அரியிலூர் வித்துவான்கள்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதய்யர்

(தட்டச்சு செய்து அளித்தவர்: திருமதி கீதா சாம்பசிவம்)



இந்த அரியிலூர் ஸமஸ்தானத்தில் வடமொழி, தமிழ், தெலுங்கு என்னும் மூன்றிலும் வல்ல பல வித்துவான்களும், ஸங்கீத வித்துவான்களும், பரத சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்றவர்களும் ஜமீன்தார்களுடைய ஆதரவு பெற்று வாழ்ந்து வந்தார்கள். புலவர்களுடைய பெருமையை அறிந்து ஜமீன்தார்கள் வேண்டிய உதவியை அளித்து அவர்கள் மனத்தில் திருப்தியை உண்டாக்குதலையே பெரும்பயனாக எண்ணி வந்தார்கள். பல சாதியினராகிய வித்துவான்கள் தங்கள் தங்களுக்கு உதவிய ஜமீன்தார்களைப் பாராட்டிப் பாடிய பாடல்களும் பிரபந்தங்களும் பல; வேறுவகை நூல்களும் சில உண்டு.


தமிழ், வடமொழி, ஸங்கீதம் முதலியன நம்முடைய நாட்டில் ஒழுங்காக வளர்ச்சியுற்றுவந்ததற்குக் காரணம் அரசர்களும் மடாதிபதிகளும் ஜமீன்தார்களும், பிரபுக்களும், வித்துவான்களை ஆதரித்துப் பாதுகாத்து வந்தமையே. செல்வம் பெற்றதனாற்பயன் புலவர் பாடும் புகழுடையவராதலென்பது அவர்களுடைய கொள்கையாக இருந்தது. கோப்பெருஞ்சோழனோடு உயிர் நீத்த பிசிராந்தையாரைப் போலப் பிற்காலத்தும் சீனக்கனென்னும் பிரபுவோடு ஈமம் புக்க பொய்யாமொழிப் புலவரும் இருந்தனர். அரசியல் விஷயங்களிலும் உயர்ந்த தலைமையை அளித்துக் கபிலரை வழிபட்டு வந்த பாரியைப் போல ஒட்டக்கூத்தரை வழிபட்ட குலோத்துங்கனும் இருந்தான். இங்ஙனம் வழி வழிவந்த புலமையும் வண்மையும் தமிழ் நாட்டில் அறிவென்னும் விளக்கை அவியாமல் இருக்கச் செய்தன. ஸமஸ்தானங்கள் முதலியவை கலைகளை வளர்க்கும் நியமங்களாக இருந்தன.


பொருளடக்கம்

அரியிலூர் வித்துவான்கள்

சண்பகமன்னார்

இந்த ஸமஸ்தானத்தில் சண்பகமன்னார் என்னும் குடிப்பெயரையுடைய ஒரு பரம்பரையினர் ஸமஸ்தான வித்துவான்களாக இருந்து வந்தனர். அவர்கள் ஸ்ரீவைஷ்ணவர்களில் தென்கலையார். சண்பகாரணியம் எனப்படும் மன்னார்குடியிலிருந்து அவர்கள் வந்தவர்களாதலின் அவர்களுக்கு அந்தக் குடிப்பெயரமைந்தது; மன்னாரென்பது அந்த ஸ்தலத்திலுள்ள பெருமாளின் திருநாமம். இளமையிலேயே செய்யுள் செய்யும் ஆற்றல் அந்தப் பரம்பரையினருக்கு இருந்து வந்தமையின், அவர்களுக்குப் பாலஸரஸ்வதி, பாலகவி என்னும் பட்டங்கள் அளிக்கப்பட்டு வழங்கி வந்தன. அவர்களிற் பலர் அத்வைதத்தில் மிக்கதேர்ச்சி பெற்றவர்கள்; சமரஸ நோக்கமுடையவர்கள். அவர்களுள் ஒருவர் பழுவூரில் தேவி தவஞ்செய்து இறைவனை மணம் செய்து கொண்டதை நாடகமாகப் பாடி யிருக்கின்றனர். அது "திருக்கல்யாண நாடகம்" என வழங்கப்படும்; வேறொருவர் "சிவராத்திரி நாடகம்" என ஒருநூல் மிகச் செவ்விதாக இயற்றி யிருக்கிறார்; அது பிரமோத்தர காண்டத்திலுள்ள கதையை அமைத்துப் பாடப்பெற்றது.


