கல்லாட நூலாராய்ச்சி

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

கல்லாட நூலாராய்ச்சி
திருவாளர், E. R. நாசிம்மஐயங்கார் அவர்கள் B.A., B.L., சேலம்.
தமிழ் பொழில் : Vol.12_1936-1937_09; பக்கம்: 316-323


ஆக்கியோன் பெயர்பெற்ற நூல்களுக்கு எடுத்துக் காட்டாக வச்சணந்திமாலை உரையாசிரியர் ஆண்ட நூல்களில் கல்லாடம் ஒன்றாம். இதன் ஆசிரியர் கல்லாடர் என்னும் புலவர். இப்பெயர் வகித்த புலவர் பலருளர். பதினொன்றாம் திருமுறையில் கண்ணப்பர் திருமறம் இயற்றிய புலவர் இப்பெயரால் விளங்குவர். இவர் இயற்பெயரால் விளங்காது புனைபெயர் பூண்டாரென்பதைப் பின்னர் கூறுவாம். தொல்காப்பியச் சொல்லதிகார உரையாசிரிகளில் ஒருவர் கல்லாடர் எனும் பெயருடையவர். இவ்வாசிரியர் இளம்பூரணர் உரையைக் தழுவியும் அதனை விளக்கியும் போந்தாராதலின் இவர் 13ம் நூற்றுண்டில் இருந்தவராவர். சங்க காலத்துப் புலவர் ஒருவரும் கல்லாடர் எனப்படுவர். கல்லாட நூலின் சிறப்புப் பாயிரம் இதனைச் சங்க நூலெனும் பொருள் படும்படிப் பகருமாயினும் இதன் அகச் சான்றுகள் சங்ககாலத் தன்றெனப் புகலுமாதலின் இதனைச் சங்க காலப் புலவர் மேலேற்றிக் கூற வியலாது. இதனுரையாசிரியர் மயிலேறும் பெருமாள் பிள்ளை சிறப்புப் பாயிரத்திற்கு உரைவரையாது விடுத்த காரணத்தான் இதனை உரையாசிரியர் ஓதினாரெனக் கொள்ளத்தகும். இஃதுண்மையாயின் உரையாசிரியர் ஆராயாது தமது காலத்து நிலவியிருந்த கருத்தை உரைத்தாரென்றல் பொருந்துமென்க.

திருவாளர் சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் செந்தமிழத் தொகுதி 15-ல் கல்லாடநூலில் காணப்படும் சிலவகச் சான்றுகளை ஆராய்ந்து கல்லாடம் 9-ம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட தாகுமென்றும், கல்லாடச் செய்யுட்களை உரையாசிரியர் மேற்கோளாட்சி கொள்ளாத காரணத்தான் கல்லாடம் 13-ம் நூற்றாண்டினத்தாகு மென்றும், தமது முடிபைக் கூறியுள்ளார். இவ் வறிஞர் தமது ஆராய்ச்சியில் கல்லாடம் என்னும் பெயரை வச்சணந்திமாலை யுரைகாரர் ஆட்சிகொண்டுள்ளதைக் கருதவில்லை.

வச்சணந்திமாலை உரை 12-ம் நூற்றாண்டில் வரையப் பட்ட தெனக் கூறலாமாதலின் கல்லாடம் 12ம் நூற்றுண்டிற்கும் 9ம் நூற்றண்டிற்கும் இடைக் காலத்தில் தோன்றிய தென்பது பொருந்தும். இக்கருத்து, நம்பியாண்டார் கம்பிகள் இயற்றி யருளியுள்ள கோயிற் றிருப்பண்ணியர் திருவிருத்தத்தால் வலியுறுவதைக் கூறுவாம். நம்பியாண்டார்

"வருவா சகத்தினின் முற்றுணர்ந் தோனை வண்டில்லை மன்னைத்
திருவாத வூர்ச் சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப்
பொருளார் தருதிருக் கோவை கண்டேயு மற்றப் பொருளைத்
தெருளாக வுள்ளத் தவர்கவி பாடிச் சிரிப் பிப்பரே"

