அபிராமி அந்தாதி விளக்கவுரை 23

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பாடல் எண்பத்து மூன்று

மஹாலக்ஷ்மி.jpg

விரவும் புது மலர் இட்டு நின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் இமையோர் எவரும்
பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும்
உரவும் குலிசமும் கற்பகக் காவும் உடையவரே

விளக்கம் :

தேன் சொரியும் புது மலர்களைக் கொண்டு மணம் வீசும் உன் திருவடித்தாமரைகளை இரவும் பகலும் வணங்கும் வலிமையுடையோர், அமரர்கள் அனைவரும் போற்றி வணங்கக்கூடிய இந்திர பதவியையும், ஐராவதம் எனும் வெண்ணிற யானையையும், ஆகாய கங்கையையும், வலிமை மிகு வச்சிராயுதத்தையும், கற்பக வனத்தையும் உடையவர்களாக இருப்பார்கள்..அன்னையின் திருவடியை இரவும் பகலும் வணங்கும் வல்லமையுடையோர் எனக்குறிப்பிடுவது அது அத்தனை எளிய காரியமல்ல என்பதைக் காட்டுகின்றது. பாச பந்தங்கள் அறுத்து அன்னையை மட்டுமே எந்நேரமும் தொழுது கொண்டிருக்கும் வல்லமை அவள் அடியார்களுக்கு அவள் அருளால் மட்டுமே கிட்டும். அது ஒரு தெய்வீக அழைப்பு.. அவ்வழைப்பை அன்னை அளித்தால் மானுடன் ஒருவன் அவள் திருவடிகளை எந்நேரமும் தொழும் பக்தன் ஆகின்றான். அவன் எந்தவொரு சுகத்திற்காகவும் யாரிடத்தும் செல்லவோ வேண்டுவதோ வேண்டியதில்லை.. அவனே அனைத்தும் உடையவனாகின்றான்.


இந்திரபதவி என்பது கிடைத்தற்கரிய வரம். இந்திர பதவியில் இருக்கும் இந்திரன் அமரர்கள் அனைவருக்கும் தலைவனாகின்றான். அது ஒரு பதவி மட்டுமே.. அப்பதவியில் அவனது பதவிக்காலம் முடிந்தவுடன் இன்னொருவன் இந்திரன் ஆகின்றான். இப்படி அது தொடர்ந்து
கொண்டே இருக்கும். அனைத்து அமரர்களும் இந்திரனது கட்டுப்பாட்டில் வருவதால், இயற்கையின் செயல்கள் அவனது கட்டுப்பாட்டில் வருகின்றன. அத்தகைய பதவி அன்னையை அல்லும் பகலும் இறைஞ்சுவோரிடத்துள்ளது எனப் பாடுகின்றார் அபிராமிப் பட்டர். இதன் மறைபொருள் என்னவெனில், அன்னையின் அடியவர்களுக்கு வேண்டுவன எல்லாம் கிட்டும். இயற்கையால் ஏற்படும் துன்பங்கள் அவர்தம்மை நெருங்காது என்பதாகும்.


"விரவும் புது மலர் இட்டு " தேன் சொரியும் புத்தம் புது மலர்களை இட்டு "நின் பாத விரைக்கமலம்" மணம் வீசும் உனது திருவடித்தாமரைகளை "இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் " இரவிலும் பகலிலும் வணங்கிடும் வலிமை படைத்தோர் "இமையோர் எவரும் பரவும் பதமும் " அமரர்கள் அனைவரும் போற்றி வணங்கக் கூடிய இந்திர பதவியையும், "அயிராவதமும் " அவ்விந்திரனுக்குச் சொந்தமான
ஐராவதம் எனும் வெள்ளை யானையையும், "பகீரதியும்" ஆகாய கங்கையையும், "உரவும் குலிசமும் " வலிமை மிக்க வஜ்ராயுதத்தையும், (வஜ்ராயுதம் என்பதற்கு அழகிய தமிழாக்கம் குலிசம்), "கற்பகக் காவும் " நினைத்தன நினைத்த பொழுதில் கிட்டும் கற்பக வனத்தையும் "உடையவரே" கொண்டவர்களாக இருப்பார்கள்... அவர்கள் என்றும் யாரிடத்தும் சென்று எதையும் இரங்கிப் பெறவேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் அனைத்தும் அவர்தம் உடைமையாக இருக்கின்றது... இதுவே அன்னையின் அன்பர்களுக்குக் கிட்டும் பெருவரம்.
ஆயினும் அவர்கள் இதையெல்லாம் மேலாக எண்ணுபவர்களா? ஒருபோதும் இல்லை...அவர்தமக்கு அன்னையின் திருவடிகளை விடுத்து வேறு எந்தச் செல்வமும் பெரிதல்ல...


