அப்படிச் சொல்லலாமா???

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

எழுதியவர்:உ.வே.சாமிநாதய்யர்

தட்டச்சு செய்து அளித்தவர்: திருமதி கீதா சாம்பசிவம்



பாலவனத்தம் ஜமீன்தாராக இருந்தவரும், தமிழன்பு மிக்கவரும், இப்போது மதுரையிலுள்ள தமிழ்ச்சங்கத்தின் ஸ்தாபகருமாகிய ஸ்ரீமான் பொ.பாண்டித்துரைத் தேவரவர்கள் ஏறக்குறைய நாற்பது வருஷங்களுக்கு முன் ஒருமுறை தம் பரிவாரங்களுடன் கும்பகோணத்திற்கு வந்திருந்தார்கள். அவருடைய அன்பரும் ஸேது சம்ஸ்தானத்துச் சங்கீத வித்துவானுமாகிய பூச்சி ஐயங்காரென்று வழங்கும் ஸ்ரீநிவாஸ ஐயங்காரும் அப்போது அவருடன் வந்திருந்தார். ஐயங்கார் அக்காலத்தில் சிறு பிராயத்தினர்; பட்டணம் சுப்பிரமணிய ஐயரிடத்திலும் மகாவைத்தியநாதையரிடத்திலும் அவர் இசைப் பயிற்சி பெற்றவர்; அவர் முன்னுக்கு வந்து புகழடைய வேண்டுமென்ற விருப்பம் பாண்டித்துரைத் தேவருக்கு மிகுதியாக இருந்தது. அதனால் கும்பகோணத்திலிருந்து திரும்புகையில் அங்கிருந்த அன்பர்களிடம், "இவரைப் பிரகாசப்படுத்தவேண்டும்" என்று சொல்லிவிட்டு அவர் இராமநாதபுரம் சென்றார். ஸ்ரீநிவாசையங்கார் மட்டும் கும்பகோணத்தில் தங்கினார்.


அக்காலத்தில் கும்பகோணம் காலேஜில் ஆசிரியராக இருந்த ஸ்ரீ ஸாது சேஷையர் முதலிய பல கனவான்கள் சேர்ந்து ஸ்ரீநிவாசையங்காருடைய சங்கீதக் கச்சேரி ஒன்றை நடத்த ஏற்பாடு செய்தனர். கச்சேரி அந்நகரத்துள்ள "போர்ட்டர் டவுன் ஹாலில்" நடைபெற்றது. நகரத்திலிருந்த கனவான்களும், உத்தியோகஸ்தர்களும், சங்கீத வித்துவான்களும், வேறு பலரும் வந்திருந்தார்கள். கூட்டம் மிகுதியாக இருந்தது; அம்மண்டபம் முழுவதும் எள்ளிட இடமில்லை.


ஸ்ரீநிவாசையங்கார் மிகவும் அருமையாக அன்று பாடினார். திருக்கோடிகாவல் கிருஷ்ணையர் முதலிய வித்துவான்கள் அந்தக் கச்சேரியில் பிடில் முதலியன வாசித்துச் சிறப்பித்தனர். சங்கீத ரஸிகர்கள் பலர் நிறைந்த அந்தப் பெரிய நகரத்துக்கேற்றபடி ஸ்ரீநிவாச ஐயங்காருடைய பாட்டு அமைந்திருந்தது. அவருக்கு அன்று ஒரு தனி ஊக்கம் உண்டாயிற்று. கச்சேரிக்கு வந்திருந்த யாவரும் ஐயங்காருடைய கானாமிர்தக் கடலில் மூழ்கித் தம்மையே மறந்திருந்தனர். பலர் தங்கள் வீடுகளில் நடைபெறும் விசேஷங்களுக்கு அவரை வருவித்துப் பாடச் செய்யவேண்டுமென்று அப்போது தீர்மானித்தனர்.


கச்சேரி முடிவடைந்த பிறகு அவ்வித்துவானைப்பாராட்டிச் சில வார்த்தைகள் சொல்லவேண்டுமென்று ஸாது சேஷையர் என்னிடம் சொன்னார். அவரைப் பற்றிப் பின்வருமாறு பேசினேன்:

