உரையாடல் - நா.கண்ணன், உலகன்மரபு விக்கி இருந்து
ENTRY1 Narayanan Kannan <NaaKannan@netscape.net> Dear Friends:
பாசுர மடல் வெள்ளி விழா கொண்டாடுகிறது. இது வரும் வேளை இப்போது சரியா?என்பது கேள்விக் குறியாக உள்ளது. ஜெயபாலனின் கடிதமும், பிலிப்பின் கடிதமும் கொஞசம் தயங்க வைக்கின்றன. மதம் என்பது கெட்ட வார்த்தையாகிப் போனது. அன்பு என்பதும் அர்த்தம் கெட்டுப் போனது. இவ்வேளையில் கடவுளைப் பற்றி பேசுவது ஏடாகூடமாகத் தோன்றுகிறது. நான் என்ன செய்ய?
எனது பாசுரமடல்கள் எப்போதும் இணையத்தின் நாடித்துடிப்பை பார்த்து அதன் தூண்டுதலால் வந்துள்ளன. இந்த 50வது மடலும் அவ்வாறே. இத்தொடர் வந்த போது பலவித எதிர்பார்ப்புக்களுக்கு உண்டானது. இம்மடலின் மொழி தொன்மையான"ஞானத் தமிழாக" இல்லாமல் சாதாரணன் மொழியாக இருப்பது கூட பலருக்கு எரிச்சலைத் தந்தது. தற்போது பெரியாழ்வாரும், ஆண்டாளும் இருந்திருந்தால் உரைநடை என்னும் உத்தியைப் பயன் படுத்தி இன்னும் முற்போக்காவே எழுதியிருப்பர் என்பது என் துணிபு. வேதம், மறை என்பது மிகவும் புனிதமாக்கப்பட்டு சாதாரணனுக்கு அனுக முடியாமல் போய் விட்ட ஒரு கால கட்டத்தில் என் பாசுர மடல்கள் அனாச்சாரமாக ஒலித்ததாகக்கூட கடிதங்கள் வந்திருக்கின்றன.
கி.பி.அரவிந்தன் என்ற ஈழத்துக் கவிஞன் வீட்டிற்கு வந்த போதுதான் வைணவ இலக்கியங்களை ஈழத்தமிழருக்கு அறிமுகப்படுத்த வேண்டிய தேவையை உணர்ந்தேன்.என்னைப் பொறுத்தவரை இதுவும் நம் பண்பாட்டுக் கூறுதான். தமிழ்பேசும் அனைவரும் வாசித்து மகிழ வேண்டியதுதான். அதனால்தான் அடிக்கடி கடவுள் என்பது உருவகம் என்பதை ஞாபகப் படுத்தினேன். திருமால் உசத்தி என் றுசொல்வதற்காக இதை எழுத வரவில்லை. திருமால் ஒரு உருவகம் அவ்வளவுதான்.
உதாரணமாக, நம்மாழ்வார் "கண்ணன் அல்லால் தெய்வமில்லை" என்று சொல்கிறார். அருணகிரியோ, முருகனைப் பாடும் போது: அயனெனவாகி அரியெனவாகி அரனெனவாகி அவர் மேலாய்" என்று பாடுகிறார். விநாயகர் துதி பாடும் பாரதியோ, "வையந்தனையும் வெளியினையும் வானத்தையும் முன் படைத்தவனே, ஐயா! நான்முகப் பிரம்மாயானை முகனே!"என்கிறார். திருமூலரோ, "முன்னை ஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன் தன்னை ஒப் பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்" என்கிறார். ஆக, இவர்கள் பேசுவது ஒன்றைத்தான். அவரவர்க்குப் பிடித்த உருவகத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் உலகின் சண்டைகள் எல்லாம் வெறும் உருவக வார்த்தைகளுக்கு என்று காணும் போது நம் மடமை புரிகிறது.
தமிழ் பாக்கள் நம் எல்லோருக்கும் பொது, பக்தி என்பது அனைத்து சமயங்களுக்கும் பொது. இவையிரண்டும் கெட்டு விடாமல் மடல்கள் செய்துள்ளேன்.
தில்லானா மோகனாம்பாள், ஜில், ஜில் ரமாமணி (மனோரமா) சொல்வது போல் பெரிய கச்சேரிகள் இருக்கும் இணையத்தில் இது ஒரு சின்னக் கச்சேரி. ஒவ்வொன்றிற்கும் ஒரு ரசிகர் கூட்டம்! ஆதரவுக் கடிதங்கள் இல்லையேல் பாசுர மடல் என்றோ நிறுத்தப் பட்டிருக்கும். திவ்யப் பிரபந்தங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் தோண்டத் தோண்ட பல விஷயங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இன்னும் எழுத வேண்டுமா? இல்லையா என்பதை தீர்மானிக்க முடியவில்லை. இணையத்தின் போக்குகள் வெகுவாக மாறிவிட்டன. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு சரடு/சங்கில ¢தோன்றிவிட்ட வேளையில் சித்திரைத் திருவிழாவில் காணாமல் போன பிள்ளை போல் என் பாசுர மடல்கள் நிற்பதாய் உணர்கிறேன்.
ஐம்பதுவரை வருவதற்குக் காரணமான என் இதயக் கனிகளுக்கு நன்றி.
என்றும் அன்புடன் கண்ணன்.
ENTRY 2
அன்புள்ள டாக்டர் கண்ணன் அவர்கட்கு, வணக்கங்களும் வாழ்த்துக்களும். நிற்க தாங்கள் தங்களது பாசுர மடல் 50-இல், தெய்வங்களைப் பற்றி மிகப் பிழையான ஓர் கருத்தைக் கூறியிருப்பதால், நான் சில கேள்விகளைக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். தாங்கள் கூறிய கருத்து கீழே: >
>கி.பி.அரவிந்தன் என்ற ஈழத்துக் கவிஞன் வீட்டிற்கு வந்த போதுதான் வைணவ இலக்கியங்களை ஈழத்தமிழருக்கு அறிமுகப்படுத்த வேண்டிய தேவையை உணர்ந்தேன்.என்னைப் பொறுத்தவரை இதுவும் நம் பண்பாட்டுக் கூறுதான். தமிழ் பேசும் அனைவரும் வாசித்து மகிழ வேண்டியதுதான். அதனால்தான் அடிக்கடி கடவுள் என்பது உருவகம் என்பதை ஞாபகப் படுத்தினேன். திருமால் உசத்தி என்றுசொல்வதற்காக இதை எழுத வரவில்லை. திருமால் ஒரு உருவகம் அவ்வளவுதான்.
உதாரணமாக, நம்மாழ்வார் "கண்ணன் அல்லால் தெய்வமில்லை" என்று சொல்கிறார். அருணகிரியோ, முருகனைப் பாடும் போது: அயனெனவாகி அரியெனவாகி அரனெனவாகி அவர் மேலாய்" என்று பாடுகிறார். விநாயகர் துதி பாடும் பாரதியோ, "வையந்தனையும் வெளியினையும் வானத்தையும் முன் படைத்தவனே, ஐயா! நான்முகப் பிரம்மா யானை முகனே!"என்கிறார். திருமூலரோ, "முன்னை ஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன் தன்னை ஒப் பாய் ஒன்றும் இல்லாத் தலைமகன்" என்கிறார். ஆக, இவர்கள் பேசுவது ஒன்றைத்தான். அவரவர்க்குப் பிடித்த உருவகத்தைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் உலகின் சண்டைகள் எல்லாம் வெறும் உருவக வார்த்தைகளுக்கு என்று காணும் போது நம் மடமை புரிகிறது.>
திருமால் ஓர் உருவகம்,; அதேப் போல கண்ணன், திருமுருகன், நான்முகன் யானைமுகன் போன்ற தெய்வங்கள் அனைத்தும் உருவகங்களே, இந்த ஞானிகள் ஓர் கவிஞனைப் போல தத்தமக்கு விருப்பமான ஓர் உருவகத்தை எடுத்துக்கொண்டு பக்தி பாசுரங்களாக பாடிகின்றார்கள் என்ற கருத்து இங்கே முன்மொழியப் படுகின்றது. உருவகம் என்றால், தான் எழுதும் கவிக்கு அழகு சேர்க்கும் வகையில் அமைகின்ற, அவன் மனத்திலிருந்நு எழுகின்ற ஓர் கற்பனை அல்லது கற்பிதம் எனப்படும். ஆக உள்ளப்படியே மரம் செடி கொடிகள் போல ஆனால் கண்களுக்கு புலப்படாது மறையாகவே நிற்கும் மெய்பொருட்களல்ல தெய்வங்கள் என்று படும். இதனால் எல்லா தெய்வ வடிவங்களும் கற்பிதங்களே என்று மாயாவாத வேதாந்த பரமான ஓர் கருத்தினைச் சொல்லி இருக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன்.
ஆகவே சில கேள்விகள்.
தாங்கள் 'உருவகமே என்று கூறியிருக்க, அதனோடு ஒத்த பொருளுடைய, உவமம் உள்ளுறை உவமம் என்பவற்றோடு தங்கள் கருத்தை சிந்திக்கவேண்டும். இவற்றில் உள்ளுறை உவமம் (metaphore) என்பதை பற்றி தொல்காப்பியர் கூறும் போது, "உள்ளுறை( உவமம் ) தெய்வம் ஒழிந்ததை நிலன் எனக் கொள்ளும் என்ப குறியறிந்தோரே " (தொல். 993) என்று விளக்கி தெய்வம் எனப்படுவது, உவமனாதீதம் என்கின்றார்.அவரே அகத்திணயில்,
" மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்பினல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே "
இங்கு இப்படிபட்ட தெய்வங்கள் மேவி நின்று பலவேறு வகைப்பட்ட அகத்திணை ஒழுக்கங்களை நிறுத்தும் சக்திகள் என்றே பொருள்படக் கூறியுள்ளார். உண்மையாக உலகத்தில் மேவி நிற்கின்ற சக்திகள் என்றால் அவை அற்ப மனிதனின் உருவகங்கள் கற்பிதங்கள் ஆகா என்பதைக் காண்க.
