தமிழ் இலக்கியத்திலிருந்து சுவை மிகு காட்சிகள்
கரிகால் சோழனுக்கு பிரிட்டிஷ் நீதிபதிகளுடன் தொடர்பு உண்டா?
ச. சுவாமிநாதன், எம்.ஏ., (பிரித்தானியா)
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டை ஆண்ட கரிகால் சோழனுக்கும் இன்று பிரிட்டனில் நீதி வழங்கும் அதிகாரிகளுக்கும் இடையே தொடர்பு உண்டு என்று யாரேனும் சொன்னால் இது என்ன மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார்களே? என்று கூறுவார்கள். கோகுலாஷ்டமிக்கும் குலாம்பாய்க்கும் என்ன தொடர்போ, அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன தொடர்போ அந்த அளவுதான் தொடர்பு என நினைப்பார்கள். ஆனால் பின்வரும் அதிசயமான விஷயத்தைப் படியுங்கள். தொடர்பு புரியும்.
இதோ ஒரு குட்டிக்கதை
பெரும்பாலும் தமிழர்களுக்குத் தெரிந்த கதை, சோழநாட்டில், உறையூரில் இருந்த நீதிமன்றம் மிகவும் புகழ் பெற்றது. ஒருநாள் இரண்டு முதியவர்கள் ஒரு வழக்குடன் அங்கு வந்தார்கள். அப்போது நீதிமன்றத்தில் நடுவர் இருக்கையில் அமர்ந்திருந்தவனோ சோழமாமன்னன் கரிகாலன். வயதில் இளையவன். இரண்டு முதியவர்களுக்கும் பெருத்த ஏமாற்றம்.
நாம் கொண்டு வந்த வழக்கோ மிகச் சிக்கலானது. இந்தச் சிறுவனா இதை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கப் போகிறான். இது இயலாத செயல் என்று கருதினர்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியுமல்லவா?
அவர்கள் முகத்தில் ஏற்பட்ட ஏமாற்றத்தைக் கவனித்த கரிகாலன், "பெரியோர்களே! வயதான நீதிபதியைக் காணவில்லை என்று தானே கவலைப்படுகிறீர்கள். நாளை வாருங்கள் அவர் இருப்பார்." எனக் கூறி அவர்களை அனுப்பி வைத்தான்.
அவன் கூறியது போலவே, மறுநாள் அறங்கூறு அவையில், தலை நரைத்த முதிய நீதிபதி ஆசனத்தில் அமர்ந்து இருந்தார். முதியவர்கள் இருவரும் தம் வழக்கை எடுத்துரைத்தனர். அதனை விசாரித்த முதிய நீதிபதி, அனைவரும் வியக்கும் வண்ணம் தீர்ப்புக் கூறினார். முதியவர்கள் இருவருக்கும் மிக்க மகிழ்ச்சி.
அதிலும், அவ்வாறு தீர்ப்புக் கூறியது முதிய நீதிபதியைப் போல் நரைமுடி தரித்து அமர்ந்திருந்த இளைஞனான கரிகாலன்தான் எனத் தெரிந்ததும் அவர்களின் வியப்பு எல்லையற்றதானது. கரிகால் சோழன் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் நரைமுடி தரித்து வந்து தீர்ப்பு வழங்கிய செய்தி முழு உலகுக்கும் தெரிய வந்துவிட்டது போலும்.
அதன் விளைவாகத் தான் உலகெங்கிலும் நீதிபதிகள் நரைமுடி போன்று 'விக்' தரித்து தீர்ப்பு வழங்குவதை பழக்கப்படுத்திக் கொள்ளத் துவங்கியிருக்க வேண்டும். இன்றும் கூட பிரிட்டனில் நீதிபதிகள் தலையில் வெள்ளை (நரை) முடி 'விக்' தரித்து வந்துதான் தீர்ப்பு வழங்குகின்றனர். வேறு சில நாடுகளிலும் இவ்வழக்கம் இருந்து பின்னர் மறைந்திருக்க வேண்டும். நரைமுடி தரித்து தீர்ப்பு வழங்கிய கரிகால் சோழனைத் தமிழ் இலக்கியம் மிகவும் வியந்து போற்றுகிறது.
இச்செய்தியைப் பொருநராற்றுப்படை, மணிமேகலை, பழமொழி ஆகிய நூல்கள் எடுத்துரைக்கின்றன.
"முதியோர் அவை புகு பொழுதிற்றம்
பகை முரண் செலவும்-----
பொருநராற்றுப்படை (வரி 187--188)
என்றும்
இளமை நாணி முதுமை எய்தி
உரை முடிவு காட்டிய உரவோன்
என்றும் இலக்கியங்கள் புகழ்கின்றன. பழமொழி என்னும் பதினெண்ணின் கீழ்க் கணக்கு நூல் பின்வரும் பாடலில் விளக்கமாகக் கூறுகிறது.
"உரை முடிவு காணா இளமையோன் என்ற
நரை முதுமக்கள் உவப்ப====
"நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்
சோழன், குல விச்சை கல்லாமற் பாகம்படும்
தத்தம் குலத்தொழில் கற்காமலேயே ஒருவருக்கு வந்துவிடும் என்னும் பழமொழியை விளக்கக் கரிகாலன் கதையைப் பயன்படுத்துகிறான் ஒரு கவிஞன். இமயம் வரை சென்று புலிக்கொடி நாட்டிய கரிகால் பெருவளத்தானை பிரிட்டன் வரை சென்று புகழ்க்கொடி நாட்டினான் என்று சொன்னால் மிகையல்ல.
--Geetha Sambasivam 22:41, 19 நவம்பர் 2011 (UTC)