"ஆறு சுவைகளும் நிரம்பிய விருந்துணவை உண்டுவிட்டு அந்த உணவைப்பற்றி ஒரு பிரசங்கம் செய்யவேண்டுமென்றால் அது முடியுமா? அதுபோல ஸீநிவாசையங்காரளித்த சங்கீத விருந்தை நுகர்ந்து எல்லாம் மறந்திருக்கும் இந்த நிலையில் பேசுவதற்கு எப்படி முடியும்? என்னைப் போலவே எல்லோரும் இருக்கிறீர்களென்பது எனக்குத் தெரியும். சங்கீதத்திற் பெயர் பெற்ற சோழநாட்டிற் பரம்பரையாகச் சங்கீத வித்துவான்கள் வாழ்ந்துவரும் இந்த நகரத்தில், பாண்டி நாட்டிலிருந்து ஒரு வித்துவான் வந்து எல்லோரையும் மயக்கி விட்டாரென்பதை நினைக்கையில் எனக்கு ஆச்சரியம் மேலிடுகின்றது. இந்தச் சிறு பிராயத்திலேயே இவ்வளவு திறமையோடு விளங்கும் இவர் இன்னும் சிலகாலத்தில் நம்முடைய நாட்டிலுள்ள யாவருடைய உள்ளத்தையும் கவரும் ஆற்றலுடையவராவாரென்பதில் சந்தேகமில்லை. இந்த நகரத்தில் முன்பு த்ஸெளகம் ஸ்ரீநிவாசையங்காரென்று ஒரு பழைய சங்கீத வித்துவான் இருந்தார். அவர் தஞ்சாவூரிலிருந்த சிவாஜி மகாராஜாவால் ஆதரிக்கப்பட்டவர். இந்நகரில் சக்கரபாணிப்பெருமாள் ஸந்நிதியில் அவ்வரசர் கட்டளைப்படி இருந்து பாடிக்கொண்டு வாழ்ந்து வந்தார். அவரை யாவரும் த்ஸெளகம் சீனுவையங்காரென்றே வழங்குவார்கள். இந்த நகரத்தில் வேறொரு ஸ்ரீநிவாசையங்கார் வந்து எல்லோருக்கும் சங்கீதத் தேனைப் புகட்டிப் புகழ்பெறப் போகிறாரென்பதை நினைந்து அவருடைய இயற்பெயராகிய ஸ்ரீநிவாசையங்காரென்பது சீனுவையங்காரென்று முன்பே குறைந்துவிட்டது போலும்" என்று பேசிப் பாராட்டினேன்; அப்பொழுது புதிதாக இயற்றிய பாடலொன்றையும் சொன்னேன். பிறகு ஸ்ரீநிவாசையங்கார் தக்க சம்மானம் பெற்று ஊர் போய்ச் சேர்ந்தார்.


கும்பகோணத்தில் அக்காலத்தில் பக்தபுரி அக்ரஹாரத்தில் கோபாலையரென்ற ஒரு தமிழ் வக்கீல் இருந்தார். அவர் தஞ்சாவூர் சம்ஸ்தானத்தில் சங்கீத வித்துவானாக இருந்து புகழ்பெற்ற பல்லவி கோபாலையருடைய பேரர். அவர் தம்முடைய பாட்டனார் பெற்ற சர்வமானியங்களை வைத்துக் கொண்டு சுகமாக வாழ்ந்து வந்தார். அவருக்குச் சங்கீதத்திலும் நல்ல பழக்கம் உண்டு. பல பழைய வித்துவான்கள் இயற்றிய கீர்த்தனங்களும் மற்ற உருப்படிகளும் அவருக்கு ஆயிரக்கணக்காகப் பாடம். பல்லவி கோபாலையருடைய சாகித்தியங்களையும், த்ஸெளகம் சீனுவையங்காருடைய கீர்த்தனங்களையும் அவர் அடிக்கடி பாடிக்கொண்டேயிருப்பார்; அவ்வூருக்கு வரும் சங்கீத வித்துவான்களெல்லோரும் அவர் வீட்டிற்குச் சென்று அவரோடு பேசியிருந்துவிட்டுச் செல்வார்கள்; அவரிடமிருந்து சில கீர்த்தனங்களைக் கற்றுக்கொண்டும், தமக்குத் தெரிந்த கீர்த்தனங்களிற் பிழைகள் இருந்தால் அவற்றைத் திருத்திக் கொண்டும் போவார்கள்.


பூச்சி ஐயங்கார் கும்பகோணத்திற்கு வந்த காலத்தில் முற்கூறிய கோபாலையருக்குப் பிராயம் ஏறக்குறைய எழுபதுக்கு மேல் இருக்கும். ஐயங்கார் அவரைப் போய்ப் பார்க்கவில்லை. அவரும் கச்சேரிக்கு வரவில்லை.


