இந்திரனின் இடப்பெயர்மரபு விக்கி இருந்துஇந்திரனின் இடப்பெயர் கி.இராசா
இருக்கு வேதத்தில் பரதகண்டத்தின் வடபகுதி ஒளிமிக்கதாகவும் (light) தென்பகுதி இருள்மிக்கதாகவும் (dark) சொல்லப்படுகின்றன.*2 உலகிற்கு வளத்தைத் தருகின்ற வருணன், மேற்குத் திசையின் தலைவனாக ஆக்கப்பட்டான்; இருள் நிறைந்த தென் திசையின் தலைவனாக இருந்தோர் உலகை ஆளுகின்ற இயமன் ஆக்கப்பட்டான்; உலகின் வளத்தை நிலை நிறுத்திச் செல்வத்தைச் செழிக்கச் செய்பவனாகக் குபேரன் வடதிசைத் தலைவனாக ஆக்கப்பட்டான்; இந்திரன் கிழக்குத்திசைக்குத் தலைவனாக்கப் பட்டான். இவர்களுள் குபேரன், இயக்கர்களின் (Yakshas) தலைவனாகக் கருதப்பட்டவன் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இயக்கர்கள் என்பவர்கள் ஆரியர் முன்பு இந்தியாவில் வசித்து வந்த அதீத சக்தி படைத்த மண்ணின் மைந்தர்கள் என்று வேதநூல் ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்துகின்றனர். ஆரியர்களின் வருகைக்குப் பின்னால் இவர்கள் வேதகாலத் தெய்வங்களுக்குக் கீழ்நிலையில் வைத்தெண்ணப்பட்டவர்கள் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். *3
இயமன் தென் திசைக்குரிய-குறிப்பாகத் தமிழ்ப்பகுதிக்குரிய –கடவுளாக ஆக்கப்பட்ட நிலையில் வருணன் பற்றிய தொன்மக் குறிப்புகள் தொல்காப்பியத்திலும், வருண வழிபாடு பற்றிய செய்திகள் பழந்தமிழ் வழிபட்ட இந்திரனும் சேர, இக்கடவுளர்கள் எல்லோரும் ஆரிய மரபிற்குகந்தவர்களாக உருமாற்றம் பெற்ற நிலையை இருக்கு வேதத்தில் காணலாம்.
ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தபோது அவர்கள் தங்களுடன் கொண்டு வந்த கடவுள் கருத்தியல்களுள் தெளிவாகத் தெரிவது அக்கினிக்கருத்தியல் மட்டுமே என்பதற்கு இருக்குவேத வழிபாடு சான்றாகும். இந்திரன், வருணன், குபேரன், இயமன் ஆகிய பிற வழிபாட்டுக்கருத்தியல்கள் கயிற்றரவு போன்றே தோற்றமளிக்கின்றன. இவர்களுள் இந்திரனை ஆரியக்கடவுள் கருத்தியலிலிருந்து இடப்பெயர்வு செய்யவேண்டிய அவசியமென்ன? அது எவ்வாறு நிகழ்ந்திருக்கக்கூடும் என ஆராய முற்படுவோம்.
இந்திரன், சகல சக்திகளும் படைத்த ஒருவனாகவே வேத, புராண, உபநிடதங்களில் காட்டப்பட்டுள்ளான். ஒரே வரியில் சொல்வதானால், அவனால் எதுவும் செய்ய இயலும். இப்படிப்பட்ட சர்வ வல்லமை பொருந்திய இந்திரனை முதல்நிலையில் ஆரியர்கள் அப்படியே ஏற்றுக்கொள்கின்றனர். ஆற்றல் மிகுந்த குதிரைப்படையின் உதவியால் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு இந்தியாவின் பூர்வீகக் குடிகள்மீது படையெடுத்து நிலைகுலையச் செய்து ஆக்கிரமிப்பை நிகழ்த்திக்காட்டினர் என்பது வரலாற்றுச் செய்தி. அந்த வேளையில் புகுந்தவர்களுக்கும் பூர்வீகக்குடிகளுக்கும் இடையே ஏற்பட்ட இணக்கம் காரணமாகப் பூர்வீகக் குடிகளின் தெய்வங்கள் புகுந்தவர்களின் புதிய வழிபாடுகளில் ஏற்பட்டிருக்கக் கூடும். *4 அதனால் தான் வேதகாலத் தெய்வங்களைப் பற்றி அறிய உதவும் முதற் சான்றான ரிக்வேதத்தில் இந்திரன், வருணன், குபேரன், இயமன் போன்ற தெய்வங்களைப் பற்றிய செய்திகள் தெளிவில்லாத நிலையில் உள்ளன.
