இறைவனைக் காண்போம் ஆள்காட்டிக்குருவி 7மரபு விக்கி இருந்துஇயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்( 7 ) ஆள் காட்டிக் குருவி ==
ஆள் காட்டிக் குருவி என்றொரு குருவி உண்டு. ஆங்கிலத்தில் இதை லேப்விங் (Lapwing) என்று அழைப்பார்கள். நம் நாட்டில் இரண்டு வகையான லேப்விங்களைக் காணலாம். இவை எல்லோ வேட்டில்ட் லேப்விங் (Yellow wattled Lapwing) ரெட் வேட்டில்ட் லேப்விங் (Red wattled Lapwing) என்பவை ஆகும். வேட்டில் என்பது இப்பறவையின் அலகு ஆரம்பிக்கும் இடத்தில் தலையின் இரு பக்கங்களிலும் காணப்படும் தோல் போன்ற ஒரு உறுப்பாகும். இதன் நிறத்தை வைத்துதான் இந்த இரண்டு பெயர்கள். இவ் உருப்பு இப் பறவைக்குத் தேவையான ஒரு உருப்பா அல்லது ஒரு ஆபரணமா என்பது பற்றி யாரும் இதுநாள் வரை ஆராய்ச்சி செய்துள்ளதாகத் தகவல் இல்லை.
Red-wattled Lapwing-modified-29-10-20 (சிவப்பு ஆள்காட்டிக் குருவி)
ஆள் காட்டிக் குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பது மரக் கிளைகளிலோ அல்லது மரப் பொந்துகளிலோ கூடு கட்டி அல்ல, தரையில் தான். தரையில் கூடு என்றவுடன் ஏதோ தேன் சிட்டு, தையல்காரக் குருவி, தூக்கணாங்குருவி போல நன்றாகக் கூடு கட்டியிருக்கும் என்று நினைக்காதீர்கள். தரிசல் நிலங்கள், வயல் வெளிகள், ஆறு குளங்களில் நீர் வற்றிய இடங்கள் இவற்றில் சிறிய கற்கள் பலவற்றை ஒரு குழிவான தட்டு போல சேகரித்து அவற்றின் நடுவே முட்டை இடும்.
இக்குருவி இடும் புள்ளிகள் கொண்ட முட்டைகளின் நிறம் சற்று ஆச்சரியம் அளிக்கக் கூடியது. சுற்றுப்புர நிலத்தின் நிறத்திற்க்கு ஏற்ப செம்மண் கலரிலோ ஸ்லேட் கலரிலோ இவை இருக்கும். அப்படி இருந்தால் தானே எதிரிகளின் கண்களில் இம்முட்டைகள் சட்டென்று தென்படாது ?
பறவைகளின் முட்டைக்கு ஓடு உண்டாவதோ அந்த ஓட்டிற்கு நிறம் தீர்மானிக்கப் படுவதோ முட்டைகள் ஜனன உருப்பிலிருந்து கிளம்பிக் கீழ் இறங்கி வெளிவரும்போது கடைசியாக நிகழும் ஒரு சம்பவமாம். இந்தப் பறவைகளுக்கு கூடு இருக்கும் நிலத்தின் நிறத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப முட்டையின் நிறத்தை மாற்றும் சக்தி இருக்க வேண்டும். இந்த விந்தையை நான் பார்த்திருக்கிறேன். களிமண் கலந்த கருப்பு நிற நிலத்தில் இருந்த கூட்டில் உள்ள முட்டைகளின் புள்ளிகள் வெளிர் கருப்பு மற்றும் அடர்ந்த கருப்புப் புள்ளிகள் கொண்டதாகவும், செம்மண் பூமியில் இருந்த கூட்டில் உள்ள முட்டைகளின் புள்ளிகள் மித மற்றும் அடர்ந்த கருஞ்சிவப்பு நிறமாகவும் இருந்ததைப் பார்த்திருக்கிறேன்.
ஆள்காட்டிக் குருவி தனது முட்டைகளை எப்படி மிகக் கவனமாக காப்பாற்றிக் கொள்கின்றன என்று பாருங்கள்.
ஓரு பறவை அடைகாத்துக் கொண்டிருக்கும் போது மற்றொரு பறவை சற்றே உயரமான இடத்தில் நின்று கொண்டிருக்கும். ஆடு மாடுகளோ, மனிதர்களோ தரையில் உள்ள முட்டைகளை நோக்கி நடந்தால், காவல் காக்கும் பறவை, “கிரக்...கிரக்...” என அபாய ஒலி எழுப்பும். உடனே அடைகாத்துக் கொண்டிருக்கும் பறவை எழுந்திருக்காமல் குனிந்தபடியே சிறு தூரம் நடந்து சென்று பின் இரு பறவைகளுமாக ஆகாயத்தில் கிளம்பி கூட்டை நோக்கி நடப்பவரை / நடப்பதை விமானம் தாக்குவது போலத்(dive bombing) தாக்குதல் செய்யும். அவ்வாறு செய்யும் போது, ஆங்கிலத்திலே “Did you do it? Did you do it?” என்று கேட்பது போன்ற ஒலியினை எழுப்பும் ஆதலால் இப்பறவைகளை ‘Did you do it bird’ என்று சிலர் வேடிக்கையாக அழைப்பார்கள். இப்போது புரிகிறதா இந்தக் குருவியை ஏன் ஆள்கட்டிக் குருவி என்று பலரும் அழைக்கிறார்கள் என்பது?
இவ்வளவு கவனத்துடன் தன் முட்டைகளையும் குஞ்சுகளையும் பாதுகாக்கும் குருவியை நான் சில நாட்கள் தொடர்ந்து படம் பிடித்து வந்தேன். முதலில் கேமராவை மட்டும் கூட்டின் அருகில் வைத்து விட்டு தூரத்தில் இருந்து ரிமோட் ரிலீஸ் மூலம் படம் பிடித்து வந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக அருகில் சென்று இறுதியில் அதனைத் தடவிக் கொடுத்தேன். பின் அடை காத்துக் கொண்டிருந்த பறவையை கையில் எடுத்து சுமார் இரண்டடி தூரத்தில் விட்டு அது தன் கூட்டினை அடையும் போது படம் எடுத்தேன்.
Y.W.Lapwing walking back to nest-modified-14-12-10.
ஒரு முறை எனது நண்பர் ஒருவரை அப்பறவையைத் தடவிக் கொடுக்கச் செய்து எடுத்த படம் இதோ.
Stroking the Y.W. Lap wing. அடர்ந்த காடுகளில் புதர்களுக்கு இடையே புலி யார் கண்ணுக்கும் தெரியாமல் மெல்ல மெல்ல நகர்ந்து தன் இரை நோக்கிச் செல்லும்போது அதனைத் தன் அபாயச் சங்கினை ஊதி (Did you do it?....Did you do it? என்றபடி) பிறருக்கு அறிவிப்பது இந்த ஆள்காட்டிக் குருவி தான்.
இயற்கையின் எழிலில் நமக்கு இறைவன் காட்டும் விந்தைகளுக்கு ஒரு எல்லையும் உண்டோ?
(கருப்பு / வெள்ளை படங்கள் - நடராஜன் கல்பட்டு)
--
|