சண்பகமன்னாரென்னும் பொதுப்பெயரையே சிறப்புப்பெயராகப் பெற்ற ஒரு பெரியார் அக்குடும்பதிற் பிரஸித்தி பெற்று விளங்கினார். அவருடைய பெயர் ஸ்ரீநிவாஸையங்காரென்பது; சண்பகமன்னா ரென்று வழங்கப்படுவாரேயன்றி அவருடைய இயற்பெயர் இன்னதென்றறிந்தவர் சிலரே.


அவர் தமிழ், வடமொழி, தெலுங்கு என்னும் மூன்றுமொழிகளிலும் வல்லவர். ஸங்கீதத்திலும் பயிற்சி மிக்கவர். அத்வைத சாஸ்திரத்தில் நல்ல ஆராய்ச்சியும் தெளிந்த ஞானமும் அவற்றிற்கு ஏற்ற அநுபவமும் உடையவர். இல்லறத்தில் இருந்தனரேனும் மனத்துறவையுடையவராகித் தாமரை இலைத் தண்ணீர்போல் இருந்து தமது கடமைகளைச் செய்துகொண்டு வந்தார்.

"எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்
முத்தர் மனமிருக்கும் மோனத்தே"

என்பது உண்மையன்றோ? அவர் அரியிலூரில் பெருமாள்கோவிலின் புறத்தேயுள்ள தெற்கு வடக்குத் தெருவில் மேல் சிறகின் வடகோடியிலிருந்த மடத்தில் இருந்து பாடஞ்சொல்லிக்கொண்டு சாந்த நிலையில் வாழ்ந்து வந்தார்.


அவரிடத்தில் வேதாந்த சாஸ்திர பாடங் கேட்டவர் பலர். அவருடைய சிஷ்யர்களாகிய துறவிகள் பலர் பக்கத்தே உள்ள சிறு கிராமங்களில் மடங்கள் கட்டிக்கொண்டு அமைதியாக வாழ்ந்துவந்ததன்றி அங்கங்கே உள்ளவர்களுக்கு வேதாந்த சாஸ்திரங்களைப் பாடஞ்சொல்லிக்கொண்டும் வந்தனர். அத்வைத சாஸ்திர உணர்வு இவ்வூரிலும் அயலிடங்களிலும் சண்பகமன்னாரால் பரவியது. அவரிடம் பாடங்கேட்டவர்களுள் பலர் ஆலயத்திருப்பணிகள், தடாகப்பிரதிஷ்டைகள், அன்ன சத்திரம் முதலிய தருமங்கள் செய்தனர். அவர்களுள் ஆறுமுகப்பரதேசி என்னும் ஒருவர் ஐயம்பேட்டைக்கு அருகிலுள்ள பசுபதி கோயிலில் இருந்து வந்தனர். அவர் தம்முடைய கல்வி வன்மையாலும் சிறந்த ஒழுக்கத்தினாலும் எல்லாராலும் மதிக்கப்பட்டுப் பலதர்மங்களைச் செய்தனர்; அக்காலத்தில் தஞ்சையிலிருந்த கலெக்டருடைய நட்பைப் பெற்றுப் பசுபதி கோயிலில் ஒரு தடாகம் வெட்டிச் சத்திரம் ஒன்றையும் கட்டுவித்தார்.


சண்பகமன்னார் தம்மை ஆதரித்துவந்த ஜமீன்தார் மீதும் தெய்வங்கள் மீதும் பல செய்யுட்களையும் கீர்த்தனங்களையும் பாடியிருக்கின்றனர். ஜமீன்தார் நவராத்திரி உத்ஸவத்தைக் கொண்டாடுவதைச் சிறப்பித்து, "நவராத்திரி நாடகம்" என்ற ஒரு நூலும் இயற்றியுள்ளார். திருக்குடந்தை ஸ்ரீ சார்ங்கபாணிப்பெருமாள் மீது ஒரு நொண்டி நாடகம் இயற்றினார். அவருடைய புலமையும் ஞானமும் இன்றளவும் அந்தப் பக்கத்தில் உள்ளவர்களாற் கொண்டாடப்பட்டு வருகின்றன. அவர் காலத்திற்குப்பின் அவருடைய சிஷ்யர்களால் அவருக்குக் குருபூஜை மிகச் சிறப்பாகச் செய்யப்பெற்று வந்தது. அவருடைய பேரராகிய சடகோபையங்கார் காலம் வரையில் அக்குருபூஜை நடந்து வந்தது.