இவரோடு ஒத்துவருவதாக இருப்பது சைவ சித்தாந்நிகள் பலரின் கருத்துமாகும். காட்டாக சிவஞான சித்தியாரில் அருணந்தியார் இவ்வாறு கூருகின்றார்:
தேவரில் ஒருவன் என்பர் திருவுருச் சிவனைத் தேவர் மூவராய் நின்றது ஓரார் முதல் உருபாதி மாதர் ஆவதும் உணரார் ஆதி அரி அயற்கு அறியவொண்ணா மேவுரு நிலையும் ஓரார் அவன் உரு விளைவும் ஓரார். (69)
போகியா இருந்து உயிர்க்குப் போகத்தைப் புரிதல் ஓரார் யோகியா யோகமுத்தி உதவுதல் அதுவும் ஓரார் வேகியானாற்போல் செய்த வினையினை வீட்டல் ஓரார் ஊகியா மூடரெல்லாம் உம்பரில் ஒருவன் என்பர் (70)
இங்கெல்லாம் தெய்வங்கள் கற்பிதங்கள் என்று சொல்லப்படவே இல்லை. தனக்கென்று எவ்வடிமுமில்லா தற்பரனாகிய பரசிவன், ஆன்மாக்களுக்கு பல்வேறு அனுபங்களைத் தந்து அஞ்ஞானம்போக்கி ஞானம் புகட்டி உபகரிக்க அருளின் வெளிப்பாடாக பல வடிங்களை எடுத்து ஆன்மாக்களை மேவி உதவுகின்றான் என்ற கருத்தே வற்புறுத்தப் படுகின்றது.
மேலும் மெய்கண்டார் தமது சிவஞான போதத்து ஏழாம் சூத்திரத்தில்
இல்லா முலைப்பாலும் கண்ணீரும் ஏந்திழைபால் நல்லாய் உளவாமால் நீர்னிழல்போல் -இல்லா அருவாகி நின்றானை ஆர் அறிவார் தானே உருவாகித் தோன்றானேல் உற்று
என்று மறையாகி வெளிப்படாது கன்னிப்பெண்ணின் முலைப்பாலைப் போல தய்மைப் பேறாகிய பக்குவம் உற்ற பொழுதே வளிப்படுமாறுபோல், வெளிப்படுவன் , இவ்வாறு அவனே வெளிப்பட்டு தன்னைக் காட்டினாலே ஒழிய வேறு வழியில் இறைவனை உணரமுடியாது என்று கூறி, இறைவடிவங்கள் கற்பிதங்கள் அல்ல மெய்ப்பொருட்களே அனைதிற்கும் அப்பாலாகி நிற்கின்ற இறைவன் தானெ எடுக்கின்ற வடிவங்கள் என்கின்றார். இதனால் தாம் அவ்வடிவங்களை கோயிலில் வைத்து பிரதிட்டை செய்து வழிப்படுகின்றோம். தொழுகின்றோம், அவற்றின்அருளை வேண்டி தவமிருக்கின்றோம்.
எவனாவது தனது கற்பிதங்களையே தொழுவானா? கோயில் எடுத்து கும்பிடுவானா?பற்பல தவங்கள் செய்து தரிசனம் பெற முயல்வானா? தங்களது மேலான பதில் தேவை
அன்பன் டாக்டர் கி. லோகநாதன்.
ENTRY 3 Narayanan Kannan <NaaKannan@netscape.net> பாசுர மடல் 51 : தமிழ் நயமும், மெய்ப் பொருளும் தெய்வ வடிவங்கள் உருவகமா? என்ற தலைப்பில் முனைவர் லோகநாதன் ஒரு கடிதம் எழுதி அதில் சில சுவாரசியமான கேள்விகளை எழுப்பியுள்ளார். பொது நலன் கருதி அக்கேள்விகளுக்கு இம்மடலில் பதில் தர விழைகிறேன். அவரது கேள்விகள் உருவகம் என்பதை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம் என்பதில் ஆரம்பிக்கிறது. அவர் உருவகம் என்தற்கு கீழ் கண்டவாறு விளக்கம் தருகிறார்: "உருவகம் என்றால், தான் எழுதும் கவிக்கு அழகு சேர்க்கும் வகையில் அமைகின்ற, அவன் மனத்திலிருந்நு எழுகின்ற ஓர் கற்பனை அல்லது கற்பிதம் எனப்படும்."
இதை இப்படித்தான் பொருள் கொள்ள முடியுமாவெனப் பார்ப்போம். அவரது புரிதலின் படி இது அவரது அடுத்த கேள்விகளுக்கு இட்டுச் செல்கிறது. அதாவது,
"ஆக உள்ளப்படியே மரம் செடி கொடிகள் போல ஆனால் கண்களுக்குப் புலப்படாது மறையாகவே நிற்கும் மெய் பொருட்களல்ல தெய்வங்கள் என்று படும். இதனால் எல்லா தெய்வ வடிவங்களும் கற்பிதங்களே என்று மாயாவாத வேதாந்த பரமான ஓர் கருத்தினைச் சொல்லி இருக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். " "எவனாவது தனது கற்பிதங்களையே தொழுவானா? கோயில் எடுத்து கும்பிடுவானா? பற்பல தவங்கள் செய்து தரிசனம் பெற முயல்வானா?"
ஆக இவரது கேள்விகள் இலக்கியம், தத்துவம் மற்றும் வழிபாட்டு முறைகளைத் தொட்டுச் செல்கின்றன.
எனவே உருவகம் என்றால் என்ன? அதை எப்படி நாம் புரிந்து கொள்கிறோம், உருவகம் ஒரு கற்பிதமா? உருவகத்திற்கும் மெய் பொருளுக்கும் உள்ள உறவு என்ன? உருவகம் ஒரு வேதாந்த மாயாவாதமா? இறைமையை உருவகமாகப் பார்ப்பதால் நம் தொன்மையான ஆன்மீக வழிகளைய் கேலிக்குள்ளாக்குகிறோமா என இனி ஆய்வோம்.
உருவகம் எவ்வாறு நம் சாதாரண வாழ்வில் பயன் படுகிறது என்பதிலிருந்து ஆரம்பிப்போம்.
ஒன்றைப் போல் ஒன்று என்று சொல்லும் போது அது உவமை அணி ஆகிறது. உதாரணம், கொடி போல் இடை, பச்சை மா மலை போல் மேனி. இவை உவமைகள். ஆனால் "இது" தான் "அது" என்னும் போது உருவக அணியாகிறது. உதாரணம், விடுதலைப் "புலிகள்", "ஐயோ! அவரைப் பற்றி அப்படிச் சொல்லாதீர்கள்! அவர் பத்திரை மாத்து தங்கம்!" இங்கு ஒரு தேசத்தின் விடுதலைக்காக போராடும் போராளிகள் "புலிகள்" என்று அழைக்கப் படுகின்றனர். இது கற்பிதம் என்று சொல்லலாம், இதை வெறும் வார்த்தைகளாகப் பார்த்தால். ஆனால், இந்த உருவகம் நம்முள் ஏற்படத்தும் தாக்கமோ வேறு விதமாக இருக்கிறது. பாய்ந்து வரும் புலி போல் தாக்கும், வெறி கொண்ட வீரன் நம் கண் முன் தோன்றுகிறான். உருவகம் பொய் என்றால் இக்காட்சி நமக்குத் தோன்றாது. ஒருவரைத் "தங்கம்" என்னும் போது அவரது உயர்வு, நாணயம், பண்பு உடனே நமக்குப் புரிகிறது. இதுதான், உருவகம் நம் மனத்துள் செய்யும் செயல். (வைரமுத்து பாட்டுக்கு பெண்களை"குட்டித் தீவே! 50 கிலோ தாஜ் மகாலே!" என்று உருவகப் படுத்தப் போய் இவ்வுருகங்களை எப்படிப் புரிந்து கொள்வது என்று ஒரு சரடு இணையத்தில் போனது பலருக்கு ஞாபகம் இருக்கலாம்!)
எனவே உருவகம் என்பதை "ஒன்றைச் சொல்ல, ஒன்று வருவது" என்று கொள்ளலாம். இந்த முறையை மீண்டும், மீண்டும் மெய் ஞானிகள் பயன் படுத்தி இருக்கின்றனர். ஏன்?
மெஞ்ஞானிகளில் பலர் நல்ல கவிஞர்களாக இருந்ததால்தான்! அருள் பெற்ற பின் சும்மா, "சிவனே" என்றிறாமல் இவர்கள்,
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் வான்பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின் ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான் பற்றப் பற்றத் தலைப்படும்தானே (திருமந்திரம்)
என்னும் நல்லெண்ணத்தால் கவி செய்யப் புறப்படுகின்றனர். ஞானி என்றாலும் அவன் கவி அல்லவோ, எழுத ஆரம்பித்தவுடன் அவன் கவி உள்ளம் செயல் படத் தோன்றுகிறது. வடலூர் வள்ளலார் பெரும் அருளாலர். அவர் செய்வித்த திருஅருட்பாவைக் கேளுங்கள். கவியும், ஞானியும், தமிழும், மெய்பொருளும் "கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தால் போல" கலந்து நிற்பதை!
