அபிராமி அந்தாதி விளக்கவுரை 12

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பாடல் நாற்பத்து மூன்று

Images.jpg லலிதா.jpg

பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல்
திரிபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே


விளக்கம் :

சிலம்பினை அணிந்த அழகிய சிறிய திருவடிகளையுடைய அபிராமி அன்னையே.... பாசத்தையும் அங்குசத்தையும் ஏந்தியவளே... ஐந்துவித
அம்புகளைக் கொண்டவளே.. இனிமையான சொற்களைப் பேசும் திரிபுரசுந்தரியே...செந்தூரவண்ண மேனியையுடையவளே... முப்புரங்களையும் ஆண்ட தீய நெஞ்சத்தைக் கொண்டிருந்த அசுரர்களை, அவர்கள் அஞ்சும்படியாக மேருமலையை வில்லாக ஏந்திய,
எரியும் நெருப்பினையொத்த மேனியையுடைய ஈசனது இடப்பாகத்தில் அமர்ந்தவளே...அபிராமியே...."பரிபுரச்சீறடி" சிலம்பினை அணிந்த சிறிய திருவடிகளையுடையவளே... உலகத்தைப் படைத்த அன்னையின் வடிவு மிகப்பெரிது.. ஆயினும் நம் போன்ற சிறியோர்களும்
காணும் வண்ணம் அவள் அழகிய சிறு குழந்தை வடிவில் காட்சி தருகிறாள்..அன்னையை சிறு குழந்தை வடிவில் மனத்தில் எண்ணிப் பாருங்கள்


ஆஹா...எத்தனை அழகிய திருக்காட்சி இது... "பாசாங்குசை பஞ்சபாணி" பாசத்தையும் அங்குசத்தையும் ஏந்தியவளே... ஐந்து வித மலர்களால் ஆன அம்புகளை உடையவளே...அன்னையின் கையில் பாசம் எதற்காக? அங்குசம் எதற்காக?? உலகியல் பந்தங்களில் நம்மைப் பிணைப்பதற்காக பாசத்தையும், பின்னர் அப்பந்தங்களிலிருந்து நம்மை விடுவிப்பதற்காக அங்குசத்தையும் ஏந்தியிருக்கின்றாள்.. சரி ஐந்து வித மலரம்புகள் எதற்காக?? முன்னரே இதைப் பற்றிப் பேசியிருக்கின்றோம்...அவளைச் சரணடைந்தால், நமது ஐந்து வித புலன்களையும் அடக்கியாள்பவள் அவளே...இதையே பஞ்சபாணி எனும் திருக்காட்சி உணர்த்துகின்றது. "இன்சொல் திரிபுரசுந்தரி" இனிமையான சொற்களைப் பேசும் திரிபுர சுந்தரியே... அன்னை என்றென்றும் மக்களிடம் அன்பு பூணுபவள்.. எனவே இன்சொல்லையுடையவள்..


"சிந்துர மேனியள் " செந்தூரவண்ண மேனியைக் கொண்டவள். "தீமை நெஞ்சில்புரி புர வஞ்சரை அஞ்ச" தீமையான நெஞ்சம் கொண்டவர்கள்... முப்புரங்களையும் ஆண்ட அசுரர்கள்.. வஞ்சகர்கள்.... "அஞ்சக் குனி பொருப்புச் சிலைக்கை எரிபுரை மேனி இறைவர்" வஞ்சகர்களான அசுரர்கள் அஞ்சும்படி மேருமலையை வில்லாக வளைத்து ஏந்திய கையையுடையவரும்... எரியும் நெருப்பினையொத்த திருமேனியைக்
கொண்டவருமான ஈசன் சிவபெருமானின்.... "செம்பாகத்து இருந்தவளே "சரிபாதியாக இடப்பாகத்தில் அமர்ந்தவளே... அபிராமி அன்னையே...


