அன்றொரு நாள் பிப்ரவரி: 15மரபு விக்கி இருந்துஇன்னம்பூரான்
“சோக்ரதர் ககனத்திலிருந்து சரித்துக்கொடுத்தார், தத்துவபோதனையை.” சோக்ரதர் என்று பெயரிட்டு, சாக்ரட்டீஸ் என்ற கிரேக்கஞானியை பற்றி, ராஜாஜி ஒரு சிறிய நூல் எழுத, அணிந்துரையில் திரு.வி.க., ராஜாஜியே சோக்ரதராக மாறிவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். சாக்ரட்டீஸ் அப்படித்தான் கூடு விட்டு கூடு பாய்வார். எழுத்து மூலம் தன் படைப்பு ஒன்று கூட விட்டு செல்லாத சாக்ரட்டீஸ்ஸுக்கு எண்ணிலடங்கா உரையாசிரியர்கள், திருவள்ளுவருக்கு அமைந்தது போல. அவரவர் ஒரு நிழல்-சாக்ரட்டீஸ்! அந்த சபையின் கடைசி வரிசையின் கடைசி இருக்கையில் எனக்கு ஒரு ஊசிமுனை இடம்? “எனக்கு தெரியாது என்பது எனக்கு தெரியும். அம்மாதிரி நீ அறியாய்.” என்று சொல்லித்தான், உயிரை ஆஹூதியிலிட்டு, ஆத்ம சம்ரக்ஷணை செய்து கொண்டார், சாக்ரட்டீஸ். வினா-விடை மூலம் சந்தேஹநிவாரணம் செய்த அவர்,“பரிசோதிக்காத வாழ்க்கை வாழும் தகுதியிழந்தது.” என்றார். பரிசோதனையோ ஒரு தொடர்கதை. அதனால் தான் சில சம்பாஷணைகளின் அலைவரிசை ஓய்வதில்லை. இன்றைய சம்பாஷணைதாரர், தமிழ்த்தேனி. சாக்ரட்டீஸ் அவரை கவர்ந்த கதை, அவருடைய அக்டோபர் 20, 2010 மின் தமிழ் மடலில். சுருக்கினால், சாக்ரட்டீஸ்ஸின் வியாபகம் குலைந்து போகலாம். அதனால் உள்ளது உள்ளபடி. “ சில நாட்களுக்கு முன்னால், இன்னம்பூரானை அவர்களை அவர் வீட்டில் சந்தித்தேன். உடல் நலம் குன்றியிருந்தார். அது பற்றி இங்கு எழுதியிருக்கிறேன். ‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை’ என்னும் பாடலில் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு அவர்கள்”சேர்ந்து வாழும் மனிதரெல்லாம் சேர்ந்து போவதில்லை” என்று ஒரு வரி பாடுவார். ஏனோ எனக்கு அவர் நினைவு வந்தது, பொதுவாக மனிதர்களின் முதுமைக் காலங்கள் கொடுமையானவை, அதுவும் உலகில் ஒரே துணை என்று நம்பப்படும் இல்லறத் துணை.அது ஆணோ பெண்ணோ அவர்களும் பிரிந்துவிட்டால் , ஆறுதல் சொல்லக் கூட யார் யாருக்கு என்ன நிலைமையோ யார் அறிவார், இன்னம்பூரார் போன்ற தைரியசாலிகள், அனுபவசாலிகள், சமாளிக்கிறார்கள். எத்தனை எத்தனை மனிதர்கள் இந்தத் தனிமையை சமாளிக்க முடியாமலும், அந்த தனிமையை அழிக்க முடியாமலும் அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த போது என் முத்தண்ணா பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு உணர்வு, மனம் நெகிழ்ந்தாலும் வெளிக்காட்டாமல் இயல்பாக பொதுவாக சில விஷயங்கள் பேசின பிறகு, அவர் கையில் இருந்த ஒரு புத்தகத்தை வாங்கிப்பார்த்தேன்- The Trial And Death of Socrates by Plato. அவரே சொல்லட்டும் என்று காத்திருந்தேன். இஷ்டமிருந்தால் இந்த மாதிரி சமாச்சாரங்களை கதை சொல்லியாக பேசுவார். இல்லையெனில், என்ன ‘தானே தைரியமாக சிரித்துக்கொண்டே ஒரே மூச்சில் விஷம் குடித்து இறந்தார்.’