கல்லாடரின் காலம் எது?

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

"கல்லாடம்" என்ற நூலை இயற்றிய கல்லாடரின் காலம் கி.பி. 6ஆம் நூற்றாண்டு என்றும், 13ஆம் நூற்றாண்டு என்றும், 16ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட பகுதி என்றும், கல்லாடர் என்ற பெயரில் இருவர் இருந்துள்ளனர் என்றும் தமிழறிஞர்களால் கூறப்படுகிறது.

கல்லாடரின் காலம் எது?

கல்லாடர் என்ற பெயரில் இருவர் இருந்தது உண்மையா?


கருத்து 1


"கல்லாடம்" இயற்றிய கல்லாடரின் காலம் கி.பி. 13ஆம் நூற்றாண்டு

"கல்லாடம் கற்றவனுடன் சொல்லாடாதே", என்ற பழமொழியே இந்நூலின் சிறப்புக்குச் சான்றாக உள்ளது.

இத்தகைய சிறப்புமிக்க நூலை எழுதிய ஆசிரியர் கல்லாடர் ஆவார்.

கல்லாடம் என்பது ஊரின் பெயர்.

அவ்வூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் பெயர் கல்லாடர்.

அப்பெயரை மக்களுக்கு இட்டு வழங்கினர்.

கல்லாடர் என்ற பெயரில் பண்டைய காலத்தில் வெவ்வேறு கல்லாடர்கள் இருந்துள்ளனர்.

கடைச்சங்கப் புலவருள் கல்லாடர் என்ற பெயரில் ஒருவர் இருந்துள்ளார்.

அவர், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியனைப் பாடியவர்.

பொறையாற்றுக் கிழான், அம்பர் கிழான், அருவந்தை என்னும் மன்னர்களால் ஆதரிக்கப்பட்டவர்.

இவர் பாடியனவாக சங்க நூல்களில் 14 பாடல்கள் உள்ளன.

இவரது காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது.

மற்றொரு கல்லாடர், 11ஆம் திருமுறையில் "திருக்கண்ணப்பதேவர் திருமறம்" என்னும் நூலை எழுதியவர்.

இவர் நக்கீரர் காலத்திலோ, அவருக்குப் பிற்பட்ட காலத்திலோ வாழ்ந்தவர் எனலாம்.

எனவே, இவர் காலத்தை கி.பி. 9ஆம் நூற்றாண்டு என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தொல்காப்பியம் - சொல்லதிகாரத்துக்கு உரை எழுதியவர்களுள் கல்லாடர் என்பவரும் ஒருவர்.

இவர் சொல்லதிகாரத்துக்கு உரை இயற்றியவர் அனைவருக்கும் பிற்பட்டவர்.

இவர் வாழ்ந்த காலம் நச்சினார்க்கினியர்க்குப் பின்னும், பிரயோக விவேக நூலர்க்கு முன்னும் எனலாம்.

இவரது காலம் கி.பி. 15, 16ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

திருவள்ளுவ மாலையில், "ஒன்றே பொருளெனின் வேறென்ப" என்ற பாடலைப் பாடிய இன்னொரு கல்லாடரையும் காணமுடிகிறது.

இவ்வாறு பல கல்லாடர்கள் இருந்துள்ளனர் என்பதை கிடைத்துள்ள சான்றுகள் நமக்குப் புலப்படுத்துகின்றன.

இவர்களுள் சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளாம் சிவபெருமானின் திருவருள் செயல்களைச் சிறப்பித்துக் கூறும் "கல்லாடம்" என்னும் நூலின் ஆசிரியர் கல்லாடர் இயற்றிய "கல்லாடம்" என்ற நூலை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, அவர் கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்ற முடிவுக்கு வரமுடிகிறது.

