அம்பட்டன் பொட்டியும் நல்லுவின் கழுதையும்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

முனைவர் ராஜம் rajam@earthlink.net


இளைய தலைமுறைக்கு அம்பட்டன் பொட்டி என்றால் என்ன என்று தெரியுமா? அம்பட்டன் == நாவிதன் (barber), பொட்டி < பெட்டி (box). கீழே இருக்கும், இணையத்தில் சுட்ட, படத்தில் இருப்பதுபோல இருக்கும்.

எங்கள் தாத்தா, அப்பா காலத்தில் எங்கள் வீடுகளில் மீசை முளைக்கத் தொடங்கின ஆண்பிள்ளை ஒவ்வொருவருக்கும் ஒரு தனி அம்பட்டன் பொட்டி உண்டு. அதுக்குள்ளே ஒரு சீப்பு, ஒரு சவரக்கத்தி, ஒரு சவுக்காரத்துண்டு, புசுபுசு என்று ஒரு புருசு (brush), வெளிர் பச்சை நிறத்தில் ஒரு படிகக்கல் (சவரக்கத்தி தீட்ட), ஒரு சின்னத் துணி … இப்படி என்னவெல்லாமோ இருக்கும். இதெல்லாம் அவர்களுடைய முக அழகு சாதனங்கள்! “தலைபண்ணிக்க” (haircut) மட்டும் சலூனுக்குப் போவார்கள், இல்லாட்டி அம்பட்டர் வீட்டுக்கு வருவார்.

[கொசுறு: விதவைகளுக்குத் தலைமழிக்க அம்பட்டர் எங்கள் வீடுகளுக்கு வருவார். ஒரு விதவையின் தலையை மழிக்க ஒரு நாவிதர் வீட்டுக்கு வரும் நிகழ்ச்சியை மிக மிக அருமையாக, எழிலாகத் தென்றல் இதழின் [திசம்பர் 2007] ஒரு கதையில் [“வருகை”] விளக்கியிருந்தார் திரு விட்டல் ராவ். அப்பப்பா, அதைவிட அழகான கதையை இன்னும் தேடுகிறேன். மோஹனின் “தலைச்சனைத் தேடி” இன்னொரு நிகரற்ற கதை.]

பழசாகிப்போன, துருப்பிடித்த அம்பட்டன் பொட்டி சிறுவர்கள் கைக்கு வந்து சேரும்; சப்பு சவறு சாமான்கள் அதில் போகும். தலைப்பின்னலில் கட்டும் ரிப்பன், மரப்பாச்சிப் பொம்மைத் துண்டு, பாண்டி விளையாட்டுச் சில்லு, சிலேட்டுக்குச்சி, மைனா இறகு, காக்காப்பொன், தீப்பெட்டிப்படம், புளியமுத்து, பல்லாங்குழிச் சோவி, சொட்டாங்கல், காய்ந்து போன மருக்கொழுந்து … இப்படி எகிப்திய மன்னர் கல்லறையில் கிடைக்கும் பொக்கிஷம் போல என் பொட்டியில் இருக்கும்! அண்ணன் பொட்டியை நான் பார்க்கவிடமாட்டான், கள்ளன்.

அம்பட்டன் பொட்டிக்குப் பூட்டு இருந்தது இறையருள் (godsend). இல்லாட்டி, என் தீபாவளிப் பட்டாசு அம்புட்டும் காக்காப் பையன் பொட்டிக்குப் போயிருக்கும். என் அம்பட்டன் பொட்டிச் சாவி என் அப்பாகிட்ட. நான் கேட்டால் மட்டுமே கொடுப்பார், நல்ல அப்பா! செல்ல அப்பா!

தீபாவளிக்கு ரொம்ப நாள் முன்னாலேயே அம்பட்டன் பொட்டியில் உள்ள சாமானெல்லாம் வெளியேறிப் பத்திரமாக ஒரு சாக்குப் பைக்குள் போகும்; பொட்டி குளித்து வெயிலில் காய்ந்து தயாராக இருக்கும். அதில்தான் தீபாவளிப் பட்டாசு சேரும்.

அம்பட்டன் பொட்டிதான் எனக்குத் தீபாவளித் தொடக்கம்!

