கட்டுரையாளர்: ஏ.பேட்ரிக்
உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்க வேண்டும் என்பது பழமொழி.
இது மனிதர்களுக்கானது.
ஆனால் நீலகிரி மாவட்டத்திலுள்ள பழங்குடிகளான தோடரின மக்கள் தாங்கள் வளர்த்து வரும் எருமைகளுக்கும் உப்பிட்டு திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.
இது தமிழர்களின் பண்டிகையான மாட்டுப் பொங்கலை போன்றது என்றாலும், இயற்கை பேரழிவுகள் ஏற்படாதிருக்கும் வகையில், தோடரின மக்கள் குடியிருக்கும் பகுதியான மந்து பகுதிகளிலேயே இத்தகைய வழிபாட்டினை நடத்தி வருவதாகவும் அம்மக்கள் கூறுகின்றனர்.
இவ்வாண்டின் முதல் விழா உதகையிலுள்ள தமிழகம் மந்தில் கொண்டாடப்பட்டது.
இதையொடடி மந்து பகுதியிலுள்ள கோவில் பூசாரிகள் கோவிலின் அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்று உப்பு இடுவதற்கான குழியை எடுத்து அதில் உப்பைக் கொட்டினர். அதன்பின்னர் அங்கு தோடரின மக்கள் வளர்த்துவரும் எருமைகள் கொண்டு வரப்பட்டு அவற்றிற்கு உப்பு தண்ணீர் வழங்கப்பட்டது.பின்னர் இந்த உப்பு தண்ணீருக்கு தோடரின ஆண்கள் தங்கள் பாரம்பரிய உடையை அணிந்து காட்டு புற்களைத் தூவி வழிபட்டனர்.பின்னர் அந்தக் குழியிலிருந்த மண்ணை எடுத்து தங்கள் நெற்றியில் பூசிக்கொண்டனர்.அதையடுத்து தங்களது கோரிக்கைகள் நிறைவேறுவதற்காக அந்த உப்புத்தண்ணீரை தாங்களும் தீர்த்தமாக எடுத்து குடித்தனர்.
அதையடுத்து கோவிலுக்குள் சென்று தங்களது பாரம்பரிய வழக்கப்படி வழிபாடுகளை நடத்தினர்.பின்னர் உப்பு கலந்த மோர் மற்றும் தேன் ஆகியவை தோடரின பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.அப்போது பெண்களும் தங்களது கோரிக்கைகளை கடவுள் முன் வைக்கின்றனர்.
இவ்வாறு செய்தால் தங்கள் வேண்டுதல் அடுத்த ஆண்டின் உப்புத் திருவிழாவுக்குள் நிறைவேறுமென்பது அவர்களது நம்பிக்கையாகும்.இந்த விழாவுக்காக பெண்கள் அனைவரும் சில நாட்கள் விரதமிருப்பர்.இதையடுத்து கோவில் பூசாரி இங்குள்ள இயற்கை இடங்களையும், நீரோடைகளையும் குறித்து பிரார்த்தனை செய்வார்.தன் மூலம் இயற்கை பேரழிவுகள் அப்பகுதிகளில் ஏற்படாது என்பதும் அவர்களது நம்பிக்கையாகும்.
இந்த நிகழ்ச்சியையடுத்து அங்குள்ள அனைவருக்கும் மோர் மற்றும் தேன் கலந்த பொங்கல் வழங்கப்படும். இத்தகைய உப்புத் திருவிழா நிகழ்ச்சிகள் மாவட்டத்திலுள்ள அனைத்து மந்து பகுதிகளிலும் நடத்தப்படும்.நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆராய்ச்சிகளை ஆளில்லாத விண்கலத்தின் மூலம் பூமியிலிருந்தே நடத்தி வரும் சூழலில், காலங்கள் மாறினாலும் தங்களது பாரம்பரிய கலாச்சாரத்தை மறக்காமல் தோடரின மக்கள் கொண்டாடிவரும் இந்த உப்புத் திருவிழா நிகழ்ச்சிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்திழுக்கும் ஓர் அம்சமாகும்.இந்த விழாவில் பெண்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை.
அவர்கள் தெய்வமாகப் போற்றும் எருமைகளை புகைப்படம் எடுக்கவும் நம்மை அனுமதிக்கவில்லை.
நன்றி:- தினமணி