இறைவனைக் காண்போம் - பல்லி 46

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
பல்லி
 
பாம்பு, பல்லி, தேள் என வழக்கில் வரும் சொற்கள் வரிசையில் பாம்புக்கு அடுத்தது பல்லி தானே.  அப்பொ பல்லியப் பத்திப் பாக்கலாமா?
 
பல்லி என்ற சொல்லைக் கேட்டதுமே பலருக்கு அருவருப்பு.  சிலருக்கு பயம்.  என் அண்ணன் மகள் ஒருத்தி.  வீட்டிலே ஒரு பல்லியைக் கண்டால் அவள் வெளியே ஒடிவிடுவாள்.  பல்லி வீட்டை விட்டு வெளியேற்றப் பட்ட பின்தான் வீட்டிற்குள் மீண்டும் நுழைவாள். அவளுக்கு அப்படி ஒரு பயம்.
 
Inline image 6
 
பல்லியைப் பற்றி நாம் தெரிந்து கொண்டோமானால் அதன் மீதான அருவருப்போ பயமோ தானாக மறைந்து விடும்.
 
பல்லி நம்மிடையே வாழும் ஒரு மிக உபயோகமான பிராணி.  அதன் உணவு கொசு, ஈ, இறகு முளைத்த கரையான், எறும்பு, பாச்சை, கரப்பான் பூச்சி இப்படிப் பல.  ஒரு வீட்டில் பல்லி இல்லாத போதுதான் தெரியும் எந்த அளவுக்கு நமக்குத் தீங்கிழைக்கும் பூச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன பல்லிகள் என்பது.
 
பல்லிகள் செங்குத்தான் சுவர்களிலும், ஏன் கண்ணாடிகளின் மீதும் கூட நடக்க வல்லவை.  அவை பட்டையாக இருக்கும் சிமென்டுக் கூரையில் தலைகீழாக நடக்கக் கூடியவை.  இது எப்படி சாத்தியமாகிறது தெரியுமா?  அவற்றின் கால்களின் பாதங்களில் நுண்ணிய செதிள்கள் போன்ற மெல்லிய தோலால் ஆன அமைப்பு உள்ளது.  அவற்றின் உதவியால் சூன்னியத்தை உண்டாக்கி பாதங்களை சுவற்றோடு ஒட்டிக் கொள்ளச் செய்கின்றது. பின் தேவைப் பட்ட போது காலை எடுக்க சூன்னியத்தைப் போக்க வல்லது அதன் கால்களில் உள்ள தசைகள்.
 
Inline image 5
பல்லியின் கால் விரல்களின் அடிப்புற அமைப்பு
 
நம் உடல் உருப்புகளில் ஒன்றுக்கு இது போன்று சூன்னியம் உண்டாக்க வல்ல சக்தி உண்டு.  அது எந்த உறுப்பு என்று யோசித்து வையுங்கள்.  கட்டுரையின் கடைசியில் சொல்லுகிறேன் அது பற்றி.
 
அமெரிக்காவில் சிகாகோவில் உள்ள வடமேற்கு சர்வ கலாசாலையில் பல்லி காலை ஒட்டிக் கொள்ளும் தத்துவத்தை பின்பற்றும் வகையில் ஒரு பிசினைக் கண்டு பிடித்தார்கள்.  அந்தப் பிசின் தடவிய நாடாவை பல முறை (சுமார் ஆயிரம் முறை கூட) உபயோகிக்க முடியுமாம்.  அறுவை சிகிச்சை செய்தவர்களுக்குத் தையல் போடுவதற்கு பதிலாக இந்தப் பிசின் தடவிய நாடாவை ஒட்டினால் போதுமாம்.  இந்தப் பிசினுக்கு அவர்கள் வைத்த பெயர் கெகெல் (Geckel) என்பது.  பல்லியின் ஆங்கிலப் பெயர் கெக்கோ (Gecko)!
 
பல்லிகளில் பல வகைகள் உண்டு.  வீட்டுப் பல்லி, மரப் பல்லி, சரகு இலைப் பல்லி, பச்சை நிறப் பல்லி, சிறுத்தைப் பல்லி, கீலா மான்ஸ்டர், இன்னம் எவ்வளவோ வகைகள் உண்டு.  இவற்றில் கீலா மான்ஸ்டர் ஒன்று தான் விஷம் கொண்ட பல்லி.
 
