என் நினைவுகளில் பதிந்த அண்ணா
வெங்கட் சாமிநாதன்
நாற்பதுகளின் ஆரம்ப வருடங்களில், அனேகமாக 1943-44 என்று நினைக்கிறேன், நான் படித்துக் கொண்டிருந்த நிலக்கோட்டைக்குப் பெரியார் ஈ.வே.ரா வருகை தந்தார். நிலக்கோட்டையில் திராவிடர் கழகக் கிளை ஒன்றைத் தொடங்கி வைக்க என்று நினைக்கிறேன். ஊர்ச் சுவர்களில் "தன்மானத் திராவிடனே, விழித்தெழு, இன்னமுமா உறக்கம்?" "ஆரியனே வெளியேறு" வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. மாட்டுவண்டியின் இருபக்கங்களிலும் வைக்கப்பட்டிருந்த தட்டிகளில் 'தென்னாட்டு லெனின் பெரியார், தென்னாட்டு இங்கர்ஸால், தென்னாட்டு ஸ்டாலின் பெரியார்" நிலக்கோட்டை வருகையைக் கொட்டை எழுத்துக்களில் அறிவித்தன. அந்நாட்களில், உள்ளூர் டூரிங் டாக்கீஸுக்கு வரும் சினிமாப் படங்களுக்குத் தான் மாட்டுவண்டியின் இருபக்க தட்டிகளில் போஸ்டர் ஒட்டி ஊர்வலம் வரப் பார்த்திருக்கிறோம். அரசியல் தலைவர்கள் வருகைக்குப் போஸ்டர் ஒட்டும் பொருள் வளமோ, வழக்கமோ அப்போது இல்லை.
அப்போது தான் முதல் முறையாக தளபதி சி.என்.அண்ணாத்துரை எம். ஏ பெயரை முதன் முறையாகக் கேள்விப் படுகிறேன். தென்னாட்டு இங்கர் சால் பெயரும் அப்போது தான் எனக்கும் சரி நிலக்கோட்டைக்கும் சரி புதிய அறிமுகங்கள் தான். அப்போது சி.என். அண்ணாதுரையாகத் தான் அறிமுகமானார். அவர் அப்போது தளபதியாகத் தான் இருந்தார். பின்னர் தான் படிப்படியாக அறிஞர், பேரறிஞர் ஆக திக, திமுக வினால் கொண்டாடப்படவிருந்தார். அப்போது தான் இன்னும் சில பெயர்களும் எங்களுக்கு அறிமுகமாயின. டபிள்யு, பி. ஏ. சௌந்திரபாண்டியன் என்றோ, சௌந்திரபாண்டி நாடார் என்றோ இன்னொரு தலைவரும் அறிமுகமானார். வேறு பெயர்கள் நினைவில் இல்லை. இருப்பினும் ஈ.வே.ரா வுக்கு அடுத்தபடியாகப் பட்டங்கள் சகிதம் விளம்பரப் படுத்தப்பட்ட பெயர் தளபதி சி.என்.அண்ணாத்துரை எம்.ஏ வினது தான். அப்போது திராவிடக் கழகத்தில் பட்டங்களோடு கல்வித் தகுதிப் பட்டங்களும் பெயருடன் தவறாது விளம்பரப்படுத்துவது வழக்கமாக இருந்தது. கவனிக்கவேண்டிய விஷயம் அந்த கிளைக் கழக திறப்பு விழாவிற்கு வந்தது ஈ.வே.ரா தான். சி.என்.அண்ணாதுரை வரவில்லை. இருந்த போதிலும் அவர்களது விளம்பரங்களில் அவர் இடம் பெற்றதும் அவர் பெயர் அறிமுகமானதும் அப்படித்தான்.
ஈ.வே.ரா நிலக்கோட்டையின் நாடார் ஹையர் செகண்டரி ஸ்கூலில் தங்க வைக்கப்பட்டார். நாங்கள் சின்னப் பசங்கள் அவரைப் பார்க்கப் போயிருந்தோம். செக்கச் சிவந்த வெண்தாடிக் கிழவர் தரையில் உட்கார்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றித் தொண்டர்கள் பெண்கள். அவர் அன்று மாலை ஒரு ரதத்தின் மீது அமர்ந்திருப்பது போல் ஏதோ ஒரு வாகனத்தில் அமர்ந்திருக்க ஊர்வலம் நடந்தது. அப்படி ஒருவருக்கு விமரிசையான வரவேற்பு நான் பார்த்ததில்லை. அந்த நாடார்கள் பொறுப்பில் இருந்த மாரியம்மன் உற்சவத்தில் கூட அம்மன் ஊர்வலமாகச் சென்ற ஞாபகம் எனக்கில்லை.