பூச்சி ஐயங்காரது கச்சேரி நடந்த மறுநாள் யாரோ ஒருவர் கோபாலையரிடம் சென்று, "த்ஸெளகம் சீனுவையங்கார் பெயர் இவருடைய பெருமையை நோக்கிக் குறைந்துவிட்டது" என்று நான் பேசினதைச் சொல்லிவிட்டனர். தம்மிடம் ஐயங்கார் வாராமையால் இயல்பாக அவருக்கு இருந்த கோபத் தீ பின்னும் மூண்டெழுந்தது. "அப்படியா சமாசாரம்! விட்டேனா பார் அந்தப் பிள்ளையாண்டானை!" என்று சொல்லிக் கைத்தடியை எடுத்துக் கொண்டு உடனே புறப்பட்டார். அவருடைய உடலில் முதுமையினால் இருந்த நடுக்கம் அப்பொழுதுண்டான கோபத்தாற் பின்னும் அதிகமாயிற்று; கை நடுங்கக் கால் தள்ளாடக் கோபம் தம்மைச் செலுத்த வீதிவழியே வந்தார்; அங்கவஸ்திரம் விழுந்து கீழே புரண்டது. வரும்போதே, "காலம் கலிகாலமாய்விட்டது. வாய்க்கு வந்ததெல்லாம் பேசிவிடுவதா?" என்று சொல்லிக் கொண்டே நடந்தார். அவருடைய வேகத்தையும் கோபநிலையையும் கண்ட சிலர் அவரைப் பின் தொடர்ந்தனர். "யாரையோ தன் கைத்தடியால் அடித்துவிட்டு மறுகாரியம் பார்க்கப் போகிறார் இவர்" என்று யாவரும் எண்ணினர்.


பக்தபுரி அக்கிரகாரத்துக்கு அடுத்ததாகிய ஸஹாஜி நாயகர் தெருவின் இரண்டாவது வீட்டில் நான் வசித்து வந்தேன். கோபாலையர் என் வீட்டை நோக்கி வந்தார். அப்பொழுது காலையில் மணி 9 இருக்கும். நான் காலேஜுக்குப் போகவேண்டியவனாகையால் வழக்கப்படி வீட்டின் பின்புறத்திலுள்ள கிணற்றடிக்குச் சென்று ஸ்நானம் செய்து கொண்டிருந்தேன். கோபாலையர் என் வீட்டில் நுழைந்தார். உள்ளே என் சிறிய தந்தையார் இருந்தார். கோபாலையருக்கு அப்பொழுது கண்பார்வை குறைந்திருந்தது. ஆகையால் என் சிறிய தந்தையாரருகில் வந்து அவரை மேலுங்கீழும் பார்த்து இன்னாரென்று தெரிந்து கொண்டு மிக்க ஆத்திரத்தோடு, "உங்கள் பிள்ளையாண்டான் இருக்கிறாரா?" என்று இரைந்து கேட்டார். அவர் கேட்ட குரல் என் காதில் விழுந்தது. அவர் என் பேச்சினாற் கோபங்கொண்டு வந்திருக்கிறாரென்பதை நான் நன்றாக உணர்ந்து கொண்டேன். நனைந்த ஆடையுடனே உள்ளே ஓடி வந்து கோபாலையரிடம், "க்ஷமிக்கவேண்டும்! க்ஷமிக்க வேண்டும்!!" என்று பணிவாகச் சொன்னேன்.


"க்ஷமிக்கவா? உங்களுடைய தகப்பனார் இருந்தால் நீங்கள் பேசினதைக் கேட்டுச் சகிப்பாரா? நீங்கள் அப்படிச் சொல்லலாமா? த்ஸெளகம் சீனுவையங்கார் பெருமை உங்களுக்கு என்ன தெரியும்? அவர் இருந்தால் இப்பொழுது உங்களை என்ன செய்திருப்பார் தெரியுமா! ஒரு சிறு பையனை இவ்வளவு தூரம் உயர்த்திப் பேசலாமா? அந்த ஸிம்ஹமெங்கே! இந்தப் பூச்சி எங்கே!" என்பவற்றைப் போலப் பல கேள்விகளைச் சரசரவென்று ஆத்திரத்தோடு அவர் என்னைக் கேட்டுக் கொண்டே போனார். நான் என்ன சொல்வேன்!


"பொறுத்துக்கொள்ளவேண்டும்; பொறுத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறி நமஸ்காரம் செய்தேன்.


"நீங்கள் செய்தது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா?" என்று கேட்டார் கோபாலையர்.


"க்ஷமிக்கவேண்டும்: என்னவோ சொல்லிவிட்டேன். ஒரு வித்தையில் நூதனமாக முன்னுக்கு வருபவர்களை அப்படிப் பேசித்தானே பிரகாசப்படுத்தவேண்டும்; ஒன்றுக்குப் பத்தாகச் சொல்லியே உத்ஸாகத்தை உண்டாக்க வேண்டும்; அதனால் அப்படிச் சொன்னேன். வேறு விதமாகத் தாங்கள் எண்ணிக்கொள்ளக் கூடாது" என்றேன்.


