அபிராமி அந்தாதி விளக்கவுரை 15

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பாடல் ஐம்பத்தைந்து...

Imagesஅபிராமி.jpg

மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது
அன்னாள் அகம் மகிழ் ஆனந்தவல்லி அருமறைக்கு
முன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி தன்னை
உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே


விளக்கம் :

ஆயிரம் மின்னல்கள் ஒன்று சேர்ந்தது போன்ற ஒளிரும் திருமேனியையுடைய எங்கள் அபிராமி அன்னையை, என்றென்றும் மனமகிழ்ச்சியில்
திளைத்திருக்கும் ஆனந்த வடிவானவளை, வேதங்களின் துவக்கமாய், நடுவாய், அவற்றின் முடிவுமாய்த் திகழும் முதன்மையானவளை, உலக மாந்தர் எண்ணாது அழிந்தாலும், எண்ணினாலும் அதனால் அவளுக்கு ஆகவேண்டிய பொருள் ஒன்றும் இல்லை...உலக மாந்தர்கள் அன்னையின் முன்னால் துச்சம் என உணர்த்தும் பாடல்.. உலகைப் படைத்த அன்னையைத் தொழுதிடல் வேண்டும் என்பது மாந்தர் விதி... ஆயினும் அனைவரும் அதைப் பின்பற்றுவதில்லை... ஆலயங்களைப் பாதுகாக்கும் பொறுப்புகளில் முதன்மை வகிப்பவர் இறைவன் இல்லை எனும் கருத்தையுடையவர்...இதைப் போன்று பல்வேறு முகங்கள்... அனைத்தையும் படைத்தவள் அவள்... அவளை நீங்கள் எண்ணித் தொழுதாலும், எண்ணாமல் அழிந்தாலும், அக்காரணத்தால்,அவளுக்கு ஆகக்கூடிய நன்மைகள் ஏதுமில்லை.. தீமைகளும் ஏதுமில்லை என்பது
இதன் கருத்து..


"மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது அன்னாள் " அழகிய கற்பனை இது... ஆயிரம் மின்னல்கள் ஒன்று சேர்ந்து ஒளிரும் ஒரு வடிவத்தைக் கொண்டவளை... எத்தனை அழகிய கற்பனை... ! ஒரு மின்னலையே கண்ணால் காண்பதற்கு இயலவில்லை... ஆனால் ஆயிரம் மின்னல்கள்.. (நண்பர்கள் "மின்னல் ஒரு கோடி "என்று காதலியை வர்ணித்த கவிஞரின் கற்பனை இதை விட மிகுதி என்று எண்ண வேண்டாம்.. ) ஒன்று சேர்ந்து வந்தால் அந்த ஒளியை நம்மால் காண இயலுமா?? முன்னர் ஒருமுறை சந்திர சூரியர்களுக்கு நடுவே நின்று ஒளிரும் சுடரொளி
என்று அன்னையைப் பாடிய அபிராமிப் பட்டர் இப்பாடலில் அவள் ஆயிரம் மின்னல்கள் ஒன்று சேர்ந்து ஒளிரும் வடிவுடையாள்.. அத்தனை பிரகாசம்...இதைக் கண்டதால்தான் மன்னரிடம் பௌர்ணமி என்றுரைத்து விட்டாரோ.? "அகம் மகிழ் ஆனந்தவல்லி " என்றென்றும் மனமகிழ்ச்சியில் திளைத்திருக்கும் ஆனந்த வடிவுடையாளை... அன்னைக்கு ஏது துக்கம்??