நான் இதில் சொல்ல வந்த முக்கிய விஷயம், திராவிடக் கழகக் கிளை தொடங்கப்பட்டதன் விளைவாக கட்சிப் பத்திரிகைகள் வரவழைக்கப்பட்டு படிக்க வசதி செய்யப்பட்டது. கடைத்தெருவில் ஒரு கடை, முன்னர் தகரக்கடையாக இருந்தது காலி செய்யப்பட்டு வாசக அறையானது. பள்ளியிலிருந்து திரும்பும் பாதி வழியில் இருந்ததால் நான் அனேகமாக ஒவ்வொரு மாலையும் அங்கு சிறிது நேரம் பத்திரிகைகள் படிப்பதை வழக்கமாகக் கொண்டேன். எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. அடுத்து வந்த வார திராவிட நாடு இதழில் அந்த கிளைக்கழகம் தொடங்கப்பட்டதும் அதற்காக ஒத்துழைத்த நிலக்கோட்டை வாழ் அன்பர்கள் பெயர் அனைத்தும் அதில் சொல்லப்பட்டிருந்தது. ஒவ்வொரு பெயரும் சிறப்பான அடைமொழிகளோடு சொல்லப்பட்டிருந்தது. 'உழைப்பின் உருவேயான உலகநாதன்', பழம் நீ அல்ல, பழம் நான் என்று சொல்லும் பழனிச்சாமி, சிரித்த முகத்தோடே சீரான பணி செய்த சீனிவாசன், என்று இந்த ரகத்தில் ஒவ்வொருவரும் புகழப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவனை எனக்குத் தெரியும். அவன் பலசரக்குக் கடை ஒன்றில் பொட்டலம் கட்டிக் கொடுக்கும் 16-17 வயது சிறுவன். இப்படித்தான் மற்றவர்களும் இருந்திருப்பார்கள். அவர்கள் பெயர்கள் அச்சில் வந்துள்ளதும், அவர்கள் இப்படி அலங்காரமான வார்த்தைகளில் புகழப்பட்டிருப்பதும் பெரும் உற்சாகத்தைத் தந்திருக்கும். திராவிட நாடு பத்திரிகை, அண்ணாத்துரையின் ஆசிரியத்வத்தில் அவரால் வெளியிடப்பட்டு வந்த பத்திரிகை என்பதைப் பின் வருடங்களில் நான் தெரிந்து கொண்டேன். இதே போல அன்போடும் அரவணைப்போடும், எல்லோரையும் அவரவர் பணிகளுக்கு வாய் நிறையப் புகழ்ந்து தட்டிக் கொடுத்தே தன் தம்பிகளை வளர்த்தார் என்பதை நான் பின் வருடங்களில் நிறைய அவர் தரும் புகழுரைகளை அச்சில் படித்துத் தெரிந்து கொண்டேன். சென்னைக் கார்ப்பரேஷனை திமுக கைப்பற்றிய சாதனைக்கு அண்ணா தனக்கு மோதிரம் ஒன்றைப் பரிசாக அணிவித்ததை கருணாநிதி பலமுறை சொல்லி எழுதிப் பெருமைப் பட்டுக் கொள்வார்.