பாடல் நாற்பத்து நான்கு


தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே


விளக்கம் :

தவம்புரியும் எங்கள் அபிராமியன்னையானவள் எங்கள் சங்கரனாரின் துணையாகி அவர் இல்லத்து மங்கலமானவள். அவளே பராசக்தியாக சங்கரனாரின் தாயுமானவள். ஆகையால் இவளே தெய்வங்களுக்கெல்லாம் மேலான தெய்வமாவாள். எனவே இனிமேல் நான் வேறு ஒரு தெய்வத்தைத் தொழுது அவர்கட்குத் தொண்டு செய்து துவளமாட்டேன்...அன்னையின் மூன்று வித்தியாசமான நிலைகள் வியப்பைத்தருகின்றன... அவை.


1. தவம் செய்பவள்..
2. சங்கரனாரின் மனைவி...
3. சங்கரானாரின் தாய்...


தவம் செய்யும் வாழ்க்கையை ஏற்றோர் குடும்பவாழ்வில் ஈடுபடுவதில்லை. எனவே முதற்கூற்று இரண்டாம் கூற்றோடு முரண்படுகின்றது.. மனைவியானவன் அக்கணவனுக்குத் தாயாக முடியாது. எனவே இரண்டாம் கூற்றோடு மூன்றாம் கூற்று முரண்படுகிறது. ஆனால் அதுதான் அன்னை அபிராமியின் பெருமை...ஆதிபராசக்தியான அவள் "மாத்தவளே..." என்று முன்னரொரு பாடலில் அபிராமி பட்டரால் குறிப்பிடப்பட்டாள்... உலகைப் படைத்தவளும் அவளே.. தனக்குத் துணையாக மும்மூர்த்திகளைப் படைத்து அவர்கட்குத் தாயானவளும் அவளே...பின்னர் முப்பெருந்தேவியராக உருக்கொண்டு அம்மும்மூர்த்திகளுக்கும் துணையாக நின்றவளும் அவளே...


"எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்" மனைவியே மனைக்கு மங்கலமானவள்..எனவேதான் "பெண்ணிற்பெருந்தக்க யாவுள.." என்று பாடினான் அய்யன் திருவள்ளுவன். ஆனால் உலகையே படைத்த அன்னை ஆதிபராசக்தியானவள் ஈசனது மனைவியானாள். அவன் இல்லத்துக்கு மங்கலமானாள்.. எத்தனை பெரிய பேறு பெற்றான் எங்கள் சங்கரன்... "அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள்"
உமையவளாய் நின்ற ஆதிபராசக்தியே சங்கரானாருக்கு அன்னையும் ஆனவள்..."ஆகையினால் இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்" உலகமே வணங்கும் தன்மை பெற்ற சங்கரனாரைப் பெற்ற தாயாகி நின்றதால், எங்கள் அபிராமியே தெய்வங்கள் எல்லோருக்கும் மேலான தெய்வமானவள்... தெய்வங்களையெல்லாம் படைத்த தெய்வமானதால் இவளே மேலான தெய்வம்... "இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே" "துவளேன்" எங்கள் அன்னை அபிராமியே தெய்வம் என்பதை உணர்ந்து கொண்ட பின்னர் நான் இனி வேறு எந்த தெய்வத்துக்கும் என் மெய்யால் தொண்டு செய்து துவள மாட்டேன்..


எத்தனை தெய்வங்களய்யா....?? அறிவைக் கொடுக்கக்  கலைமகள்... செல்வத்தைக் கொடுக்க அலைமகள்... வீரத்தைக் கொடுக்க
மலைமகள்... அவர்தம் மனையோர்... முழுமுதற்கடவுளான ஆனைமுகன்.. அவனது தம்பியான ஆறுமுகன்... நவக்கிரகங்கள்... திக்குக்களையாளும் தேவதைகள்...பஞ்சபூதங்கள்... என்று முப்பத்து முக்கோடித் தேவர்களையும் பட்டியலிடலாம்... ஆனால் எல்லாரையும் படைத்து நமக்களித்த அன்னை அபிராமியே நமக்கு அன்பு செய்யும்படி அருகில் வந்த பின்னர் வேறு தெய்வங்களுக்கு நான் ஏன் தொண்டு செய்ய வேண்டும்? ஒவ்வொரு தேவைகட்கும் ஏன் அவர்கட்கு தொண்டு செய்து துவள வேண்டும்.. இனி இப்படி நான் துவளமாட்டேன்.. அன்னையே உன்னை மட்டுமே வணங்குவேன் என்று பாடுகிறார் அபிராமிப் பட்டர்...

தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்..
.

 பாடல் நாற்பத்தைந்து


தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ இலரோ அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே


விளக்கம் :

அபிராமி அன்னையே... உனக்குப் பணிவிடைகள் செய்யாது, உன் திருப்பாதங்களை வணங்காது, துணிவுடன் தங்கள் மனத்தில் பட்டதையே கடமையெனப் பழங்காலத்தில் செய்தவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ தெரியாது...அவர்களைக் கண்டு அடியேனும் அதன்படி நடந்தால் அது சரியோ அல்லது தவறோ என்பதும் அறியேன். ஆயினும் நான் தவறே செய்தாலும் என்னை வெறுக்காமல் பொறுத்தருள் தேவி...
இறையருளைப் பெறுவதற்கு முயற்சி செய்யாமல் தங்கள் இச்சைப் படியே ஞானமார்க்கத்திலும், கர்ம யோக மார்க்கத்திலும் நின்று முக்தியடைந்த ஞானிகள் பழங்காலத்தில் இருந்தனர். ஆனால் பக்திமார்க்கமே இறையருள் பெறுவதற்கு மிகவும் எளிதான மார்க்கமாகும்..


அன்னையே... உனக்கும் உனது அன்பர்களுக்கும் பணிவிடைகள் செய்யாது, உன் திருப்பாதங்களைத் தொழாது தங்கள் இச்சைப்படி கர்மயோகத்திலோ, ஞானமார்க்கத்திலோ பழங்காலத்தில் நின்றோர் இன்றும் இருக்கின்றார்களோ இல்லையோ.. நான் அதனை அறியேன்...
"அப்பரிசு அடியேன் கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ" அடியேனும் அவர்களைக் கண்டு மனம் மாறி அவர்கள் வழி நின்றால் அது தவறோ...அல்லது சரியோ... கைதவம் - தவறு அல்லது அநீதி என்று பொருள் படும்..செய்தவம் - நீதி என்று பொருள் படும்.. "செய்தவமின்றேல் கைதவம் ஆளும் "என்பது ஔவையார் வாக்கு. முன்னரே அன்னையை விடுத்து வேறெந்த மார்க்கத்திலும் செல்ல மாட்டேன் என்று உறுதியாகக் கூறிய அபிராமிப் பட்டர் இவ்விடத்து வேறொருவர் வழியைக் கண்டு தானும் மனம் மாறிவிடுவோமோ என்று
அஞ்சும்படி பாடுவது வியப்பைத் தருகின்றது..


ஆயினும் அவர் என்றும் அன்னையின் அன்பு பாலகனாகவே இருந்தார்.. மனம் மாறும் இயல்பு படைத்த மானுடராய்ப் பிறந்து விட்டோம். நாம் அன்னையை விட்டு விலகவேண்டாம் என்று நினைத்தாலும், நமது கர்மா - முன்வினைப் பாவங்கள் நம்மை நல்நெறியிலிருந்து பிரித்து வேறு பாதைக்கு அழைத்துச் சென்றுவிடுமோ என்ற அச்சம்தான் அபிராமிப் பட்டரை இவ்வண்ணம் எண்ணத் தூண்டுகிறது.. அவ்வாறு நான் உன்னை
விட்டு விலகிச் சென்றாலும், அன்னையே.. .என்னை வெறுக்காது பொறுத்தருள்வதுதான் உன் தாயன்பை உணர்த்தும்.. எனவே அன்னையே.. என்னைப் பொறுத்தருள்,,,


பாடல் நாற்பத்தாறு


வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே

விளக்கம் :