சர்வலோகத்தையும் படைத்துக் காத்து இரட்சிக்கும் ஆதிபராசக்தியின் மனது என்றென்றும் மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றது.. ஏனெனில் அவளே ஆனந்த வல்லி... ஆனந்தவடிவுடையாள்...முன்னர் ஒரு பாடலில் அன்னையே என் ஆனந்தம் என்று பாடிய பட்டர் இவ்விடத்து
அகம் மகிழ் ஆனந்த வல்லி எனப்பாடுவது சிறப்பு..."அருமறைக்கு முன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி " அருமையான
வேதங்களுக்குத் தொடக்கமாய், நடுவாய், முடிவாய்த் திகழும் முதன்மையானவளை... வேதங்களின் தலைவி, வேதங்களைத் தன் பாதச் சிலம்பாய் அணிந்தவள், வேதங்களின் தொடக்கமும் முடிவுமாய்த் திகழ்பவள் என்று பாடிய அபிராமிப் பட்டர், இவ்வரிகளில் வேதங்களின் தொடக்கமாய்.. நடு எங்குமாய்..முடிவாய்த் திகழும முதன்மையானவள் என்று வர்ணிக்கின்றார்.. (முதல்வி எனும் பதத்தை இதுவரை ஏன் தமிழக பெண் முதல்வர்கள் உப்யோகிக்கவில்லை?)  எல்லாவற்றிற்கும் முதன்மையானவள் அன்னை   அபிராமியே..."தன்னை.."அவள்தன்னை... "உன்னாது ஒழியினும் " நினையாது அழிந்தாலும் ...."உன்னினும்" எண்ணி மகிழ்ந்திருந்தாலும்... "வேண்டுவது ஒன்றில்லையே"அவளுக்கு ஆகவேண்டிய காரியம்  எதுவுமில்லையே...புகழுக்கெல்லாம் பிறப்பிடத்தைப் புவியிற் பிறந்தோர் புகழினும் என்...? புகழாது ஒழியினும் என்???


பாடல் ஐம்பத்தாறு


ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவாறிப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் எம் ஐயனுமே

விளக்கம் 

அன்னை அபிராமியானவள் ஒரே சக்தியாய் அரும்பி, பல்வேறு சக்திகளாய் விரிந்து, இவ்வுலகம் எங்கும் பரந்து நீக்கமற நிறைந்து
நின்றாள்..பிற சக்திகளிடமிருந்து நீங்கி தனித்தும் நிற்பாள். இப்படிப்பட்ட தன்மையுடைய மஹாசக்தி... சிறியேனான என்றன் இதயத்தில்
என்றென்றும் நீங்காமல் நின்று அருளாட்சி புரிகின்றாள்.. இதன் மாயமென்ன?? இம்மறைபொருளின் உண்மையை ஆலிலையில் துயின்ற திருமாலும், எம் தந்தையான சிவபெருமானுமே அறிவார்கள்...அழகிய ஒப்பீடு முதல் வரியில்... அன்னை ஆதிபராசக்தியானவள் உலகத்தைப்
படைப்பதற்கு முன்னர் ஒரே சக்தியாய் நின்றிருந்தாள்... இதனை ஓர் அரும்பிற்கும்... பின்னர் அவளே மும்மூர்த்திகளைப் படைத்து, அவர்தமக்கு உதவிட, தானே முப்பெருந்தேவியராகப் பிரிந்த தன்மையை, அவ்வரும்பு பல இதழ் கொண்ட மலராக விரியும் நிலைக்கும் ஒப்பிட்டிருக்கின்றார்..


"ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய் நின்றாள் " உலகத்தைப் படைப்பதற்கு முன்னர் ஒரே பொருளாய்... தானே உலகாய்...
மஹாசக்தியாய் நின்றாள்... பின்னர் மும்மூர்த்திகளாக, முப்பெருந்தேவியராக விரிந்தாள்... உலகெங்கும் தானாய் நின்றாள்...நிறைந்து நின்றாள்... "அனைத்தையும் நீங்கி நிற்பாள்" எல்லாவிடத்தும் சக்தியாய் நின்றாலும், அவற்றினின்று நீங்கி ஆதிபராசக்தியாய் தனிந்து நிற்பாள்... எனவே அவளது தன்மையை அறிய இயலாது... இவ்விடத்திலிருப்பாள்.. இல்லாமலும் இருப்பாள்..இரண்டும் உண்மையே... எனவே இவளது தன்மையை அறிந்து கொள்ள உலகத்தோர் தவமியற்றுகின்றனர்.. தவமியற்றுவோரும் தாம் அறிந்த தன்மையை உலகுக்குப் புரியும்படி விளக்குகின்றனரா? இல்லை... ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அவளை அறிந்து கொண்டதாக உரைத்தனர்... எனவே இவளது தன்மை... வடிவு... அனைத்தும் பாரோர் அறிந்து கொள்ள இயலாதது... இப்படிப்பட்ட தன்மையுடைய அன்னை அபிராமியானவள்.. "என்றன் நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்றவாறு" சிறியேன்... கடையேன்... மானுடனாய்ப் பிறப்பெடுத்தவன்..