பாடல் எண்பத்து நான்கு


உடையாளை ஒல்கு செம்பட்டுடையாளை ஒளிர்மதிச் செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே

விளக்கம் :

உலகத்தோரே.... அனைத்தையும் உடையவளும், அசையும் செம்மையான பட்டாடை அணிந்தவளும், ஒளிரும் நிலவினையணிந்த செம்மையான சடையைக் கொண்டவளும், வஞ்சகர்களின் நெஞ்சத்தில் தங்காதவளும், வாடும் மெல்லிய நூல் போன்ற இடையை உடையவளும், எங்கள் சிவபெருமானின் இடப்பாகத்தமர்ந்தவளும், இவ்வுலகில் இனிமேல் என்னைப் பிறக்காதிருக்கச் செய்தவளுமாகிய அன்னை அபிராமியை நீங்களும் மீண்டும் பிறவாதிருக்கும்படி பார்த்திடுங்கள். வணங்கிடுங்கள். அழகிய வர்ணனைப் பாடல் இது... பட்டரின் மொழி அழகிய விளையாட்டை ஆடியிருக்கின்றது.. தான் மீண்டும் பிறப்பதில்லை என்பது அபிராமிப்பட்டரின் அழுத்தமான நம்பிக்கை. உலகின் மக்களுக்கு அறிவுரை தருகின்றார். மீண்டும் பிறவாதிருக்கும் நிலை வேண்டுமெனில் எங்கள் அபிராமியைக் காணுங்கள். அவள்
திருவுருவைத் தியானியுங்கள். அவளை வணங்குங்கள். அவளே உங்களுக்குப் பிறவாவரம் அருள்வாள்.


"உடையாளை " அனைத்தையும் உடையவளை..."ஒல்கு செம்பட்டுடையாளை" அசையும் செம்மையான பட்டுடை அணிந்தவளை... "ஒளிர்மதி செஞ்சடையாளை" ஒளிரும் நிலவினைஅணிந்த செம்மையான சடையை உடையவளை.. "வஞ்சகர் நெஞ்சு அடையாளை" வஞ்சகரதுநெஞ்சத்தில் தங்காதவளை... "தயங்கு நுண்ணூல் இடையாளை " வாடும் மெல்லிய நூல் போன்ற இடையை உடையவளை... "எங்கள் பெம்மான் இடையாளை" எங்கள் சிவபெருமானது இடப்பாகத்து அமர்ந்தவளை... "இங்கு என்னை இனிப் படையாளை"
இவ்வுலகத்தில் இனிமேல் என்னைப் படைக்காதவளை.. என் பிறவிப் பிணியை முடித்தவளை... "உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே" உங்களையும் மீண்டும் படைக்காதபடிக்கு ... நீங்கள் மீண்டும் பிறவாத படிக்கு... பாருங்கள்.. தியானியுங்கள்.. வணங்குங்கள்...
பிறவிப் பிணியை அறுக்கும் சக்தி படைத்தவள் பிறப்பைக் கொடுத்த ஆதிபராசக்தியே... அவளையே எண்ணித் தியானித்திருக்கும் போது நம் பிறவிப் பிணியை அவள் நீக்குகின்றாள். தமிழ்ப்பாக்கள் புனைய விரும்புவோர் விரும்பிப் படிக்க வேண்டிய பாடல் இது. தமிழ்ச் சொற்களை எத்தனை அழகாகக் கையாண்டிருக்கின்றார் பட்டர். காணுங்கள்.. மீண்டும் ஒருமுறை ஓதி இன்புறுங்கள்..

