எப்போதோ கூடாரத்தில் தொடங்கியது

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

வெங்கட் சாமிநாதன்



எப்போது என்று நிச்சயமாகத் தெரியவில்லை. மூன்று வயதிருக்குமா, இல்லை நான்கு இருக்குமா? போன நூற்றாண்டின் பின் பாதி முப்பதுகள் அது. பாட்டியின் இடுப்பில் வாசம். பாட்டிக்கு அதிக தூரம் போக வேண்டியிருக்கவில்லை. வீட்டுக்கு எதிர்த்தாற்போலேயே சினிமாக் கொட்டகை. கொட்டகை அல்ல. கான்வாஸ் கூடாரம். வீட்டை விட்டு வெளியே வந்தால் நிலக் கோட்டை-வத்தலக்குண்டு-பெரியகுளம் ரோடு. ரோட்டைத் தாண்டினால் வண்டிப் பேட்டை.. அதிகம் போனால் வீட்டிலிருந்து ஐம்பது அடி தூரம் தான் நடக்க வேண்டியிருக்கும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை படம் மாறும். அனேகமாக எல்லாப்படங்களையும் பாட்டி பார்த்து விடுவாள். அவளுக்கு அது தான் பகவான் தரிசனத்துக்கும் மோக்ஷத்துக்கும் குறுக்கு வழி. வேறு வழி நிலக்கோட்டையில் கிடையாது. மாரியம்மன் கோயில் ஊருக்கு மறு கோடியில். நாங்கள் ஒரு கோடியில். பாட்டி கோயிலுக்குப் போய் நான் பார்த்ததில்லை. பாட்டிக்கும், மாமாவுக்கும் இருந்த பக்திக்கு, ஏன் பாட்டி கோவிலுக்கு போனதில்லை என்பது எனக்குத் தெரியாது. அது பற்றி நான் யோசித்ததில்லை.இப்போது அது பற்றி எழுதும்போது தான் இந்த மாதிரி கேள்விகள் எழுகின்றன.


பாட்டி ஒன்றும் இன்றைய ரக தமிழ் சினிமா பைத்தியமில்லை. அக்காலத்தில் படங்கள் எல்லாம் புராணக்கதைகளையே கொண்டிருக்கும். ஆக, அந்த மாதிரியான புராணக் கதைகளைச் சொல்லும், தமிழ்ப்படங்களைப் பார்ப்பது பாட்டிக்குக் கதா காலக்ஷேபத்துக்கு போவதற்கு சமம். ஒரு புராணக் கதைப் படத்தை பாட்டி விட மாட்டாள். எதிர்த்தாற்போல கொட்டகை. ஐந்து நிமிஷத்தில் தயாராகிவிடலாம். அதே போல வீட்டுக்குத் திரும்புவது சில நிமிஷங்களுக்கு மேல் ஆகாது. ஒன்றும் பெரிய சிரம சாத்தியமான காரியம் இல்லை. அத்தோடு டிக்கெட்டும் அதிகம் இல்லை. முக்காலணா என்று ஞாபகம். மணல் பரப்பிய தரை. ஒரு துணியைப் போட்டு உட்கார்ந்து கொள்ள வேண்டியதுதான். என்னை இடுப்பில் தூக்கிச் செல்வதால் எனக்கும் டிக்கெட் கிடையாது. ஒரோரு சமயம் அந்த மானேஜர் பார்த்துவிட்டால், சில சமயம் அவர் கேட் அருகில் நின்று கொண்டிருப்பார். ஆள் நல்ல கருப்பு. ஆனால் மிக அழகான முகம். இளம் வயது. வெள்ளைச் சட்டை. வெள்ளை வேட்டி. மல் துணியோ என்னவோ, மல்லிகைப் பூப் போல என்பார்கள். கையில் கழுத்தில் தங்க செயின். பின் ஒரு நீண்ட டார்ச் லைட் எப்போதும் கையில் இருக்கும். பகலில் அவர் எங்கும் போனால் கூட. எனக்குத் தெரிந்து அவர் தான் ஆறு மாதத்துக்கு ஒரு முறை கொட்டகை போடுவார். மூன்று மாதங்கள் இருக்கும். பின்னர் வேறு ஊருக்கு கொட்டகையைப் பிரித்துக் கொண்டு போவார். எதிர்த்தாற்போலேயே நாங்கள் இருந்ததால், எங்கள் வீட்டில் இருக்கும் எல்லோரையும் அவருக்குத் தெரியும் .”ஏம்மா இப்படிக் கஷ்டப்பட்டு தூக்கிட்டு வர்ரீங்க. பையனக் கீழே இறக்குங்க. நடந்து வருவான். நான் அவனுக்கு டிக்கெட் கேக்க மாட்டேன்” என்று கனிவாகச் சொல்வார். “என்னாலே முடியத்தாண்டாப்பா இல்லே. ஆனா கேக்க மாட்டேங்கறானேப்பா. என்னை என்ன செய்யச் சொல்றே” என்பாள். அதிலிருந்து அந்த மானேஜர் கேட்டருகில் இருந்தால் என்னைத் தூக்க மாட்டாள். வேறு யாரும இருந்தால், என்னை இடுப்பில் தூக்கிக் கொண்டுதான் போவாள். செலவு அதிகம் இல்லை. அத்தோடு பாட்டிக்கு இதை விட்டால் வேறு என்ன இருக்கிறது அவளைச் சந்தோஷப் படுத்த?. ஆகையால் மாமா ஒரு தடவை கூட தடை சொன்னதில்லை.