பித்தனென்று உலகோரால் இகழப்படுபவனாகிய எந்தன் நெஞ்சத்தில் நீக்கமற நிறைந்து அருளாட்சி செய்கின்றாள்... மறை நான்கையும் தெளிவுற உணர்ந்த பேரறிஞர்களாலும் அறிய இயலாத வடிவினலான என் அன்னை...எனது நெஞ்சத்தில் நீங்காது நின்று அருளாட்சி புரிகின்ற தன்மையின்.... இரகசியத்தின்..."இப்பொருள் அறிவார்" பொருளை அறிவோர்கள் யாரெல்லாம்??? எங்கும் நிறைந்து, நீங்கி நிற்கும் ஆதிபராசக்தி என்றன் நெஞ்சத்தில் நீக்கமற நிலைத்து நின்று அருளாட்சி புரியும் தன்மையின் மறைபொருளை அறிந்தவர்கள் யாரெனின்..."அன்று
ஆலிலையில் துயின்ற பெம்மானும் எம் ஐயனுமே" யுகங்கள் முடிவடையும் வேளையில் ஆலிலையில் துயில் கொண்டு எழுந்தருளிய திருமாலும், எம் தந்தையான சிவபெருமானுமே.. .வேறு யாருக்கும் இம்மறைபொருள் தெரிவதில்லை....ஈசனுக்கும், மாலுக்கும் மட்டுமே தெரியும்... அபிராமிப் பட்டரின் நெஞ்சில் நிலைந்து நின்று அருளாட்சி புரிந்த அன்னை அபிராமியானவள் நம் நெஞ்சத்திலும் கொஞ்சம் நிற்க அவளின் திருப்பாதங்களை வேண்டுவோம்..
மாதுர்கா.jpg

பாடல் ஐம்பத்தேழு


ஐயன் அளந்த படி இரு நாழி கொண்டு அண்டம் எல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம் பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உந்தன் மெய்யருளே

விளக்கம் :

எம் தந்தையான சிவபெருமான் அளந்து உனக்களித்த இரு நாழி நெல்லைக் கொண்டு உலகம் எல்லாம் காக்கும்படி அறம் செய்யும் உன்னைப்
போற்றிப் பாடிவிட்டு பின்னர் வேறொருவரிடம் அதே பசுந்தமிழ்ப் பாமாலையைக் கொண்டு சென்று அவரைப் போற்றிப் பொய்யையும் மெய்யையும் சொல்லவைத்தாயே...இதுதான் உனது உண்மையான அருளா? வறுமையை நம்வாழ்விலிருந்து களையும் பாடல் இது... என்ன ஆனாலும் சரி..அன்னையைத் தவிர வேறுயாரையும் போற்றிப் பாடமாட்டேன் என்று ஒரு புலவன் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.. உலக பந்தத்திலே அவன் ஈடுபட்டிருக்கின்றான். மனைவி, மக்கள் என்று குடும்பம் பெரிதாகி விட்டது... அன்னையை மட்டுமே துதிப்பேன் என்று பிடிவாதமாக இருக்கும் வேளை.. அவன் மனைவி இல்லத்தின் வறுமையைச் சுட்டிக் காட்டுகிறாள். பசியால் வாடும் குழந்தைகளின் முகம் பார்க்கும் புலவன், புரவலரைத் தேடுகின்றான். அவரிடம் இருப்பதை ஏற்றியும், இல்லாததை இருப்பதாகவும் பாடுகின்றான். பொருள் பெறுகின்றான். தன் இல்லத்து வறுமையை ஒழிப்பதற்கு அவனுக்கு அதை விடுத்து வேறு வழி இருப்பதில்லை... அதைத்தான் சுட்டிக் காட்டுகிறார் அபிராமிப் பட்டர்.. (விட்டலனைப் பாடிவந்த துக்காராமின் கதையைக் கேட்டிருக்கின்றீர்களா.??)