தீபாவளி என்றால் மகிழ்ச்சியும் தலைவலியும். தாத்தாவுக்கும் அப்பாவுக்கும் ரொம்பச் செலவு, அம்மாவுக்கு ரொம்ப வேலை, எங்களுக்கு ரொம்பக் கொண்டாட்டம்; தீவாளிக்காசு, புதுத்துணி, பலகாரம், பட்டாசு … என்று போகும்.

ஒரு மாசத்துக்கு முன்னாலேயே தாத்தா பட்டாசுப் பட்டியல் கேட்பார். தனக்கு வேண்டியதையும் என் பட்டியலில் சேர்த்து எழுதச்சொல்லி என் சிநேகிதன் கேட்பான். பள்ளிக்கூடப் பாடம் பின்தங்கும்; பட்டாசு வேலை முன்னெடுக்கும். என் பட்டியல் காக்காப் பையனுக்குத் தெரிந்துவிடும். அந்தக் காலத்திலேயே காப்பி/பேஸ்ட், திருட்டு எல்லாம் உண்டு!!

ராவும் பகலும் கணக்குப் போட்டு, தீப்பெட்டி மத்தாப்பிலிருந்து தொடங்குவேன். கம்பிமத்தாப்புப் பெட்டியின் படத்திலிருந்த பெண்போலச் சொக்காய் போடக் கனவுவேன்! சிவப்பு மத்தாப்பு ஒரு பெட்டி, பச்சை மத்தாப்பு ஒரு பெட்டி; அப்புறம் … கம்பிமத்தாப்பு, பூத்திரி, சாட்டை, தரைச்சக்கரம், விஷ்ணு சக்கரம், பாம்பு, புஸ்வாணம், … இப்படிப் போய் மெதுவாகக் கேப்பு, சடசடா, சீனிவெடி, ஓலை வெடி, ஏரோப்லேன் … என்று யோசித்து யோசித்து என் பட்டியல் நீளும். என் வயதுக்கு எது சரியோ அதைத்தான் தாத்தா வாங்கித்தருவார். இது நடந்ததெல்லாம் என் 5~10 வயதுக்காலத்தில்.

தீபாவளிக் காலத்தில் மழை பிசுபிசுக்கும். பட்டாசு நமுத்துப்போகாமல் இருக்க நான் ரொம்பக் கடுமையாக உழைக்க வேண்டும்; வெயில் காலத்தில் அம்மாமார் வடகம் போடுவதைவிடக் கடுமையான உழைப்பு.

ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடம் இல்லை. காலையிலிருந்து மாலை வரை மொட்டை மாடியில் உட்கார்ந்து பட்டாசுகளை வெயிலில் காயவைத்துப் பத்திரமாக அம்பட்டன் பொட்டியில் வைக்கவேண்டும், அப்போதான் தீபாவளிக் காலையில் மத்தாப்பு நல்லா எரியும், வெடியும் நல்லா வெடிக்கும்.

மொட்டைமாடி திறந்த வெளி; அங்கே பட்டாசு காயவைப்போம். திடீர் திடீர் என்று என் பட்டாசு காணாமல் போயிருக்கு; ரொம்ப நாள் அது எனக்குத் தெரியவில்லை. ஒரு தடவை, எனக்குச் சொக்காய்க் கனவு தந்த கம்பிமத்தாப்புப் பெட்டியைக் காணோம். பக்கத்துச் சந்தில் குடியிருந்த என் சேக்காளி போசியைக் காவலுக்கு வைத்தேன்.