ஓரோர் சமயம் வந்திருப்பது புராணப் படம் தானா என்று சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வாள். ஒரு தடவை திருவள்ளுவர் என்று ஒரு படம் வந்தது. பாட்டிக்குச் சரியாகப் புரியவில்லை. மாமாவைக் கேட்டாள். மாமா அது புராணப் படம் இல்லை என்று சொல்லிவிட்டார். ஆனால் அடுத்த நாள் படம் பாக்கப் போன அடுத்த வீட்டுக்கார மாமியோ யாரோ பாட்டியிடம் கதை சொல்லி யிருக்கிறாள். மாமா பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் பாட்டி மாமாவிடம், “ஏண்டா சுப்புணி, அந்தப் படத்திலே நாரதர் எல்லாம் வராராம். சிவன் வராராம். நீ புராணப்படம் இல்லேன்னு சொன்னியே?” என்று கேட்டிருக்கிறாள். “என்னமோ எனக்குத் தெரிஞ்சதைச் சொன்னேம்மா, உனக்குப் போகணும்னு இருந்தா போய்ட்டு வாயேன்.” என்று மாமா சொல்லிவிட்டார்.


இது அந்தக் கால மசாலா. இன்று எந்தக் கதையிலும் பத்துப் பேர் ஒவ்வொருவராக ஹீரோவைத் தாக்குவதும், திடீரென்று ரோட்டு நடுவில் நாற்பது பேர் “ஓ போடு” என்று ஆடுவதும் பாரதியானாலும் அவரை ஒடுகிற வண்டியில் இங்குமங்கும் நடந்துகொண்டே பாடுவதும் (ஆடலும் பாடலும் நம் தமிழ் வாழ்க்கையில் ஒன்றறக் கலந்திருக்காமே, என்ன செய்ய இந்த மண்ணுக்கேத்தபடி தானே படம் எடுக்கணும்!) மாதிரி அன்று திருவள்ளுவரைக் கூட நாரதர் கைலாயம் சென்று சிவனிடம் முறையிட்டு அவரை இந்த பூமியை ரக்ஷிக்க அவதாரம் எடுக்கச் சொன்னால் தான் மக்கள் ரசித்தார்கள் அந்தக் காலத்தில்.


ஒரு சமயம் எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. சிவராத்திரி தினம். கொட்டகைக்கு வரும் ரசிகர்களை ராத்திரி பூராவும் விழித்திருக்க வைத்திருக்க சினிமா மானேஜர் முடிவு செய்தார். படம் பக்த ஜெயதேவர். வருகிறவர் போகிறவர்கள் எல்லாம் “வந்தேனே..” “போவேனே...” என்று பாடிக்கொண்டே இருந்தார்கள். ஒருத்தர்கூட நேராக ஒரு வார்த்தை பேசியதாகத் தெரியவில்லை. ஒரே பாட்டு மயமாக இருக்கிறதே என்று இடையில் நான் ஒரு கட்டத்தில் எண்ண ஆரம்பித்தேன். நாற்பத்தி சொச்சம் பாட்டுக்கள் எண்ணினேன். மொத்தம் எத்தனை இருந்ததோ. இது போதாதென்று இடையிடையில் திரை விழுந்ததும் டான்ஸ் பணண ஒரு பெண்ணை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவள் ஒரு தம்போலின் மாதிரி வட்டமான சுற்றி மணிகள் கட்டிய ஒரு தோல் வாத்தியத்தை கைகளால் தட்டிக்கொண்டு ஆடினாள். நீளப் பாவாடை, குட்டைச் சட்டை. லம்பாடி மாதிரி. சிவராத்திரி அன்று விழித்திருந்து எல்லோரும் புண்ணியம் கட்டிக்கொள்ள அந்த தங்கச் சங்கிலி மானேஜர் வசதி செய்து தந்திருந்தார். அந்தக் காலத்தில் ஒரே ஒரு ப்ரொஜெகடர் தான் இருக்கும்,. ஒரு ரோல் முடிந்தவுடன், இன்னொரு ரோலை ப்ரொஜெக்டரில் ஏற்ற நேரம் பிடிக்கும். அப்போது கொட்டகை விளக்குகள் எரியும். சாதாரணமாக ஏழெட்டு இடைவெளிகள் இப்படி வந்து போகும்.


