இறைவனைக் காண்போம் 28 சிட்டுக்குருவி

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

அழிய விருக்கும் ஒரு பறவையினக் காக்க  சிட்டுக் குருவி


அபூர்வமாகக் காணப்படும் பறவையினை நாம் ஆர்வத்துடன் பார்க்கிறோம். ஆனால் அதிக அளவிலே நம்மிடையே காணப்படும் பறவையினை, அது எண்ணிக்கையில் திடீரெனக் குறைந்தால் கூட, நாம் அதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.

உதாரணத்துக்கு சிட்டுக் குருவி.


அதிக அளவில் பார்த்த சிட்டுக் குருவியினை சென்ற ஐந்தாறு வருடங்களாக நான் சென்னையில் பார்க்கவில்லை. இப்பறவை நம் கண்முன்னேயே மறைந்து விட்டது.


சிட்டுக் குருவி வாழ்வது மனிதர்கள் வாழும் இடங்கள் அருகேதான். கரணம் அவற்றின் உணவு பெரும்பாலும் தானியங்களே.


சிட்டுக் குருவி-ஆண்I.jpg
Sittukuruvi.jpg


http://en.wikipedia.org/wiki/File:House_sparrowIII.jpg

சிட்டுக் குருவி – ஆண் பறவை


சிட்டுக் குருவி-பெண்.jpg

Sittukuruvif2.jpg

http://en.wikipedia.org/wiki/File:House_sparrow04.jpg

சிட்டுக் குருவி –பெண் பறவை


சிட்டுக் குருவி கூடமைப்பது பாழடைந்த கட்டிடங்கள், சுவற்றில் காணப்படும் இடைவெளிகள் போன்ற இடங்கள். வீட்டிற்குள்ளே இருக்கும் பரண்களில் கூட இவை கூட்டினை அமைக்கும். கூடு அழகான ஒன்று எனச் சொல்ல முடியாது. வைக்கோல், துணித் துண்டுகள், பஞ்சு இவற்றால் ஆன கூடு ஒரு காற்று போன பந்து போல இருக்கும். ஒரு பக்கத்தில் இருந்து கூட்டிற்குள் நுழைய வழி இருக்கும். கூட்டிற்குள் மெத்தையாக கீழே விழுந்த பறவைகளின் சிறு இறகுகளைக் கொண்டு வந்து குவித்திருக்கும்.


சிட்டுக் குருவிகள் ஒரு வருடத்தில் மூன்று முறை வரை முட்டை இட்டுக் குஞ்சு பொரிக்க வல்லது. ஒவ்வொரு முறையும் ஐந்தாறு முட்டைகள் இடும். பெண் பறவையே அடை காக்கும். அடை காக்கும் காலம் 10 -12 நாட்களே. குஞ்சுகள் வெளி வந்த உடன் இரு பறவைகளுமே அவற்றுக்கு உணவு கொண்டு வந்து கொடுக்கும். குஞ்சுகளுக்கு இரை புழு பூச்சி இவைகளே.


இடும் முட்டைகள் எல்லாமே குஞ்சுகளை வெளிக்கொண்டு வருவதில்லை. சிட்டுக் குருவிகள் மீண்டும் மீண்டும் ஒரு தடவை அமைத்த கூட்டினையே உபயோகிப்பதால் என்றாவது பரணைக் காலி செய்யும்போது பார்த்தால் இந்த விஷயம் புலப்படும்.


சிட்டுக் குருவிகள் இனப் பெருக்கம் செய்யாத நாட்களில் கூட்டம் கூட்டமாக வாழும். நெல், சோளம் போன்ற பயிர்கள் முற்றி இருக்கும் காலத்தில் சிட்டுக் குருவிகள் கூட்டம் கூட்டமாக வயல்களில் வந்திறங்கி, தின்பதைப் போல் நான்கு மடங்கு தானியங்களை நாசம் செய்யும். இந்தக் கஷ்டம் இனி நம் விவசாயிகளுக்குக் கிடையாது . காரணம் சிட்டுக் குருவிகளே இல்லையே இன்று.


சிட்டுக் குருவிகளுக்கு எதிரிகள் இரண்டு. ஒன்று காகம். மற்றொன்று பூச்சி கொல்லி மருந்துக்ள். குஞ்சுகள் இறக்கை முளைத்து பறக்க வெளியே வரும்போது அவற்றினைக் கவ்விச் சென்று விடும் காகங்கள்.


இந்திய பறவை வல்லுனர்கள் சொல்கின்றனர் சிட்டுக் குருவிகள் மறைவதற்கு / மறைந்ததற்கு பூச்சிக் கொல்லி மருந்துகளே முக்கிய காரணம் என்று.


மேல் நாட்டு விஞ்ஞானிகள் சொல்கின்றனர் சிட்டுக் குருவிகள் மறைவதற்குக் காரணம் கார்களில் உபயோகப் படுத்தப் படும் ஈய ரசாயனம் (Tetra ethyl lead) கலந்த பெட்ரோல் எரியும் போது உண்டாகும் மிதைல் நைட்ரைட் (methyl nitrite) சிறு பூச்சி புழுக்களுக்கு எமனாகும். அப்படித் தாக்கப் பட்ட புழு பூச்சிகளைத் தங்கள் குஞ்சுகளுக்கு சிட்டுக் குருவிகள் இரையாகக் கொடுப்பதால் குஞ்சுகள் இறக்கின்றன. இதனால்தான் சிட்டுக் குருவிகள் வெகு வேகமாக எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன என்று.



சமீப காலத்தில் அவை அழிய முக்கிய காரணம் கைத் தொலை பேசிகளை இயக்கிடும் நுண் காந்த அலைகள் என்கின்றனர் பறவைகள் ஆராய்ச்சியில் ஈடு பட்டிருப்போர்.


எது எப்படியோ, ரசாயனப் பூச்சி கொல்லி மருந்துகளும், ஈய ரசாயனம் கலந்த பெட்ரோலும் முற்றிலுமாகத் தடை செய்யப் படாவிட்டால், “பறவைகள் என்றால் என்ன?” என்று நம் பிற்கால சந்ததியினர் கேட்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இந்த நிலை மாற வேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரும் நம்மாலானதைச் செய்ய வேண்டியது மிக மிக அவசியம்.


நடராஜன் கல்பட்டு


--Geetha Sambasivam 13:20, 9 ஜூலை 2011 (UTC)



பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 9 ஜூலை 2011, 13:40 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,179 முறைகள் அணுகப்பட்டது.