ஐயாவையங்கார்

சண்பகமன்னாருக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அவர்களுள் மூத்தவர் ஐயாவையங்காரென்பவர். அவர் தம் தந்தையாரைப் போலவே திறமையும் பெருமையும் உடையவராக இருந்தார்; அவரினும் அதிகமான உள்ளத் துறவை யுடையவர். அவர் இயற்றிய பாடல்களும் கீர்த்தனங்களும் பல உண்டு. அரண்மனை வித்துவானாக அவர் இருந்து வருகையில் துறவுணர்ச்சி மிக்க அவர் மனம் அவ்வாழ்க்கையில் அதிருப்தியுற்றது. இடைவிடாமல் இறைவனுக்குத் திருப்பணி செய்தலை மேற்கொண்டு மனமொழி மெய்களால் அவனை வழிபட்டு வாழ்நாள் முழுவதையும் கழிக்கவேண்டு மென்னும் பேராவல் அவர்பால் வளர்ந்தது. தம் குடும்பத்தைப் பரம்பரையாக ஆதரித்துவந்த ஜமீன்தாரிடத்தில் வேதனம்பெற்றால் "செஞ்சோற்றுக்கடன்" கழிப்பதற்காக அவர் சமயமறிந்து சென்று உவப்பித்தலும் விசேஷ காலங்களில் யாரேனும் வந்தால் சென்று பிரஸங்கம் செய்து கெளரவித்தலும் ஆகிய பல கடமைகளைச் செய்து வரவேண்டுமென்று எண்ணினார். அவற்றைச் செய்து வந்தமையால் அவருடைய அப்பியாஸங்களுக்கு இடையூறு நேர்ந்தது. ஆதலின் ஸமஸ்தானத்தொடர்பை விட்டுவிட்டுச் சாந்தமாக இருத்தலையே அவர்மனம் நாடிநின்றது.


அவர் சரியான காலங்களில் அரண்மனைக்கு வருவதில் ஊக்கங் காட்டாமலிருந்த காரணம்பற்றி அவர் காலத்திலிருந்த ஜமீன்தார் ஒருமுறை அவரை அவமதித்துப் பேசினர். அச்செயல் இடையூறாக இருப்பினும் அவர் தம் கருத்து நிறைவேறுதற்கு அநுகூலமானதென்று கருதினார். அவருடைய பற்றற்ற தன்மையும் உலக விஷயங்களில் உள்ள வெறுப்பும் இறைவன்பாலுள்ள திண்ணிதாகிய அன்பும் வெளிப்படுதற்கு அந்த ஜமீன்தாருடைய செயல் காரணமாயிற்று.


ஜமீன்தார் தம்மை அவமதித்துப் பேசியதை உணர்ந்த ஐயாவையங்கார் நேரே பெருமாள் கோயிலுக்கு வந்தார்; தசாவதார மண்டபத்தில் நுழைந்து ஸ்ரீநரசிங்க மூர்த்தியின் முன் நின்றார். அதுகாறும் தம்முடைய வாழ்வு வீணாயிற்றென்று நைந்தார். கண்ணீர் வார மயிர்க்கூச்செறிய உள்ளம் உருகி,

(கட்டளைக்கலிப்பா)

"வஞ்ச மாரு மனத்தரைக் காவென்று  வாழ்த்தி வாழ்த்தி மனதுபுண் ணாகவே
பஞ்ச காலத்திற் பிள்ளைவிற் பார்கள்போல் ப்ரபந்தம் விற்றுப் பரிசு பெறாமலே
நெஞ்சம் வாடி யிளைத்து நொந் தேனையா நித்த நின்மல நின்னடி தஞ்சங்காண்
செஞ்சொல் நாவலர் போற்றவெந் நாளிலும் செழித்து வாழரி யில்நர சிங்கமே!"

என்ற பாடலை வாய்விட்டுக் கதறிச் சொல்லி அடியற்ற மரம்போல் விழுந்து வணங்கினார்; "இனி நரஸ்துதியும் நரஸேவையும் செய்யேன்; நரசிங்கத்தைப் பணிந்து பாடுவதே என் கடன்" என்னும் வைராக்கியத்தை உடையவரானார்.