கோடையிலே இளைப்பாற்றி கொள்ளும் வகை கிடைத்த குளிர் தருவே! தரு நிழலே நிழல் கனிந்த கனியே! ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே! உகந்த தண்ணீர் டை மலர்ந்த சுகந்த மண மலரே! மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே! மென் காற்றில் விளை சுகமே, சுகத்தில் உறும் பயனே! ஆடையிலே எனை மணந்த மணவாளா! பொதுவில் ஆடுகின்ற அரசே! என் அலங்கள் அணிந்தருளே! (திருஅருட்பா-409 திருக்கோயில் வழிபாடு)
எத்தனை உருவகங்கள்! தருவே! நிழலே! கனியே! மலரே! பூங்காற்றே! அத்தனையும் உருவகங்கள்! மதுரை சங்கத்தாருக்கு பரதத்துவத்தை உணர்த்த நம்மாழ்வார் செய்வித்த பாடலிலும் "தரு" என்ற உருவகத்தைப் பயன் படுத்துகிறார்: (http://www.angelfire.com/ak/nkannan/pasuram40.html).
வார்த்தைகளுக்குள் இறை அனுபவத்தை அடைக்க முடியாத போது கவி உருவகத்திற்கு தாவுகிறான். நம்மாழ்வார் படும் பாட்டைப் பாருங்கள்!
"பாலென்கோ? நான்கு வேதப் பயனென்கோ? சமய நீதி நூலென்கோ? நுடங்கு கேள்வி இ¨யென்கோ? இவற்றுள் நல்ல மேலென்கோ? வினையின் மிக்க பயனென்கோ? வினையின் மிக்க பயனென்கோ? கண்ணன் என்கோ? மாலென்கோ? மாயன் என்கோ? வானவர் ஆதியையே! (திருவாய்மொழி 3.4.6)
"யாழின் இசையே! அமுதே! அறிவின் பயனே! அரிஏறே! (திருவாய் மொழி 5.8.6)
அத்தனையும் உருவகங்கள்! மாலும், கண்ணனும், மாயனும் கூட உருவகங்கள்தான்!
இப்படிச் சொல்வதால் இது மாயாவாதம் ஆகுமா? கடவுளை மரம், தண்ணீர், பூ, பால் என்று உருவகப்படத்துவதால் சிறுமைப் பட்டு போகுமா? இங்குதான் மனிதனின் "anthropomorphic view" வருகிறது. மனிதன், தேவர்கள், கடவுளர் மேல், மற்றவை கீழ் என்று யார் தீர்ப்பு சொல்வது? மரமும், மணமும் சிறுமையானதோ? யார் உசத்தி, யார் தாழ்ச்சி என்று யார் சொல்வது? அது அரசியல் நடு நிலமை கொள்ளுமோ? இதை மிக உணர்ந்துதான் நம் மெஞ்ஞானிகள் பிரபஞ்சம் முழுவதையும் இறையின் வெளிப்பாடாகவே கண்டனர்.
பகலும் இரவும் தானேயாய்ப் பாரும் விண்ணும் தானேயாய் நிகரில் சுடராய் இருளாகி நின்றார்! (பெரிய திருமொழி 7.5.5)
உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை கூட கண்ணன் எம்பெருமான் என்று சொல்பவர் நம்மாழ்வார் (6.7.1). அப்படியிருக்கும் போது எங்கிருந்து வருகிறது மாயாவாதம்? ஆழ்வார்கள் ஒரு இடத்திலாவது நமது வாழ்வைப் பொய் என்றனரா?
"பொலிக, பொலிக, பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்! நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றும் இல்லை! (திருவாய்மொழி 5.2.1)
என்றுதான் சொல்லிப் போயினர். எங்கே, வாழ்வு மாயை என்று மயங்கி விடுவானோ எனப் பயந்து,
"வருந்தா திரு,நீ மட நெஞ்சே! நம்மேல் வினைகள் வாரா!" (பெரிய திருமொழி 8.6.6)
என்றும்,
"வாழி மனமே கைவிடேல் உடலும் உயிரும் மங்க ஒட்டே" (திருவாய் மொழி 10.7.9)
என்றும் சொல்கின்றனர் ஆழ்வார்கள். எனவே இங்கு மாயாவாதம் வரவில்லை.
கடவுள் உருவகம் என்பதற்கான நல்ல சான்று நம் புராணங்களில் காணக் கிடைக்கிறது. இறை அளப்பரியது என்று ஞானிகள் உணர்ந்தனர். அதைப் புராணக் கதைகளாக்கும் போது சைவர்களும், சாக்தர்களும், வைணவர்களும் குசும்பு செய்கின்றனர். இறையின் அடியும் முடியும் காணத் தலைப்பிட்டு, காணாமல் சளைத்த கதைக்கு பல versions இருக்கின்றன. பெரியாழ்வார் versionப் பார்ப்போம்:
இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவரெல்லாம் மந்திர மாமலர் கொண்டு மறைந்து உவராய் வந்து நின்றார்! சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளறை நின்றாய் அந்தியம் போதிது வாகும் அழகனே! காப்பிட வாராய்! (பெரியாழ்வார் திருமொழி 2.8.1)
அதாவது மாமலர் காண இந்திரன், பிரமன், ஈசன் போன்றோர் முயன்று தோற்றனர் என்கிறார். திருமூலர் விடுவாரா?
அடிமுடி காண்பார் அயன்மால் இருவர் படிகண்டிலர் மீண்டும் பார்மிசைக் கூடி அடி கண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல முடிகண்டேன் என்று அயன் பொய்மொழிந்தானே!
என்கிறார். பராத்பரா! பரமேஸ்வரா! பாட்டு ஞாபகம் இருக்கிறதா? "அரி, அயனும் காணா பரமஜோதி! ஆதி, அந்தம் இல்லா பழம் அனாதி!" நம்ம சாக்தர்கள் விடுவார்களா? அவர்களும் ஒரு கதை வைத்திருக்கிறார்கள். மும்மூர்த்திகளுமே தேவியின் அடி, முடி தேடுவதாக.
பரதத்துவத்தை பாண்டியன் சபையில் நிறுவிய பெரியாழ்வார் சொல்வது சரியா? ல்லை, சைவ சித்தாந்தத்தின் பரம குருவான திருமூலர் சொல்வது சரியா? ல்லை பரம பாகவதர்களான சாக்தர்கள் சொல்வது சரியா? எல்லோரும் ஞானிகளே! எல்லோர் சொல்வதும் சரியே! எப்படி? மால், அயன், சிவன் எல்லாம் உருவகங்கள்தான். இதைப் பின்வரும் திருவாய்மொழிப் பாடல் சொல்லும்:
துக்கமில் ஞானச் சுடரொளி மூர்த்தி துழாயலங் கல்பெருமான் மிக்கபல் மாயங்களால்விகிர் தம் செய்து வேண்டும் உருவுகொண்டு நக்கபிரானே டயன்முத லாகஎல்- லாரும் எவையும் தன்னுள் ஒக்க ஒடுக்க விழுங்கவல்லானைப்பெற் றொன்றும் தளர்விலனே! (திருவாய்மொழி 3. 10.9)
காலம், வெளி கடந்து பரந்து நிற்கும் பரம் பொருளை காலம்-வெளி பரிமாணத்தில் தருசிக்க முயலும் போது உருவகங்கள் உதவுகின்றன.
உருவகங்கள் பொய் இல்லை என்று பார்த்தோம். "கன்னல் இனிய பிரானே! நாரணா!" என்று சொல்லும் போது சொல்லொணாப் பரிவும் பக்தியும் தானாக உள்ளத்துள் ஊறித் ததும்புகின்றன. ஒவ்வொரு உருவகங்களுக்கும் இத்தகைய சக்திகள் உண்டு. "சுற்றி நில்லாதே! பகையே! துள்ளி வருகுது வேல்!" என்னும் போது முருகனின் அளப்பரிய காக்கும் சக்தி நம்மைக் காப்பதாய் உணர்கிறோம். "அன்பும், சிவனும் வேறென்பர் அறிவிலார்" என்று திருமூலர் சொல்வது போல் உருவகத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் சண்டை போடுபவர்களை என்ன செய்வது?
அன்புருகும் திருவாசகர் கூட ஒரு சமயத்தில் சளைத்திருப்பது "முக்தி நெறி அறியாத மூர்க்கரோடு முயல்வேனே!" என்ற பாசுரத்தால் அறியலாம். நம்மாழ்வாரும் "சொன்னால் விரோதம் இது! ஆனாலும் சொல்லுவேன்" என்று சொல்கிறார்.
இம்மாதிரிக் கதை விவிலியத்தில் கூட உண்டு. ஏசுவின் சீடர்கள் ஒருநாள் அவரிடம் வந்து, "ஐயா! பரம பிதாவின் அருளாட்சி பூலோகத்தில் வரும் என்று சொல்கிறார்களே அது எப்போது வரும்?" என்று கேட்கின்றனர். அதற்கு ஏசு, "பரமனின் ஆட்சி நடந்து கொண்டுதான் இருக்கிறது. மூடர்காள்! உங்களுக்கு பார்க்கத் தெரியவில்லை!" என்றாராம்.
உருவகம் என்பது ஒரு "world view". மிகவும் ஜனநாயகமான பார்வை இது. முழுமையான பார்வையும் கூட. இப்பார்வை இல்லாத போதுதான் கடவுளின் பெயரால் நாம் சக மனிதனைக் கொடுமை செய்கிறோம்.
Metaphor என்ற ஆங்கில பதத்திற்கு நம் மூத்த தாத்தாவான தொல்காப்பியர் "உவமானதீதம்" என்ற சொல்லைப் பயன்படுத்துவதாக அறிகிறேன். உவமானத்தின் அதீதம் என்ற சொல் அழகாகவே உள்ளது. ஆனாலும், உவமானம் என்பதற்கு "ஒன்றுக்கு ஒப்புமை காட்ட எடுத்துக் கொண்ட பொருள்" என்று சொல்லி "மீன் போன்ற கண்" என்று உதாரணம் காட்டுகிறது, கிரியாவின் தற்காலத் தமிழ் அகராதி.
