அம்பை: (சி.எஸ். லக்ஷ்மி) (பி. 1944)
வெங்கட் சாமிநாதன்
அம்பை தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முதல் பெண்ணிய எழுத்தாளர். அவரது பெண்ணீயம் ஏதும் சித்தாந்த பூர்வமாகப் பெற்றதல்ல. இயல்பான வளர்ச்சி. அவர் எழுதத் தொடங்கிய காலம் வரை தமிழ் எழுத்து அறிந்த நிறையப் பெண் எழுத்தாளர்கள் போல அவர் மரபும் சமூகமும் பெண்களுக்குத் தந்த மதிப்புகள் சார்ந்த எழுத்துடனேயே தொடங்கினார் (அந்தி மாலை,கலைமகள் பிரசுரம்). அவருக்கு முந்திய கட்டம் வரை பெண் எழுத்தாளர்கள் எழுத்துலகில் அடியெடுத்து வைத்து தம் பெயரை ஸ்தாபித்துக் கொள்வது என்பதே பாரம்பரிய வாழ்க்கைச் சட்டகத்துக்குள் பெரிய தீரச் செயலாக இருந்தது. அப்படித் தம் பெயரை எழுத்துலகில் ஸ்தாபித்துக்கொள்ள அவர்கள் மரபின் கட்டுக்குள்ளேயே தம் எழுத்தை வரம்பிட வேண்டியிருந்தது. அப்பார்வையிலேயே அவர்கள் வளர்ந்ததால், அவர்களுக்கு அது இயல்பான காரியமாயிற்று. ஆனால், அந்திமாலை நாவலுக்குப் பிறகு, 1970களில் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சேர்ந்ததிலிருந்ததற்குப் பிறகு அவர் எழுத்துக்கள் மரபு தந்த இடத்தையும் சலுகைகளையும் மறுத்து, பெண்களின் சுய ஆளுமைக்கும் சுதந்திர சிந்தனைக்குமான தேடலையும் வலியுறுத்தலையும் பற்றிப் பேசத்தொடங்கின. இதன் தொடக்கம் சிறகுகள் முறியும் என்ற 1973 சிறு கதை. அதன் பிறகு அவர் எழுத்துக்கள் சிறு பத்திரிகைகளில் வெளிவந்தன.
மரபார்ந்த பெண்ணுக்குக் கொடுக்கப்படும் மதிப்புகளை அவர் மறுத்தாலும், தன் மதிப்புகளை, சுதந்திரத்தைத் தானே தேடிக்கொள்ளும் பெண்ணின் உரிமைக்காக அவர் பேசினாலும், அவர் பெண்மையை மறுத்த பெண்ணியவாதி அல்லர். கர்நாடக சங்கீதமும், பரதநாட்டியமும் தெரிந்தவர். அவருடைய எழுத்து தனித்துவம் வாய்ந்தது. ஒரு தனித்துவம் கொண்ட எழுத்தாளரின் எழுத்தின் தனித்துவம் என்பதற்கும் மேலாக அவர் எழுத்து பேசும் பெண்ணியம், அவருக்கு முந்திய மரபின் அடியொற்றி எழுதிய பெண் எழுத்தாளர்களிடமிருந்து வேறு பட்டது. கலையாக வெளிப்பாடு பெற்றுள்ள முதல் பெண்ணீயக் குரல் அம்பையினது என்று சொல்ல வேண்டும். ராஜம் கிருஷ்ணன் போன்றோர் மரபை எதிர்த்தாலும் அவை கிரீச்சிடும் கோபம் தான் தெரிகிறதே அல்லாது கலையின் வெளிப்பாடாக அல்ல. அவருக்குப் பின் தெரிய வந்துள்ள பெண் எழுத்தாளர்களின் பெண்ணீய எழுத்தாளர்களின் உரத்த குரல் வலியுறுத்தல் பெரும்பாலும் ஆக்கிரோஷத்தின் உச்சத்தில் நயமிழந்து போய்விடுகிறது. பெண்மையின் சீற்றம் பெண்மையின் அழகையும் நயத்தையும் மறுத்ததாகவே, ஒரு சித்தாந்த வெளிப்பாடு என்றே தோன்றுகிறது.
அம்பையின் பெண்ணிய பிரக்ஞையும் ஈடுபாடும் தமிழ்
அம்பையின் எழுத்துக்கள்; சிறகுகள் முறியும் (1976), வீட்டின் மூலையில் ஒரு சமையலறை(1988), காட்டில் ஒரு மான்(2000) ஆகிய சிறுகதைத் தொகுதிகள்; இவரது சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஒரு தொகுப்பு, A Purple Sea, 1992 வெளிவந்துள்ளது.