இவற்றுள் தற்போது நம்முடைய கவனத்திற்குரியது இந்திரன் இடம்பெயர்ந்த செய்தி மட்டுமே. இதனை அறிவதற்கு நமக்கு மூலமாக அமைபவை வடமொழியில் காளிதாசர் இயற்றிய காவியங்கள். குறிப்பாகக் குமார சம்பவம் எனும் குமரக்கடவுளின் பிறப்புப் பற்றிய சிறு காப்பியம்: தமிழில் கடுவன் இளவெயினனார் இயற்றிய பரிபாடல் (பரி.5) இந்த இரண்டிலுமே இந்திரன் செயலும், கார்த்திகேயன் பிறப்பும் கூறப்படுகின்றன. இரண்டு நூல்களுமே பொதுவான ஒரு வடமொழி மூலத்திலிருந்து கருவை எடுத்துக்கொண்டுள்ளன. ஆனால் தமிழில் தமிழ் மரபிற்கேற்பச் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இக்கதையை நாம் மூன்று பகுதிகளாகப் பார்க்கலாம்; குமாரசம்பவம் சொல்லும் கதையின் முதற்பகுதி வருமாறு: தாரகாசுரனை அழிப்பதற்குச் சிவனின் உதவியைத் தேவர்கள் நாடுகின்றனர். சிவனும் உமையும் கூடும் வேளையில் இந்திரனின் தந்திரத்தால் காமன் எரிந்து சாம்பலாகிறான். காமனை எரித்த அக்கினிப் பிழம்பு நடுநடுங்கிக்கொண்டே இந்திரன் சபையை அடைந்தது. அக்கினியில் அலங்கோலத்தைக் கண்டு வருந்திய இந்திரன், என்ன நேர்ந்தது? என வினவுகின்றான். அதற்கு அக்கினி, “நான் புறா வடிவில் சிவனை அடைந்தேன். அங்கு அவன் உமையோடு கூடியிருந்தான். என் வரவால் அவனுக்கு அடங்காச் சினம் எழுந்தது. தன் நெற்றிக்கண்ணால் என்னை எரித்துவிடுவதுபோல் பார்த்தான். அந்தத் தீ என்னுள் பரவியது. இப்போது நான் அனலால் தவிக்கிறேன். சிவன் புணர்ச்சியைத் தவிர்த்தான். அந்த உற்பத்திச் சக்தி என்னுள் விழுந்தது. அது மூன்று உலகையும் சுட்டெரிக்கும் சக்தி படைத்தது என்றது.*5 அதற்கு இந்திரன், நீ பகீரதி ஆற்றில் மூழ்கி எழுந்தால் குளிர்வாய் என்று யோசனை சொன்னான். கங்கை சிவனுடைய வடிவமாதலால், அதில் மூழ்கி எழுந்தால் உன்னுள் உள்ள சிவவித்தை அவள் எடுத்துக்கொள்வாள் என்று இந்திரன் மேலும் சொன்னான்.
இனி பரிபாடலில் இந்தச் செய்தி எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது என்று பார்ப்போம். நெற்றியின் நடுவில் இமைக்காத கண்ணுடைய சிவனிடத்தில் அமரர் தலைவனான இந்திரன் சென்று, உனது புணர்ச்சியால் தோன்றிய கருவை அழிப்பாயாக என்ற வரத்தினைக் கேட்டுப் பெறுகின்றான். சிவபெருமான் வாய்மை தவறாதவனாகையால் இந்திரனுக்குத் தான் அளித்த வரம் செய்வதற்கு அரியது என்பதை உணர்கின்றான். ஆனால் அதனை மறக்காமல் தனது கருவின் உருவினைப் பல துண்டுகளாகச் சிதைத்துஇந்திரன் கையில் கொடுக்கின்றான்.*6
பரிபாடலில் காணப்படும் முதல் மாற்றம், அக்கினிக்குப் பதிலாகக் கரு உருவாதலும், கருவினைப்பலகூறுகளாக்குவதும் ஆகும். கருத்தோன்றிய பின்னர்த் தொடரும் கதையின் இரண்டாம் பகுதி குமாரசம்பவத்தின்படி வருமாறு:
புறா வடிவில் இருந்த அக்கினி கங்கையிடம் சென்றது. உன் கவலையைப் போக்கு; என்னுள் மூழ்கி எழு; உன் அனலை நீக்குவேன் என்று கங்கை புறாவிடம் சொன்னது. சொன்னபடி கங்கை அக்கினியை ஏற்றது. சிவனின் அன்பான ஆற்றல் கங்கையில் கலந்தது; அக்கினி குளிர்ந்தது. ஆனால் கங்கையின் வயிற்றில் அது தாங்கொணா வலியையும் வெப்பத்தையும் தந்தது. வெப்பத்தைத் தாங்க முடியாமல் நீர்வாழ் உயிரினங்கள் மடிந்தன. ஆயிரக்கணக்கான நாக்குகளைக் கொண்ட ஊழித்தீயாக அது வளர்ந்தது. கங்கை கொதிக்கத் தொடங்கியது. *7
கருவின் நிலை என்ன என்பதைப் பரிபாடல் தொடரும் நிலை காண்போம்:
சிவபெருமானிடத்திலிருந்து பெற்ற கூறுகளான கருவை இந்திரன் ஏழு முனிவர்களுக்கும் தந்தான். கருத்துண்டங்களை ஏற்றுக்கொண்ட ஏழு முனிவர்களும் பிறந்து துண்டுகளாக்கப்பட்ட இந்தக் கரு ஆறுமுகமுடைய மைந்தனாகி அமரர் படைக்குத் தலைவனாகும் என்பதைத் தம் தவத்தின் வலிமையால் உணர்ந்து கொள்கின்றனர். அவற்றைத் தம் மனைவியர் உண்டு, தம் வயிற்றில் தாங்கிக் கருவை வளர்த்தால் கற்புடைமைக்குப் பொருந்தாது என்று எண்ணி, வேள்வி வளர்த்து அக்கருவைத் தீயே தாங்கட்டும் என்று ஒன்றாகச் சேர்த்து அக்கருவினைத் தீயில் இட்டனர்.*8
வடமொழி மரபில் கடவுட்பிறப்பின் கருவைத் தாங்குவதோ ஈன்றெடுப்பதோ வழக்கமான-இயல்பான-முறைவழி நிகழாது. இதற்கேற்பக் குமார சம்பத்தில் இறைவனின் கருவைக் கங்கை தாங்கியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் பரிபாடலில் இறைவன் கருவைக் கற்பரசியர் அறுவரின் கணவர்களான முனிவர்கள் ஏற்றனர் எனச் சொல்லி, அதற்கு மேலும் புனிதம் ஏற்றுவதற்காக அதனை வேள்வித் தீயில் இட்டனர் எனக் கருவின் கதையைத் தொடர்கிறார் பரிபாடலாசிரியர் கடுவன் இளவெயினனார்.
இந்தக் கரு குமரக்கடவுளாக உருவாகும் நிலையைக் குமாரசம்பவம் கதையின் இறுதிப்பகுதி பின்வருமாறு காட்டுகிறது.
வைகறைப் பொழுதில் ஆறு கார்த்திகைப் பெண்கள் கங்கையில் நீராட வருகின்றனர். சடங்குகள் செய்கின்றனர். அவர்கள் மாசுகள் அகன்ற தூயவர்கள் ஆகின்றனர். தங்கள் வாழ்க்கையின் நோக்கமே நிறைவேறியது போல் அவர்கள் மகிழ்கின்றனர். காரணம் சிவனது ஆற்றல் அவர்களுள் சென்று அவர்கள் வயிற்றில் தங்கியது தான். அதே சமயத்தில் அந்தச் சக்தியைத் தாங்க முடியாமல் உள் எரியும் வெப்பத்தால் அவர்கள் தவிக்கின்றனர். அவர்கள் வயிற்றில் கரு வளர்கின்றது. தங்கள் கணவருக்குத் தெரியாமல் கருத்தங்கியதையும் தாங்கியதையும் அறிந்தால் அவர்கள் என்ன செய்வார்களோ என்ற பயமும் அவர்களுள் எழுகின்றது. இந்தப்பயத்தின் காரணமாகத் தங்கள் வயிற்றில் வளர்ந்த ஆறு கருவையும் மலர்கள் மேல் வைத்துவிட்டுச் செல்கின்றனர்.*9 அந்தக் கரு ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகான குழந்தையாக உருவெடுக்கிறது.