"எண்ணிக்கொள்வதா? நீங்கள் அப்படிப் பேசினதற்கு வேறு என்ன அர்த்தம்? கீழே உட்காருங்கள்; அந்த மகானாகிய த்ஸெளகம் சீனுவையங்கார் கீர்த்தனங்களைக் கேளுங்கள்" என்று சொல்லி அந்தக் கிழவர் உட்கார்ந்தார்; நானும் ஈரவேஷ்டியோடே உட்கார்ந்தேன். உடனே அவர் த்ஸெளகம் சீனுவையங்கார் இயற்றிய சில வர்ணங்களைப் பாடிக்காட்டினார்; அவை வெவ்வேறு ராகங்களில் அமைந்திருந்தன. அவர் வேறு சில கீர்த்தனங்களையும் பாடினார். நடுங்கிய குரலாக இருந்தும் அவறைப் பாடும்பொழுது கையை ஆட்டுவதும் தலையை அசைப்பதுமாகிய அவர் செயல்கள் அவருடைய உத்ஸாகத்தின் அளவைப் புலப்படுத்தின. மேல் ஸ்தாயியில் பாடத் தொடங்கும்போது அது பிடிபடாமையினால் தம் கையை உயர்த்தி உயர்த்திக் காட்டிக் காட்டி அவர் அபிநயம் செய்தபோது அவர் அடைந்த இன்பத்தை, உண்மையில் தம் சாரீர பலத்தினால் அந்த ஸ்தாயியில் பாடுபவர்கள் கூட அடைந்திருக்க மாட்டார்கள். முதிர்ந்த பிராயத்தில் அவர் அவ்வளவு பாடியது எனக்கு அளவற்ற வியப்பை உண்டாக்கியது. த்ஸெளகம் சீனுவையங்கார்பால் அவருக்கிருந்த பேரன்பும், அவருக்கு இழுக்கு நேர்ந்ததைப் போக்கவேண்டுமென்ற எண்ணமும் அவரிடம் புதிய சக்தியை உண்டாக்கின.


"எப்படி இருக்கின்றன, பார்த்தீர்களா? அவருடைய பெருமையை நீங்கள் உண்மையில் தெரிந்துகொண்டிருந்தால் அப்படிச் சொல்லத் துணிந்திருக்க மாட்டீர்கள். இப்பொழுதாவது த்ஸெளகம் சீனுவையங்காருடைய சக்தியைத் தெரிந்துகொண்டீர்களா?" என்று கோபாலையர் கேட்டார்.


"தெரிந்து கொள்ளாமல் என்ன? முன்பும் தெரிந்து கொண்டுதான் இருக்கிறேன். இப்பொழுது பின்னும் நன்றாகத் தெரிந்து கொண்டேன். அவரெங்கே! இவரெங்கே! உபசாரத்துக்காக நான் சொன்னதை ஒரு பொருளாகத் தாங்கள் எண்ணக்கூடாது. பெரியவர்களெல்லாம் ஒரு வஸ்துவைப் பெருமைப்படுத்தவேண்டுமென்றால் இப்படிப் பாராட்டிச் சொல்வது வழக்கம். மாளிகைகளை மேருவைக் காட்டிலும் சிறந்தவை என்று சொல்லுவார்கள்; அதனால் மேருவுக்குப் பெருமை குறைந்து போகுமா? மேருவை எடுத்துச் சொல்வதனாலேயே அதன் பெருமை பின்னும் விளங்கும். அதுபோல இதுவும் த்ஸெளகம் சீனுவையங்காரை நான் குறைவாகக் கூறியதாகாது; இப்படிக் கூறியதால் பின்னும் அவருடைய பெருமையே விளங்கும்."


"அதெல்லாம் உங்கள் தமிழ்ப் புஸ்தகங்களில் வைத்துக்கொள்ளுங்கள். சபையிலே பேசுவதென்றால் அப்படி யோசியாமல் சொல்லிவிடலாமா? தப்பு தப்புத்தான்" என்று தீர்ப்புக் கூறினார் கோபாலையர்.


அதற்கு மேல் நான் என்ன சொல்ல முடியும்? ஒருவாறு சமாதானங் கூறி அனுப்பினேன். பழைய வித்துவானிடத்தில் அந்தக் கிழவருக்கு இருந்த அன்பும், அவ்வித்துவானுடைய பெருமையைக் காப்பாற்றுவதில் அவருடைய சக்திக்கு மேற்பட்டு விளங்கிய பற்றும், அப்பெருமைக்குக் குறைவு நேருங் காலத்தில் உண்டான மானமும் இந்நிகழ்ச்சியால் நன்றாக வெளியாயின.

பங்களிப்பாளர்கள்

Ksubashini

"https://marabuwiki.org/index.php?title=அப்படிச்_சொல்லலாமா%3F%3F%3F&oldid=1108" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 27 ஜனவரி 2010, 18:37 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,333 முறைகள் அணுகப்பட்டது.