என்னும் செய்யுளில் திருக் கோவையாரின் பெருமையைப் புலவர்களும் அறியவில்லையே யென்று வருந்திக் கூறுகின்றார். சிலபுலவர் இயற்றும் நூலின் பெருமை செவ்வனே உணர்வதற்குப் பலவாண்டுகள் இடைப்படுவதை அனுபவத்தால் அறியலாம். எனவே மணிவாசகனார் காலம் நம்பியாண்டார் காலத்திற்கு சில நூற்றாண்டு முன்னராகுமென ஊகிக்கலாம். கல்லாடநூல் திருக்கோவையாரின் பெருமையை எடுத்துக் கூறவே எழுந்ததென்று கூறுவராதலின் கல்லாடநூல் நம்பியாண்டார் காலத்திற்கு முன் இயற்றப்படவில்லை யெனலாம். நம்பியாண்டார் 10-ம் நூற்றாண்டிறுதியிலும் 11-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் திகழ்ந்தவராவர். எனவே கல்லாட நூல் நம்பியாண்டார் நம்பிகளின் காலத்திற்கும் பின்னர், நம்பியாண்டார் கருத்தை நிலை நாட்டவே எழுந்த தென்றும் கூறலாமாகலின் கல்லாடம் 11ம் நூற்றாண்டினிடையில் இயற்றப்பட்டதென்பது போதரும்.

திருவாளர் வேதாசலம் என்னும் மறைமலையடிகள் என்பார் மணிவாசகனார் 2-ம் நூற்றாண்டில் அவதரித்தா ரென்பதற்குக் கல்லாட நூலை ஓர் சிறந்த ஆதரவாகக் கொண்டார். இவ்வாராய்ச்சியாளர் கருத்து, கல்லாடம் 6-ம் நூற்றாண்டில் இயற்றப் பட்ட தென்பது. இவ்வாராய்ச்சியில் வேறு பல சான்றுகளையும் எடுத்தாண்டுள்ளாரெனினும் ஆராய்ச்சிக்கு அடிப்படையாகக் கொண்ட கருத்துக்கள் வழுவுடையனவாகத் தோன்றுதலின் இவர் முடிபை ஏற்பதற்குச் சில தடைகளுண்டென்பதை ஆங்காங்குக் கூறுவாம்.

கல்லாடம் ஓர் கோவை நூல். கூடற்பெருமானை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அப் பெருமான் ஆற்றிய திருவிளை யாடல்கள் அறுபத்து நான்கில் சிலவற்றை அப்பெருமானின் புகழ்களாகக் கூறுமாகலின் கல்லாடம் திருவிளையாடற்புராணத்தொடும் ஓரியைபுடையதாகும். கல்லாட நூலாசிரியர்,

"கூடற் பதிவரு மாடற் பரியோன்
எட்டெட் டியற்றிய கட்டமர் சடையோன்"