ஏனென்றால், அவரது "கல்லாடம்" நூலில் மாணிக்கவாசகர் இயற்றிய திருக்கோவையாரைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். அதிலிருந்து நூறு துறைகளைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு பாடல் வீதம் ஆசிரியப்பாவில் இயற்றியுள்ளார்.

மேலும், விநாயகர் வணக்கத்தில் சிவனிடமிருந்து மாங்கனி பெற்ற செய்தியையும், திருவிளையாடற் புராணத்தில் தருமிக்குப் பொற்கிழி அளித்த படலச் செய்தியையும் எடுத்தியம்புகிறார்.

இந்நூல் அளவில் சிறியதாக இருந்தாலும், இராமாயணம், மகாபாரதம், புராணங்கள், திருவிளையாடற் புராணம் முதலியவைகளிலிருந்து கதைகள், திருத்தொண்டர் வரலாறு, இசைக்கலை, நாட்டியக் கலை முதலிய நுண்கலைச் செய்திகளையும் கொண்டு பொருள், யாப்பு, அணி முதலியனவுடன் சிறப்பாக மிளிர்கிறது.

கல்லாடத்தில் வரும் பாடல்கள் யாப்பமைதியிலும் அணி அமைப்பிலும் தனிச் சிறப்புப் பெற்று விளங்குவதைப் பார்க்கும்போது, கி.பி. 12ஆம் நூற்றாண்டில் தோன்றிய தண்டியலங்காரத்துக்குப் பின் எழுதப்பட்ட நூலாக இருக்கும் என்று கருத முடிகிறது.

ஏனென்றால், தண்டியலங்காரம் குறிப்பிடுகின்ற இலக்கணத்தைப் பின்பற்றி, சற்றும் பிறழாமல் கல்லாடம் நூல் அமைக்கப்பட்டுள்ளது.

இதை வைத்துப் பார்க்கும்போது, கல்லாடர் வாழ்ந்த காலம் திருக்கோவையாரும், தண்டியலங்காரமும் எழுதப்பட்டதற்குப் பின்னர்தான் என்று அறுதியிட்டுக் கூறமுடியும்.

"திருக்கண்ணப்ப தேவர் திருமற"த்தை இயற்றிய கல்லாடரும், "கல்லாடம்" பாடிய கல்லாடரும் ஒருவரே என்று கருதுபவரும் உண்டு.

இருவரும் ஒருவர் என்று சொன்னால், 11ஆம் திருமுறையில் "கல்லாடம்" என்ற நூலும் தொகுக்கப்பட்டிருக்கும்.

ஆனால், கல்லாடம் இடம்பெறவில்லை.

எனவே, "கல்லாடம்" என்ற நூலின் ஆசிரியர், கி.பி. 9ஆம் நூற்றாண்டுக்கும் பிற்பட்டவர் என்று கூறலாம்.

மதுரை சுந்தரேசர் முன்னிலையில் மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் இந்நூல் அரங்கேற்றம் கண்டதையும், அப்போது அதை இரசித்துப் பாராட்டி, இறைவன் நூறுமுறை தலை அசைத்ததையும்,

"கல்லாடர் செய்பனுவல் கல்லாட நூறு நூல்
வல்லார் சங்கத்தில் வந்தருளிச் சொல்லாயும்
மாமதுரையீசர் மனமுவந்து கேட்டு முடி
தாம் அசைத்தார் நூறு தரம்.

என்ற வெண்பா பாடல் தெளிவாக்குகிறது.

"கல்லாடம்" இயற்றிய கல்லாடர், பிற்கால மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் புலவராக இருந்துள்ளார்.

இதை வைத்துப் பார்க்கும்போது, அவர் வாழ்ந்த காலம் கி.பி. 13ஆம் நூற்றாண்டு என்று முடிவுக்கு வருவது பொருத்தமாக இருக்கும்.

ப.இரமேஷ்


கருத்து 2

கல்லாடர் என்ற பெயரில் புலவர் பலர் இருந்துள்ளனர்.