இதை வேறு விதமாகவும் காணலாம். மானுடராய்ப் பிறந்து விட்டோம்.. கவி எழுதும் ஆற்றலைக் கலைமகள் தந்துவிட்டாள்.. ஆனால் மனது அவளை மட்டுமா பாடுகின்றது.? அழகுள்ள மங்கையரைப் பாடுகிறது.. அவர்தம் அன்பைப் பெற இல்லாததையும் பொல்லாததையும் சொல்கின்றது... (அதாங்க மின்னல் ஒரு கோடி...) காமம் விளையாடுகின்றது... அதையும் அபிராமிப் பட்டர் காண்கின்றார்..அன்னையே... நீயே தமிழைப் படைத்தாய்.. எனக்குக் கொடுத்தாய்.. என்னைப்போல் அவனுக்கும் கொடுத்தாய்... என்னிடம் வந்த தமிழ் உன்னைப் பாடுகின்றது...
அவனிடம் சென்ற தமிழோ எவளையோ பாடுகின்றது.., இதுதான் உன்னருளா? என்று அவளிடமே கேட்கின்றார்..


"ஐயன் அளந்த படி இரு நாழி கொண்டு " எம் தந்தையான ஈசன் அளந்த இரு படி நெல்லைக் கொண்டு ... அய்யன் அளந்த கதை காஞ்சியில் நிகழ்ந்தது.. அதைக் கொண்டுதான் அன்னையானவள் உலகுக்கு அன்னமளித்தாள் என்பார்கள்.. (வரலாற்றை அறிந்தவர்கள் விரிவாக எழுதுங்களேன்.....) "அண்டம் எல்லாம் உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி " அகிலத்தைக் காப்பதற்காக அறம் செய்யும் உன்னையும் போற்றிப் பாடிப் பின்னர்....""ஒருவர் தம் பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு " இன்னொருவரிடத்திலும் செம்மையான
பசுந்தமிழ்ப் பாமாலையைக் கொண்டு சென்று... தனது தேவைகளுக்காக இன்னொருவரிடத்திலே சென்று... "பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய் "பொய்யையும் உண்மையையும் பாட வைத்தாயே... "இதுவோ உந்தன் மெய்யருளே "இதுதான் உனது அருளா?? இது உனக்குத் தகுமா? என அன்னையை வேண்டிக் கேட்கின்றார்..


சேர்ந்தே இருக்கும் வறுமையும் புலமையும் புலவனுக்கு மட்டுமே புரியும்... கலைமகள் குடிகொண்ட இடத்தில் அலைமகளைக் கொணர அவன்
படாத பாடு படவேண்டியிருக்கின்றது. நல்ல தமிழ்ப் புலவரான அபிராமி பட்டருக்கு இவ்வேதனை புரிகின்றது.. பார் அபிராமி... அன்றைக்கு நீ இரு படி நெல்லைக் கொண்டு உலகுக்கு அன்னமளித்தாய். மாந்தர் வாழ அறம் செய்தாய்..இன்று பார்.. .உன்னை மட்டுமே பாடிப் பிழைப்பதற்கு வழியில்லை...தமிழ்நாட்டில் எத்தனையோ ஆலயங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன... ஒரு சிலரின் பக்திப் பிடிவாதத்தால் மட்டுமே அவை உய்கின்றன... எங்கள் கிராமத்துக்கு அருகில் வைரவம் என்றொரு கிராமம் உள்ளது.. அன்னையானவள் சிவகாமியாக அருள்புரியும் பூமி அது... ஞானாதீஸ்வரர் உடனுறை சிவகாமி அம்மனாக அவ்விடத்துக் கோயில் கொண்டுள்ளாள்.. மிகவும் பழமையான ஆலயம்.. பெரிய ஊராக
இருந்த இப்பகுதி பஞ்சம் காரணமாக மக்களே இல்லாத கிராமம் ஆகிவிட்டது..