அதற்குப் பதில் இறை வடிவங்களை "உருவகத்தின் அதீதம்" என்று கொள்ளலாம்தானே?
பாசுர மடல் 51 நிறை கொள்கிறது.
ENTRY 4
"Dr.K.Loganathan" <loga@usm.my>
டாக்டர் கண்ணன் அவர்கட்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும். நிற்க தங்களது மடல் 51 ஐக் கண்ணுற்றேன். தங்களது விளக்கங்களுக்கு நன்றி ஆயினும் ஏற்கனவே பெருங் குழப்பத்தில் இருக்கும் என்னை இன்னும் பெரியவோர் குழப்பத்தில் ஆழ்த்துவதாக தங்களது பதில் அமைந்திருக்கிறது என்று கூறும் அதேப் பொழுது, அதற்கு தங்களை குறை கூறவும் தயங்குகின்றேன். தண்டியலங்கார ஆசிரியர் முதற் கொண்டு தொல்காப்பியர் கூறிய உவமம் உள்ளுறை உவமம் (metaphor) என்பதை உவமம் உருவகம் என்று கொண்டதால்தான் மந்திர வடிவங்களாகிய தெய்வங்களை மனதின் வழி எழுகின்ற உருவகங்கள் என்று பிழையாகக் கொள்ள நேர்ந்துள்ளது என்றும் நினைக்கின்றேன். தெய்வங்கள் உருவகங்கள் அல்ல , மறையாயிருந்து வெளிப்பட்டு நம்மை ஆட்சி செய்கின்ற மந்திர வடிவங்கள். பொறிலியப் பார்வை நூலியப் பார்வை நுதலியப் பார்வை என்று பார்வைகளை வளர்த்துக்கொண்டே செல்லும் போது நுதலியப் பார்வை தொடங்கி தரிசனமாகின்ற மெய்பொருட்கள். அருணந்தியார் காட்சிகளை வகை செய்யும் போது, வாயிற்காட்சி மானதக் காட்சி தன்வேதனை காட்சி யோகட் காட்சி என்று விளக்கி, மலங்களை வாட்டி ஆன்மா சுத்தம் அடையும் போது எழுகின்ற திறன்களே யோகக் காட்சி என்றும் யோகட் காட்சி போன்றவை தெய்வங்களை தரிக்க உதவுவன என்றும் கூறுகின்றார். இதற்குப் பின் தோன்றிய சிவநெறிப்பிரகாசத்தில், இதுவே விஞ்ஞானக் காட்சி என்றும் சிவஞானக்காட்சி என்றும் கொள்ளப்படுகின்றது. தெய்வங்கள் பல்வேறு வடிவங்களில் அகத்தே இருக்கின்றன, சாதாரண நிலையில் பொறிலியப் பார்வையிலேயே மாட்டிக்கொண்டு உழலும் மாந்தர்களின் கண்களுக்கு புலப்படாது நிற்க, நுதலியப் பார்வை(ஞானக் கண்) கிட்டிய மாந்தர்கட்கு அவை காண வருகின்றன. யாண்டுமே இருக்கின்றவொன்றை முதலில் கண்டு மகிழ முடியாதிருந்து பிறகு கண்டு மகிழ வருவதை உ ருவகங்கள் என்று கூற் முடியுமா என்பதே நமது கேள்வியாகின்றது.
உடலில் நோய்க் கிருமிகள் இருக்கின்றன. நுண்பெருக்கி இல்லாது காணமுடியாது போக, நுண்பெருக்கியை வைத்துக்கொண்டு காணமுடிகின்றது. அதுபோல இருப்பதை காணாக்குருடாக இருந்து காணவல்லானாகும் போது மெய்யாகின்ற தெய்வ தரிசனத்தை, அதனால் ஏற்படுகின்ற மேலான தெய்வீக அனுபவங்களைத் உலகத்து எல்லா ஞானிகளும், நம் ஆழ்வார்களும் நாயன்மார்களும் உட்பட, பாடியும் பல்வேறு வகையில் பகர்ந்தும் சென்றுள்ளனர். இப்படி காண முடியா நிலையிலிருந்து உயர்ந்து ஞானக் கண்ணின் கண்டு அதனை மொழிப் படுத்தும் போது அது எப்படி உருவகமாகும் என்று தான் எனக்குப் புலப்படவில்லை.
தாங்கள் கூறுவதுபோலத்தான் தண்டி முதற்கொண்டு, உருவகத்தை தமிழ் இலக்கணப் புலவர்கள் விளக்குவர். இந்த தண்டி வடமொழி காவியதரிசனம் எழுதிய அதே தண்டி தான் என்றே பலர் கொள்கின்றனர். காட்டாக: தண்டிபொருளணியியலை விளக்கும் போது:
தன்மை உவமை உருவகம் தீவகம் பின்வருனிலையே முன்ன விலக்கே வேற்றுப் பொறுள்வைப்பேஎ வேஏருமை விபாவனை ஒட்டே அதிசயம் தற்குறிப் பேற்றம் ஏது நுட்பம் இலேன நிரனிறை ஆர்வ மொழிசிவை தன்மேம் பாட்டுரை பரியாயம்மெ சமாயித மூத்தாத்தம் அரிதுணர் அவநுதி சிலேடை விசேடம் ஒப்புமைக் கூட்டம் மெய்ப்படு விரோதம் மாறுபடு புகழ் நிலை புகாழப் புகழ்ச்சி நிதரிசனம் புணர்நிலை பருவருத்தனையே வாழ்த்தொடு சங்கீரணம் பாவிகம் இவை ஏற்ற செய்யுட் கணி ஏழைந்தே
இங்கு நாம் கருத வேண்டியது, தொல்காப்பியர் பகர்ந்திருந்த உள்ளுறை உவமம் நீக்கப் பட்டு அவ்விடத்தில் உருவகம் சேர்க்கப்பட்டிருப்பதாகும். இங்கு பண்டைய தமிழ் மரபொன்று அழிக்கப்பட்டு வடமொழிச் சார்பான ஓர் மரபு புகுத்தப்பட்டிருப்பதைக் நாம் காணவேண்டும். இப்படி வடமொழி மரபு தமிழில் புகுந்தது தவறு என்று நான் கூறவில்லை. ஆனால் முன்பிருந்த ஓர் அற்புதமான சிந்தனை ஆழத்தை இந்த திருப்பத்தால் இழந்து விட்டதால்தான், மந்திர சொரூபங்களாகிய தெய்வ வடிவங்களை மனதில் எழு உருவகங்கள் என்று கொள்கின்ற போக்கு வளர்ந்துள்ளதென்று நினைக்கின்றேன்; அப்போக்கு ஓர் பிழையானப் போக்கு என்று அறியாதே டாக்டர் கண்ணன் அவ்வழி சென்றுள்ளார் என்றும் நினைக்கின்றேன்.
உடன் ஓர் கேள்வி எழுகின்றது. தெய்வங்கள் மந்திர சொரூபங்கள் என்பது ஓர்புறம் இரூக்க, உள்ளுறை உவமத்திற்கும் அதற்கும் என்னத் தொடர்பு? மேலும் உள்ளுறை உவமத்தை உருவகமாகக் கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்? என்ற கேள்விகள் எழும். இணைய அன்பர்கள் சாதாரண மக்கள் இல்லையே? இந்த "உருவகம்" என்றால் என்ன? டாக்டர் கண்ணன் கூறுகின்றார்: ஒன்றைப் போல் ஒன்று என்று சொல்லும் போது அது உவமை அணி ஆகிறது. உதாரணம், >கொடி போல் இடை, பச்சை மா மலை போல் மேனி. இவை உவமைகள். ஆனால் "இது" >தான் "அது" என்னும் போது உருவக அணியாகிறது. உதாரணம், விடுதலைப் "புலிகள்", >"ஐயோ! அவரைப் பற்றி அப்படிச் சொல்லாதீர்கள்! அவர் பத்திரை மாத்து தங்கம்!" >இங்கு ஒரு தேசத்தின் விடுதலைக்காக போராடும் போராளிகள் "புலிகள்" என்று அழைக்கப் >படுகின்றனர். இது கற்பிதம் என்று சொல்லலாம், இதை வெறும் வார்த்தைகளாகப் >பார்த்தால். ஆனால், இந்த உருவகம் நம்முள் ஏற்படத்தும் தாக்கமோ வேறு விதமாக >இருக்கிறது. பாய்ந்து வரும் புலி போல் தாக்கும், வெறி கொண்ட வீரன் நம் கண் முன் >தோன்றுகிறான். உருவகம் பொய் என்றால் இக்காட்சி நமக்குத் தோன்றாது. ஒருவரைத் >"தங்கம்" என்னும் போது அவரது உயர்வு, நாணயம், பண்பு உடனே நமக்குப் புரிகிறது. >இதுதான், உருவகம் நம் மனத்துள் செய்யும் செயல். (வைரமுத்து பாட்டுக்கு பெண்களை >"குட்டித் தீவே! 50 கிலோ தாஜ் மகாலே!" என்று உருவகப் படுத்தப் போய் இவ்வுருகங்களை >எப்படிப் புரிந்து கொள்வது என்று ஒரு சரடு இணையத்தில் போனது பலருக்கு >ஞாபகம் இருக்கலாம்!) ஆக இதுதான் அது எனும் போது உருவகம் ; இதுபோல அது எனும் போது உவமை. மேலும் "ஒன்றைச் சொல்ல , ஒன்று வருவது" என்றும் கூறுகின்றார். தண்டியும் ஏறக்குறைய இவ்வாறுதான்:
உவமையும் பொருளும் வேற்றுமை யொழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகம் ஆகும்
என்கின்றார். இவற்றில் விரியுருவகம் என்ற ஒன்றை விளக்கப் புகுகையில்,
அங்கை மலரும் அடித்தளிரும் கண்வண்டும் கொங்கை முகிழுங்குழற்காரும்-- தங்கியதோர் மாதர்க் கொடியுளதா நண்பா! வதற்கெழுந்த காதற் குளதோ கரை.