அபிராமி அன்னையே... புதிதாய்த் தோன்றிய விடத்தை உண்டு கறுத்த கழுத்தையுடைய ஈசனது இடப்பாகம் அமர்ந்த பொன்னே... தம் அடியார்கள் வெறுக்கும் படியான செயல்களைச் செய்தாலும் பெரியோர்கள் அவர்களது செயல்களைப் பொறுத்து அன்பு செய்யும் வழக்கம் புதியது அல்லவே... நான் நீ வெறுக்கும்படியான செயல்களைச் செய்து உன்னை விட்டு விலகிப்போனாலும் நீ வெறுக்கும்படியான செயல்களைச் செய்தாலும், உன்னையே வாழ்த்துவேன்...அன்னையே எவ்வழி சென்றாலும் நான் உன்னையே வாழ்த்துவேன்.. நீ என்னை
மன்னித்து அருளிச் செய்வது உனது பெருந்தன்மை என மறைமுகமாக ஒரு வேண்டுதலை இப்பாடல் தருகின்றது.


"புது நஞ்சை உண்டு கறுக்கும் திருமிடற்றான்" புத்தம் புதிய நஞ்சு...அமரர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பிறந்த புத்தம் புதிய
விடம்.. உலகை அழிக்க வந்தபோது அப்புது நஞ்சை அருந்தி உலகைக் காத்து தன் கழுத்தினை நீலமாக்கிக் கொண்ட... கறுப்பாக்கிக் கொண்ட ஈசன்..சிவபெருமான்... "இடப்பாகம் கலந்த பொன்னே.." அப்பனது இடப்பாகம் அமர்ந்தவளே... சேர்பவளே... இருந்தவளே... எனப் பாடிய அபிராமிப் பட்டர் இவ்விடத்து இடப்பாகம் கலந்த பொன்னே என்கிறார்.. அப்பனது இடப்பாகத்தில் கலந்து விட்டவள்... பொன்மகள்....
"வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர் பொறுக்கும் தகைமை புதியது அன்றே " உலகம் ஏற்றுக்கொள்ள இயலாத தவறுகளைத் தம் பிள்ளை புரிந்தாலும், அன்னையானவள் தன் பிள்ளையை என்றும் விட்டுக் கொடுப்பதே இல்லை.. அவனைப் பொறுத்தருள்வாள்..


தம் அடியார்கள் தாம் வெறுக்கத்தக்க செயல்களைப் புரிந்தாலும் ஞானிகள், குருமார்கள், தங்கள் சீடர்களை மன்னித்து ஏற்றுக் கொள்கின்றனர்.. இது பெரியோர்களின் பெருந்தன்மையைக் குறிக்கும்.. இது போன்ற நிகழ்வுகள் புதிது அல்ல என் அன்னை அபிராமியே...நானும் உலகோர் வெறுக்கும் படியான செயல்களைப் புரியலாம்.. ஆனால் என்னை மன்னிப்பது உன் கடனே... "மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை
வாழ்த்துவனே.." உன்னால் மறுக்கப் படுகின்ற செயல்களைப் புரிந்தாலும் கூட,,, அன்னையே... நான் உன்னையே வாழ்த்துவேன்... உன்னையே சரண்புகுவேன்..உன்னை விடுத்து எம்மைக் காக்க யார்தாம் உண்டு..? நீ எனக்கு அடைக்கலம் தந்தருளவேண்டும்... அது உனது நீதி..."அன்றே தடுத்து எம்மை ஆட்கொண்டாய்" என்று தவறிழைக்கும் முன்னரே என்னை உன் அடியவனாக்கிக் கொண்டாய் என்று பாடி, உத்தமனாய் வாழ்ந்த அபிராமி  பட்டரே.. தான் தவறிழைக்கும் நிலை பற்றிப் பாடி வேண்டுகிறார்..அன்னையே... எங்களது பிழைகளையும் பொறுத்தருளம்மா என வேண்டி பாடலை மீண்டும் ஒருமுறை பாடிப் பாருங்கள்.. நம்மைப் பிடித்துள்ள பாவச் சுமைகள் விட்டொழியட்டும்...


எழுதித் தயாரித்தது திரு மு.கந்தசாமி நாகராஜன்


--Geetha Sambasivam 08:45, 11 மார்ச் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 17 மார்ச் 2011, 11:56 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 4,714 முறைகள் அணுகப்பட்டது.