1948-லோ என்னவோ ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கொண்டாடும் வகையில் ஒரு பெரிய கூட்டம் நடந்தது, கும்பகோணத்தில். அதில் பெரியாரும், அண்ணாவும் வந்து பங்கு கொள்ள விருந்தார்கள். உள்ளூரில் கே.கே. நீலமேகம் என்பவர் தலைவராகத் தெரிய வந்தார். நான் அப்போது பக்கத்தில் என் கிராமத்தில் இருந்தேன். உடையாளூர் கும்பகோணத்திலிருந்து சுமார் ஐந்து- ஐந்தரை மைல் தூரத்தில், மூன்று ஆறுகளைக் கடந்து வயல் வரப்புகளின் வழியே நடந்து செல்லவேண்டும். அப்படித்தான் நான் தினமும் பள்ளிக்குச் செல்வேன். காலை 8 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பிப் பின் மாலை ஆறு அல்லது ஆறரை மணிக்கு வீடு திரும்புவேன். எந்த ஆற்றிலும் தண்ணீர் இல்லாத காலங்களில். தண்ணீர் வந்து விட்டால், கடப்பதற்கு முடியாத ஆழத்திற்கு தண்ணீர் வந்துவிட்டால், கும்பகோணத்திலேயே தங்கி விடுவேன். அப்போது கோடை காலம். விடுமுறை. அண்ணாவின் பெரியாரின் பேச்சுக் கேட்டே ஆகவேண்டும். அம்மாவிடம் ஸ்பெஷல் க்ளாஸ் இருப்பதாகச் சொல்லிச் சீக்கிரம் சாப்பிட்டு விட்டுக் கும்பகோணத்திற்கு நடையைக் கட்டவேண்டும். சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது அப்பா வந்து விட்டார். "என்ன இவ்வளவு சீக்கிரம் சாப்பிட உட்கார்ந்து விட்டான்? என்று அப்பா கேட்க, "ஏதோ ஸ்பெஷல் க்ளாஸாம் போகணுமாம்" என்று அம்மா சொல்ல, " ஸ்பெஷல் க்ளாஸாவது மண்ணாவது, கருப்புச் சட்டைக்காரன்ங்க கூட்டம் நடக்கறது, அதுக்குப் போறான் போல இருக்கு, எப்படியாவது தொலையட்டும் விடு" என்று அப்பா அலட்சியமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
அன்று மாலைக் கூட்டம் காந்தி பார்க்கில் நடந்தது. பெரிய கூட்டம் தான். அப்போதெல்லாம் அந்த வழியாக பஸ்கள் போவதில்லை. பக்கவாட்டிலும் எதிரிலும் இருந்த ரோடிலும் கூட்டம் வழிந்தது. கடைகளின் படிகளில் உட்கார்ந்து கேட்போர் வேறு. எனக்கு இரண்டு விஷயங்கள் நினைவிலிருக்கின்றன. ஒன்று முதன் முறையாகக் கேட்கும் அண்ணாவின் பேச்சு. பின்னாட்களில் நான் இரண்டு மூன்று முறை அவர் பேச்சைக் கேட்டிருக்கிறேன். தெய்வம் கொடுத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும். குரல் எழுப்பாது, தீப்பொறி பறக்காது, வெகு அமைதியாக களைப்போ தொண்டை கமறலோ இல்லாது மணிக்கணக்கில் ஒரு நிமிஷ யோசனையோ, சொல் அகப்படாத தவிப்போ இல்லது, ஒரே சீராக அருவி நீராகக் கொட்டிக் கொண்டே இருக்கும் பேச்சு அது. அதிலும் ஒரு தாள லயம். மொழியில் ஒரு நயம். அவர் பேச்சைக் கேட்பது ஒரு சுக அனுபவம் என்று சொல்லவேண்டும். ஈ.வே.ரா பேச்சில் ஒரு நேரடித் தன்மையும் கொச்சையுமாக இருக்கும். மற்ற திராவிடக் கழகப் பேச்சாளர்கள் பேச்சு அதன் மொழியும் சரி, பொருளும் சரி வெறுப்பூட்டும். ஆபாசமும், கொச்சையான நயமற்ற மொழியுமாக இருக்கும். சீற்றமும் கூச்சலும் நிறைந்திருக்கும். இவர்கள் எல்லோரிடமிருந்து தனிப்பட்டதும், நயமும் இன்ப அனுபவமுமாக பேச்சு அண்ணாவினது. அடுக்கு மொழி தன் இயல்பாக அவருக்கு வந்தது. சொற்களைத் தேடிச் சென்றதில்லை அவர். சொல்ல வந்த விஷயத்திற்கு ஒரு கவர்ச்சியும், லயமும் தருவதாக இருக்கும் அந்த மொழி. அதைப் பின் நாட்களில் அவர் இயல்பாகவே விட்டு விட்டார் என்றே சொல்ல வேண்டும். மற்றவர்களிடம் அது இன்னமும் தொற்றிக் கொண்டு தான் இருக்கிறது.