கண்ணகி படம் வந்தது ஒருமுறை. பி.யு. சின்னப்பாவும் பசுபுலேடி கண்ணாமபாவும் நடித்தது. இளங்கோவன் வசனம். இதெல்லாம் நான் பின்னர் தெரிந்து கொண்டது. அப்போது எனக்கு நினைவிலிருப்பது ‘மானமெல்லாம் போன பின்பே வாழ்வதும் ஒர் வாழ்வா என்று மதுரையை நோக்கிச் செல்லும் வழியில் ஒரு மரத்தின் அடியில் நின்று கொண்டு பாடும் பாட்டு. பாண்டியன் சபையில் கண்ணகி கண்களை உருட்டி விழித்து வாதாடுவதும். அரிச்சந்திரா என்ற படத்தில் பசுபுலேடி கண்ணாம்பா லோகதாசனை மயானத்தில் கிடத்தி, ‘ஓண்ணாம் மாதம், இரண்டாம் மாதம் என்று பத்து மாதங்களும் தான் பட்ட கஷ்டங்களை ஒவ்வொருமாதமாகச் சொல்லிப் பாடிக்கொண்டேஅழுவாள். கொட்டகையில் பெண்கள் பகுதி அழத் தொடங்கிவிடுவார்கள். மூக்கைச் சிந்துவார்கள். என் பாட்டி பார்த்துவிட்டு வந்து அந்த துக்கம் தாங்காது, வீட்டுக்குப் பாத்திரம் தேய்க்க வரும் கிழவியிடம் அந்தக் கதை முழுதும் சொல்லி, “கிழவி, நீயும் போய்ப் பாத்துட்டு வா. நான் காசு தரேன்.” என்று காசுகொடுத்து கிழவியுடனும் அந்த சோகத்தைப் பகிர்ந்து கொண்டாள். அது மட்டுமல்ல. மறு நாள் மாலை, கிழவி பாத்திரம் தேய்க்க வந்தபோது, அவள் படம் பார்த்தாளா, அவளுக்கும் அழுகை வந்ததா, எந்தெந்த இடத்தில் எல்லாம் அழுகை வந்தது என்று கேட்டுக்கொண்டாள். எந்த இடமாவது விட்டுப் போனால், அந்த இடத்தை ஞாபகப் படுத்தி, அந்த இடத்தில் அழுகை வரவில்லையா, இல்லை சொல்ல மறந்துவிட்டாளா என்று நிச்சயப் படுத்திக் கொள்வாள்.


மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாறும் தமிழ்ப் படங்களைப் பாட்டி அழைத்துச் செல்ல நானும் பார்த்தேன். எவ்வளவு படஙகள்! இப்போதெல்லாம் அந்த மாதிரியான வாய்ப்புக்கள் சாத்தியமே இல்லை. மத்தியானம் சாப்பாடெல்லாம் முடிந்த பிறகு, பாட்டி இடைகழியில் படுத்துக்கொளவாள். ஒன்றிரண்டு மணி நேரம் தூங்குவாள். இது எப்போதும் நடப்பதில்லை. சில நாட்கள் தெருவில் இருக்கும் அக்கம்பக்கத்துப் பெண்கள், மாமிகள், பாட்டிகள் கொஞ்ச நாழி, “பக்கத்திலே தான் இருக்கோம். ஆனால் அடிக்கடி பாத்துக்க முடியறதில்லே” என்று ஒரு ஆதங்கத்துடன் பேச வருவார்கள். அவர்கள் பேச்சில் கட்டாயம் பார்த்த படங்களைப் பற்றியும் இருக்கும். “என்னடி கதை அது, தத்து பித்துன்னு” என்ற அபிப்ராயங்கள் உதிரும். எனக்குப் பாட்டி சொன்னது ஏதோ கல்வெட்டு மாதிரி பதிந்துள்ள பாராட்டு ஒன்று. ஏதோ மகாபாரதக் கதை சொல்லும் படம். பெயர் ஞாபகமில்லை. செருகளத்தூர் சாமா, அக்காலத்தில் பிரபலமான காரக்டர் ஆக்டர். சில்லரை ரோல்களில் வருபவர்கள் காரக்டர் ஆக்டர் எனப்படுவர். ஏன் இவர்களுக்கு மாத்திரம் இந்த முத்திரை. அந்த நாளிலிருந்து இன்று வரை, இந்த ஹீரோக்களுக்கும் ஹீரோயின்களுக்கும் காரக்டரே கிடையாதோ.என்று எனக்குத் தோன்றும். கேட்கும் தைரியம், இருந்ததில்லை. மற்றவர்கள் யாரும் இந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் கேட்டதும் இல்லை. இதில் கேட்பதற்கு என்ன இருக்கிறது. தெள்ளத் தெளிவாகத் தெரியும் விஷயத்தில் கேள்வி எழுமா என்ன? போகட்டும்.