அழகிய கையை மலரென, அடிகளைத் தளிரென கண்களை வண்டென கொங்கைகளை அரும்புகளென குழல்களை மேகமென, ஓருவன் ஓஒர் நங்கையைக் காணும்போது இப்படிப்பட்ட உருவகங்கள் என்கின்றன. ஆக தெய்வ வடிவங்கள் உருவகங்கள் எனும் போது ஒன்றினை பிறிதொன்றாகக் காணும் திறத்தினால் எழுவது என்றே பொருள்படும். குழல்கள் உள்ளே மேகங்கள் மறைந்நிருக்கவில்லை; கண்கள் உள்ளே வண்டுகள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கவில்லை. கற்பனைத்திறன் மிக்க ஒருவன் காமவயப்பட்டவனாக ஓர் இளம்பெண்ணைக் காணும் போது, அவனுக்கு அவளது கண்கள் அழகில் வண்டுகளாய்த் தோன்றுகின்றன. பிற அவயவங்களும் அவ்வாறே. ஆனால் அதே இளம்பெண்ணை முற்றும் துறந்த ஓர் முனிவர் பார்க்கும் போது இப்படிப்பட்ட கற்பனைகள், எண்ண வோட்டங்கள் தோன்றா. ஆக உருவகங்கள் என்பன, ஒருவனது பக்குவ நிலைக்கு ஏற்றவாறு இச்சைகளின் போக்கிற்கு ஏற்றவாறு அமையும் பார்வையின் போக்குகள் என்றாகின்றன.
இந்த அடிப்படையிலேயே டாக்டர் கண்ணன் அவர்கள் சிவன் திருமால் பிரமம் நாரணன் போன்ற வடிவங்கள் உருவகங்கள் என்கின்றார்.
பரதத்துவத்தை பாண்டியன் சபையில் நிறுவிய பெரியாழ்வார் சொல்வது சரியா? >இல்லை, சைவ சித்தாந்தத்தின் பரம குருவான திருமூலர் சொல்வது சரியா? >இல்லை பரம பாகவதர்களான சாக்தர்கள் சொல்வது சரியா? எல்லோரும் >ஞானிகளே! எல்லோர் சொல்வதும் சரியே! எப்படி? மால், அயன், சிவன் எல்லாம் >உருவகங்கள்தான். மேலும்:
உருவகம் என்பது ஒரு "world view". மிகவும் ஜனநாயகமான பார்வை இது. >முழுமையான பார்வையும் கூட. இப்பார்வை இல்லாத போதுதான் கடவுளின் >பெயரால் நாம் சக மனிதனைக் கொடுமை செய்கிறோம். > ஓஎ அழகிய மங்கையை நோக்கும் ஓர் இளைஞனின் பார்வையும் ஓர் முனிவனின் பார்வையும் வேறுபடுவதுபோல, அதற்கேற்ப வெவ்வேறு உணர்வுகள் சனிப்பது போல இந்த ஞானிகளின் பார்வை. பொருள் ஒன்றுதான் ஆனால் பார்வைகள் தான் வேறு அதனால்தான் பேதங்களும் பிணக்குகளும் என்கின்றார் டாக்டர் கண்ணன்.
இது உள்ளுறை உவமையை உருவகமாகியதால் வந்த பெரும்பிழை என்றே நினைக்கின்றேன். தெய்வங்கள் மெய்ப்பொருளென பார்க்கின்றவன் ஓர் இளைஞனாக இருக்கட்டும் ஓர் முனிவனாக இருக்கட்டும், காட்சி வேறாகாது; பார்ப்போர் பார்வைக்கு ஏற்ப மாறிகொண்டே செல்வது பொய்பொருள்; மெய்ப்பொருள் அல்ல. பார்வைகள்வேறுபட்டாலும் தான் வேறுபடாது ஒன்றேயாக நிற்பன தெய்வங்களாகும். பார்வைக்கு பார்வை வேறுபடும் உருவகங்களாக அவற்றை ஆக்கும் போது, அவற்றை பொய்கற்பிதங்களாக ஆக்கி விடுகின்றோம். ஆக ஆழ்வார்கள் மாயாவாதம் கூறவில்லைதான், திருவாய்மொழியைத் திறம்பட ஆய்ந்த மணவாள மாமுனிகளோ இராமானுஜரோ மாயாவாதம் கூறவில்லை. ஆனால் டாக்டர் கண்ணன், தெய்வ வடிவங்கள் உருவகங்களே என்று கூறுவதின், இந்த மேலான ஞானிகட்குப் புறம்பாக மாயாவாதம் போன்றை ஒன்றைக் கூறுகின்றார் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
சரி, உருவகத்தை விட்டு விட்டு உள்ளுறை உவமாகக் கொண்டால் எப்படி இதனைத் தவிர்க்கமுடியும்? அதற்கு வருகின்றேன் இப்பொழுது.
திரு மணி வண்ணன் அவர்கட்கு இங்கோர் விளக்கம். தொல்காப்பியர் 'உவமானாதீதம்' என்று சொல்லவில்லை. நானே அவரது கருத்திற்கு இப்படி பெயர் வைத்துள்ளேன். அவர் உள்ளுறை உவமம் என்பது, " தெய்வம் ஒழிந்ததை நிலன் எனக் கொள்ளும் என்ப" என்று கூற, அதாவது, தெய்வம் உள்ளுறை உவமத்திற்கு நிலனாக அமையாது என்று கூறி அப்பாலாக்கிவிட, அதனாலேயே தொல்காப்பியர் தெய்வத்தை உவமானாதீதம் என்கின்றார் என்றேன்.
தொல்காப்பியர் உள்ளுறை உவமத்தை விளக்கும் போது அகத்திணையியலில் கீழ்வரும் சூத்திரத்தைத் தருகின்றார்.
994. உள்ளுறுத்து இதனோடு ஒத்துப்பொருள் முடிக என உள்ளுறுத்து இறுவதே உள்ளுறை உவமம்
என்கின்றார். அதாவது ஓர் பொருளைக் காணும் போது அதற்கு அனைவராலும் காணவரும் புறவுருவொடு, புதையுருவாக இருக்கும் உள்ளுருவை கண்டு, அதாவது உள்ளுறுத்து அதனோடு பிறிதொன்றினை ஒத்து பொருள் முடிக்க அதுபொழுது எழுவதே உள்ளுறை உவமம் என்கின்றார். இதைதான் ஆங்கிலத்தில் "metaphor" என்கின்றேன். ஓர் பொருளைக் காணும் போது யார் இவ்வாறு காண்கின்றார்களோ அவர்கள் அனைவருக்கும் ஒரே படித்தாய் காண வருவது இப்படிப்பட்ட புதை உருக்கள். காணக் கண் உடையோர் காண்கின்றனர், அக்கண் இல்லாதார் காணாக்குருடர்களாகத் திரிகின்றனர்.
தெய்வ வடிவங்கள் இத்தகைய புதையுருக்கள், மறை வடிவங்கள், மந்திர சொரூபங்கள், பார்வைக்குப் பார்வை வேறுபடும் உருவகங்கள் அல்ல. மரஞ் செடி கொடிகள் போல மெய்யா இரூக்கின்ற மந்திர வடிவங்கள்; ஒருவன் பார்க்கின்றானோ அல்லையோ, அவை இருக்கின்றன. ஆக பார்வைகள் இல்லாத போது தாமும் இல்லாவாகின்ற உருவகங்கள் அல்ல. ஏதோ என் அற்ப அறிவிற்கு எட்டிய அளவிற்கு எனது விளக்கங்களைத் தந்துள்ளேன். பிழைகள் இருந்தால் தயங்காது சுட்டிக் காட்டவும். அன்பன் டாக்டர் கிலோகநாதன்
ENTRY 5 "K.M. Sulaiman" <sulaiman44@hotmail.com>
அன்பிற்குரிய கண்ணன் & லோகநாதன் அண்ணன்கள் என் சந்தேகத்தைத் தீர்த்துவைப்பார்களா ? இறைவன் இப்படித்தான் இருப்பான் என யூகித்து உணரக்கூடிய அளவிற்கு, ஆற்றலுள்ள அறிவு மனிதர்களுக்கு இல்லை என்பதே என் கருத்து. நம் கண்களால் பார்த்த ஸ்தூலமான வடிவங்களின் அடிப்படையில் மட்டுமே, நமது கற்பனைகள் வடிவமைக்கமுடியும். டினோசர்ஸ் என்கிற மிருகத்தைப்பற்றிக்கூட, நாம் அறிந்தப்பின்தான்,அப்படி ஒரு வடிவ அமைப்பைப் பற்றியே நாம் யோசிக்கத்தொடங்கினோம்.
நமது கற்பனைகள் கை, கால், உடல், முகம், என்கிறமாதிரியான ஒரு வட்டத்தைத் தாண்டிப்போகவேயில்லை. ஏனேனில், அவைகளை மட்டும்தான் நாம் பார்த்திருக்கிறோம்.
இப்போது யானைக்கு கற்பனை சக்தியிருக்குமானால், இறைவன் தன்னைப்போல்தான் ருப்பான் என நினைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.:-) இப்படி ஒவ்வொரு ஜீவராசிகளும் (கற்பனை சக்தி இருக்குமானால்) இறைவன் தன்னைப்போல்தான் இருப்பான் என நினைக்க வாய்ப்பிருக்கிறதல்லவா ?