தமிழில் பெண் எழுத்தாளர்களையும் அவர்களது எழுத்துக்களையும் பற்றிய ஒரு ஆராய்ச்சி நூல்: Face Behind the Mask (1984). இதில் முந்திய தலைமுறை பெண் எழுத்தாளர்களின் தாமும் எழுத வேண்டும் என்ற ஆர்வமும் அதே சமயம் அவர்கள் எழுத்தில் காணும் மரபு சார்ந்த பார்வையும் ஆராயப் பட்டுள்ளன. அதே சமயம் தன் ஆரம்ப கால 'அந்தி மாலை' நாவலே கூட (அம்பைக்குக் கலைமகள் தரும் நாராயணஸ்வாமி ஐயர் பரிசையும், எழுத்தாளர் என்ற அங்கீகாரத்தையும் தந்த நாவல்) அவரது பரிகாசத்திற்கு ஆளாகிறது.
அம்பை விஷ்ணு என்னும் Documentary film maker- ஐ மணம் செய்துகொண்டு பம்பாயில் வாழ்கிறார். இப்போது SPARROW (Sound and Picture archives for Research on Women) என்னும் ஸ்தாபனத்தை நிறுவி அதன் இயக்குனராகவும் இருந்து வருகிறார். இதன் பெயரே விளக்குவது போல இது ஒரு documentation and study centre. இந்த ஸ்தாபனம் வாழ்க்கையில் பல மட்டங்களில் பல தளங்களில் பெண்களின் நிலையை அவர்களது சாதனைகளைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து ஆராய்கிறது. அவர்களது வாய்மொழியாகவே அவை பதிவு செய்யப்பட்டு புத்தகங்களாக வந்துள்ளன. அவற்றில் பயணப்படாத பாதைகள் என்ற வாய்மொழி வரலாற்றுப் பதிவு ஓவியம், நாடகம், பாரம்பரிய நடனம் போன்ற பல துறைகளில் வாழ்ந்த பெண்களின் வரலாற்றுப் பதிவுகள். இரண்டாம் தொகுப்பு சொல்லாத கதைகள் சுதந்திரப் போராட்டத்தில் வாழ்ந்த பெண், தலித் சமூகத்திலிருந்து வந்தவர், தலித் எழுத்தாளர்,இப்படிப் பல துறைகளிலிருந்தவர்கள் வரலாற்றை அவர்கள் வாய்மொழியாகவே பதிவு செய்துள்ளது.
அம்பை சி. எஸ். லக்ஷ்மி என்ற தன் இயற்பெயரிலேயே பெண்கள் சம்பந்தமான பிரச்சினைகளைப் பற்றி அவ்வப்போது The Hindu, The Economics and Political Weekly போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.
சுருக்கமாக அம்பையின் ஆளுமையையும் படைப்புகளையும் பற்றிச் சொல்வதானால்,
1) அம்பை தான் முதன் முதலாக பெண்ணியக் குரலை தமிழ் இலக்கியத்தில் கலாபூர்வமான
எழுத்துக்களாக பதிவு செய்தவர்.
2) பெண் தன் சுய ஆளுமையையும் தன் சுதந்திரத்தையும் வலியுறுத்தும் போது அது பெண்மையின்
அழகுகளையும் நயங்களையும் துறக்கத் தேவையில்லை என்பதற்குச் சான்றாக இருந்தவர்.
3) பெண்மையின் சீற்றம் உரத்தும் எல்லையைத் தானே விஸ்தரித்துக்கொண்டும் ஒலிக்கும் போது
அந்த மொழி ஆபாசமாகவேண்டிய அவசியமில்லை. சீற்றம் தான் அதிர்வைத் தரவேண்டுமே
தவிர ஆபாச மொழி அதற்குத் தேவை இல்லை.
அம்பை இப்பார்வைகளில், அவருக்கு முன்னும் பின்னுமான பெண்ணிய எழுத்தாளர்களில் தனித்து நிற்பவர். சுமார் நாற்பது வருடங்களுக்கும் மேலாகத் தன் செயல்பாட்டை எழுத்துக்கும் சிறுகதைகளுக்கும் மேலாக, தமிழ் வாழ்க்கைக்குள் சிறைபடாது, பெண்கள் வாழ்க்கையின் சகல துறைகளுக்கும் விஸ்தரித்து, தன் பதிவுகளை இலக்கியத்துக்கும் அப்பால் வேறு வடிவங்களுக்கும் விஸ்தரித்தவர்.
தமிழ் நாட்டில், தமிழ் அரசும் சரி, மத்திய அரசின் எந்தக் கலை இலக்கிய ஸ்தாபனமும் சரி, அம்பைக்கு எந்த அங்கீகாரத்தையும் கௌரவத்தையும் தரவில்லை. அது பற்றி அம்பை கவலைப் பட்டவரில்லை. அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் வருடா வருடம் அவர்களாக அமைதியாகத் தேர்ந்தெடுத்து வழங்கும் விளக்கு பரிசு மாத்திரம் அம்பைக்கு 2006- வருடம் கிடைத்தது. இது ஆச்சரியம் தரும் விஷயம் இல்லை.