செருகளத்தூர் சாமா நல்ல குரல் வாய்க்கப் பெற்றவர். நன்றாகப் பாடுவார். அவர் ஒரு படத்தில் கண்ணனாக நடித்திருந்தார். ” கிருஷ்ண பகவான் குந்தியை “அத்தே”, அத்தே,”ன்னு கூப்பிடற அழகு ஒண்ணே போறும். இன்னிக்கு நாள் முழுக்க கேட்டுண்டே இருக்கலாம் போல இருக்கும்” என்பாள். பாட்டி எனக்கு அப்போது ஒரு தேர்ந்த ரசிகையாகத் தெரிந்தாள். நானும் செருகளத்தூர் சாமாவின் ரசிகன் தான்.


எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து, அதாவது 1935-லிருந்து, நான் நிலக் கோட்டையை விட்டுப் போன 1946 வரை சுமார் 11 வருடங்கள் தொடர்ந்து அந்த கான்வாஸ் கூடாரத்து சினிமாவின் ரசிகனாக இருந்திருக்கிறேன். இரண்டு இடங்களில் வீடு மாறிய போதிலும், அந்தக் கூடாரம் ஒரு பொடி நடையில் சினிமாக் கொட்டகைக்கு பாட்டியுடன் போவதற்கும் , சினிமா பார்க்காத மற்ற நாட்களில் அந்த கூடாரத்திலிருந்து கம்பிக் கிராதி போட்ட திண்ணையில் உட்கார்ந்து கொண்டு சினிமா முழுவதையும் கேட்டுத் திரும்ப அனுபவிப்பதற்கும் தடை இருந்ததில்லை. எத்தனை தரம் அத்தனை சினிமா பாட்டுக்களையும் கேட்டிருப்பேன். சினிமா கொட்டகையின் நேர் எதிர் வீட்டில் இருந்த போது பார்த்த சினிமா எனக்கு ஞாபகமிருக்கிறது. அது தியாக ராஜ பாகவதர் நடித்த அசோக் குமார். குழந்தையைத் தூளியில் போட்டு ஆட்டிக் கொண்டே “கண்மணி நீயே கண்ணுறங்காயோ” என்ற பாட்டும் அந்தக் காட்சியும் இன்னமும் பசுமையாக மனத்தில் உறைந்திருக்கிறது. தினம் சினிமாக் கொட்டகைக்கு வரும் திரளான ஜனங்களையும், பின் ஆட்டம் முடிந்ததும் கலைவதையும் அலுக்காது சலிக்காது திண்ணைக் கிராதி கம்பிகளுக்குப் பின் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்ததும் பதிவாகியிருக்கிறது.


