காஞ்சீபுரம் இட்லி!

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
காஞ்சிபுரம் இட்லி சாப்பிட வாங்க!
தேவையான சாமான்கள்:  சுமார் நான்கு பேருக்கு!

இட்லி அரிசி ஒரு கிண்ணம்

பச்சரிசி ஒரு கிண்ணம்

உளுத்தம்பருப்பு ஒரு கிண்ணம்

மூன்றையும் ஒன்றாகக் களைந்து ஊற வைக்கவும்.  குறைந்தது நான்கு மணி நேரம் ஊற வேண்டும். பின்னர் மிக்சி அல்லது கிரைண்டரில் போட்டுக் கொரகொரப்பாக அரைக்கவும்.  உப்புப் போட்டுக் கலக்கவும்.  இரவு ஒரு துண்டு சுக்கை நன்கு பொடி செய்து மாவில் கலந்து வைக்கவும்.




காலை இட்லி வார்க்கும் முன்னர் மாவில் சேர்க்க வேண்டியவை

ஒரு டேபிள் ஸ்பூன் நெய்

கடுகு

உளுத்தம்பருப்பு

கடலைப்பருப்பு வகைக்கு ஒவ்வொரு டீஸ்பூன்

மிளகு, ஜீரகம் உடைத்த பொடி 2 டீஸ்பூன்

பெருங்காயம் சின்னத் துண்டு

கருகப்பிலை, கொத்துமல்லி ஆய்ந்து நறுக்கியது

தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறியது 2 டேபிள் ஸ்பூன்




நெய்யை நன்கு காய வைத்துக் கடுகு , உ.பருப்பு, கபருப்பு, பெருங்காயம், கருகப்பிலை தாளித்து மாவில் போட்டுக் கலக்கவும்.  அந்தச் சட்டியிலேயே நறுக்கிய தேங்காய்களைப் போட்டுக் கொஞ்சம் சிவக்க வறுத்துச் சேர்க்கவும்.  முந்திரிப்பருப்பு இருந்தாலும் போடலாம்.  அவரவர் விருப்பம். கொத்துமல்லி நறுக்கிச் சேர்க்கவும்.  பின்னர் இட்லிப் பானையில் துணி போட்டோ  அல்லது இட்லி குக்கரில் உள்ள தட்டுக்களில் எண்ணெய் தடவியோ  இட்லி மாவைக் கரண்டி கரண்டியாக எடுத்து ஊற்றி வேக வைக்கவும்.  வெந்ததும் சட்னி, சாம்பார், கொத்சு  எதோடு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.  காஞ்சீபுரத்தில் தம்பளரில் எண்ணெய் தடவி மாவை விட்டு வேக வைப்பாங்க.  இங்கே நாம் வீட்டில் பண்ணுவதை விட அங்கே இன்னமும் உதிர் உதிராக இருக்கும். நான் ரொம்பக் கொரகொரப்பாக அரைப்பதில்லை.




வெந்த இட்லிகள்



சாம்பார் இட்லிக்குத் தொட்டுக்கொள்ளப் பண்ணியது.

இதோடு குழந்தைகள் சாப்பிட வேண்டி பச்சைப் பட்டாணி அல்லது ஊற வைச்ச பட்டாணியோ, வேர்க்கடலையோ, காரட் சீவியோ சேர்க்கலாம். இதை இட்லியாகச் செய்ததும் ஒரு வாணலியில் நல்லெண்ணையைக் காய வைத்துக் கடுகு தாளித்து இட்லிகளை நான்காக நறுக்கிப் போட்டு மிளகாய்ப் பொடியைக் கலந்து(தோசை மிளகாய்ப் பொடி தான் கலக்க வேண்டும்) கீழே இறக்கிக் கொத்துமல்லி தூவி, எலுமிச்சம்பழம் பிழிந்து சில்லி இட்லி என்று சாப்பிடலாம்.  பொடியாக நறுக்கிய பச்சை வெங்காயத்திலேயே எலுமிச்சைச் சாறைக்கலந்து அதையும் இந்த சில்லி இட்லி மேல் தூவிக் கொண்டு சாப்பிடலாம். பிடிக்கிறவங்களுக்குப் பிடிக்கும். :)

--Geetha Sambasivam (பேச்சு) 11:57, 4 ஜூலை 2014 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

"https://marabuwiki.org/index.php?title=காஞ்சீபுரம்_இட்லி!&oldid=12815" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 4 ஜூலை 2014, 11:58 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,226 முறைகள் அணுகப்பட்டது.