பாம்புகளின் விஷப் பை அண்ணத்தில் இருக்கும்.  கீலா மான்ஸ்டரின் விஷப் பை கீழ்த்தாடையில் இருக்கும்.  அவை கடிக்கும் போது விஷம் பைகளில் இருந்து வெளியேறி பற்களின் மேல் பாகத்தால் கசிந்து கடி பட்டவரின் உடலுக்குள் செல்லும்.  இதன் விஷம் நரம்புமண்டலத்தைத் தாக்கக் கூடிய ஒன்று.  நல்ல வேளை நம் நாட்டில் இந்தப் பல்லி வகை கிடையாது.  அமெரிக்காவிலும், மெஃஸிகோவிலும் தான் இது இருக்கிறது.  இதன் நடை மிகவும் நிதானமானது என்பதால் கீலா மான்ஸ்டர் கடித்து மனிதர்கள் இறந்ததாகக் கணக்கில் இல்லை.
இதன் நாக்கு நுனி பாம்பின் நாக்கு போலவெ இரு துண்டுகளாக இருக்கும்.
Inline image 4
கீலா மான்ஸ்டர்


Inline image 3
தோட்டத்திலோ காடுகளிலோ இலைச் சரகுகளிடையே வாழும் பல்லி
 
மரப் பல்லி, இலை சரகுப் பல்லி இவற்றின் நிறமும், இவற்றின் உடல் மீது உள்ள வண்ணத் திட்டுகளின் நிறமும் இவை வாழும் இடத்துடன் ஒத்திருப்பதால் இவை இருப்பதே இவற்றின் எதிரிகளின் கண்களுக்குத் தெரியாது.  எதிரிகள் யார் தெரியுமா?  பாம்பு, கழுகு, காகம் இவையே.  விரியன் பாம்புகள் விரும்பி உண்ணும் உணவு பல்லிகள்.
 
பல்லிகளின் வாலுக்கு ஒரு விசேஷம் உண்டு.  எதிரிகள் துரத்தும்போது வாலினைத் துண்டித்துக் கொண்டு பல்லி ஓடிவிடும்.  துண்டான வால் பல நிமிஷங்களுக்குத் துள்ளிக் கொண்டிருக்கும்.  துரத்தி வரும் எதிரி துண்டான வாலைக் கவ்வும்.  பல்லியோ எங்கோ ஓடி விடும் சாவின் பிடியிலிருந்து தப்பி.  இதில் இறைவனின் கை வேலையைப் பாருங்கள்.  பல்லிக்கு உயிர் தப்ப துண்டாகும் வால்.  அதே வால் துரத்தி வந்தவருக்கு அவர் பட்ட சிரமத்திற்காக ஒரு சிற்றுண்டி.
 
இது சின்ன வயதில் நான் கேட்ட ஒரு கதையினை நினைவுக்குக் கொண்டு வருகிறது. 
 
அந்தணன் ஒருவன் ஆற்றங்கரையில் சந்தியா வந்தனம் செய்து கொண்டிருந்தான்.  முரடன் ஒருவன் அந்தணனின் குடுமியைப் பிடித்துக் கொண்டு, “அய்யிரே களட்டு காதுலெ இருக்குற கடுக்கனெ”  என்றான்.
 
அந்தணன் சொன்னான், “நீ என் குடுமியெப் பிடிச்சதாலெ சும்மா இருக்கேன்.  நீ மாத்திரம் என் பூணூலெ பிடிச்சிருந்தே என்ன பண்ணி இருப்பேன் தெரியுமா?” என்று.
 
முரடன் குடுமியை விட்டு விட்டு, பூணூலைப் பிடித்துக் கொண்டு கேட்டான், “பூணுலெப் பிடிச்சா என்ன பண்ணுவே?´என்று.
 
பூணூலைக் கழட்டி விட்டு ஓடித் தப்பிதான் அந்தணன்.
 
பல்லியெப் பத்திப் பாக்க மேலெ படியுங்க.
 
வீட்டுப் பல்லியின் கண்களுக்கு இமைகள் கிடையாது.  ஆகவே அது அவ்வப்போது கண்களில் படியும் தூசியை நாக்கினால் நக்கி சுத்தம் செய்து கொள்ளும்.  வேறு சில வகைப் பல்லிகளுக்கு இமைகள் உண்டு.
 
 Inline image 2
கண் இமைகள் கொண்ட சிறுத்தைப் பல்லி
 
பல்லியின் மண வாழ்க்கை பலாத்காரம் நிறைந்த ஒன்று.  ஆனால் பல்லி இனத்ததையே சேர்ந்த அரணையின் வாழ்க்கையோ காதல் மண வாழ்க்கை.  ஆண் அரணை பெண் அரணை போகுமிடத்திற்கெல்லாம் தானும் கூடக் கூடச் சென்று அவ்வப்போது ஒன்றின் பக்கத்தில் ஒன்றாகப் படுத்து, ஒன்றை ஒன்று நாவினால் நக்கிக் கொண்டு மனமொத்த பின்னரே மண வாழ்க்கை.  இதற்கு நேர் எதிர் பல்லி.  ஆண் பல்லி பெண் பல்லியைப் பார்த்து விட்டால் போதும்.  அடுத்த கணம் பலாத்காரம் தான்.  அதனால் ஆண் பல்லியைக் கணடதுமே பெண் பல்லி ஓடி மறைய முயற்சி செய்யும்.  சில சமயங்களில் வெற்றியும் அடையும்.
 
