் பேச்சுக் குரல் கேட்டது. ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள் குடிசைக்கு முன். உள்ளிருந்து குரல். "அதோ போறாங்களே காந்திக்காரங்க, அவங்க பின்னாலேயே போ. ஒண்ணும் பயமில்லை" என்று.


 காங்கிரஸ் தியாகிகளுக்கு இலவசமாக இரயில் பிரயாணம் இரண்டு வருடத்திற்கு ஒரு முறையோ என்னவோ கிடைக்குமே, அதைப் பயன் படுத்திக் கொண்டு, செல்லப்பா அவர்கள் ஒரு முறை எண்பதுகளில் ஒரு முறை தில்லி வந்திருந்தார். அவருடன் அவரது நண்பரும் காங்கிரஸ் தியாகியுமான, பி.என். ஸ்ரீனிவாசன். அவர் தில்லியில் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தது, பிர்லா மாளிகை தான். அங்கு தான் மகாத்மா கடைசியாகத் தங்கியது. மாலைப் பிரார்த்தனைக்குப் போகும்போது தான் ஜனவரி 30 -ம் தேதி கோட்சேயால் சுடப்பட்டு அமரரானது. பிர்லா மாளிகை இருக்கும் சாலை இப்போது 30 ஜனவரி மார்க் ஆகியுள்ளது. பிர்லா மாளிகையும் காந்தி நினைவில்லமாகிவிட்டது. பின்புறம் இருக்கும் அறை அவர் விட்டுச் சென்றவாறே பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து சுடப்பட்ட இடம் வரை அவர் காலடிகள் சிமெண்டில் பதிய வைக்கப்பட்டுள்ளன. செல்லப்பா மகாத்மா சுடப்பட்ட இடத்தின் நினைவுச் சின்னத்தின் முன் நின்று வெகு நேரம் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்திருந்தார். எனக்குத் தெரிந்து அவர் தில்லியில் பார்க்கவேண்டும் என்று சென்ற இடம் வேறு இல்லை. சில நினைவுகளை வேறு எதுவும் பாதிக்காது பாதுகாப்பவர் அவர். சிறையில் இருந்த போது தரப்பட்ட கைதி நம்பர் எழுதப்பட்ட நம்பர் ப்ளேட்டை கடைசி வரை வைத்திருந்தார். கைதியாக இருந்தது ஒரு புனித வேள்வியின் ஆகுதி ஆயிற்று. அந்த நாட்களின் ஆத்மாவே வேறு தான்.


வெங்கட் சாமிநாதன்/12.8.06  

     

  

பங்களிப்பாளர்கள்

Ksubashini மற்றும் Geetha Sambasivam

"https://marabuwiki.org/index.php?title=காந்தி&oldid=10153" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 28 பெப்ரவரி 2012, 16:29 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 5,678 முறைகள் அணுகப்பட்டது.