என்றேன். இல்லை. தைரியமாகக் குடித்தார், ஆனால் அவர் ஒவ்வொரு பகுதியாகக் குடித்தார், கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய உடல் மரத்துப் போய்க்கொண்டே சான்றோர்களின் கதி இது தான் என்றார். சாக்ரிட்டீஸ்ஸின் தத்துவங்களை எடுத்து சொன்னார். சொஃபிஸ்ட்ஸ், சாக்ரெட்டீஸ், ப்ளேட்டோ, அரிஸ்டாட்டில், ஹூம் எத்தனையோ சாக்ரடீஸ்கள், விஷம் மட்டும் வித்யாசமானது.கொடுப்பவர் மாறுகிறார், காட்சிகள் மாறுகின்றன, கோலங்கள் மாறுகின்றன. ஆனால் அறிஞர்கள் மாறுவதே இல்லை பின் குறிப்பு: சோக்ரதர் என்ற நூலை பற்றி தெரியுமா? எழுதியது ராஜாஜி; முன்னுரை திரு.வி.க. அவர் என்ன சொன்னார் தெரியுமா?” என்று கேட்டாரே தவிர,என்ன சொன்னார் என்று கடைசி வரை சொல்லவே இல்லை’. கி.மு. 469ல் ஒரு கல்லுளி மங்கனாக (சொல் வந்து பொருத்தமாக விழுகிறது!) பிறந்த (son of a stonemason) சாக்ரெட்டீஸ், கிரேக்க அழகு இல்லாத விகாரரூபன்; பானை தொந்தி; விசித்திரமான நடை, தேடும் கண்கள், ரோமம் அடர்ந்த உடல். ஊரார் மாதிரி பட்டும், பகட்டும், அவரை கவரவில்லை. ஊருக்கு ஒவ்வாத மனிதன். சமயவெறி சமுதாயத்தின் மீது சவாரி செய்த காலத்தில், தன்னுடைய உள்ளுணர்வை ("daimonion") அரியணையேற்றியவர். அவரின் பாதை கடினம், கல்லும், முள்ளும். ஆனால், என்னே கவர்ச்சி! என்னே நேர்த்தி! என்று இளைஞர்கள் சூழ, அவரதடிகள் பணிய, கீர்த்திமானாகி விட்டார், அவர். ஐம்பது வருடங்கள் கழிந்தன, இவ்வாறு. கிரேக்க அரசுகள் சிறியவை, நகருக்கு ஒன்று. முனிசிபாலிட்டி என்று கூட சொல்லலாம். அவர் வாழ்ந்த ஏதென்ஸ் நாட்டின் அரசுக்கு கெட்டகாலம்: போர்க்களங்களில் படு தோல்வி, நிதி நிலை மோசம், ஏழைகள் பட்டினி, எல்லாம் தலைகீழ். சால்ஜாப்பு, நொண்டிசாக்கு, பலிகடா எல்லாம் வேண்டியிருந்தது, இன்றைய இந்தியாவின் நிலையை போல. பொறியில் அகப்பட்டுக்கொண்டது சாக்ரெட்டீஸ். அரசவைக்கு இழுத்து வரப்பட்டார். குற்றப்பத்திரிகை படிக்கப்பட்டது: 1. நாட்டின் கடவுளர்களை அவமதித்தது; 2. இளைஞர்களின் மனதை குலைத்தது. குற்றவாளி என்று தீர்ப்பு. தண்டனை: ஃபெப்ரவரி, 15, 399 கி.மு. அன்று, அரசு மேற்பார்வையில் தற்கொலை, ஹெம்லாக் என்ற விஷம் அருந்தி. இன்றைய சூழ்நிலையில் கூட இவர் உயிர் தப்புவது கடினம். ‘ சொல்லின் பொருள் ஆராய்ந்து அறிக... புரிந்து செயல்படுக.‘ என்று சொல்லும் சாக்ரட்டீஸ்ஸுக்கு விதண்டாவாதம் பிடிக்காது. சமுதாயத்தின் நன்மைக்கு தர்க்கவாதம் ஊறு விளைக்கும் என்னும் இவர், ஒரு சிக்கலான வினா எழுப்பினார். இன்னம்பூரான் 15 02 2012
Nails, Debra, "Socrates", The Stanford Encyclopedia of Philosophy (Spring 2010 Edition), Edward N. Zalta (ed.), URL = <http://plato.stanford.edu/archives/spr2010/entries/socrates/>.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 10:19, 1 மார்ச் 2012 (UTC) |