தமிழ் இலக்கியப் பாக்கள் அனைத்துமே முக்கனியின் சாறு பிழிந்து புனையப்பட்டவையோ என எண்ணும் வகையில்,படிக்குந்தோறும் இன்பம் பயப்பவை நினைக்குந்தோறும் நெஞ்சத்தை குளிர் சாரலால் நனைப்பவை.
விதவிதமான கனிகள் விளைந்தாலும் "முக்கனி" என தமிழர்களால் சிறப்பிக்கப்பெற்றவை
அவற்றிலும், இலக்கியத் தோட்டங்களில் அதிகம் கனிந்து மணம் வீசி, வாசகனை வாசனையாலும், சுவையாலும் சுண்டி இழுப்பது பலாக்கனி தான்.
மனித மனத்தை குரங்குடன் ஒப்பிடுவது வழக்கம். குரங்கு மனத்தை எதனுடன் ஒப்பிடுவது?அருவியின் இக்கரையில் நிற்கிறது மந்தி (பெண் குரங்கு) ஒன்று. அருவியைக் கடந்து அக்கரைக்குச் செல்ல அதற்கு ஆசை.
மரங்கள் அடர்ந்த காடு என்றால் மந்திக்குக் கேட்கவே வேண்டாம். இங்கோ, இடையில் தடுப்பது தண்ணீர்க் காடு!
அப்போது, பறிப்பார் இல்லாமல் முற்றிய பலாக்கனி ஒன்று அருவி நீரில் விழுந்து மிதந்தபடி வருகிறது.
அருவியில் பாய்ந்த அம் மந்தி, பலாப்பழத்தின் மீதேறி அமர்ந்து கொள்கிறது.
மலைச்சாரலில் உள்ள ஓர் ஊரின் பக்கமாகச் சென்று வீழும் அருவியின் துறையை அடைந்ததும் பலாப்பழத்திலிருந்து இறங்கிச் செல்கிறது மந்தி.
பசி நீக்கும் உணவுப் பொருளான பலா படகாகிவிட்டது. அருவியைக் கடந்து செல்ல உதவியதால் "பலா"க்கனியை "பால"க்கனி என்றே அழைக்கலாம் எனத் தோன்றுகிறதல்லவா!
"அருவிபாய்ந்த கருவிரல் மந்தி
செழுங்கோட் பலவின் பழம்புணை யாகச்
சாரல் பேரூர் முன்துறை இழிதரும்...". (பா..382, வரிகள் 9 - 11)
என, தலைவனின் நாட்டு வளத்தைக்கூறும் தலைவியின் கூற்றாகத் தொடர்கிறது, கபிலரின் அந்த அகநானூற்றுப் பாடல்.
அந்த மந்தியைப்போலவே, தலைவனும் தான் மேற்கொண்ட செயலில் எத்தகைய இடையூறுகள் வந்தாலும் அவற்றைத் தக்க வழிகளில் தகர்த்தெறிந்து தன்னை வந்தடைவான் என மறைமுகமாகக் குறிப்பிடுகிறாள் தலைவி.
தலைவனின் மலை நாட்டு வளத்துக்கு மட்டுமல்ல, தலைவியின் மன வளத்தைச் சோதிக்கும் காமத்தின் பாங்கையும் பளிங்கென உவமையாக்க பலாக்கனியால் முடியும்.
உயிரோ மிகச் சிறியது. கண்வழி புகுந்து நெஞ்சில் வேரோடி உயிரெலாம் படரும் காமமோ மிகப் பெரியது.
அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்றும் கொல்லும் என்பார்கள்.காமமோ என்றும் கொல்லும்.
காதல் பார்வையாலும், கனிந்த மொழிகளாலும் தலைவியின் இதயத்தைக் கடத்தியவன், இப்போது திருமணம் செய்யாமல் காலத்தைக் கடத்துகிறான்.
சித்திர விழியாள் சில நாள் பொறுக்கலாம், ஆனால், நாள்கள் மாதங்களாகிவிட்ட பின்பும் மணநாள் குறித்து எவ்வித அறிகுறியையும் காண்பிக்கவில்லை அவன்.