அன்று அண்ணாதுரை சுமார் நாற்பது நிமிஷங்கள் பேசியிருப்பார். ஈ.வே.ரா தான் கடைசியாகப் பேசவிருந்தவர். அவருக்காகத் தன் பேச்சைச் சுருக்காக முடித்துக் கொண்டார் என்று சொல்ல வேண்டும். ஈ.வே.ரா வின் பேச்சு, திண்ணைப் பேச்சின் வம்பு, கிண்டல், நெருக்க பாவம் இருக்கும். கொச்சை அதற்கு உதவியது. ஆனால் ஆர்வமுடன் மக்கள் கூட்டம் மெய்மறந்து காத்திருந்தது அண்ணாவின் பேச்சிற்குத் தான். அவர் சொல்வதில் பல அவர்களுக்குப் புரியாமலேயே கூட இருக்கக் கூடும். ஆனால் கேட்கக் கவர்ந்திழுக்கும் பேச்சுத் திறன் அவரது. மக்களைக் கவர அவர் வசையையோ, சீற்றத்தையோ, கூச்சலையோ, ஆபாசத்தையோ கையாண்டதில்லை.
ஈ.வே.ராவின் பேச்சில் எனக்குக் குறிப்பாக நினைவில் இருப்பது, அவர் கையில் இருந்த அரசாங்க செய்திப் பத்திரிகை ஒன்று. இப்போது அது தமிழரசு என்ற பெயரில் வருகிறது என்று நினைக்கிறேன். அக்காலத்தில் அதன் பெயர் என்னவாக இருந்தது என்பது என் ஞாபகத்தில் இப்போது இல்லை. அப்பத்திரிகையைப் பிரித்து வைத்துக் கொண்டு அதன் ஒரு பக்கத்தை கூட்டத்திற்கு முன் காட்டி அவர் சொன்னார்: " நான் சொல்லலை. நம்ம கல்வி மந்திரி அவிநாசிலிங்கம் செட்டியாரே சொல்றார். இதோ பாருங்க இந்தப் படத்தை. ஒட்டனுக்குக் கூடத் தெரியும் இது அவினாசிலிங்கம் செட்டியார் படம்னு. அவர் படத்துக்குக் கீழே என்ன எழுதியிருக்கு. நான் படிக்கிறேன்., கேளுங்க....." இப்படிப் போனது அவர் பேச்சு. அவரைத் தவிர வேறு யாரும் "ஒட்டன் கூடச் சொல்வான்..." என்று ஒரு பொதுக்கூட்டத்தில் சொல்லியிருந்தால் அந்த பேச்சாளரைச் சாதிவெறியன் என்று சொல்லிக் குற்றம் சாட்டி ஒரு பெரிய கலவரத்தைத் தூண்டிவிட அதிக சிரமமோ, நேரமோ தேவையாயிருந்திருக்காது. ஆனால் அவருக்கு என்னமும் சொல்ல யாரையும் எதுவும் சொல்ல சுதந்திரம் இருந்தது.
இன்னுமொரு தடவை அண்ணாவின் பேச்சைக் கேட்கக் கும்பகோணத்திலேயே அந்த காந்தி பார்க்கிலேயே ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அதற்கு முன், அன்றைய பிற்பகல் நேரத்தில், கும்பேசுவர ஸ்வாமி கோவிலிலிருந்து மேலக்காவேரி போகும் வழியில் தெரு ஒன்றின் வீட்டுத் திண்ணையில் - குறுகிய தெருதான், சின்ன வீடு தான், அதன் வாசற்படியோரம் திண்ணையின் மரத்தூணுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார் அண்ணா. கூட இன்னும் சிலர். காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு கையில் வைத்திருந்த எதையோ படித்துக் கொண்டிருந்தார். தமிழ் நாட்டின் சரித்திரத்தையே மாற்றியமைக்கப் போகிற சக்தி, அன்று, ஏதோ ஒரு கணக்குப் பிள்ளையின் வீட்டில் நாலு கிராமத்துக் காரர்கள் கூடியிருப்பதைப் போன்ற காட்சியில், அந்த சக்தி உட்கார்ந்திருந்தது. காலம் எப்படி எப்படியெல்லாமோ மாறிவிட்டது. இப்போது எங்கள் ஊர் பஞ்சாயத்து எங்கள் வார்டு கவுன்ஸிலரைக் கூட சுலபமாக நான் பார்த்து விட முடியாது. கவுன்ஸிலர் அளவுக்குப் போகவேண்டாம். பஞ்சாயத்து ஆபீஸில் இருக்கும் ஒரு அடிமட்ட வேலையாளுக்கு இருக்கும் சுய பிம்பமும் அவன் செய்யும் அதிகாரமும் நம்மை வாழ்க்கையையே வெறுக்கச் செய்துவிடும்.
(தொடரும்)
வெங்கட் சாமிநாதன்/11.9.07