சங்க நூல்களில் 14 பாடல்களைப் பாடிய கல்லாடர், கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்கு முந்தையவர்.

பாட்டியல் நூல்களில் காணப்படும் கல்லாடர், கி.பி. 9ஆம் நூற்றாண்டினர்.

திருக்கண்ணப்பர் திருமறம் என்ற நூலைப் பாடிய கல்லாட தேவநாயனார், கி.பி. 10ஆம் நூற்றாண்டினர்.

"கல்லாடம்" என்ற பெயரில் வழங்கப்படுகின்ற சிறந்த சைவ சமய நூலை எழுதிய கல்லாடர், கி.பி. 10 - 13ஆம் நூற்றாண்டினராகக் குறிக்கப்படுகிறார்.

இலக்கண உரையாசிரியர் கல்லாடர், கி.பி. 15ஆம் நூற்றாண்டினராகக் கருதப்படுகிறார்.

கல்லாடரின் "திருக்கண்ணப்ப தேவர் திருமறம்" என்ற நூலை 11ஆம் திருமுறையில் அமைத்த நம்பியாண்டார் நம்பியின் காலம், கி.பி. 1000 - 1040 எனக் குறிக்கப்படுவதால், இக்கல்லாடரின் காலம் கி.பி. 10ஆம் நூற்றாண்டாகக் கொள்ளலாம்.

"கல்லாடர்" என்ற புலவரால் இயற்றப்பட்டது "கல்லாடம்" என்ற சைவசமய நூல்.

"கல்லாடம் கற்றவனோடு சொல்லாடாதே", "கல்லாடம் கற்றவனோடு மல்லாடாதே",என்ற முதுமொழிகள் கல்லாடத்தின் அருமையைக் கூறுகின்றன.

கல்லாடரின் காலத்தை வரையறுப்பதற்கு இரண்டு குறிப்புகள் உதவுகின்றன.

ஒன்று, இவர் மாணிக்கவாசகருக்காகப் பெருமான் மதுரையில் மண்சுமந்த திருவிளையாடல் முதலியவற்றைக் கூறுவது. மாணிக்கவாசகரின் காலம் 9ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி என்பது பலரும் ஒப்புக்கொண்ட செய்தி. எனவே, கல்லாடர் இக்காலத்துக்குப் பிற்பட்டவர் என்பது தெளிவு.

இரண்டாவது, நம்பியாண்டார் நம்பி கல்லாடத்தைத் தொகுக்காமையால் (11ம் திருமுறையில்), நம்பியாண்டார் காலத்தின் இறுதி எல்லையாகிய கி.பி. 1040க்குக் கல்லாடம் பிற்பட்டதாக இருக்கிறது. அதனால், கல்லாடர் காலம் கி.பி. 1040க்குப் பிறகு உள்ள காலமாகும் என்று குறிப்பிட்டு கி.பி. 11ஆம் நூற்றாண்டு, என தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர் மு.அருணாசலம் குறித்துள்ளார் (ப.16).

நச்சினார்க்கினியர், பேராசிரியர், அடியார்க்கு நல்லார், பரிமேலழகர் முதலிய தொல்லுரையாசிரியர் பலராலும் அன்னோர் உரைகளில் இக்கல்லாடச் செய்யுள்கள் எடுத்தாளப்படவில்லை.

எனவே, கல்லாடர் 13ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு விளங்கியவராதல் வேண்டும் என்று டி.வி.சதாசிவப் பண்டாரத்தார், "கல்லாடமும் அதன் காலமும்" என்ற ஆய்வுக் கட்டுரையில் குறித்துள்ளார் (செந்தமிழ் - டிச.1998).

எனவே, கால ஆய்வாளர்கள் "கல்லாடம்" இயற்றிய கல்லாடரின் காலத்தை கி.பி. 10லிருந்து 13 வரை என்று வரையறுக்கின்றனர்.