போசி (< புஷ்பராணி) ஒரு மக்கு; பள்ளிக்கூடம் போகப் பிடிக்காது. அடுத்த வீட்டு அக்கா அம்முவை ஒரு நாள் பள்ளிக்கூடம் போகக்கூடாது-னு அவுங்க வீட்டிலெ சொன்ன மாதிரித் தன்னையும் சொல்லமாட்டார்களா என்று ஏங்கிக் கிடந்த பிறவி. அது காவலுக்கு இருக்கும்போதே பட்டாசு காணாமல் போகும். கேட்டால் “அண்ணன் எடுத்திச்சு” என்பாள். உடனே அவனிடம் கேட்பேன். காக்காப் பையன் சொல்வான்: “காக்கா ஓஷ்.” காக்கா வரலெ-னு போசி சொல்வாள். காக்காப் பையன் சொல்வான்: “வெயில்-லெ வெள்ளைக் காக்கா வந்தா ஒனக்கு எப்பிடித் தெரியும்?” அம்மாகிட்டெ சொன்னால், “அவன் அசடு, நீ சமத்து. அசடுகளைச் சமத்துகள் கண்டுக்க மாட்டார்கள். நீ போய்ப் போசியோடு விளையாடு, பள்ளிக்கூடப் பாடம் படி. நீ சமத்து” என்பார். அப்பா ஓர் அறிதுயில் அம்பி, வீட்டுப் பெயரும் சின்னம்பி. “உங்கள் சண்டையை நீங்களே தீர்த்துக்கணும்” என்பார். தாத்தாதான் சரி.

தாத்தாகிட்டெ வழக்குப் போகும். காக்காப் பையன் சொல்வான்: ’மொட்டை மாடி எல்லாருக்கும் சொந்தம். அங்கெ இருக்கிற பட்டாசுலெ இவ பேரா எழுதி வச்சிருக்கு?’ காக்காப் பையனோட வாதாடினால் தொண்டைத்தண்ணிதான் வத்தும்! கணக்குச் சொல்லிக் கொடுக்கிறப்பொ '3-ம் 2-ம் எத்தனை' என்று தாத்தா கேட்டால் 32 என்பான். ‘திருப்பிச் சொல்லு’ என்று கேட்டால் 23 என்பான். பள்ளிக்கூடத்தில் போய், “நேத்திக்கி எங்காத்துலெ பக்ரீத் பூஜை ப்ரமாதம்” என்பான். வீட்டுக்கு வந்து பக்கத்துச் சந்து வால்பசங்களிடம், “காதர் வீட்டில் நாளைக்குப் பிள்ளையார் சதுர்த்தி பூஜை” என்பான்.

தாத்தாவுக்குக் காக்காப் பையனைப் பத்தி நல்லாத் தெரியும். குடை பூட்டு ரிப்பேர் செய்கிறவரிடம் சொல்லி, கிளிக்கூண்டு மாதிரிக் கம்பி வலை சுற்றிய ஒரு பெட்டி செய்து என்னிடம் கொடுத்தார். அந்தக் கூண்டுக்குப் பூட்டு உண்டு. அந்தக் கூண்டுலெ வச்சுப் பட்டாசு காயப்போடத் தொடங்கினப்புறம் வெள்ளைக் காக்கா ஓஓ … ஓஷ், பறந்தே போச்சு!!

தாத்தாவும் அப்பாவும் தீபாவளிக் காலத்தில் ரொம்பவே கஷ்டப்படுவார்கள், அவனுக்கு இது கொடுக்கணும், இவனுக்கு அது கொடுக்கணும் என்று. அப்பா வீடு பணக்கார வீடில்லை. ஆனாலும் முடிந்த அளவு எதையோ கொடுத்து எல்லாரையும் திருப்திப்படுத்திவிடுவார்கள். பால்காரர், வண்ணார், தெருக்கூட்டுபவர், வீட்டில் அம்மாவுக்கு உதவி செய்கிறவர்கள், வால்பசங்க, அப்பா வங்கிப் பியூன், இஸ்ரேல் டீச்சர், காவேரி டீச்சர், அம்மா அப்பாவின் இந்தி டீச்சர்கள், என் வீணை சண்முகவடிவுத் தாயார், அண்ணனின் மிருதங்க வாத்தியார் ராஜப்பா, … இப்படிப் பலரோடு அமைந்த எங்கள் குடும்பம் உண்மையிலேயே பெரிய அன்பான குடும்பம், யாருக்கும் குறையில்லாமல் மிகவும் சந்தோஷமாகவே ஒவ்வொரு தீபாவளியும் நடக்கும்.