ஆயினும் அவ்வாலயத்தில் அப்பனுக்கும் அம்மைக்கும் பணிவிடைகள் செய்து வந்த அந்தணர் குடும்பம் மட்டும் அக்கிராமத்தினை விட்டு நீங்காது இருந்தது..அவர்களுக்கும் வறுமை வந்தது.. தளரவில்லை... அம்மையையும் அப்பனையும் விட்டு அவர்கள் நீங்கவில்லை.. யாருமே செல்லாதிருந்த அவ்வாலயத்தின் மதிப்பு அவ்விடம் நிகழ்ந்த ஒரு களவால் வெளிஉலகுக்குத் தெரியவந்தது.. ஆலயத்திற்கென மன்னர்கள் அளித்ததாகக் கூறப்படும் பஞ்சலோகத்தால் செய்யப் பட்ட உற்சவ மூர்த்திகள் பல.. அவை திருடர்களால் களவாடப் பட்ட பின்னர்தான்
ஆலயத்தின் மதிப்பு பிறருக்குத் தெரிய வந்தது... அந்த ஐயரும் (அவர் பெயரை மறந்து விட்டேன்.. ஆலயத்தைப் பற்றி முன்னர் நாம் எழுதிய கட்டுரை ஒன்று இந்து முன்னணியின் பசுத்தாய் பொங்கல் மலரில் வெளிவந்துள்ளது. திருக்கடவூரில் அபிராமிப் பட்டருக்கு நிகழ்ந்த நிகழ்வைப் போன்று இவ்வாலயத்திலும் கண்பார்வையற்ற புலவனுக்கு நிகழ்ந்த ஒரு நிகழ்வு உள்ளது..அது அடுத்த பதிவில்...) காவல்துறையினரால் சித்திரவதைக்குள்ளானார்.


அவ்வமயமும் அவர் தளரவில்லை.. பின்னர்அங்கே கிடைக்கப் பெற்ற உற்சவ மூர்த்திகள் செந்தூர் முருகன் ஆலயத்தில் பாதுகாக்கப் பட்டு வருகின்றன..இன்றைய தினம் பலரும் வந்து செல்லும் பேராலயமாக அது மாறி விட்டது... இது நிகழ்ந்தது அந்த அந்தணக் குடும்பத்தின் பிடிவாத பக்தியினால் மட்டுமே...பிரதோச தினத்தன்று அங்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது... இடைக்காலத்தில் அக்குடும்பத்தாரை வறுமையில் வாட விட்டதுதான் உன் மெய்யருளோ?? என அபிராமி பட்டர் அன்னையைக்
கேட்கின்றார்... வந்து அருள் தந்திடம்மா.. உன் பக்தர்கள் வறுமையில் வாடுவதை நீ பொறுக்கலாமா? அன்றைக்கு உலகுக்கே படியளந்தாயே... இன்றைக்கு இவர்கள் வறுமையைக் கண் திறந்து பாரம்மா... எனப் பாடுகின்றார் அபிராமி பட்டர்.