அர்த்தநாரி.jpg

பாடல் எண்பத்தைந்து


பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறை வண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும் சிற்றிடையும்
வார்க்குங்கும முலையும் முலைமேல் முத்து மாலையுமே

விளக்கம் 

பார்க்கும் திசைகளெல்லாம் பாசமும் அங்குசமும், பனி போன்ற சிறகுகள் கொண்ட வண்டுகள் மொய்த்திருக்கும் ஐந்து மலர்க்கணைகளும், கரும்பு வில்லும், என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுர சுந்தரி அபிராமியின் திருமேனியும், அவளது சிறு இடையும், குங்கும நிறக்கச்சையணிந்த திருமுலைகளும், அம்முலைகள் மேல் அவள் அணிந்த முத்துமாலையையுமே காண்கின்றேன்..."எங்கெங்கு காணிணும் சக்தியடா" என்று பாடினானே தமிழ்க்கவிஞன் அவனது வரிகள் நினைவுக்கு வருகின்றன. காணும் திசையெல்லாம் உந்தன்
திருவுருவேயன்றி வேறொன்றும் காண்கிலேன் அம்மையே... என்னிலும் உன்னைக் காண்கின்றேன்.. எல்லோரிலும் உன்னைக் காண்கின்றேன்.. அம்மையே... நீயே எல்லாம்.. சர்வம் சக்தி மயம்.... இதுதான் அபிராமிப் பட்டரின் எண்ணம்..பக்திக் கடலில் மூழ்கியிருக்கும் பரம பக்தனுக்கே இவ்வெண்ணம் சாத்தியமாகும்... அவ்வண்ணம் இருந்ததால்தான் அபிராமிப் பட்டரைப் பித்தனென்று உலகம் இகழ்ந்தது... ஆயினும் தன் பக்திநெறியினின்று பின் வாங்காது என்றென்றும் அன்னையின் திருவுருவைத் தொழுதேத்தித் தன் பக்தியின் பெருமையை அகிலம் அறியச் செய்தார் அவர்.


"பார்க்கும் திசைதொறும் " நான் பார்க்கின்ற திசைகளெல்லாம் "பாசாங்குசமும்" பாசமும், அங்குசமும், "பனிச்சிறை வண்டு ஆர்க்கும்
புதுமலர் ஐந்தும் " பனி போன்ற மெல்லிய சிறகுகளைக் கொண்ட வண்டுகள் மொய்த்திருக்கும் புத்தம்புதிய மலர்களாலான ஐந்து அம்புகளும், "கரும்பும்" கரும்பு வில்லும் "என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் திருமேனியும்" என் துன்பத்தையெல்லாம் போக்கிடும் திரிபுரசுந்தரி அன்னை அபிராமியின் திருமேனியும், "சிற்றிடையும்" அவளது சிறிய இடையும் "வார்க்குங்கும முலையும் " குங்கும நிறக்கச்சையணிந்த அவளது திருமுலைகளும் "முலைமேல் முத்து மாலையுமே" அம்முலைகள் மேல் அவள் அணிந்த முத்துமாலையும் ஆகிய இவற்றையே காண்கின்றேன்.. வேறெந்தக்  காட்சிகளும் என் கண்களுக்குப் புலப்படவில்லை..அர்ச்சுனன் கவனமெல்லாம் குறிவைத்தடிக்க வேண்டிய பொருளின் மீதிருந்ததால் அவன் வில்லுக்கொரு விஜயன் எனப் பெயரெடுத்தான்.. அபிராமிப் பட்டரின் கவனமெல்லாம் அன்னை அபிராமியின் மேலிருந்ததால் அவர்தம் பக்தியால் புகழ்பெற்றார். அர்ச்சுனன் கண்களுக்கு வேறெதுவும் தெரியவில்லை.. அபிராமிப்பட்டருக்கோ காண்பதெல்லாம் அன்னையன்றி வேறில்லை...