தாத்தா, அப்பா, அம்மா, நாங்கள் எல்லாரும் தக்ளி, கைராட்டைகளில் நூல் நூற்று, ‘காதி கிராம உத்யோக் பவன்’ என்று வீட்டுப் பக்கத்தில் இருக்கும் ஓரிடத்தில் கொடுப்பது அன்றாட வழக்கம். தீபாவளி நேரத்தில் தாத்தா அங்கே போய்க் கதர்த்துணிகள் வாங்கிவருவார்.

கதர் வேட்டி, ஹார்வி மில் வேட்டி, சாரதி வேட்டி, துண்டு, ஹார்வி மில் நாட்காட்டி (Harvey Mills Calendar), … இதெல்லாம் தீபாவளி சமயத்தில் வீட்டில் குவியும். மல்லுத்துணி, காடாத்துணி, கதர்ப்பட்டு என்ற சொற்கள் என் மண்டையில் புகுந்தது தீபாவளிக் காலத்தில்தான்! எம்.எஸ்.ப்லூ கலர்ப்புடைவை, மிளகாய்ப்பழக் கலர்ப்புடைவை, ரெட்டைப் பேட்டுப் புடைவை, ஊசிவாணப் பட்டுப்பாவாடை, எம்பிராய்டரிப் பாவாடை, சின்னாளப்பட்டிப் புடைவை, சின்னாளப்பட்டிப் பாவாடை, … இதெல்லாம் தீபாவளி அறிமுகம்! அதாரு, எஸ்.ஆர்.பி. கடையா, காஞ்சீபுரம் முத்துத் தறி நெசவா? அவங்க சரக்கு எங்க வீட்டுக்கு வரும், அம்மாமார் அம்மங்கா ஒருத்தரும் வீட்டு வாசல் இறங்கி வெளியே போகத் தேவையில்லெ. தீபாவளிக்கு அடுத்த வாரம் எங்க வீடுகளில் ஒண்ணுமே தேங்கியிருக்காது, எல்லாமே அவரவர்க்குப் போய்ச் சேர்ந்திருக்கும்.

[கொசுறு: ஒரு 50+ வயசான புடைவை, காஞ்சீபுரத்தில் முத்துவின் தறியில் சொல்லி எங்கள் குடும்பத்துக்கு என்று நெய்த தேன் நிற ஊசிவாணப் புடைவை இன்னும் என்னிடம் இருக்கு! மிக அழகு! உயர்ந்த தரம்!]

உக்காரை, மிக்சர், தேன்குழல், வெள்ளையப்பம், சொஜ்ஜியப்பம், திரட்டுப்பால், மைசூர்ப்பாகு, பாதுஷா, இட்லி, … அது இது … எல்லாம் அம்மா பாடு. எங்க வீட்டிலெ 32 குழி இட்டிலித்தட்டு! அம்மங்கா வீட்டில் 4~5 ஆட்கள் வந்து பட்சணம் செய்வார்கள். அவர்கள் வீடு ரொம்பப் பெரிய பணக்கார வீடு. எங்க வீடு அப்படியில்லெ. ஆனாலும் தீபாவளி சமயம் எல்லார் வீட்டிலும் நெய்யும் டால்டாவும் ஒழுகும். ஊரில் கொள்ளுப்பாட்டி வீட்டிலிருந்து கைச்சுற்று முறுக்கு, லட்டு, ஜிலேபி, அல்வா [நெல்லை அல்வா], திரட்டுப்பால் [< வீட்டுப் பசுக்களின் பால்], தீபாவளி லேகியம் இன்னும் என்னென்னவோ வரும். அது தவிரத் தீபாவளிச் சீர். ஊர்லெ கொள்ளுப்பாட்டி வீடு ஒரு சின்ன பண்ணை அரசாங்கம். கூட்டுக் குடும்பமாகச் சேர்த்துப் பார்த்தால் இரத்த உறவே குஞ்சும் குளுவானுமாக ஒரு 50 உருப்படி தேரும்; நட்பும் சேரும் — எல்லாரும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரம் இப்படிப் பரவியிருந்ததால் ஊரிலிருந்து எல்லாருக்கும் பட்சணம், சீர் போகும். ஒரு 10~15 ஆட்களைவைத்து அவர்கள் செய்த பட்சணங்களுக்காக மூட்டிய கோட்டையடுப்பின் வெப்பம் கார்த்திகை வரைக்கும் கணகண என்று இருக்கும். கார்த்திகைக்குத் தனியாக அப்பம், வடை, பொரியுருண்டை என்று தனி முயற்சி தொடங்கும்! அந்தக் காலத்தில் அவர்களுக்கு அப்படிச் செய்ய முடிந்தது, யாருக்கும் குறையில்லாமல் சீர் செய்யவும் செய்தார்கள்.