ஒரு புதிய படம் அடுத்த நாள் வரப்போகிறது என்றாலும், புதிய படம் காட்டப் படும் நாளும், ஒரு மாட்டு வண்டியில் பாண்டு வாத்தியத்தோடு நிலக்கோட்டையின் கடைத் தெருவிலும், பின் பக்கத்துப் பட்டி தொட்டிகளிலும் சென்று நோட்டீஸ் வினியோகிப்பார்கள். அந்த வண்டியைத் தொடர்ந்து சிறுவர்கள் ஓடுவார்கள். எத்தனை நோட்டீஸ் தான் அவர்களுக்கு வேண்டும்? அதுவும் ஒரு விளையாட்டு. சனிக்கிழமையன்று நிலக்கோட்டையில் சந்தை கூடும். அன்று மற்ற நாட்களை விட அதிகம் கூட்டம் கூடும். சந்தைக்கு மீனையும், கறிகாய்களையும் எடுத்து வந்த பக்கத்து கிராமத்துக்காரர்களெல்லாம் கொட்டைகைக்கு எதிரே வண்டியை நிறுத்தி மாட்டை அவிழ்த்துக் கட்டி, சினிமா பார்ப்பார்கள். சினிமா பார்த்து முடிந்ததும் அவர்கள் திரும்ப கிராமத்துக்கு வண்டியோட்டியோட்டிச் செல்லும்போது அவர்கள் கேட்ட சினிமா பாட்டைச் சத்தமாகப் பாடிக்கொண்டு தான் செல்வார்கள். அது தியாகராஜ பாகவதரோ பி.யு.சின்னப்பாவோ பாடிய பாட்டாக இருக்கும். அது ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதடீ, மாதரசே மயிலே” யோ அல்லது “யாருக்கு வேண்டுவதிங்கே, மானமில்லார்க்கன்றோ....” வாக இருக்கும். இந்தப் பாட்டுக்கள், இங்கு சிலர் கூறியது போல, “இந்த மண்ணுக்கேற்ற பாட்டுக்களாக” அன்றைய தினம் இருந்தது. அது 1930-க்களின் பின் பாதி அல்லது 40-க்களின் முன் பாதி. இன்று, 2000-10க்களில், நம் தமிழினத் தலைவர், கலைஞர், முத்தமிழ்க் காவலர் அவர்களால் சுப்ரீம் ஸ்டார் என்று புதிதாக ஒரு பட்டத்தை உருவாக்கி (சூப்ப்ர் ஸ்டாராக வேறொருவர் இருந்து விட்டதால்) பாராட்டப் பெற்ற ஷரத் குமாரும், ”மானாட மயிலாட புகழ்” நமீதாவும் அரை நிக்கரில் பள்ளிச் சிறுவர்களாக பாடிக்கொண்டே ஆடிய “வருவீயயா, மாட்டீய்யா” வோ அல்லது, வேறொரு திரைக் காவியத்தில் வந்த “ஓடிப்போய் கல்யாணம் கட்டிக்கலாமா, இல்லே கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா” என்பன போன்ற அருமையான கருத்துக்கள் பொதிந்த பாட்டுக்கள் இன்றை தமிழ் மண்ணுகேற்ற பாட்டுக்களாக உருவெடுத்துள்ளன. அன்று சந்தைக்கு கறிகாய் விற்க வந்த வண்டிக்காரர்களின் ரசனையும் வேறாகத் தான் இருந்தது.


இந்த மண்ணின் குணமும் திறமும், நம் தமிழ் சினிமாக்காரர்களின் கோமாளித் தனத்துக்கும் அதீத பணத்தாசைக்கும் ஏற்ப மாறுகிறதா இல்லை இந்த கோமாளித் தனம் எல்லாம் தமிழ் மண்ணின் குணத்தைத் தீவிரமாக ஆராய்ந்த பின் தான் நம் தமிழ் சினிமாக்காரர்கள் படம் எடுக்கிறார்களா என்பது அடுத்த செம்மொழி மாநாட்டின் பட்டிமன்றத்துக்கேற்ற பொருளாக இருக்கக் கூடும்.


நிலக்கோட்டையில் இருந்த 1946- வரை நான் சினிமா பார்த்த சுமார் 12/13 ஆண்டுகள் நான் அறிந்தது அந்த கான்வாஸ் கூடார சினிமா தான். பெரிய பெரிய சினிமா தியேட்டர்களை நான் அறிந்தவனில்லை. அது நிகழவிருந்தது மதுரை சென்ற பிறகு தான். ஆனால் இன்னமும் மல்டிப்ளெக்ஸ் எதையும் நான் பார்த்தவனில்லை. நிலக்கோட்டையை விட்ட பிறகு நான் சினிமா டூரிங் கொட்டகை எதிலும் சினிமா பார்த்திருக்கிறேனா? ஒரு படம் பார்த்ததாக நினைவு. 1968-ல் என்று நினைக்கிறேன். கும்பகோணம் காவேரிக்கு எதிர்க்கரையில் உள்ள மேலக்காவேரியில் ஒரு கீத்துக் கொட்டகையில் ஒரு படம் பார்த்திருக்கிறேன். அது இன்றைய இயக்குனர் சிகரமான கே. பாலசந்தரின் ‘நாணல்” என்று நினைக்கிறேன். அதற்குப் பின் எனக்கு சினிமா டூரிங் கொட்டகை அனுபவம் கிடைத்ததில்லை.

பங்களிப்பாளர்கள்

Ksubashini மற்றும் Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 23 பெப்ரவரி 2012, 20:27 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,440 முறைகள் அணுகப்பட்டது.