இறைவனைக் காண்போம் 25 செம்போத்து!மரபு விக்கி இருந்துசெம்போத்துக் குருவி என்றொரு பறவை. இது அண்டங் காக்காய் போன்று இருக்கும் உருவ அளவில். இதன் உடல் மின்னும் கருப்பு நிறத்திலும் இறக்கைகள் செம்பட்டை நிறத்திலும் இருக்கும். இதன் அலகுகள் காகத்தின் அலகுகளை விட சற்றே குட்டையாக வளைந்து இருக்கும். கண்கள் குயிலின் கண்களைப் போன்று, கரு விழியைச் சுற்றிலும் ஆரஞ்சு கலந்த சிவப்பு நிறத்தில் இருக்கும். இதன் வால் சிறகுகள் காகத்தின் வால் சிறகுகளையும் விட சற்று நீளமாகவும், தரையில் நடந்திடும் போது அவ்வப்போது தரையைத் தொட்டுக் கொண்டும் செல்லும்.
செம்போத்துக் குருவியின் குரல் சற்று வினோதமானது. அது உரத்த குரலில் “பாங்க்….பாங்க்….பாங்க்” என்று கத்தும். இது தரையில் சருகுகளுக்கடியில் கிடைக்கும் புழு பூச்சிகளையும், செடிகளின் விதைகளையும் உண்ணும். இப்படித் தன் உணவைத் தரையிலேயே தேடிக் கொள்வதால் இது அதிகமாக உயரத்தில் பறப்பதில்லை.
குயில் இனத்தை சேர்ந்தாலும் குயிலைப் போல் அல்லாது செம்போத்துக் குருவி கூடு கட்டி, முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து, குஞ்சுகளுக்கு இரை ஊட்டி வளர்த்திடும்.
செம்போத்துக் குருவி, பெரிய பந்து போல, குச்சிகள், காய்ந்த புல், இலைச் சரகுகள் இவற்றால் கட்டப்பட்ட கூட்டினை அடர்ந்த புதர் போன்ற செடிகளுள் அமைத்திடும். கூட்டிற்குள் செல்லும் வழி வட்ட வடிவில் பக்க வாட்டில் அமைக்கப் படும். கூடு கட்டுதல், அடை காத்தல், இரை தேடி குஞ்சுகளுக்கு ஊட்டல் ஆகிய பணிகளில் ஆண் பெண் இரு குருவிகளுமே பங்கேற்கும்.
இயற்கையில் தான் எத்தனை காட்சிகள் நாம் பார்த்து ரசிக்க! --
--Geetha Sambasivam 08:50, 19 ஏப்ரல் 2011 (UTC) |