அது சரீ, கழுதைக்கு இங்கே என்ன வேலை? ஆகா, சொல்கிறேன்.

நல்லு எங்க மதுரை வீட்டு வண்ணார். ரொம்ப நல்ல அன்பான மனிதர். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலையில் மணி 7 என்பதை அவருடைய கழுதையின் வாடை தெரிவித்துவிடும்!

திண்ணையில் உட்கார்ந்து, அம்மா கொடுக்கும் அதி அற்புதமான காப்பியைக் குடித்துக்கொண்டே, தாத்தாவுடன் வையைப் படித்துறை வம்பெல்லாம் அலசிவிட்டு, நல்லு வீட்டுக் கூடத்துக்கு வருவார். அவருடைய அம்மாவுக்கும் பெண்டாட்டிக்கும் என்று அம்மா காப்பி கொடுத்தனுப்புவார்; ‘வழிய்லெ நீ குடிச்சுடாதே. அவகிட்ட கொண்டுபோய்க் குடு’ என்ற யோசனையும் சொல்லுவார்.

தலையணை உறை, போர்வை, ஜமக்காளம், வேட்டி, காலுறை, சட்டை, கால்சராய் [அப்பாவின் வங்கி உடை] … என்று அழுக்குத் துணிகளைக் குவியலாகப் போட்டு, வண்ணான் கணக்குப் புத்தகத்தில் குறித்து வைப்பதெல்லாம் அம்மாவின் பொறுப்பு. நான் அங்கே வேண்டா வெறுப்போடு இழுபடுவேன். எல்லாத்துணியிலும் எங்க வீட்டு வண்ணான் குறி இருக்கா என்று பார்ப்பது என் பொறுப்பு. அழுக்குத் துணிமேல் அம்மாவுக்குக் கண், எனக்குக் கழுதைமேல் கண்!

நல்லுவின் கழுதை வீட்டு வாசலில் நிற்கும். வால்பசங்களுக்கும் என் சிநேகிதிகளுக்கும் எனக்கும் அது நல்ல நேரம்! ஒரு ஏழெட்டாகக் கூடிவிடுவோம். ‘கழுதையைத் தொட்டால் அந்தத் தீட்டு படுபாவம், காசிக்குப் போய்க் கங்கையில் குளித்தாலும் அந்தப் பாவம் தீராது’ என்று கேள்வி. காசி எங்கெ இருக்கு-னு யாருக்கும் தெரியாது, தீட்டு பாவம்-னாலும் என்ன-னு தெரியாது. ஆனாலும் பயந்துபோய் நான் கழுதையைத் தொடமாட்டேன்; ஜன்னல் கம்பிகளின் இடுக்கு வழியாக அதுக்குக் காகிதம் கொடுப்பேன். ஆமாம், கழுதைக்குக் காகிதம் தின்னப் பிடிக்கும்! ‘கழுதை கத்தினால் நல்ல சகுனம்’ என்று அதைக் கத்தவைப்பதற்காக வால்பசங்க நல்லுவின் கழுதையைப் பிடித்து அதன் வாலை முறுக்கி அதன்மேல் ஏறிக் காதைத் திருகி என்னென்னவோ அட்டகாசம் செய்யும். தாத்தாவின் தலையைக் கண்டால் அந்த அட்டகாசமெல்லாம் ஒரே பாசமாகிவிடும்! ஆனால், நல்லுவின் கழுதை வால்பசங்களைக் கண்டுக்காது; தன்பாட்டுக்குக் குப்பை மேயும். கழுதை சைவம் தெரியுமா!

