இராமாநுஜரைப் போற்றிய பிள்ளைலோகம் ஜீயர்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பி.எஸ்.திருமலை




ஆழ்வார்கள் பன்னிருவர் தன் ஈரத்தமிழால் வைணவப் பயிரை வளர்த்தனர். அப்பன்னிரு ஆழ்வார்களின் அருளிச் செயல்களை உலகில் பரவச்செய்து, அப்பயிரை மேலும் வளர்த்து பேருதவி புரிந்தவர்கள் உரையாசிரியர்கள் என்றால் மிகையாகாது. அப்படிப்பட்ட உரையாசிரியர்கள் இராமாநுஜருக்கு முற்பட்ட காலத்திலும் இருந்தனர்; இராமாநுஜருக்குப் பிற்பட்ட காலத்திலும், அவரது காலத்திலும் தன் சீடர்களுக்கு உரைகளை எழுத உரைத்தபடியால், அவர்களும் மேலும் பல உரைகளை எழுதியுள்ளனர். அவர்களுள் தலைசிறந்தவர்

- நம்பிள்ளை
- பெரியவாச்சான் பிள்ளை
- அழகிய மணவாளப்பெருமாள்

ஆகியோர்.


பிற்காலத்தில், முன் சொல்லப்பட்டவர்களின் உரைகள் தவிர, விட்டுப்போன நூல்களுக்கும் உரைகள் எழுதி, வைணவத்தை சிறக்க வைத்தவர்களுள் ஒருவர் பிள்ளைலோகம் ஜீயர் என்பவர்.


மணவாள மாமுனிகள் சுமார் 640 ஆண்டுகளுக்கு முன் அவதரித்தவர். அவர் காலத்தில், வைணவம் பரிமளிக்க "அஷ்டதிக்கஜங்கள்" என்று எட்டுப்பேரை நியமித்தார். அவர்களுள் ஒருவர் "பரவஸ்து பட்டர்பிரான் ஜீயர்" என்பவர். இவரது பூர்வாஸ்ரம உறவு முறையில் இவரது 5வது தலைமுறையில் (பேரனுக்குப் பேரன்) அவதரித்தவர்தான் பிள்ளைலோகம் ஜீயர் என்பவர். சித்திரை திருவோண நட்சத்திரத்தில் காஞ்சிபுரத்தில் அவதரித்தவர். வரதாசாரியார் என்பது இவரது பூர்வாஸ்ரம பெயர்.


இவரது தமிழ்நடை, வடமொழி, கிரந்த நடை போன்றவை ஒன்றையொன்று விஞ்சியிருக்கும். தெலுங்கிலும் சிறந்த புலமை வாய்ந்தவர். வடமொழி, தமிழில் கவிதைகள் இயற்றுவதில் வல்லவர். மிகுந்த குருபக்தி உடையவர். அதனால், தன் குருநாதரான இராமாநுஜரைப் பற்றி "இராமாநுஜார்ய திவ்யசரிதை" என்ற வரலாற்று நூலையும், "யதீந்த்ர ப்ரவண ப்ரபாவம்" என்கிற மணவாள மாமுனிகள் பற்றிய வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். இதனால் இவருக்கு "யதீந்த்ர ப்ரவணப்ரபாவம்" என்ற விருதை நம்பெருமாள் அளித்தார்.


இராமாநுஜ நூற்றந்தாதிக்கு இவரது உரையும், மணவாள மாமுனிகளின் உரையும் உள்ளன. இராமாநுஜரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் "இராமாநுஜார்ய திவ்ய சரிதை" என்ற நூலில், இராமாநுஜரைப் போற்றிப் பரவியுள்ள தமிழ்ப் பாடல்களில் சிலவற்றைக் காண்போம்.


இராமாநுஜரின் ஐந்து ஆசார்யர்களுள் ஒருவரான திருக்கச்சிநம்பிகள் திருவேங்கடமுடையானுக்கு செங்கழுநீர் ஓடைகளில் பூக்களை உண்டாக்கியதை,

"வாக்கினால் நல்ல மனத்தினா லென்னையுனக்
காக்கினாய் நீ அருளாள வள்ளலே
தேக்கு மோடையில் செங்கழுநீரின்று
பூக்குமாறருள் பூமகள் நாதனே.

என்கிறார்.


இராமாநுஜரின் பெருமை உணர்ந்த நம்பெருமாள், காஞ்சிபுரத்திலிருந்து ஸ்ரீரங்கத்துக்கு திருவரங்கப் பெருமாளரையர் என்பவர் மூலம் அழைத்துவர, இராமாநுஜரும் திருவரங்கப் பெருமாளரையருடன் காஞ்சியைவிட்டு ஸ்ரீரங்கம் புறப்பட்டபோது,

"திக்குநோக்கித் திரும்பித் திரும்பியே
தேவராசர்தன் கோயிலையே நோக்கியே!
செக்கர்மேனி மிகப் பெருங்கைகளால்
சோர்ந்தகண்கள் பனிநீர்ப் பொழிந்திட!
மிக்ககோயில் பெருவழிதன்னையே
வேதநல்ல மறையோருடன்
புக்ககத்துக்குப் போகிற பெண்கள்போல்
போயினார் பெரும்புதூர் முனிவனார்.

என்று ஒரு பெண் மணமான பின்பு, பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீடு செல்வதுபோல் உள்ளது என்கிறார் ஜீயர்.


இராமாநுஜர் ஸ்ரீவில்லிபுத்தூரில் எழுந்தருளியிருக்கும் ஆண்டாளையும் அரங்கமன்னாரையும் கண்டு தொழுது,

"வாழி திருப்பாவை பாடும் மடப்பாவை
வாழி யரங்கமணவாளர் வாழியென
மாடுநிற்கும் புள்ளரையன் வாழி பெரியாழ்வார்
பாடுநிற்கும் வேதாந்தப் பா.

என்று ஆண்டாளின் "பாதாதி கேசம்" எனப் போற்றப்படும் திருவடி முதல் கேசம் வரை மிக அழகாக தனக்குரிய வகையில் பாடியுள்ளார்.


இவ்வாறு பிள்ளைலோகம் ஜீயர், இராமானுஜரை அனுபவித்துப் பல பாடல்களைப் புனைந்துள்ளார். இவர் இயற்றிய அந்தாதி, வ்யாக்கியானம், தனியன்கள் போன்றவை இலக்கிய நயமும் பக்திச் சுவையும் மிக்கவை. வைணவ உரையாசிரியர்களுக்கு எல்லாம் பிற்பட்டவராக இருந்தபோதிலும், வைணவம் தழைக்கச் செய்த இராமாநுஜரை செந்தமிழ்ப் பாக்களால் போற்றிப் பரவியுள்ளது இராமாநுஜரின் ஜெயந்தி நன்னாளில் நினைவுகூரத்தக்கது.


நன்றி:- தினமணி

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 8 மே 2011, 07:43 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,477 முறைகள் அணுகப்பட்டது.