முனைவர் சரளா இராசகோபாலன்

கருத்து 3

கி.பி. 6 மற்றும் 13க்கு இடைப்பட்டது

"கல்லாடம்" என்ற நூலை இயற்றிய கல்லாடர், 11ஆம் திருமுறைப் பன்னிருவருள் ஒருவரான "திருக்கண்ணப்ப திருமறம்" பாடிய கல்லாட தேவ நாயனார் மற்றும் தொல்காப்பியத்துக்கு உரை வகுத்த கல்லாடர் ஆகியோருக்கு இடைப்பட்டவராக அறியப்படுகிறார்.

மதுரை மாநகரின் சிறப்புகள் பற்றியும் ஆடல்வல்லானின் பெருமைகள் குறித்தும் பாடும் கல்லாடம் தவிர்த்து ஐந்து வகையான திருவிளையாடல் புராணங்கள் தமிழில் காணக் கிடைக்கின்றன.

இவற்றுள் காலத்தால் முந்தையது கல்லாடர் இயற்றிய கல்லாடமே. தவிர, இத்திருவிளையாடல்கள் அறுபத்து நான்கு என்று முதன் முதலில் வரையறை செய்யும் நூலாக கல்லாடம் விளங்குவதை,

"கூடல் பதிவரும் ஆடல் பரியோன்
எட்டெட்டு இயற்றிய கட்டமர் சடையோன்.

என்னும் பாடல் வழி அறிய முடிகிறது.

இவை தவிர, திருஞான சம்பந்தர் குறித்த இரண்டு பாடல்களும் அவற்றுள் அடங்கும்.

மேலும், திருக்கோவையாரில் குறிப்பிடப்படும் வரகுண பாண்டியர்கள் இருவரும் முறையே கி.பி.9ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், இறுதியிலும் வாழ்ந்ததாகக் கல்வெட்டுகளால் அறிய முடிகிறது.

எனவே, இக்கல்லாடர் மேற்சுட்டப்பட்ட இருவருக்கும் பிற்பட்டவர் என்பது தெள்ளத் தெளிவு.

குறிப்பாக,

- அவிநயம் (கி.பி.5)
- இறையனார் அகப்பொருள் (கி.பி.8)
- பன்னிரு படலம், புறப்பொருள் வெண்பா மாலை (கி.பி.9)
- யாப்பருங்கலம் மற்றும் யாப்பருங்கலக்காரிகை (கி.பி.10)

கி.பி.8ஆம் நூற்றாண்டில் வடமொழி தண்டியரின் காவ்ய தரிசனத்தைப் பின்பற்றி புத்தமித்திரரால் எழுதப்பட்ட வீரசோழியம் (கி.பி.10) ஆகிய இலக்கண நூல்கள் சுட்டும் பொருள், யாப்பு, அணி சிறப்புகள் இயல்பாகவே கல்லாடத்தில் பயின்று வருவதால், பிற்காலத்தில் மொழியாக்கப்பட்ட தமிழ் தண்டியலங்காரத்தைக்கொண்டு அதன் காலத்தை நாம் பின்னுக்குத்தள்ள வேண்டியதில்லை.

ஏனெனில், தண்டியே அணியிலக்கணத்தை வடமொழியிலும் தமிழ் மொழியிலும் ஒருசேர எழுதியுள்ளார் என்ற ஒரு கருத்தும் தமிழ் ஆய்வாளர்கள் மத்தியில் நிலவுகிறது.

ஆகவே, கல்லாடத்தை இயற்றிய கல்லாடரின் காலம் கி.பி.6 மற்றும் 13ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டது.

ம.கணேசன்

கல்லாடம் கி.பி.11ஆம் நூற்றாண்டு!
கல்லாடர் இயற்றிய கல்லாடம், சொல்லால் சங்க இலக்கியம் போன்றிருந்தாலும், பொருளால் புராணக் கருத்துகள் நிறைந்த இடைக்கால இலக்கியமாக உள்ளது.

