அருள்மிகு வடக்கு நாதர் திருக்கோவில்
மூலவர் - வடக்கு நாதர்
பழமை - 2000 - 3000 ஆண்டுகளுக்கு முன்
ஊர் - திருச்சூர்
மாவட்டம் - திருச்சூர்
மாநிலம் - கேரளா
தல சிறப்பு :
இத்தலத்தில் உள்ள லிங்கம் முழுவதும் நெய்யால் ஆனது. அமர்நாத் லிங்கத்தை "பனிலிங்கம்' என அழைப்பதைப்போல் இத்தலத்து சிவனை "நெய்லிங்கம்' என அழைக்கிறார்கள்.
திருவிழா :
திருச்சூரில் பூரம் திருவிழா மிகவும் சிறப்பு. ஆனால், அத்திருவிழா வடக்குநாதருக்கு மட்டும் நடத்தப்படுவதில்லை. இக்கோயிலுக்கு எதிரில் உள்ள பாரமேட்டுகாவு பகவதியும், திருவெம்பாடி பகவதியும் வடக்குநாதரை பார்க்கும் நாள் தான் திருச்சூர் பூரம் திருவிழா என்கிறார்கள். சிவராத்திரி காலங்களில் கோயிலை சுற்றி லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.
தல பெருமை :
லிங்கத்தின் அமைப்பு: 12 அடி உயரம், 25 அடி அகலம் உள்ள மிகப்பழமையான இந்த நெய்லிங்கம் எப்போதும் உருகாமல், பாறை போல் இறுகி உள்ளது. எப்போதாவது நெய் வெளிப்பட்டால், உடனே உருகி காணாமல் போய்விடுகிறது. நெய் லிங்கத்திற்கு நெய் அபிஷேகம் மற்றும் பன்னீர், சந்தன அபிஷேகம் செய்தாலும் பாதிப்பு ஏற்படுவதில்லை. இந்த லிங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் பெரிய கவசம் சாத்தப்பட்டுள்ளது.
விலகிய நந்தி: இங்குள்ள நந்தி சிவனின் எதிர்புறம் இல்லாமல் விலகி தனி மண்டபத்தில் உள்ளார். பிரதோஷ காலங்களில் சிவன் இங்கு எழுந்தருளி நந்தியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிப்பது கோயிலின் சிறப்பம்சம். தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் கிடைக்க பாற்கடலை வாசுகி என்ற பாம்பைக் கொண்டு கடைந்தார்கள். அந்த பாம்பு கர்ப்பகிரகத்தின் வாசலில் மணியாக இருப்பதாக ஐதீகம். பிரதோஷ காலங்களில் இந்த மணியை தலைமை நம்பூதிரி மட்டுமே அடிப்பார், மற்றவர்கள் தொட அனுமதியில்லை.
'தல வரலாறு ':
ஒருமுறை சிவனுக்கும் அர்ஜீனனுக்கும் நடந்த போரில் சிவனது தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதற்காக தன்வந்திரி பகவான் நெய் தடவி சிகிச்சை செய்தார். இதனால் இங்கு நெய்யால் செய்யப்பட்ட லிங்கம் இருப்பது விசேஷமானது. அமர்நாத்தில் பனிலிங்கம் போல், திருச்சூரில் நெய்யே லிங்கமாக இருப்பது ஆச்சரியமான விஷயம்.
இதை "தென் கைலாயம்' என்கிறார்கள். பரசுராமர் பிரதிஷ்டை செய்த இத்தலம் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. கேரளாவில் உள்ள மேற்கு பார்த்த சிவாலயம் இது.
திறக்கும் நேரம்:
காலை 4 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
ஆன்மீகச் சிந்தனை மலர் :
- தானத்தை தம்பட்டம் அடிக்காதீர்கள் - பாம்பன் சுவாமிகள்
- ஒரு மனிதனின் தயவைப் பெறுவதற்குக்கூட நீண்டநாள் போராடுகிறீர்கள். அரசாங்கத்தின் தயவு வேண்டுமானால் இன்னும் அதிகநாள் காத்திருக்க வேண்டி உள்ளது. இந்த சாதாரண ஜென்மங்களுக்கே இப்படி காத்திருக்க வேண்டியது என்றால், கடவுளின் அருளைப் பெறுவதற்கு எவ்வளவுநாள் காத்திருக்க வேண்டும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனவே அவரது கருணையைப் பெற பொறுமையுடன் காத்திருங்கள். மிகப்பெரிய பலன் கிடைக்கும்.
-
- பாவம் செய்யும்போது எப்படி மறைவாக செய்கிறீர்களோ அதேபோல மிகுந்த புண்ணியமான அன்ன தானத்தையும் எவ்வித தம்பட்டம் இல்லாமல் அமைதியாக செய்ய வேண்டும். அப்படியானால்தான் அந்த தானத்திற்குரிய பலன் வெகுவாக கிடைக்கும்.
பவள சங்கரி திருநாவுக்கரசு.
தேதி - டிசம்பர் - 03 - 2010.