இந்த உலகில் நாம் கண்டதையும்-கேட்டதையும் வைத்துமட்டும்தான் நமது கற்பனைஎதையுமே வடிவமைக்கிறது. இறைநம்பிக்கையுள்ள நாம் இறைவனை நம் கற்பனைக்குள் அடைக்கவே பார்க்கிறோம். அவனை மாபெரும் சக்தி என்றும், அவனே ஆதியும்-அந்தமும் என்று சொல்லிக்கொள்கிற நாமே, நம்முடைய மிக, மிக, பலஹீனமான சிந்தனைக்குள் இறைவனை சித்தரிக்கப்பார்க்கிறோம்.
இந்த அண்டசராச்சரங்களையும் ஆளத்தெரிந்ததாக நாம் நம்புகிற இறைவனுக்கு,நம் கற்பனைக்கு எட்டாமல், சூட்சுமமாக நிற்கமுடியாதா ? நேற்று நடந்ததை மறந்துப்போகிற, நாளை நடக்கப்போவதைஅறிய முடியாத சிற்றறிவுள்ள பலஹீனமான மனிதன்.கடவுளை உருவகப்படுத்தமுடியும் என்பது நம்பக்கூடிய விசயமா ? அன்புடன் தம்பி சுலைமான்.
பி.கு. இது மத ம்சமபந்தப்பட்ட விவாதத்திற்காக அல்ல !
ENTRY 6 "Mani M. Manivannan" <manim@ix.netcom.com> சுலைமான் அண்ணன் அவர்களே,
(நான் அண்ணனா இருந்து அலுத்துப் போச்சு, கொஞ்ச நாளைக்கு, நீங்க அண்ணனா இருந்துக்குங்களேன்!)
>இறைவன் இப்படித்தான் இருப்பான் என யூகித்து உணரக்கூடிய அளவிற்கு, >ஆற்றலுள்ள அறிவு மனிதர்களுக்கு இல்லை என்பதே என் கருத்து. >நம் கண்களால் பார்த்த ஸ்தூலமான வடிவங்களின் அடிப்படையில் மட்டுமே, >நமது கற்பனைகள் வடிவமைக்கமுடியும். டினோசர்ஸ் என்கிற மிருகத்தைப்பற்றிக்கூட, நாம் >அறிந்தப்பின்தான்,அப்படி ஒரு வடிவ அமைப்பைப் பற்றியே நாம் யோசிக்கத்தொடங்கினோம்.
இப்படியெல்லாம் புரியாத மொழியிலே எழுதறீங்க! "ஸ்தூலம்"முன்னா என்னான்னு கற்பனை பண்ணி மண்டை காஞ்சு போச்சு. அதே போல "வஸ்து"ன்னும் எழுதனாங்க. என்னாடாயிது வஸ்து சாஸ்திரத்துக்கும், ஸ்தூலத்துக்கும், கடவுளுக்கும் என்னா சம்பந்தம்முன்னு யோசிச்சேன். என்னவோ தெரியலை, கடவுளைப் பத்திப் பேச ஆரம்பிச்சாலே போதும், "டெக்னிக்கலா" பேசவேண்டிய இடத்துலே எல்லாம், தமிழிலே வழக்குலே ல்லாத வார்த்தையெல்லாம் பயன்படுத்தறீங்க. சரி அதை விடுங்க. "சப்ஜெக்டு"க்கு வருவோம்.
றைவன் இப்படித்தான் இருப்பான் என யூகித்து உணரக்கூடிய அளவிற்கு, ஆற்றலுள்ள அறிவு மனிதர்களுக்கு இல்லையா இருக்கிறதா என்பதெல்லாம், மிகவும் ஆழமான சிந்தனைகள். "கடவுள்" என்ற கருத்துக்கே அடிப்படை லக்கணம் வகுக்கும் சிந்தனைக்கு இவை நம்மை அழைத்துச் செல்லும். அதையும்விட, 'மனிதன்' யார் என்ற அடிப்படை இலக்கணமும் இதன் நேரடி விளைவு.
"God created Man in His Image" "கடவுள் மனிதனைத் தன் வடிவில் படைத்தார்"
இது உயூத, கிறித்தவ, இஸ்லாமிய மதங்களின் அடிப்படை நம்பிக்கை ல்லையா? கடவுள் தன் வடிவில் மனிதனை படைத்தார் என்பதன் பொருள் என்ன? கடவுள் பல தன்மைகளை மனிதனுக்கு அவர் கொடுத்தாரா இல்லையா?
இதன் உண்மையான பொருள் என்னவோ, ஆனால், இன்று வரை எல்லா மனிதர்களும் கடவுளுக்கு முன்பு சமம் என்ற நம்பிக்கை தன் அடிப்படையில் எழுந்தது இல்லையா? எல்லா மனிதர்களும் கடவுளின் வடிவில் என்றால், இதில் உயர்வேது தாழ்வேது?
இங்கே தலையிலிருந்தோ, காலிலிருந்தோ தனித்தனி மனிதர்கள் படைக்கப் பட்டனர், அதனால் அவர்களில் உயர்வு தாழ்வு உண்டு என்ற நம்பிக்கை வர வாய்ப்பில்லை. அதனால்தானோ என்னவோ, அடிமைத்தளைகள் உடைந்து, தனிமனித உரிமை இயக்கங்கள் முதலில் தோன்றிய மண், உயூத கிறித்தவ நம்பிக்கைகள் வேரூன்றிய மண்.
மனிதனைத் தன் வடிவில் கடவுள் படைத்தார் என்று நம்பினால், தன்னை முழுவதும் அறிந்து கொள்ளும் ஆற்றலை மனிதனுக்குக் கடவுள் தராமல் இருந்திருப்பாரா என்ற கேள்வி எழுவதும் இயற்கை. மனிதனுக்கும், ஏனைய விலங்குகளுக்கும் இதுதான் அடிப்படை வேறுபாடு இல்லையா? அவை கடவுளின் வடிவில் படைக்கப் படாத உயிர்கள். மனிதனுக்கு ஆறறிவு உண்டு, மற்ற விலங்குகளுக்கு ல்லை. "நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்" என்று நம்பினால், றைவனை அறிந்து கொள்ளும் ஆற்றல் நம்மிடையே புதைந்து கிடக்கிறது என்றும் நம்புவதில் என்ன தவறு?
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன் பிரிமான்ட், கலி., அ.கூ.நா.
ENTRY 7
அன்புள்ள சுலைமான்:
பாசுர மடலுக்கு பதில் அளித்தமைக்கு நன்றி. உருவகத்தை புரிந்து கொள்வதும் எளிது, குழப்பி அடிப்பதும் எளிது. தயவுசெய்து மனிதன் உருவகப்படுத்திக் கடவுளைப் படைக்கிறான் என்று நான் சொல்வதாகப் புரிந்து கொள்ள வேண்டாம். நான் சொல்ல வருவதெல்லாம் வார்த்தைக்குள் அகப்படாத மறை பொருள் அனுபவித்தை பதிப்பிக்க எண்ணும் போது கவிஞன் உருவக அணியை அதிகம் பயன் படுத்துகிறான் என்பது. நீங்கள் உங்கள் குழந்தையை ஒரு முறையாவது "என் சக்கரைக் கட்டி" என்று கொஞ்சியதில்லையா? கொஞ்சம் கவித்துவம் கூடினால் "குழல் இனிது, யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழழைச் சொல் கேளாதார்" என்று சொல்லாம். அடிப்படை, அன்பு என்பது அளப்பரியது, அதை வார்த்தைகளில் கட்டமைக்க முடியாது. "அச்சு, பிச்சென்று" ஏதாவது உளறி வைக்கிறோம். ஒருவகையில் இறை அனுபவத்தை பதிப்பிக்கும் போது கவிஞன் இந்த நிலையில்தான் உள்ளான்! அப்படிச் சொல்வதால் குழந்தை "சக்கரைப் பாகு" என்றும் இறைவன் மரம் என்றும் கொள்ள முடியுமோ? சொல்லுகின்ற பாங்கைக் குறித்து எழுவதுதான் "உருவகம், உள்ளுறை உவமம்" எல்லாம். எந்த வகையிலும் இறைமையை, அதன் புனிதத்தை குறைத்து மதிப்பவன் கண்ணன் என்று எண்ணவேண்டாம். கடவுளை Metaphor என்று பார்த்துப் பழகும் போது வெவ்வேறு விதமாக இறை அனுபவத்தைச் சொல்லும் பல்வேறு மதங்களின் கருத்துக்களை பிரச்சனையில்லாமல் பார்க்க முடியும். து ஒரு நோக்கு-அவ்வளவுதான். இதுதான் இறைவன் என்ற கட்டியம் கூற கண்ணன் யார்?
"எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பது அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராமரமே! (தாயுமானவர்)
அன்புடன் கண்ணன்.
ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க! வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க! -
மாணிக்கவாசகர்
ENTRY 8
Dr.K.Loganathan" <loga@usm.my>
அன்புள்ள சுலைமான், உன்னை மீண்டும் இன்னொரு வகையில் சந்திப்பதைப் பற்றி மகிழ்ச்சி. நாம் அனைவருமே அறியாமையில் இருக்கின்றோம். ஒவ்வொருவரும் தத்தமக்கு உகந்த வழிகளில் அந்த பொல்லாத அறியாமையை அகற்றி ஞானத்தெளிவு அடைந்து அமைதி அடைய முயல்கின்றோம். நான் சென்ற வழியிலே நான் அடைந்த தெளிவுகளை உன்னோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. இப்படிச் சொல்ல சொல்ல எனக்கும் இன்னும் தெளிவாகிக் கொண்டே செல்கின்றது. டாக்டர் கண்ணன் ஓர் வகையில் விளக்கம் தருகின்றார். உருவகமும் உள்ளுறை உவமமும் ஒன்றுதான் வேறல்ல என்ற எண்ணத்தில் அவர் விளக்கம் செல்கின்றது. நான் இவற்றிற்கிடையே ஓர் அடிப்படையான பேதத்தைக் காண்கின்றேன், அதனால் விளக்கமும் வேறாகின்றது.