என்று திருவிளையாடல்களின் தொகை அறுபத்து நான்கெனத் தொகை கூறியுள்ளார். இந்நூலில் முப்பத்து நான்கு திருவிளை யாடல்களே கூறப்பட்டுள்ளன. எனவே கல்லாடருக்கு முன்பு அறுபத்து நான்கு திருவிளயாடல்களையும் விரித்துக் கூறும் நூல் ஒன்றிருந்ததென்பது போதரும். மணிவாசகனார் காலவாராய்ச்சியாளர் கல்லாட நூலை ஆதரவாகக் கொண்டாரேனும் திருவிளையாடல்களைக் கூறும் நூல் ஒன்றுண்டென்பதையும் அது யாதென்பதையும் கருதாதது ஓர் குறைபாடுடையதாகும். இவ்வாராய்ச்சியாளர் தமிழ் நூல்களையே ஆதரவாகக் கொண்டார். தமிழ் நூல்களின் ஆசிரியர் தமது நூல்கள் வடமொழி நூல்களின் மொழி பெயர்ப்பென்றே கூறுவதாகத் தெரிகிறது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரையர், மணிவாசகனார் முதலியோர் திருப்பாட்டுக்களாலும் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் பெறப்படா. இவ்வடியார்கள் அறுபத்து நான்கென்னும் தொகையையும் யாண்டும் கூறவில்லை. வேறு தமிழ் நூல்கள் இருந்தனவெனக் கூறுவாருளராயின் அவருறை வெற்றுரை யெனத்தகும். திருவிளையாடற் புராணங்கள் 13-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டன வென்பதை தனிக் கட்டுரையில் வாம். எனவே வடமொழி நூல்கள் 13ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தே தோன்றினவாகு மென்பது தெளிவாம். வடமொழி நூல்களில் உத்தரபுராணம் முந்தியதென்றும் ஆலாசிய மகாத்துமியம் பிந்தியதென்றும் உணரலாகும். கல்லாடருக்கு முன்யிருந்த நூல் வடமொழி உத்தரபுராணமே யாகும். இதுவே பழைய புராணமெனப்படும். இப்புராணத்தில் மூர்த்தி நாயனார் திருவிளையாடலும் காரியார் நாரியார் பாப்பகுந்த திருவிளையாடலும் கூறப்பட்டுள்ளன (இந்நூல் இதுபோது வழக்கினின்றும் வீழ்ந்ததென்று டாக்டர் ஐயரவர்கள் கூறியுள்ளதால் அறியலாமாயினும் இந்நூலின் கருத்துக்களெல்லாம் இதன் மொழி பெயர்ப்பாகிய பெரும்பற்றப்புலியூர் நம்பிகள் புராணத்தாலறியலாகும். இக்கட்டுரையில் வடமொழி நூலின் கருத்தைக் கூறுமிடத்தெல்லாம் நம்பிகள் திருவிளையாடற் புராணத்தைக் கொண்டு கூறினாமென்க). ஆலாசிய மகாத்துமியத்தின் ஆசிரியர் இவ்விரு திருவிளையாடல்களையும் நீக்கி, மற்றைத் திருவிளையாடல்களை செவ்விதின் ஆராய்ந்து, அத் திருவிளையாடல்கள் அழகுற வைப்பு முறையை மாற்றிக் கூறியுள்ளார். கல்லாட நூலில் மூர்த்திநாயனார் வரலாறு கூறப்பட்டிருப்பதால் கல்லாடர் உத்தரபுராணக்தை யொட்டிக் கூறினாராவர். கல்லாட நூல் 11-ம் நூற்றாண்டிடையில் இயற்றப்பட்டதென்று முன் கூறினாம். உத்தரபுராணம் 11-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றியதாகும். ஆலாசியமகாத்துமியம் கல்லாட நூலிற்குப் பிற்பட்ட காலத்தில் தோன்றியதெனலாம்.

திருவிளையாடல்கள் அறுபத்து நான்கில், ஆறு வரலாறுகள் சிலப்பதிகாரத்தாலும், பதினான்கு வரலாறுகள் திருஞான சம்பந்தர் திருநாவுக்கரையர் தேவாரங்களாலும், பதினான்கு வரலாறுகள் திருவாசகத்தானும், மூர்த்தியார் வரலாறு ஒன்று சுந்தரமூர்த்திகள் தொண்டர் தொகையானும் ஆக 35 வரலாறுகள் பழையனவெனலாம். மற்றை இருபத்தொன்பது வரலாறுகள் புதியனவாகும்.திருவிளையாடற் புராணங்களில் சேரமான் பெருமாள் நாயனார் காலத்தும் ஓர் அருட்செயல் நடந்ததாகக் கூறப்படுமாதலால் இப்புதியனவான திருவிளையாடல்களும் மற்றைத் திருவிளையாடல்களோடு கர்ண பரம்பரையாய் வழங்கினவாகும். இவைகளை வடமொழிப் புராணக்காார் தொகுத்துக் கூறினாராவர். இத்தொகுப்பில் வரலாறுகள் ஆராயப்படாது அவைகள் வழங்கியவாறே புராணத்தில் கூறப்பட்டனவெனலாம்; எனவே திருவிளையாடல்களை ஆராயின் திருவிளையாடற்புராண காலமும் இதன்பின் தோன்றிய கல்லாட நூலின் காலமும் புலப்படும்.

