இறைவனைக் காண்போம்-- புறாக்கள்!மரபு விக்கி இருந்துபுறா என்றவுடன் நம் அனைவர் கண் முன்னே தோன்றுவது கீழே உள்ளது போன்ற ஒரு காட்சிதான். புறா கூட்டம் கூட்டமாக வசித்திடுக் ஒரு பறவை. அது தானியம் தின்னி. புறாவை நாம் மணிப்புறா என்றும் மாடப்புறா என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கிறோம். இதையே ஆங்கிலத்தில் "dove" என்றும் "pigeon" அழைப்பார்கள். உருவத்தில் சிறியதாய் உள்ளது மணிப்புறா. (dove) பெரியதாக உள்ளது மாடப்புறா. (pigeon) மாடங்களில் அதாவது பெரிய கட்டிடங்கள் மசூதிகள் இவற்றில் வசிப்பதால் மாடப்புறா என்ற பெயர் வந்திருக்க வேண்டும். மனித வாழ்க்கையோடு நெருங்கிய சம்பந்தம் கொண்ட ஒரு பறவை புறா.
கணினி, கைபேசிகள், தபால் தந்தி நிலையங்கள் எனத் தோன்றிடாத காலத்தில் புறாக்களின் கால்களில் காகிதச் சுருள் கட்டிச் செய்திகள் பரிமாறிக்கொள்ளும் முறை இருந்தது. புறா வளர்ப்பது பலருக்கு ஒரு பொழுதுபோக்கு. அவற்றை எளிதாக வீட்டில் வளர்த்திட முடியும். பழக்கிட முடியும், மீண்டும், மீண்டும் தன் இடத்திற்கே திரும்பி வந்திடும் அவை. அவ்வாறு பழக்கப் படுத்தப்பட்ட புறாக்களை வைத்துக்கொண்டு வெகு தூரம் பறந்திடும் போட்டிகள் வைப்பதும் உண்டு. அப்படிப்பட்ட போட்டிகளில் 100 முதல் சில ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரையிலான போட்டிகள் அடங்கும். புறாப் பந்தயம் பெல்ஜியம் நாட்டிலே மிகவும் பிரசித்தமான ஒன்று. நம் நாட்டில் தமிழ்நாட்டில் தான் இது அதிக அளவில் பிரபலமடைந்துள்ள ஒன்று. தூத்துக்குடி வளர்பிறை பறக்கும் பந்தயப் புறாச் சங்கம் மிகப் பிரசித்தமான ஒன்று. அந்தச் சங்கத்தின் அங்கத்தினரான வி.எஸ். வேல்சாமியின் புறா ஒன்று சென்ற ஆண்டு நடத்தப்பட்ட போட்டியில் சந்த்ரபூர் (மஹாராஷ்டிரம்) என்ற ஊரில் இருந்து தூத்துக்குடிக்கு (1550 கிலோ மீட்டர் தூரம்) 266.5 மணி நேரத்தில் பறந்து முதல் பரிசினைத் தட்டியது. மாடப்புறாவினை வீட்டில் வளர்ப்பது போல மணிப்புறவினை வீட்டில் வளர்க்க முடியாது. சில நாடுகளில் திருமணத்தின்போது ஒரு ஜோடி வெள்ளைப் புறாக்களைப் பறக்க விடுவது ஒரு வழக்கம். அதன் பின்னணி புறாக்கள் ஒரு முறை ஜோடி சேர்ந்தால் அது பிரிந்திடாது என்ற எண்ணந்தான்.
தன் அலகிலே ஆலிவ் இலையினைக் கொண்டு காட்சி தந்திடும் புறா ஒரு சமாதானச் சின்னம்.
(சமாதானச் சின்னம்)
(பச்சைப்புறா)
மாடப்புறாக்களில் காணப்படும் ஒருவகைப்புறா வெள்ளைப்புறா.
வெள்ளைப்புறவில் மயில் போன்று தன் வால் சிறகுகளை விரித்து நடனமாடும். இது பார்க்க மிக அழகாக இருக்கும். இதன் கால்களிலும், விரல்களின் நகங்கள் வரையிலும் நீண்ட சிறகுகள் இருக்கும். பறவைகள் சந்தையில் இதன் விலை அதிகம்.
(மயிலென ஒயிலாய் நடனமாடிடும் வெள்ளைப்புறா)
(வளையம் கொண்ட புறா-- Ringed Dove)
(துக்கம் கொண்டாடிடும் மணிப்புறா--mourning dove) மணிப்புறாக்களில் புள்ளிகள் கொண்ட மணிப்புறா என்று ஒரு வகை உண்டு. இதை நம் கிராமப்புறங்களில் காணலாம்.
கூடு கட்டிடும் திறமையில் தூக்கணாங்க்குருவிக்கு நூறு மதிப்பெண் என்றால் புறாவுக்கு .........0 மதிப்பெண் தான் தர வேண்டி இருக்கும். சில சமயங்களில் அது கட்டிடங்களில் சற்றுச் சரிவான நிலையில் துருத்திக் கொண்டிஉர்க்கும் பகுதிகளில் (உதாரணத்திற்கு வெளிப்புற ஜன்னல்களுக்கு மேல் அல்லது வீட்டின் முன் கதவிற்கு மேல் அழகிற்காக சரிந்த நிலையில் அமைக்கப்பட்டிருக்கும் பகுதிகள்) கூடமைத்து, வருடா வருடம், முட்டையிட்டு, முட்டைகள் கீழே விழுந்து நொறுங்கும். இதனால் அவை பாடம் எதுவும் கற்றிடாது. மீண்டும் அடுத்த ஆண்டு அதே இடத்தில் கூடமைத்து முட்டைகளையோ அல்லது குஞ்சுகளையோ இழக்கும். அமெரிக்காவில் என் மகள் ஒருவளின் வீட்டின் முன்புற வாயில் கதவின் மேல் அழகிற்காக அமைக்கப்பட்டிருக்கும் சாய்ந்த கூரையின் மீது கூடமைத்து முட்டையிட்டு வருடா வருடம் முட்டைகளை இழக்கிறது ஒரு ஜோடிப் புறாக்கள். அவற்றின் மடமையை என்ன சொல்ல? ஜனநடமாட்டம் அதிகமாயுள்ள இடங்களிலும் புறாக்கள் வெகு சீக்கிரத்தில் எண்ணிக்கையில் அதிகரித்திடும். இவை அழகிய கட்டிடங்களின் மீது எச்சமிட்டு அவற்றின் அழகைக் கெடுப்பதாலும், தெருவில் நடந்து செல்லும் மக்கள் மீது எச்சமிட்டு அவர்கள் ஆடைகளைப் பாழ் செய்வதாலும் ஆஸ்திரேலியாவில் புறாக்களைக் கொன்றிட மக்களுக்கு அநுமதி உண்டு.
--Geetha Sambasivam 11:50, 16 செப்டெம்பர் 2012 (UTC) |