கீழே நீ சொன்னது.
றைவன் இப்படித்தான் இருப்பான் என யூகித்து உணரக்கூடிய அளவிற்கு, >ஆற்றலுள்ள அறிவு மனிதர்களுக்கு இல்லை என்பதே என் கருத்து. >நம் கண்களால் பார்த்த ஸ்தூலமான வடிவங்களின் அடிப்படையில் மட்டுமே, >நமது கற்பனைகள் வடிவமைக்கமுடியும். டினோசர்ஸ் என்கிற மிருகத்தைப்பற்றிக்கூட, நாம் >அறிந்தப்பின்தான்,அப்படி ஒரு வடிவ அமைப்பைப் பற்றியே நாம் யோசிக்கத்தொடங்கினோம்.
இதனைப் படித்ததும் உடன் திருமூலரின் ஓர் பாடல் எனக்கு நினைவிற்கு வந்தது. என் கண்களைத் திறந்துவிட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.
174. எவ்வாறு காண்பான் அறிவு தனக்கு எல்லை அவ்வாறு அருள்செய்வன் ஆதியரன் தானும் ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடுஞ் செவ்வானிற் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கமே
இறைவனை நாம் ஊகித்து இப்படி இருப்பான் அப்படியிருப்பான் என்று கற்பனை செய்ய வேண்டுவதில்லை. அனுபவங்கட்கு அகப்படும் தூலமாகிய பருபொருட்களளைக் கொண்டு நாம் பலவாறு கற்பனை செய்யலாம், உருவகப் படுத்தலாம். ஆனால் இவற்றிற்கு வேறாக தானேத் தன்னை வெளிபடுத்திக்காட்டும் இறைவனை அவன் எவ்வாறு தன்னைவெளிப்படுத்திக் காட்டுகின்றானோ அவ்வாறேக் காணும் போதே நமக்கு இறைவனைப் பற்றிய மெய்யறிவு சித்திக்கின்றது. இவ்வாறு தன்னையே தான் வெளிபடுத்தி அருளும்போது, ஒவ்வொரு ஆன்மாவின் அறிவின்எல்லைக்குத் தக்கவாறு வெளிப்படுத்தி ஆகவே ஏதாவதோர் முறையில் அந்த ஆன்மா இறையுணர்வு பெரும் வகையில் அருளுகின்றான் என்பதே இப்பாடலின் பொருள். முகமது நபி(ஸல்) அவர்கட்கு ஒளிவடிவில் இறைவன் தன்னைக் காட்டி அருள அதுவே இறைவனது தற்சொரூபம் என்றாயிற்று. நம்மாழ்வருக்கு திருமால் வடிவில் தன்னைக் காட்டி அருள அந்த வெளிப்பாட்டில் ஆழ அழுந்தியவராக திருவாய் மொழி பாசுரங்களை தீந்தமிழில் பாடிப் பாடி மகிழ்ந்தார். திருமூலருக்கு சதாசிவ மூர்த்தியாக எழுந்தருளி ஆட்கொண்டார். வள்ளலாருக்கும்தாயுமானவர்க்கும் இன்னும் எத்தனையோ ஞானிகட்கும் இறைவன் தன்னை அருட்பெருஞ் ஜோதியாகவே காட்டி அருளியுள்ளான்.ஆனால் கல்லா மாந்தர்கள் பலருக்கு ஒளி வடிவினன் இறைவன் என்றால் புரியாத வொன்றாய் ஆகவே இறை நம்பிக்கையை சனிக்க முடியாதவொன்றாய் போய் விடுகின்றது. இறைவன் ஓர் மகா குரு: யாருக்கு எந்த எந்த உத்திகளைக் கையாண்டு போதித்தால் அறிவிலேத் தெளிவு உண்டாகுமோ அந்தந்த உத்திகளைக் கையாண்டு போதித்கொண்டே இருக்கின்றான். இறை வடிவங்கள் நமது கற்பிதங்கள் அல்ல, நமது பக்குவத்திற்கு ஏற்ற முறையில் இறைவன் தன்னையேத் தான் வெளிபடுத்தி அருளுகின்ற வடிவங்கள். இவ்வாறு தன்னையேத் தான் வெளிபடுத்தி அருளுகின்றபோது, அதனின் எழும் அனுபவங்களை நாம் சுவைபட அணிவகைகள் பல மிளிர அழகுத்தமிழில் பாடலாம். அப்போது பற்பல கற்பனைகள் உவமைகள் உருவகங்கள் எழலாம். ஆனால் இதனால் இறைவன் தன்னையேத் தான் காட்டி அருளுகின்ற இறைவடிவங்கள் மெய்ப்பொருளேத் தவிற நமது சிந்தனை ஓட்டத்தில் எழுகின்ற உருவகங்கள் அல்ல. மாறாக இப்படிபட்ட உருவகங்களே எழுவதற்குக் காரணமாக நிற்கின்ற உள்ளாவாம் மெய்பொருட்கள் ஆகும்.
இது இசுலாத்திற்கு முரண்பாடான ஓர் கருத்து என்றும் நினைக்கின்றேன். சிந்திக்க. இன்னும் தொடரும் அன்பன் கி. லோகநாதன் ENTRY 9 Narayanan Kannan <NaaKannan@netscape.net> நேற்று வந்திருக்க வேண்டிய இக்கடிதம் என் கணினியை விட்டுத் தாண்டாததை இப்போதுதான் உணர்ந்தேன். நிழல் வெளியில் மறைந்துவிட்ட அக்கடிதத்தின் பிரதி இதோ: அன்புள்ள முனைவர் கி.லோகநாதன்:
உங்கள் நீண்ட கடிதத்திற்கு நன்றி.
பாசுர மடல் இணையம் தோன்றிய சில காலத்திற்குப் பின் ஆரம்பித்து விட்டேன். நானும் அன்றிலிருந்து Metaphor என்ற பதத்தைதான் உபயோகித்து வருகிறேன். நீங்களும் அதையேதான் சொல்கிறீர்கள். இருந்தும் ஏதோ ஒரு காரணத்திற்காக என்னை மாயாவாதியாக்கி, குழப்பவாதியாக்க முயல்கிறீர்கள். அது நீங்கள் வகைப் படுத்தும் ஒருவகையான பார்வையாக இருக்கலாம். அது உண்மையில் என் பிரச்சனையல்ல.
Metaphor-என்ற பதத்திற்கு உவமான அதீதம் என்று தொல்காப்பியர் சொல்வதாக முதலில் எழுதினீர்கள். நான் இலக்கியங்களைப் பார்த்த போது உவமானத்தை விட அவர்கள் உருவகத்தை பயன்படத்துவதைக் கண்டேன். அதனால்தான் நான் உருவகம் என்று எழுதினேன். மணிவண்ணன் சுட்டிய பிறகு, "உள்ளுறை உவமம்" பொருந்தும் என்கிறீர்கள். அறிஞர்களுக்கு அது ஏற்புடையதாய் இருந்தால் என்னளவில் அதை ஏற்றுக் கொள்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஏனெனில் நானும் நீங்களும் சொல்வது " Metaphor"-ஐத்தான்.
இந்தக் கண்ணன் குறையுடையவன்தான். எம்பெருமானார் இராமானுசரும், மணவாள மாமுனியும் குறையற்றவர்கள் என்று நீங்கள் சொன்ன அளவில் என் மனதிற்கு மகிழ்ச்சிதான். நான் அடியேனுக்கு அடியேனாய் இருப்பதில்தான் மகிழ்ச்சி அடைகிறேன் அன்புடன் கண்ணன்.
Previous references:
Dr.Loga:>இவற்றில் உள்ளுறை உவமம் (metaphore) என்பதை பற்றி தொல்காப்பியர் கூறும் போது, "உள்ளுறை( >உவமம் ) தெய்வம் ஒழிந்ததை நிலன் எனக் கொள்ளும் என்ப குறியறிந்தோரே " (தொல். 993) என்று >விளக்கி தெய்வம் எனப்படுவது, உவமனாதீதம் என்கின்றார்
N.K: நானும் இந்த metaphore-ஐத்தான் சொல்கிறேன். நீங்கள் சொல்லும் தொல்காப்பிய பாடலை கொடுத்து முன்பு விளக்கியும் உள்ளேன். _______________________________ தொல்காப்பியரின் பொருளதிகாரத்தில், உவமவியலின் சூத்திரங்கள் 1222 முதல் 1258 ஈறாக எல்லாவற்றிலும் "உவமானம்", "அதீதம்" என்ற சொற்களைத் தேடிப்பார்த்தேன்; கிடைக்கவில்லை. தொல்காப்பியர் உள்ளுறையுவமத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். உவமானதீதத்தைப் பற்றி எங்கே குறிப்பிடுகிறார்? நீங்கள் எந்த உரையாசிரின் நூலில் "உவமானதீதம்" என்ற சொல்லைப் பற்றி அறிந்தீர்கள்?