இதே சம்பவம் பரிபாடலில் பின்வரும் மாறுபாடுகளுடன் காணப்படுகிறது:
இனித்தான் இச்சம்பவத்தின் முக்கியத் திருப்புமுனை அறிமுகம் செய்யப்படுகிறது. அதாவது, கார்த்திகைக் குழவியை-கார்த்திகேயனாகப் பெற்ற அப்பொழுதே இந்திரன் பகைமை மிகக் கொண்டு, முனிவர்களுக்குத் தான் கருவைத் தந்ததையும் மறந்து தன் வச்சிராயுத்தால் வெட்டினான். அப்போது ஆறு வடிவங்களும் ஒன்றாகி, இந்திரனை வென்று உயர்ந்த வெற்றிச் சிறப்புடையவனாகக் கார்த்திகேயன் ஆனான்.*11
இந்திரனின் இடத்தை, அதாவது ‘தேவர் தலைவன்’ எனும் பதவியை இவ்வாறு கார்த்திகேயனுக்கு மாற்றித்தருவதற்கான அவசியம் என்ன என்பதற்கு மாக்சுமுல்லரின் குறிப்புத் தெளிவைத் தருவதாக உள்ளது. நாம் தொடக்கத்தில் குறிப்பிட்ட இந்திரன், இந்தியாவில் வாழ்ந்த பூர்வீகக் குடிகளால் வணங்கப்பட்டவன் என்ற கருத்து உறுதிப்படுகிறது. ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தபோது அவர்களுக்கு இந்திரன் மேகங்களின் கடவுள், வச்சிராயுதத்தை வைத்திருப்பவன், மழையைத் தருபவன் என்றெல்லாம் தெரியாது என்று மாக்சுமுல்லர் குறிப்பிடுகிறார்.*12 ஆனால் வந்த குழுவினர் தந்த வேதங்களில், ‘பார்ஜன்யா’((Parjanya) என்ற சொல் ஆங்காங்கே காணப்படுகிறது என்கிறார் அவர். ‘பார்ஜன்ய’ என்பதை மேகம், தெளிப்பது (Parj to sprinkle) அதாவது மழையைத் தருபவன்’ என்றுபொருள்படுவதாகும் என ஜெர்மன், துயூதானிக், லத்தீன், சாட்விக், செல்டிக், பழம் பெர்சியன் மொழிகளைச் சான்று காட்டி அவர் சொல்கிறார்.*13
ஆரியர்கள் தங்கள் பிறப்பிடத்தை விட்டுப் பல குழுக்களாகப்பிரிந்து உலகின் பலதிசைகளுக்கும் குடிபெயர்ந்தபோது இந்தியாவுக்கு வந்த குழுவினர் தங்கள் மொழியின் சில சொற்களை மறந்தனர் என்றும், அவற்றுள் ஒன்று பெர்குனாஸ் (Perkunas) என்ற சொல் என்றும் மாக்ஸ்முல்லர் குறிப்பிடுகிறார்.*14 இந்தப் பெர்குனாஸ் அல்லது மழைக்கடவுள் என்ற சொல் மேற்சுட்டிய ஐரோப்பிய மொழிகளில் காணப்படுகிறது என்றும் அவர் மேலும் குறிப்பிடுகிறார். எனவே ஆரியர்கள் தங்கள் மூலச் சொல்லான பெர்குனாஸ் என்பதை இழந்து அதே பொருள் தரும் பார்ஜன்ய என்ற சொல்லைச் சிலபோது பயன்படுத்தினர். இந்தச் சொல் இருக்கு வேதத்திலும் ஒரு சில இடங்களில் காணப்படுகிறது. ஆனால் பூர்வீகக் குடிகளிடம் வல்லமை பொருந்திய இந்திரன் இதே தன்மையோடு திகழ, அதனைச் சில காலத்திற்கு ஆரியர்கள் ஏற்றுக்கொண்டனர். இருந்தாலும் இன்ன குணம் தான் இந்திரன் குணம் என்று வரையறுக்க இயலாத குழப்ப நிலை நீடித்தது. இதற்கு முடிவாக, மனிதனால் பிறப்பிக்கப்படாத கார்த்திகேயன் (செய்யப்பட்டவன்) என்ற கடவுளைப் படைத்து, அதுவரை தேவர் தலைவனாக இருந்து-இந்தியப் பூர்வீகக் குடிகளால் வணங்கப்பட்ட இந்திரனுக்குப் பதிலியாகக் கார்த்திகேயன் வடமொழிப் புராணங்களில் அமர்த்தப்பட்டவன்.
கார்த்தி (Karthi) என்பது க்ருதி (Kriti) என்ற சொல்லினடிப்படையில் பிறந்தது என்பதை நினைவிற்கொள்ளவேண்டும். க்ருதி என்பதற்கு, செய்யப்பட்டது, கட்டப்பட்டது, உருவாக்கப்பட்டது என்று செயற்கை நிலைப்பொருள் கூறப்படுகிறது.*15 எனவே வேதகால மரபிற்கேற்ப மனித முயற்சியில்லாமல் தானே தோன்றிய கடவுளாக இந்திரனுக்குப் பதில் கார்த்திகேயன் உருவாக்கப்பட்டான். முருகன் அவதாரங்களுள் ஒரு நிலையாகப் பண்டைத் தமிழ் இலக்கியத்திலேயே இது ஏற்கப்பட்டுவிட்ட நிலையைத் தான் பரிபாடலில் இடம்பெற்றுள்ள கடுவன் இளவெயினனார் பாடல் காட்டுகிறது.
குறிப்புகள்.
குறிப்புதவி நூல்கள்:
அரிமா நோக்கு: 3:3 அக்டோபர் 2009
--Geetha Sambasivam 10:59, 28 ஆகஸ்ட் 2011 (UTC) |