எப்படிப் பொறுப்பாள்?
கூடாரத்துக்குள் நுழைந்த ஒட்டகத்தின் கதையாக, காமம் தலைவியின் உயிரை வதைக்கிறது. அதை, அவளது தலைவனிடம் சொல்ல வேண்டிய இக்கட்டுக்கு உள்ளாகிறாள் இன்னுயிர்த் தோழி.
தோழியும் பெண்தானே! நேரடியாய்ச் சொல்ல அந்த நேரிழையாளுக்கு நெஞ்சில் துணிவேது?
உவமையால் உணர்த்த நினைக்கிறது இதயம்.
மலைத்து நிற்கும் அவள் பார்வையில், மலையில் வளர்ந்திருக்கும் பலா மரங்கள் தென்படுகின்றன.
அவற்றில் உள்ள மெல்லிய கொம்புகளில் மிகப் பருத்த பலாக் கனிகள் முற்றித் தொங்குவதைப் பார்க்கிறாள் தோழி.
பலாக் கனியைத் தாங்கும் மெல்லிய கொம்பின் பரிதாப நிலையைச் சொல்லி, தலைவி துன்பம் நீங்கி, இன்பம்பெற வேண்டுமானால் உடனே அவளைத் திருமணம் செய்துகொள் என்கிறாள் தோழி, தலைவனிடம்.
"வேரல்வேலி வேர்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யார் அதறிந்திசி னோரே? சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கு, இவள்
உயிர்தவச் சிறிது; காமமோ பெரிதே". (18)
என, காமத்தின் தன்மையை "குறுந்தொகை"யில் தோழியின் கூற்றாக, சுளைப்பலா உவமையால் சுவைபடச் சொல்பவர் வேறு யாருமல்லர், குறிஞ்சிக் கவிஞர் கபிலரே தான்.
கடையெழு வள்ளல்களில் ஒருவன் பொதிகை மலையில் பொன்னாட்சி தந்த "ஆய்" என்பவன்.
பகைவர் எதிர்த்து நின்றால் அவர்களின் தலைகளை அவன் கரங்கள் கிள்ளி எடுக்கும்; பரிசில் பெற வருவோருக்கோ அவன் கரங்கள் பொருள்களை அளக்காமல் அள்ளிக்கொடுக்கும்.
வீரமும், ஈரமும் ஒரு கொடியில் மலர்ந்த மலர்களாய் மணம் வீசுவதைத் தமிழக மன்னர்களிடம் மட்டுந்தான் அதிகம் காண முடியும்.
அதற்கு ஆயும் விதிவிலக்கல்லன்.
அவனிடம் பரிசில் பெற்றுச் செல்வதற்காக கூத்தர்கள் சிலர் அவனை நாடி வருகின்றனர்.
அவனது எல்லைக்குள்பட்ட மலைக்காடுகளின் வழியே வரும் அவர்கள் இளைப்பாறும் பொருட்டு தங்கள் தோள்களிலே சுமந்துவந்த மத்தளங்களை பலாமரத்தின் கிளைகளில் மாட்டித் தொங்கவிட்டுள்ளனர்.
மந்தி ஒன்றின் பார்வையில் மத்தளம் பட்டுவிட்டது. சும்மாயிருக்குமா?
தொடுதொடுவென மனது தொல்லைசெய்ய, விடுவிடுவென மரக்கிளையிலிருந்து இறங்கி வருகிறது.மத்தளம் என அறியாத அம் மந்தி, கனிதான் என நினைத்து கனிவோடு தட்டுகிறது. அதிலிருந்து இன்னிசை வருகிறது.
அருகேயுள்ள குளத்திலிருக்கும் ஆண் அன்னங்களோ அந்த இசைக்குத் தக்கபடி குரலெழுப்புகின்றன. விளைவு...
இசையும் பாட்டும் அங்கே இலவசமாக அரங்கேறுகின்றன.
"மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்
பாடின் றெண்கண் கனிசெத் தடிப்பின்
அன்னச் சேவல் மாறெழுந் தாலும்
கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில்..". (புறநானூறு, 128, வரிகள் 1 - 5)
நன்றி:- தினமணி