அடுத்த ஞாயிறு … அழுக்குத் துணியெல்லாம் எப்படித்தான் படிக வெள்ளையாக மாறிவருமோ, வரும்! பொய்யாக் குலக்கொடி வையையின் மகிமை! அடுத்த அழுக்கு மூட்டையை நல்லுவின் கழுதை சுமந்து போகும்.

நல்லுவின் கழுதை ஒரே அழுக்கு, படு நாத்தம். நல்லுவிடம் அப்பா சொல்லுவார், “கழுதையெக் குளிப்பாட்டக்கூடாதா.” நல்லு சொல்லுவார், “கழுதெ எப்படி இருந்தா என்ன சாமி.”

ஆனால் … நல்லுவின் கழுதைக்குத் தீபாவளி ஒரு பெரீய கொண்டாட்டம். நரகாசுரனுக்கு விமோசனம் கிடைத்ததாமே, அதுபோல. ஊரில் திரிந்த மத்த கழுதைகளுக்கு அன்றைக்குக் கூடுதல் துன்பம். ஏன்னா … ஊர்ப்பசங்க கழுதை வாலிலெ தகர டப்பா கட்டி அதுக்குள்ளெ வெடி வெச்சு விரட்டும்; கழுதெங்க திகிலோடெ தலைதெறித்து ஓடும். எங்க நல்லுவின் கழுதைக்கு அப்படித் துன்பமேயில்லை. தீபாவளிக் காலையில் 7 மணிக்கு வந்துவிடும். அன்றைக்குப் பொதி சுமக்கத் தேவையில்லை; அழுக்குப்போட மாட்டோம். அப்பா மனசு குளிர, அந்தக் கழுதையெ நல்லாக் குளிப்பாட்டி அதன் நெத்தியிலெ நீளநெடுக ஒரு செவப்புப் பொட்டு வச்சுக் கொண்டுவருவார் நம்ம நல்லு.

வால்பசங்களும் அன்றைக்கு நல்லு கழுதைக்குச் சந்தனம் பூசும், உடல் பூராவும் பொட்டு வைக்கும், கழுத்துக்கும் வாலுக்கும் பூமாலை சுத்தும். பக்கத்துலெதான் பூக்கடைத்தெரு. அதனால் ஓசிக் கதம்ப மாலை. உடம்பையும் சொறிந்துகொடுக்கும்; கழுதைக்கு ரொம்பவே சுகம். வால்பசங்க கூட்டத்துலெ கந்தா-னு ஒரு 7-வயசுப்பயல். தீபாவளிக்கு அவன் நல்லு கழுதையைக் கட்டிப் புரண்டு, சொறிந்துகொடுத்து, கழுத்துலெ தொங்கி, அங்கெ தடவி இங்கெ தடவிக் காதுலெ எதோ ரகசியம் சொல்ற மாதிரிப் பாவனை செய்வான். நல்லு கழுதை கத்தும் பாருங்க … எட்டு ஊருக்குக் கேக்கும்! தாத்தா அதுக்காகவே கந்தாவுக்குக் கூடுதல் தீவுளிக் காசு, அரையணா, கொடுப்பார்!

தீபாவளிக்கு முந்தின நாள் போசி, கிச்சீ (< கி.வேணி), காளி (< அங்காளீஸ்வரி), நான் எல்லாரும் ஒரு ரகசியக்கூட்டம் போடுவோம். ஒரு காகிதத்தில் அடிக்குச்சி வைத்துக் கோடு போட்டு வரிசையாக ஒவ்வொருவரும் நல்லு கழுதைக்குத் தீபாவளி வாழ்த்து எழுதுவோம். தாத்தா ஒரு காகிதத்தில் மாதிரிக்கு எழுதிக்கொடுப்பார். அதைப் பார்த்து நாங்கள் பென்சிலால் கோட்டின் மேல் எழுதுவோம். “தீவுளி வாழ்த்து” என்பதில் ஒன்று இரண்டு எழுத்து சரியாக வந்தால் அது நல்லு கழுதைக்கு ராசி. கோட்டுக்கு மேலும் கீழுமாகக் கிறுக்கல் அமையும். அந்தத் தாள்தான் நல்லு கழுதைக்குத் தீபாவளி ஸ்பெசல்! ஒரு தீபாவளிக்குத் தாத்தா கொடுத்த கலர் பென்சிலில் நல்லு கழுதைக்குத் தீவுளி வாழ்த்து எழுதினோமே!