சான்றழைத்த வரலாறென்று சிலப்பதிகார நூலின் வஞ்சினமாலையில்,

"வன்னியு மரமு மடைப் பள்ளியுஞ் சான்றாக
முன்னி றுத்திக் காட்டிய மொய் குழலாள்"

என்னும் அடிகளில் கூறப்பட்டது. இவ்வரலாறு சிறிது மாறு பட வன்னியுங் கிணறு மிலிங்கமும் அழைத்த திருவிளையாடலெனப் பிற்காலத்து வழங்கியதாகும். இது சான்றழைத்த திருவிளையாடலென்றும் புராணத்தில் காணப்பெறும். புராணங்களில் இச்செய்தி நிகழ்ந்தவிடம் திரும்புறம்பயமென்று கூறப்பட்டுளது. இவ்வரலாற்றில் குறிக்கப்பட்ட கன்னி காவிரிப் பூம்பட்டினத்துக் குரியவளென்று சிலப்பதிகாரத்திலும், புராணங்களிலும் கூறப்பட்டுள்ளது. எனவே இவ்வரலாறு பழைய தென்பதற்கையமில்லை. புராணகாலத்து பழைய வரலாறு சிறிதுமாறுபடக் கூறப்பட்டதென்பது தெளிவாம். வடமொழிப் புராண காலத்து செய்தி நிகழ்ந்தவிடம் திருப்புறம்பயமென்று வழங்கியதை புராணகாரர் உள்ளவாறே கூறினனாராவர். வட மொழிப் புராணத்தை மொழி பெயர்த்த தமிழ்ப் புலவர்களும் அவ்வாறே கூறினாராவர். சேக்கிழார் தமது புராணத்தில் செய்தி நிகழ்ந்தவிடம் திருமருகல் என்று கூறி திருஞான சம்பந்தர் பதிகத்தையும் ஆதரவு காட்டியுள்ளார். வரலாற்றில் குறித்த கன்னி வைப்பூர்க்கோன் மகள் என்றார். இவ்வைப்பூர் திருமருகலுக்கு அருகிலுள்ளவூராகும். சேக்கிழார் கூறிய வரலாற்றுக்குச் சான்று ஒன்றுமில்லையாதலான் இதுவும் திருவிளையாடற் புராணக்கதை யென்றே கொள்ளப்படும். சேக்கிழார் புராணத்தும் திருவிளையாடற் புராணங்களிலும் இவ்வருட் செயலை திருஞானசம்பந்தர் ஆற்றியதாகக் கூறப்படும். சேக்கிழார் வரலாறும் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்ட வரலாற்றை யொட்டியதே யாகும். வரலாறுகள் பேதம் படக் கூறப்படும் வழக்கை மற்றைப் புராணங்களிலும் காணலாகும். இதனைப் புராணகாரர் மரபெனக் கொள்ளவமையும். வடமொழியாளர் இதனைக் கற்பபேதம் என்று கூறுவர். தமிழ்மொழிப் புராணங்களையே ஆதரவாகக் கொள்ளின் விகற்பங்களுக்குக் காரணம் கூறவியலாது. இவ்வரலாறுகள் பலகாலத்தில் நிகழ்ந்தனவாகக் கொள்வோமாயின் திருவிளையாடல்கள் பல்கி அறுபத்து நான்கென்னும் தொகைக்கு மேற்படுமாறறிக.

இதனையோர்ந்தே பெரும் பற்றப்பூலியூர் நம்பிகள் தமது புராணத்தில் திருமருகலிலும் முன் கூறிய செய்தி நடந்த தென்று கூறி சேக்கிழார் வரலாற்றையும் அறுபத்து நான்கென்னும் பழைய வரலாற்றில் அடக்கிக் கூறியிருப்பதும் காண்க. நம்பிகள் வடமொழிநூல் வரலாற்றை மாற்றிக் கூறுவதற்கு அஞ்சினராவர் (இதனால் நம்பிகள் புராணம் சேக்கிழார் புராணத்திற்கு பிற்பட்டகாலத்தில் இயற்றப்பட்டதென்பது தெளி வாம்). இதனால் பழைய வரலாறு ஒன்றையே புராணகாரர் விகற்பித்து கூறிஞர் என்பது தெளிவாம்.