 Inline image 1
(அரணைகள் – காதல் ஜோடி)
 

பெண் பல்லி கருத்தரித்த பின் அதன் வயிற்றில் இரண்டு அல்லது மூன்று முட்டைகள் உண்டாகும்.  அவை வயிற்றுக்குள் இருப்பது வெளியில் இருந்தே தெரியும்.  அதன் தோல் மெல்லியதுதானே?  பல்லி முட்டை இடுவதற்காக, அதன் இனமான ஓணான், முதலை போன்று எங்கும் குழிபறித்து, முட்டை யிட்டு மூடிடாது.  எங்கு சற்றே ஒதுக்குப் புறமாக இடம் கிடைக்கிறதோ அங்கு முட்டைகளை இட்டு விடும்.  உதாரணத்திற்கு புத்தக அலமாரியில் புத்தகங்களுக்குப் பின்னால், உபயோகத்தில் இல்லாத அட்டை அல்லது மரப் பெட்டிக்குள், மின்சார மீடர் போர்டு அல்லது மெயின் ஸ்விட்ச்சுக்குள் என்று.  
 
ஆண் பல்லி இன்றியே முட்டைகள் போடும் பல்லி வகைகளும் உண்டு.
 
சமைத்துக் கொண்டிருக்கும் உணவில் பல்லி விழுந்து செத்தால் அந்த உணவு விஷமாக மாறுகிறது என்பது உண்மையா?  விஞ்ஞான ரீதியாக இது பற்றி ஆராய்ச்சிகள் செய்யப் பட்டதாக குறிப்புகள் எதுவும் என் கண்ணில் பட வில்லை.
 
பல்லியின் உடலில் சால்மொனெல்லா என்ற ஒரு பாக்டீரியா இருக்கும்.  இந்த உயிரணு மனித உடம்பில் டைபாய்டு போன்ற ஜுரத்தையோ, வாந்தி பேதியையோ உண்டாக்கலாம்.  ஆகவே பல்லியைத் தொட்டால் கையை சோப்புப் போட்டு நன்றாகக் கழுவிட வேண்டும்.  உணவு தயாராகும் போது பல்லி அதில் விழுந்தால் அதன் உடலில் உள்ள சால்மொனெல்லா கிருமிகள் அழிந்திட வாய்ப்புகள் உண்டு.  அதே தயாரான உணவில் விழுந்து செத்தால் கிருமிகள் உயிரோடு இருக்க வாய்ப்பு உண்டு.  எப்படி இருந்தாலும் இலையில் செத்த பல்லியோடு உணவு விழுந்தால் அதைப் பார்ப்பவர்களுக்கு ஒவ்வாமையால் வாந்தி பேதி வரலாம்.
 
“கெத்…கெத்…கெத்…” என்று கத்திடும் பல்லி சொல்லுக்குப் பலன்?

கட்டாயம் உண்டு.  பல்லி ‘சொல்வது’, அதான் ஆண் பல்லி கத்துவது, ஒரு “கல்யாண மாலை” விளம்பரமே. தான் இருப்பதை அறிவிக்கவும், “நான் தயார். நீங்கள் தயாரா?” என்று கேட்டிடவும்.  துணை சேர்க்கத் தான் பல்லி கத்துகிறது, மன்னிக்கவும், ‘சொல்கிறது’,.  நமக்குப் பலன்களை வாரி வழங்குவதற்காக அல்ல.
 
பல்லி விழுதலுக்குப் பலன்?  பல்லி சாதாரணமாக விழாது.  வயது முதிர்ந்தாலோ, வியாதி வந்தாலோ தான் விழும்.  நமக்குப் பலன்களை அளிப்பதற்காக அல்ல அவை விழுவது.  மரணம் அவற்றை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதன் அறிகுறியாகத் தான்.
 
நம் உடலில் பல்லியின் கால் பாதம் போன்ற அமைப்பு கொண்ட உறுப்பு நமது நாக்கு.  வெந்த முருங்கைக் காயினையோ, மாம்பழக் கதுப்பினையோ சப்பி சாப்பிட்ட அனுபவம் உண்டா?  அவற்றின் முதுகுப் புறம் அண்ணத்தையும் சத்துள்ள பாகம் நாக்கையும் பார்த்தது போல வைத்துக் கொண்டு சப்பிப் பாருங்கள் சத்து தோண்டைக்குள் போகிறதா என்று.  அப்போது புரியும் நாக்கின் சூன்னியம் உண்டாக்கி உரிஞ்சும் சக்தி பற்றி.
 
(படங்கள் விக்கிபீடியா போன்ற இணைய தளங்களில் இருந்து)
 

நடராஜன் கல்பட்டு      

--Geetha Sambasivam (பேச்சு) 10:08, 15 ஏப்ரல் 2014 (GMT)


பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 15 ஏப்ரல் 2014, 10:09 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 7,196 முறைகள் அணுகப்பட்டது.