இப்படியாகவே எங்கள் சிறுபிள்ளைத் தீபாவளி நாட்கள் கழிந்தன.

எத்தனைப்பேருக்கு அந்த நாளில் மகிழ்ச்சி பாருங்கள் — நல்லு கழுதை குளிச்சது அப்பாவுக்கு ரொம்ப நிம்மதி, பசங்க கையிலெ மாட்டிக்கவேணாம், பொதி சுமக்கவேண்டாம் என்று நல்லு கழுதைக்கு நிம்மதி, நல்லுவுக்கும் அவர் அம்மாவுக்கும் பெண்டாட்டிக்கும் புது வேட்டி, துண்டு, புதுப் புடைவை, பலகாரம், தீவுளிக்காசு கிடைத்த மகிழ்ச்சி, வால்பசங்களுக்கும் நல்லு கழுதைக்குச் சந்தனம் பூசிப் பொட்டு வைத்துப் பூமாலை போட்டு உடம்பைச் சொறிந்துவிட்ட பெருமை.

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பார்கள். எங்க நல்லுவின் கழுதைக்குக் காகித வாசனை நல்லாவே தெரியும். அது பிற்காலத்துலெ பிஎச்டி, டிலிட் எல்லாத்துக்கும் மேலே பெரீய பட்டம் வாங்கியிருக்கும்! எனக்கு ரொம்பப் பிடித்த, என் தீபாவளி நாட்களைப் பொருளுடையதாகச் செய்த சிறுபிள்ளைத் தோழக்கழுதை அது!

என் சிநேகிதிகளும் நானும் அம்பட்டன் பொட்டியைச் சுற்றி உட்கார்ந்துகொண்டு பேசிய கதைகளும் கண்ட கனவுகளும் பல.

பெரிய சாதனைகள் என்று ஒன்றும் இல்லாவிட்டாலும் … நாங்கள் படித்த பாடங்கள் பல. வெள்ளைக்காக்கா பற்றித் தெரிந்துகொண்டோம், இருக்கும் பொருளைப் பகிர்ந்துகொள்ளும் மகிழ்ச்சியைப் புரிந்துகொண்டோம். எல்லாத்துக்கும் மேலாக நம்ம போசி "ழ்" என்ற எழுத்தை எழுதக் கற்றுக்கொண்டுவிட்டாள்! நல்லுவின் கழுதைக்குக் கொடுத்த அடுத்த தீவுளி வாழ்த்தில் அந்த "ழ்" சேர்ந்துகொண்டது!!!

ஆனால் … நல்லுவின் கழுதையின் பொறுமை மட்டும் இன்னும் எனக்குப் பிடிபடவில்லை! ‘சிறுமை கண்டு பொங்குவாய்’ என்ற பாரதியின் வாக்கு மட்டும் ஆட்கொண்டுவிட்டது. அதுவும் இறையருளே என்று நினைத்து அமைதிகொள்கிறேன்.

அடுக்களையில் ஒரு விவேகி, வீட்டின் நடு அறையில் ஒரு நாதப்ரும்மம், வாசல் திண்ணையில் ஒரு கர்மயோகி, என் பள்ளிக்கூடப் பையில் என்ன இருக்கு என்று குடைந்துகொண்டிருக்கும் காக்காப் பையன், 'வாடீ, விளையாடலாம்' என்று அழைக்கும் போசி கிச்சீ காளி, … இப்படிப்பட்டவர்கள் இல்லாமல் இன்றைய 'நான்' உருவாகியிருக்க முடியாது. அந்தச் சிறுபிள்ளைப் பருவ நாட்கள் ஊன்றிய வித்தும் போட்ட உரமுமே இன்றும் என்னை இயக்கிக்கொண்டிருக்கின்றன.

--Ksubashini (பேச்சு) 04:05, 19 அக்டோபர் 2013 (CDT)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 19 அக்டோபர் 2013, 09:10 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,523 முறைகள் அணுகப்பட்டது.