பாடல் எண்பத்தாறு


மால் அயன் தேட மறை தேட வானவர் தேட நின்ற
காலையும் சூடகக் கையையும் கொண்டு கதித்த கப்பு
வேலை வெங்காலன் என் மேல் விடும் போது வெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே


விளக்கம் :

பாலையும், தேனையும், பாகினையும் போன்ற இனிமையான சொற்களைப் பேசிடும் அபிராமி அன்னையே... கோபங்கொண்ட காலதேவன், விரைவாகச் செல்லும் கிளைகளைக் கொண்ட வேலினை என் மேல் விடும்போது, திருமால், பிரம்மன்,வேதங்கள், அமரர்கள் அனைவரும் தேடியும் காணக் கிடைக்காத உன் திருப்பாதங்களையும், வளையணிந்த உன் திருக்கரங்களயும் கொண்டு எனக்குக் காட்சியளிப்பாய்...
மீண்டும் ஒருமுறை தனது மரணவேளையைப் பற்றிப் பாடுகின்றார் பட்டர். ஆனால் இப்போது அவரது பாடலின் தொனி இனிமையாகவும், குதூகலம் நிறைந்தும் காணப்படுவதை நம்மால் உணர இயலுகின்றது. கடந்த பாடலில் எல்லாவிடத்தும் உன்னையே காண்கின்றேன் என்றுரைத்த பட்டர் இப்பாடலில், யாருக்கும் தென்படாத உன் திருப்பாதங்களையும், அழகிய வளையணியும் திருக்கரங்களையும் கொண்டு நான் மரணமடையும் வேளையில் என் முன்னே வந்து நில் என்றுரைக்கின்றார். ஆஹா எத்தனை இனிமையான பாடல் இது...கண்கள் மூடிப் பாடலைப் பாடி இன்புற்று மகிழுங்கள்..


"பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே " பாலையும், தேனையும், பாகையும் போன்ற இனிமையான சொற்களைப் பேசிடும் அபிராமி அன்னையே..."தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும் தீஞ்சுவை ஆகவில்லையே" என முருகன் மீது புதுக்கவிஞன் ஒருவன் பாடினாலில்லையா... அவனுக்கு முருகனின் சொற்களை விடுத்து வேறெதுவும் இனிமையில்லை... அபிராமிப் பட்டருக்கு அன்னையின் சொற்கள் பால், தேன், சர்க்கரைப் பாகு இவற்றைப் போன்ற இனிமை நிறைந்தது.. "மால் அயன் தேட" திருமாலும், பிரம்மனும் தேடும். "மறை தேட" வேதங்கள் தேடும் "வானவர் தேட" அமரர்கள் அனைவரும் தேடும்.. "நின்ற காலையும்" இப்படி அனைவரும் தேடி நிற்கும் உந்தன் திருப்பாதங்களையும், "சூடகக் கையையும் கொண்டு" வளையணிந்த உந்தன் திருக்கரங்களையும் கொண்டு "வெங்காலன்" கோபங்கொண்ட காலதேவன் "கதித்த கப்பு வேலை " விரைவாகச் செல்லும் கிளைகளைக் கொண்ட வேலினை "என் மேல் விடும்போது" என்னை நோக்கிச் செலுத்தும் வேளையில், நான் மரணமடையும் வேளையில் "வெளி நில் கண்டாய்" நீ
வந்து காட்சியளித்து அருள வேண்டும். எத்தனை அதிகாரமாக "வெளி நில் கண்டாய்" எனக் கட்டளையிடும் தொனியில் உரைக்கின்றார். பக்தி அதிகமாகும் வேளையில் அன்னையின் மேல் உரிமையும் அதிகமாகின்றது.. நம் தாயிடம் நாம் எதையும் கேட்பதற்காக இரந்து நிற்பதில்லை.. "சாப்பாடு வை" என்றுதான் சொல்லுவோமே தவிர, "அம்மா..பசிக்குது... சாப்பாடு போடுங்க" என்று சொல்வதில்லை... அதே தொனியில்தான் அபிராமிப் பட்டரும் உலகின் தாயான அன்னை அபிராமியைத் தான் மரணமடையும்வேளையில் வந்து நில் என்று அழைக்கின்றார்..

Images.jpgகாமாக்ஷி.jpg

எழுதித் தயாரித்தது திரு மு. கந்தசாமி நாகராஜன்.


--Geetha Sambasivam 13:21, 31 மார்ச் 2011 (UTC)



பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 2 ஏப்ரல் 2011, 09:15 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,745 முறைகள் அணுகப்பட்டது.