அன்புடன்,மணி மு. மணிவண்ணன் _______________________________ டாக்டர் கண்ணன் அவர்கட்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும். நிற்க தங்களது மடல் 51 ஐக் கண்ணுற்றேன். தங்களது விளக்கங்களுக்கு நன்றி ஆயினும் ஏற்கனவே பெருங் குழப்பத்தில் இருக்கும் என்னை இன்னும் பெரியவோர் குழப்பத்தில் ஆழ்த்துவதாக தங்களது பதில் அமைந்திருக்கிறது......
திரு மணி வண்ணன் அவர்கட்கு இங்கோர் விளக்கம். தொல்காப்பியர் 'உவமானாதீதம்' என்று சொல்லவில்லை. நானே அவரது கருத்திற்கு இப்படி பெயர் வைத்துள்ளேன். அவர் உள்ளுறை உவமம் என்பது, " தெய்வம் ஒழிந்ததை நிலன் எனக் கொள்ளும் என்ப" என்று கூற, அதாவது, தெய்வம் உள்ளுறை உவமத்திற்கு நிலனாக அமையாது என்று கூறி அப்பாலாக்கிவிட, அதனாலேயே தொல்காப்பியர் தெய்வத்தை உவமானாதீதம் என்கின்றார் என்றேன்.
இதைதான் ஆங்கிலத்தில் "metaphor" என்கின்றேன்.
திருவாய்மொழியைத் திறம்பட ஆய்ந்த மணவாள மாமுனிகளோ ராமானுஜரோ மாயாவாதம் கூறவில்லை. ஆனால் டாக்டர் கண்ணன், தெய்வ வடிவங்கள் உருவகங்களே என்று கூறுவதின், இந்த மேலான ஞானிகட்குப் புறம்பாக மாயாவாதம் போன்றை ஒன்றைக் கூறுகின்றார் என்றே நினைக்கத்தோன்றுகின்றது.
அன்பன் டாக்டர் கிலோகநாதன்
ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க! வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க! -
மாணிக்கவாசகர்
_
ENTRY 10 "Dr.K.Loganathan" <loga@usm.my> அன்புள்ள டாக்டர் கண்ணன் அவர்கட்கு, வணக்கங்களும் வாழ்த்துக்களும். தங்களது பதிலுக்கு நன்றி. நம் இருவருமிடையே கருத்து பேதமில்லை என்பது போல் தோன்றினாலும் அதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்தாலும், இன்னும் சிலத் தெளிவுகள் இணைய அன்பர்கட்கு உதவும் என்று நினைக்கின்றேன். இணையத்தில் இவற்றைபற்றி விரிவாகக் கூறுவது ஏற்புடைத்தாக இருக்காது என்பதின் மிக மிக சுருக்கமாகவே அன்பர்களின் சிந்தனைக்கு சில கருத்துக்களை வைக்கின்றேன். அதற்காக கீழே டாக்டர் அவர்கள் கடிதத்தின் ஓர் பகுதி.
>Metaphor-என்ற பதத்திற்கு உவமான அதீதம் என்று தொல்காப்பியர் சொல்வதாக முதலில் எழுதினீர்கள். நான் இலக்கியங்களைப் பார்த்த போது உவமானத்தை விட அவர்கள் உருவகத்தை பயன்படத்துவதைக் கண்டேன். அதனால்தான் நான் உருவகம் என்று எழுதினேன். மணிவண்ணன் சுட்டிய பிறகு, "உள்ளுறை உவமம்" பொருந்தும் என்கிறீர்கள். அறிஞர்களுக்கு அது ஏற்புடையதாய் இருந்தால் என்னளவில் அதை ஏற்றுக் கொள்வதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஏனெனில் நானும் நீங்களும் சொல்வது " Metaphor"-ஐத்தான்.
ந்தக் கண்ணன் குறையுடையவன்தான். எம்பெருமானார் இராமானுசரும், மணவாள மாமுனியும் குறையற்றவர்கள் என்று நீங்கள் சொன்ன அளவில் என் மனதிற்கு மகிழ்ச்சிதான். நான் அடியேனுக்கு அடியேனாய் இருப்பதில்தான் மகிழ்ச்சி அடைகிறேன்.>
முதலில் ஓர் சிறு விளக்கம். தொல்காப்பியரின் 'உள்ளுறை உவமம் " என்பதைத் தான் நான் "metaphor" என்றேன். இப்படிப்பட்ட உள்ளுறை உவமங்கட்கும் தெய்வம் என்பது நிலனாக அமையாது என்று தொல்காப்பியர் கூற, தெய்வமே "உவமனாதீதம் " என்றேன். அதாவது தெய்வம் என்பது உவம உணர்வுகட்கு அப்பாற்பட்டது என்ற கருத்தில் இது. இதுவே வளர்ந்து பிற்காலத்தில் மெய்கண்டாராலும் இன்னும் பலராலும் இறைவன் " வாக்கு மனாதீத கோசரம்" என்ற சொல்வதற்கு ஏதுவாயிற்று என்று திராவிட மெய்யறிவு வரலாற்றில் குறிப்பிட்டுள்ளேன்.
உள்ளுறை உவமத்தை உருவகம் என்று பெயரிட்டு அழைக்கலாம். அதில் தவறில்லை. ஆயின் இப்படி செய்தால் தண்டி முதற்கொண்டு தமிழில் உள்ள அணியிலக்கண ஆசிரியர்கள் கொண்டிக்கின்ற அர்த்தத்திலிருந்து மாறுபடிகின்றீர்கள் என்பதை உணர வேண்டும். இதில் ஒன்று தவறில்லை. ஆனல் ஏற்படுகின்ற பொருள்மாற்றத்தை உணர்ந்நிருக்க வேண்டும்
மேலும் மணவாள மாமுனிகளும் இராமானுஜரும் குறையற்றவர்கள் என்று நான் சொல்லியுள்ளதாக மகிழ்ந்துள்ளீர்கள். தங்களது மகிழ்ச்சியை சிதைக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றேனே என்று வருந்துகின்றேன். முதலாவதாக, நான் அவர்களை குறையற்றவர்கள் என்று கூறவில்லை; அவர்கள் ஆதிசங்கரரைப் போன்று மாயாவாதம் கூறவில்லை என்றுதான் சொன்னேன். தங்களுக்கு நன்றாய்த் தெரிந்த ஒன்றே: முதல் தாய் சடகோபன் முன்மொழிய தத்தாய் இராமாஜுசன் பகர்ந்த தத்துவம் விசித்தாத்வைதம் என்ற பெயரில் வழங்குகிறது என்பது. இங்கு சத்து சித்து ஈஸ்வரன் என்பதே அனாதிப்பொருட்களாகக் கொள்ளப்படுகின்றது. மிக முக்கியமாக, அனாதிப் பொருட்களில் இவர்கள் ஆணவமலத்தை கொள்வதில்லை. ஆனவ மலத்திற்குறியதை இவர்கள் பிழையாக முக்குணங்களில் ஒன்றாகிய தாமத குணத்திற்கு சாத்தி விடுகின்றனர். திருமூலர் கூறும் " பதியினைப் போல் பசு பாசம் அனாதி" என்ற கருத்து திருமாலிய தத்துவ விளக்கத்தில் இல்லை(நானறிந்த வகையி ல்). இங்கு பாசம் எனப்படுவது ஆணவம் கன்மம் மாயை எனப்படும் மும்மலங்கள் என்பது தாங்கள் அறிந்ததே.
தெய்வ வடிவங்கள் நான் கூறுவதுபோன்று உள்ளுறை உவமங்கள், இறைவன் தன்னைத் தானே காட்டியருளுகின்ற வடிங்கள் என்று கொண்டால்தான் ஆணவமலத்தின் உண்மையை நாம் அறியவருவோம். தெய்வ வடிவங்கள் அரூள் வெளிப்பாடுகள் எனின், ஏனென்ற கேள்வி எழுகின்றது. அதற்கு ஆன்மாக்கள் காணாக் குருடுகளாக ஞான அந்தகாரத்தில் கிடக்கின்றன, அதனால் தான் என்று பதில் வரும். தொடர்ந்து எவ்வாறு இந்த ஞான அந்தகாரம் எனும் கேள்வி எழ, அனாதியே ஆன்மாக்கள் இப்படிப்பட்ட அந்தகாரத் தில் வீழ்த்தும் பண்பையே தனது பண்பாக கொண்டிருக்கும் ஆணவமலத் தொந்தனையால் என்ற பதிலுங் கிடைகின்றது.
ப்படிப்பட்ட ஆணவமலத்துண்மை ஆதிசங்கரரின் மாயாவாதத்திலும் இல்லை, இராமனுஜரின் விசித்தாத்வைதத்திலும் இல்லை, சைவ சித்தாந்தத்தில்தான் இருக்கின்றது. ஆணவமலத்தின் உண்மையைப் பகரும் சைவ சித்தாந்தமே எனக்கு உடன்பாடு. இதனால் இராமானுஜரும் குறைபாட்டுடையவரே என்பது எனது கருத்து. தனால் என்னை எல்லாந்தெரிந்த ஓர் 'இவன்' என்று நினைக்காதீர்கள். நானும் உண்மைதான் என்ன என்பதை ன்னுந்தான் தேடிகொண்டிருக்கின்றேன். சிலரோடு ஒத்துப்போக முடிகின்றது, சிலரோடு முடியவில்லை, அவ்வளவுதான்.
னி தொடர்ந்து விவாதிப்பது, இணையத்திற்கு ஏற்புடைத்தாக இருக்காது என்று நினைக்கின்றேன். திராவிட மெய்யறிவு வளாகத்திற்கு வாருங்கள். அழைப்பு அனுப்பி வைக்கின்றேன். தொடர்ந்து இப்பிரச்சினையை ஆயலாம்.
உங்களோடு முற்றாக ஒத்துப்போக முடியவில்லையே என்ற வருத்தத்தோடு இதனை முடிக்கின்றேன்.
அனபன் கி.லோகநாதன்
|