கல்லாடம் முதற்செய்யுள், "அமுதமும் தருவும்..." என மங்கல மொழியுடன் தொடங்கினாலும், பாயிரச் செய்யுள்கள் இரண்டு உள்ளன. இவ்விரண்டினுள் முதற் செய்யுள், வேழமுகத்தான் (விநாயகர்) வணக்கமாக 40 அடிகள் கொண்ட ஆசிரியப்பா உள்ளது.

விநாயகர் வணக்கம் கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தோன்றிய இலக்கியங்களில்தான் இடம்பெற்றது. எனவே, கல்லாடம் இயற்றிய கல்லாடர் சங்க காலத்தவர் அல்லர். கி.பி. 7, 8 நூற்றாண்டுக்குப் பின் வாழ்ந்தவர் என்பது தெளிவு.

இலக்கண உரையாசிரியர்களுள் ஒருவராகிய கல்லாடர், நச்சினார்க்கினியர் - வேற்றுமையியலில்,

"பெயர்நிலைக் கிளவி...

எனத் தொடங்கும் நூற்பாவிற்கு எழுதிய உரையை அப்படியே எடுத்தாள்வதால், இவர் நச்சினார்க்கினியருக்குப் பிற்பட்டவர் என்று அறியலாம்.

தி.வை.சதாசிவ பண்டாரத்தார் எழுதிய "தமிழ் இலக்கிய வரலாறு" (கி.பி. 13,14,15ஆம் நூற்றாண்டுகள்) தான், "கல்லாடம்" பாடிய கல்லாடர் பற்றியும் அவருடைய காலம் பற்றியும் ஓரளவு அறிய உதவுகிறது.

பரஞ்சோதி முனிவர் (16ஆம் நூற்றாண்டு) இயற்றிய திருவிளையாடல் புராணத்துக்கு முன் தோன்றியது பெரும்பெற்றப்புலியூர் நம்பி இயற்றிய திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம்.

பெரும்பெற்றப்புலியூர் நம்பியின் காலம் கி.பி. 13ஆம் நாற்றாண்டு என்று சதாசிவபண்டாரத்தார் குறிப்பிட்டுள்ளார். இதனால், 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணத்துக்கு முன்பே தோன்றியது கல்லாடம் என்பது தெளிவு.

கி.பி. 1228இல் இத்திருவிளையாடல் புராணம் பாடி, பாண்டியனிடம் இறையிலி நிலங்களும், பல்லக்கு முதலான வரிசைகளும் பெற்றவர் பெரும்பெற்றப்புலியூர் நம்பி.

கல்லாடத்தில், நரியைப் பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது, மதுரை ஆலவாய் அண்ணல் ஆனது முதலிய பல திருவிளையாடல்கள் வந்துள்ளன. பெரும்பெற்றப்புலியூர் நம்பியின் திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணத்துக்கு முன்னோடியாகக் கல்லாடத்தில் வரும் சோமசுந்தரக்கடவுள் திருவிளையாடல்கள் பல உள்ளதால், இதன் காலம் 11ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.

புராணக் கலப்புடைய இந்நூல் சங்க இலக்கிய நடையில் உள்ளதால், "கல்லாடம் கற்றவனோடு சொல்லாடாதே" என்ற பழமொழி வந்துள்ளது.

தொல்காப்பியர் எழுதியது "தொல்காப்பியம்" எனப் பெயர் பெற்றாற்போல், கல்லாடர் இயற்றியது "கல்லாடம்" எனப்பட்டது.

மா.சின்னு

நன்றி: தினமணி

--Ksubashini 09:01, 23 ஜனவரி 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

"https://marabuwiki.org/index.php?title=கல்லாடரின்_காலம்_எது%3F&oldid=4395" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 23 ஜனவரி 2011, 09:04 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,539 முறைகள் அணுகப்பட்டது.