பாணன் வரலாறு மூன்றும், பாணன் மனைவி வரலாறு ஒன்றும் ஆக நான்கு திருவிளையாடல்கள் புராணங்களில் கூறப் பட்டுள்ளன. இவைகளில் ஒன்றே பழையதாகும். மற்றை மூன்றும் பிற்காலத்தனவெனலாம்; திருஞான சம்பந்தரால் குறிக்கப்பட்ட பாணன் கூடற்பிரானிடத்துத் திருமுகம்பெற்று சேரமான் பெருமாள் நாயனாரிடம் சென்று அதனைக்காட்டி பரிசு பெற்றானென்று திருவிளையாடற் புராணங்களிலும் சேக்கிழார் புராணத்திலும் கூறப்பட்டுளது. இவ்வரலாறு கால இடர்ப் பாட்டை உடையதாகும். திருஞான சம்பந்தருக்கு ஒரு நூற்றாண்டிற்கு மேற்பட்ட காலத்தில் சேரமான் பெருமாள்நாயனார் அவதரித்தவராவர். இம்முரண்பாட்டுக்கு திருவிளையாடற்புராணகார்களே காரணமென்று திரு. மறைமலையடிகள் கருதுவர். தமிழ்ப் புராணங்கள் வடமொழிப் புராணங்களின் மொழி பெயர்ப்பென்பதைக் கருதாதலினால் இவ்வாராய்ச்சியாளர்க்கு முரண்பாட்டின் காரணம் விளங்கவில்லே யென்னலாம். வட மொழிப் புராணத்தில் இம்முரண்பாடு காணப்படும். எனவே வடமொழிப் புராணம் சேரமான் காலத்திற்கும் (அதாவது 9ம் நூற்முண்டிற்குப்) பிற்பட்டதாகும். கல்லாடமும் புராணக் திற்கும் பிற்பட்டதாகும்.

பாணன் வரலாற்றால் பழைய வரலாறு ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு வேறு புதிய வரலாறுகள் கூறப்பட்டன வென்பது தெளிவாம். இப்புதிய வரலாறுகள் வடமொழிப் புராணகாரர் காலத்திற்கும் சேரமான் காலத்திற்கும் இடையில் புணர்க்கப்பட்டனவெனலாம். இப்புதிய வரலாறுகளின் சற்றேறக்குறைய தொகை 29 என்று முன் கூறினாம். இவையனைத்தும் கல்லாடத்தினும் கூறப்பட்டனவாகும். இப்புதிய வரலாறுகளில் நக்கீரர், உக்கிரப்பெருவழுதி, மூர்த்திநாயனார் முதலியோர் செய்திகளும் அடங்கினவாகுமென்பதைக் காட்டுவாம்.

நக்கீரருக்கு ஓர் சிறப்பைக் கூறுவதற்கு இறையனுருரை, நக்கீரரால் வரையப்பட்டு குருசீடர் வழிமுறையில் கர்ண பரம்பரையாக ஓதப்பட்டு வந்ததென்று, கூறப்பட்டதாகும். இவ்வுரையில் சங்ககாலத்துச் செய்யுட்களும், சிலப்பதிகாரமும், பாண்டிக் கோவையும் ஆட்சி பெற்றுள்ளன. உரையில் கூறப்படும் சில துறைகள் புதியனவாகச் சங்ககாலத்து வழக்கினோடு மாறுபட்டனவாகத் தோன்றும். இப்புதிய துறைகளுக்கு சங்க விலக்கியங்களினின்றும் மேற்கோள் காட்டவியலாது. இத்துறைகளுக்கு பிற்காலத்து இலக்கியங்களிலிருந்தே எடுத்துக்காட்டு கூறவேண்டும். எனவே இறையனாருரையை சங்க காலத்து நக்கீரர் மேல் ஏற்றிக் கூறுவது பொருந்தாது. உரை தோன்றிய காலத்திற்கும் சங்ககாலத்திற்கும் இடையில் 7 அல்லது 8 நூற்றாண்டாகும். குரு சீட முறையில் 13 பெயர்கள் கூறப்பட்டிருக்தலும் உரைக் கூற்றை வலியுறுத்தாது.