அன்று முதல் அவருடைய வாழ்க்கையில் ஒருமாறுதல் உண்டாயிற்று. நரசிங்க மூர்த்திக்குச் சனிக்கிழமைதோறும் மிக்க சிறப்பாக அபிஷேகமும் பூஜை முதலியனவும் பல்வகை விநியோகங்களும் செய்வித்து வந்தார். அவருடைய பெருமை வரவர மிக்கது. அவ்வூரிலிருந்த பல கார்காத்த வேளாளர்களும் பிறரும் அவருக்கு வேண்டியவற்றை உதவி வந்தனர். பல பிரபுக்கள் அவர் மூலமாகத் தங்கள் செல்வம் திருப்பணி முதலியவற்றிற் பயன்படுவதை ஒரு பெரும்பேறாகக் கருதி உபகரித்தனர். அவர் பல திருப்பணிகளைச் செய்தார். தசாவதார மண்டபத்துக்கும் கோபுரத்துக்கும் இடையே யுள்ள இடம் திறப்பாக இருந்தது. அங்கே விசாலமான ஒரு மண்டபத்தை அவர் கட்டுவித்தார்; கோபுரத்தைப் புதுப்பித்தார். அவருடைய மனத்துறவின் முதிர்ச்சியையும் பெருமையையும் பற்றி என் தந்தையார் பலமுறை பாராட்டிச் சொல்லியிருப்பதுண்டு.


சடகோபையங்கார்

ஐயாவையங்காருக்கு ஐந்து குமாரர்கள் உண்டு. அவர்கள் ஐவரும் தமிழ்க்கல்வியிலும் ஸங்கீதத்திலும் சிறந்த பயிற்சியுள்ளவர்கள். அவ்வைவர்களுள் சடகோபையங்காரென்பவர் ஐந்தாங்குமாரர்; பல பிரபந்தங்களை ஆராய்ந்து வாசித்துப் பாடஞ்சொல்லும் ஆற்றலுடையவர்; செவ்வைச் சூடுவார் பாகவதத்திலும், ஞானவாசிட்டம் முதலியவற்றிலும் மிக்க பழக்கமுடையவர்; அத்வைத சாஸ்திரத்திற் சிறந்த அறிவு வாய்ந்தவர்; ஸங்கீதப் பயிற்சியும் அவருக்கு இருந்தது; வீணை வாசிப்பதில் நல்ல பயிற்சி உண்டு.


அவர் காலையில் ஐந்து மணிக்கே எழுந்துவிடுவார். நித்தியகர்மானுஷ்டானங்களை ஒழுங்காகச் செய்வார். பின்பு புத்தகங்களை எடுத்துக்கொண்டு தம்வீட்டுத் திண்ணைக்கோடியில் அமர்ந்துகொள்வார். எந்த நூலையாவது படித்து இன்புற்றுக்கொண்டே இருப்பார். அந்தவழியே போகிறவர்கள் அவரைக்கண்டால் வணக்கத்தோடு அந்தத் திண்ணையில் வந்து அவர் சொல்வனவற்றைக்கேட்கும் பொருட்டு இருப்பார்கள். உடனே எதாவது தமிழ்ப்பாடம் சொல்வார்; பிரசங்கமும் செய்வார்.


சடகோபையங்காரும் என் தந்தையாரும் இளமைதொடங்கி நட்புடையவர்களாக இருந்தார்கள். என் தந்தையார் பாடுங்காலங்களில் அவர் வீணை வாசிப்பார். இருவரும் ஸங்கீத சம்பந்தமாக அடிக்கடி அளவளாவிப் பேசிக்கொண்டிருப்பது வழக்கம். அவர் வீட்டிற்கு எதிர்வீட்டில் நாங்கள் குடியிருந்துவந்தோம்.


நாள் தவறாமல் திண்ணையிலுட்கார்ந்து கொண்டு வந்தவர்களுக்குத் தமிழ்ப்பாடஞ்சொல்வதில் அவருக்குச் சலிப்பே இராது. அவர் அப்படிச் சொல்லிவரும்போது நானும் சென்று உடனிருந்து கேட்பேன். என் தந்தையாரும் எனக்குத் தமிழ்ப்பாடஞ் சொல்லிக் கொடுக்கவேண்டுமென்று என்னை அவரிடம் ஒப்பித்தார். நான் அவருடைய பேச்சில் ஈடுபட்டு மிகுந்த ஆவலுடன் அவர் சொல்லுவனவற்றைக் கேட்பேன். அதனால் அவருக்கு என்பால் பிரீதிமிக்கது.