மாதங்கி.jpg

பாடல் ஐம்பத்தெட்டு


அருணாம்புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள் தகை சேர் நயனக்
கருணாம்புயமும் வதனாம்புயமும் கராம்புயமும்
சரணாம்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே


விளக்கம் :

அதிகாலையில் அருணோதயத்தின் போது மலரும் தாமரையின் மீதும், எனது மனமென்னும் தாமரை மீதும் அமர்ந்திருக்கும் இளம் தாமரை மொட்டினைப் போன்ற திருமுலைகளையுடைய பெண்களில் சிறந்தவளான அபிராமி அன்னையே...தகுதியுடைய உனது கண்கள் எனும் கருணைத்தாமரையும், உனது அழகிய முகத்தாமரையும், உன் திருக்கரங்களெனும் தாமரைகளும், உனது திருவடித் தாமரைகளும் அல்லாமல் வேறொருவரிடத்திலும் நான் தஞ்சம் புகேன்...கடந்த பாடலில் புலவர்களது தமிழ் பொருளுக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் வேறொருவரிடத்துச் சென்று பொய்யும், மெய்யும் பாடுவதைச் சுட்டிக் காட்டிய அபிராமிப் பட்டர் இவ்விடத்து நான் உன்னைத் தவிர வேறொரு
இடத்தில் தஞ்சம் புகேன் எனப் பாடுவது அவரது பக்திப் பிடிவாதத்தைக் காட்டுகின்றது.. நெருப்பின் மீது நின்று பாடுகின்றேன்.. மன்னனைச்
சரணடைந்தால் உயிர் தப்பலாம்... ஆனால் நான் உன்னை மட்டுமே சரணடைவேன் என்பது இதன் உட்கருத்து...தாமரைகளையே  எல்லாவிடத்திலும் உவமையாகச் சொல்வது பாடலின் சிறப்பு..


"அருண அம்புயத்தும்" அருணன் என்பவன் சூரியதேவனின் சாரதி.. அவன் வரும் வேளையைத்தான் அருணோதயம் என்றழைக்கின்றோம்.. அருணன் உதயமாகும் வேளையில் மலரும் தாமரை மலரிலும்.... (அம்புயம் என்பது தாமரையைக் குறிக்கும்). "என் சித்த அம்புயத்தும்" என் மனமெனும் தாமரையிடத்தும்... "அமர்ந்திருக்கும் "வீற்றிருக்கும் ... "தருண அம்புயமுலைத் தையல் நல்லாள் " இளந்தாமரை...அதாவது தாமரை மொட்டு... தாமரை மொட்டுக்களையொத்த திருமுலைகளையுடைய பெண்களில் சிறந்தவளான அபிராமி அன்னையே... "தகை சேர் நயனக் கருண அம்புயமும்" தகுதியுடைய உனது கண்களெனும் கருணைத் தாமரையும்.."வதனாம்புயமும் " உனது திருமுகத் தாமரையும் "கர அம்புயத்தும்" உனது திருக்கரங்களெனும் தாமரைகளும் "சரண அம்புயமும்" உனது திருவடித் தாமரைகளும் "அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே" அல்லாமல் நான் வேறெந்த இடத்திலும் தஞ்சம் புகேன்... எத்தனைத் தாமரைகள்.. தாமரையில் வீற்றிருப்பாள்... அவளது திருவடிகளும் தாமரைகள்... திருக்கரங்களும் தாமரைகள்... திருமுகமும் தாமரை... கருணை நிறைந்த திருக்கண்களும் தாமரை... திருமுலைகளோ தாமரை மொட்டுக்கள்....அழகிய திருப்பாடல் அல்லவா?? உன்னை விடுத்து வேறெந்தவிடத்தும்... வேறு யாரிடத்தும்... தஞ்சம் புகேன்... உன் மகனான என்னை நீ காக்க வேண்டுமானால் விரைந்து வா... வந்து நிலவைக் காட்டு...


எழுதித் தயாரித்தது திரு மு.கந்தசாமி நாகராஜன்


--Geetha Sambasivam 13:25, 20 மார்ச் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 21 மார்ச் 2011, 10:14 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,420 முறைகள் அணுகப்பட்டது.