இறையனார் உரையின் காலத்தை யறிவதற்கு பாண்டிக் கோவை உதவிபுரியும். இக்கோவை நூலின் பாட்டுடைத் தலைவன் அரிகேசரி நெடுமாறன் என்பவன். இவனைக் கூன் பாண்டியனென்றும் கூறுவர். இம்மன்னன் கி. பி. 7ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செங்கோலோச்சினான். இவ்வரசன் சைனமதத்திலிருந்து நீங்கிய வரலாறு கோவை நூலில் யாண்டும் கூறப்படவில்லை. இவ்வரசனைப் பற்றிய கதையும் பிற்காலத்ததாகுமெனக் கூறலாம். இக்கோவையில் பல போர்க்களங்கள் கூறப் பட்டுள்ளன. இவைகளில் பாழி, செந்நிலம், நெல்வேலி என்ற மூன்றும் வேள்விக்குடி சாசனத்திலும் காணப்படும். கோவையில் காணப்படும் மற்றைப் போர்க்களங்கள் சாசனத்தில் காணப்படா. இப்போர்க்களங்களிற் சில இம்மன்னன் முன்னோர் காலத்திற்குரியவையாகும். வேள்விக்குடி சாசனத்தில் இம்மன்னன் முன்னோர்கள் போர்க்களங்களொன்றும் கூறப் படாமையால் கோவையில் கண்ட மற்றைப் போர்க்களங்கள் புணர்ப்பாகுமெனவும் இந்நூல் 8ம் நூற்றுண்டிற்கும் பிற்பட்டதெனவும் சிலவாராய்ச்சியாளர் கூறுவர். பாட்டுடைத்தலைவன் முன்னோர் செயல்களையும் பாட்டுடைத் தலைவன் செயல்களாகக் கூறுவதோர் மரபையறியாது ஆராய்ச்சியாளர் கூறுங்கூற்றை மறுக்க, கோவை நூலில் கூறப்படும் செயல்களனைத்தும் உண்மையேயாகும். கோவைநூல் அரிகேசரியின் இறுதிக் காலத்தில் (7ம் நூற்றாண்டிறுதில்) பாடப்பட்டதாகும்.

வேள்விக்குடி சாசனத்தில் அரிகேசரியின் முன்னோர்களான கடுங்கோன், அவனிசூளாமணி, சேந்தன் என்னும் மூவர் செயல்கள் கூறப்படாதிருப்பது ஓர் ஐயப்பாடுடையதாகும். பாண்டிய நாட்டை களப்பிரர் என்னும் ஓர் புதிய குலத்தினர் வெளவி சில நூற்றுண்டுகள் வரையில் அரசு புரிந்தாரென்பதொரு வரலாறு சாசனத்தில் காணப்படும். கடுங்கோனென்னும் பாண்டியன் இப்பகைவரைவென்று அவர்களை தன்னாட்டினின்றும் அகற்றிக் தன்னுரிமையைப் பெற்று அரசாட்சி புரிந்தானென்று வேள்விக்குடி சாசனங் கூறும். பகைவரை வென்றதற் கறிகுறியாக ஒரு போர்க்களமேனுங் கூறாதிருத்தல் வியப்பைத்தருகின்றது. அரிகேசரி முதல் பிற்பட்ட அரசர்களின் முறையை வேறு சாசனத்தாலும் அறியலாகும். கடுங்கோன், அவனிசூளாமணி என்றவர்களைக் குறிக்கும் வேறு சாசனச் சான்றுகள் இல்லை. எனவே வேள்விக்குடி சாசனத்தில் இவ்விருவரசர்களைக் குறித்த வரலாறு பாண்டிக்கோவையோடு முரண்படுவதால் வேள்விக்குடி சாசனத்தை ஏற்றுக்கொள் வதற்கு ஐயப்பாடுண்டென்க. இதனக்குறித்து மூர்த்திநாயனார் வரலாற்றில் வேறு காரணங்களைக் காட்டுவாம்.

--Ksubashini (பேச்சு) 20:34, 9 நவம்பர் 2016 (GMT)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

"https://marabuwiki.org/index.php?title=கல்லாட_நூலாராய்ச்சி&oldid=13407" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 9 நவம்பர் 2016, 20:37 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 4,636 முறைகள் அணுகப்பட்டது.