எந்தவிஷயத்தைச் சொன்னாலும் அதைச் சுவையுண்டாகச் சொல்வதில் அவருக்கு இயல்பாக ஒரு திறமை இருந்தது. ஒருவேளைக்கு இரண்டு செய்யுட்களாவது மூன்று செய்யுட்களாவது சொல்வார். ஆனாலும் மனத்தில் தெளிவாகப் படும்படி பல உதாரணங்களைக் காட்டி விரிவாகப் பொருள் சொல்வார். சிறு விஷயமானாலும் அதற்குப் பொருத்தமான செய்திகளைச் சேர்த்துக் கொண்டு அழகுபடுத்திச் சொல்லும்பொழுது என்னுடைய மனம் அதில் ஈடுபட்டுவிடும். ஏழாம் பிராயமுதலே நான் அவரிடம் பாடங்கேட்டு வந்தேன். அவர் சொல்லும் முறையானது எந்த விஷயத்தையும் எளியதாகவும் சுவையுள்ளதாகவும் தோன்றச்செய்யும். தமிழில் நான் ஈடுபட்டதற்கு அவரே முதற்காரணம்.


அவரிடம் திருவேங்கடத்தந்தாதி, திருவரங்கத்தந்தாதி, திருவேங்கடமாலை முதலியவற்றைக் கேட்டிருக்கிறேன். மிகவும் இளையபருவத்திற்கேட்டேனானாலும் அவரைப்பற்றிய ஞாபகமும் அவர் என் நெஞ்சிற்படும்படி சொன்ன வார்த்தைகளின் திறமும் இன்னும் என் மனத்தைவிட்டு அகலவேயில்லை.


அவர் பல தனிப்பாடல்களையும் பல கீர்த்தனங்களையும் சில பிரபந்தங்களையும் இயற்றியிருக்கின்றனர். ஸ்ரீவைஷ்ணவராயினும் அத்வைதக் கொள்கையும் அந்த நெறியிற் பயிற்சியும் உடையவராதலின் சமரஸமான தெய்வவழிபாடுடையவராக இருந்தனர். அரியிலூர் ஸ்ரீ ஆலந்துறை யீசர் விஷயமாக ஒரு பதிகமும் ஸ்ரீகாமாட்சியம்மை விஷயமாக ஒரு பதிகமும் ஸ்ரீசருக்கரை விநாயகரென்னும் மூர்த்தி விஷயமாக ஒரு பஞ்சரத்தினமும் இயற்றி யிருக்கிறார். அரியிற்சிலேடை வெண்பா, இராமாயண வண்ணம், இராமாயணச் சிந்து, ஜீவப்பிரம்ம ஐக்ய சரித்திரம் முதலிய நூல்கள் அவராற் செய்யப் பெற்றன. இராமாயணவண்ணமென்பது; ஒவ்வொரு காண்டத்திற்கும் ஒவ்வொன்றாக நாட்டை முதலிய ஏழு ராகங்களாலமைந்த ஏழு வண்ணங்களையுடையது. ஜீவப்பிரம்ம ஐக்ய சரித்திரம் நாடக ரூபத்திற் செய்யப் பெற்றது. அதிலுள்ள பல கீர்த்தனங்களை அவர் அடிக்கடி சொல்லி நயங்களை எடுத்துக் காட்டுவார். திருவாவடுதுறையில் ஆதீனவித்துவானாக இருந்த கந்தசாமிக்கவிராயரென்பவர் அந்நாடகத்துக்குச் சிறப்புப்பாயிரம் அளித்திருக்கிறார்;

"என்னை யறிய எனக்கறிவித் தானரியில்
தன்னை நிகருஞ் சடகோபன்"

என்பது அதன் முதலிரண்டடி.


அக்காலத்தில் அருகேயுள்ள ஓர் ஊரிலிருந்த ஆலயத்துக்கு அதிகாரிகளாக இருந்த பஞ்சாயத்தார் அவ்வாலய வருவாயை உரிய பணிகளிற் செலவிடாமற் பலவாறாக அழித்து வருவதையறிந்து அவர்களுடைய அறியாமையையும் அறமல்லாத செயலையும் எடுத்துக்காட்டி, "பஞ்சாயத்து மாலை" என்னும் பெயரால் அவர் ஒரு நூல் இயற்றினார்.


பொருளை மேன்மேலே ஈட்டவேண்டுமென்னும் நோக்கம் இன்றித் தமிழ் நூற்கடலிலே துளைந்து விளையாடுவதொன்றையே இன்பமுடையதாகக் கருதிய புலவர்களுக்கு வறுமைத் தொடர்பு இருப்பது புதிதன்று. சடகோபையங்கார் பிறரால் நன்கு மதிக்கப் பெற்ற அறிஞராயினும் வறிஞராகவும் இருந்தார். ஆயினும் பெற்றது கொண்டு திருப்தியடையும் இயல்பு அவருடைய வாழ்க்கையை இன்பமாக்கியது. அரியிலூர் ஸமஸ்தானம் நாளடைவில் மெலிவுற்றதாலின் அதன் ஆதரவு அவருக்கும் பிறருக்கும் இலதாயிற்று. குளிருக்குப் போர்த்திக்கொள்ளவேண்டி ஒரு வேளாளப் பிரபுவாகிய சொக்கலிங்கம் பிள்ளை யென்பவருக்கு ஒரு செய்யுளெழுதியனுப்பினார்; அவர் லிங்கம்பிள்ளை யென்றும் வழங்கப் பெறுவார். அவர் ஒன்றுக்கு இரண்டாக வாங்கி உதவினார். அந்தச் செய்யுளின் ஈற்றடி, "துப்பட்டி வாங்கித் தரவேண்டும் லிங்க துரைச்சிங்கமே"  என்பது.


மாலைவேளையில் கடைவீதிவழியாக அவர் செல்வதுண்டு. நானும் உடன்போவேன். அப்பொழுது ஏதாவது பாடலைச் சொல்லிப் பொருள் சொல்லிக்கொண்டே போவார். ஒவ்வொரு கடைக்காரரும் எழுந்து அவரை அழைத்து மரியாதையாக இருக்கச் செய்து ஒரு தட்டில் நான்கு வெற்றிலையும் இரண்டு பாக்கும் வைத்துக் கொடுப்பார். இப்படிப் பெற்றுக்கொண்ட வெற்றிலைகளையும் பாக்கையும் தொகுத்துவைத்துக் கொள்வார். அவற்றைக்கொண்டு வேறு பண்டம் வாங்கிக் கொள்வார்.


அவர் இருக்கும் இடத்தில் சிலர் உடன் இருந்துகொண்டே இருப்பார்கள். அவர் ஏதாவது பாடல்களைச் சொல்லிப் பொருள் கூறிக்கொண்டிருப்பார். சொல்லிச் சொல்லிப் பழகவேண்டுமென்பது அவர் கொள்கை. "கம்பத்தை வைத்துக் கொண்டாவது பாடஞ் சொன்னால்தான் படித்தவைகளை மறவாமல் இருப்போம். பாடங்கேட்பவனை மாத்திரம் உத்தேசித்துச் சொல்லவே கூடாது. நமக்கே அது பிரயோசனம்; கல்வி அபிவிருத்தி உண்டாகும்" என்று அவர் அடிக்கடி சொல்வார்.


ஒருநாள் அவர் வீட்டுத் திண்ணையில் இருந்து மிக இரைந்து யாருக்கோ நெடுநேரம் பாடஞ் சொல்லிக் கொண்டிருந்தார். நான் எங்கள் வீட்டுக்குள் இருந்தே கேட்டுக் கொண்டிருந்தேன். தடையொன்றுமில்லாமல் சொல்லிக் கொண்டே வந்தார். " கேட்பவர் இடையில் சந்தேகம் ஒன்றும் கேட்கமாட்டாரா?" என்று நான் நினைத்தேன். சிறிது நேரம் கழித்து வெளியில் வந்து பார்த்தேன். அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் கோபாலசாமி ஐயங்காரென்ற ஒரு முழுச்செவிடர். எனக்கு உண்டான ஆச்சரியத்துக்கு எல்லையே இல்லை. அவர் செவிடர் என்பது ஐயங்காருக்கும் தெரியும். "கேட்பவனை மாத்திரம் உத்தேசித்துச் சொல்லவே கூடாது; நமக்கே அது பிரயோசனம்" என்று தாம் சொன்ன வார்த்தைகளை ஐயங்கார் செயலிற் காட்டுகிறாரென்று எண்ணிக் கொண்டேன். பாடஞ் சொல்வதில் அவருக்கு இருந்த அளவற்ற பிரீதி இதனால் விளங்குகிறதல்லவா?

பங்களிப்பாளர்கள்

Ksubashini மற்றும் Dev

இப்பக்கம் கடைசியாக 19 பெப்ரவரி 2010, 09:40 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 4,100 முறைகள் அணுகப்பட்டது.