அன்றொரு நாள்: ஜூலை 26

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

யானைக்கும் அடி சறுக்கும்!


இரண்டாம் உலக யுத்தகாலத்தில் உலகத்தலைவர்களின் தலைவராகவும், கொடுங்கோலாட்சியின் வைரியாகவும், பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தின் தளபதியாகவும், அமெரிக்காவின் உற்ற நண்பனாகவும், ஸோவியத் ரஷ்யாவின் ‘எச்சரிக்கை’ தோழனாகவும், ஆங்கிலேய மக்களின் டார்லிங்காகவும் திகழ்ந்தவர், ‘பெரிய சுருட்டு’ வின்ஸ்டன் சர்ச்சில் துரை. உலகமே போற்றிய தலைவரான, (உருவம் கூட களிறு போல!) சர்ச்சில் யானையின் அடி சறுக்கிய தினம், ஜூலை 26, 1945. அந்த வருடம் நடந்த தேர்தலில், அவருடைய கட்சிக்கு படு தோல்வி. கிளெமெண்ட் ஆட்லி தலைமை வகித்த தொழிலாளர் கட்சிக்கு அமோக வெற்றி, 393/627 தொகுதிகளில். மக்களின் மனப்போக்கை அறிய நடந்த ஆய்வுகளில் ஒன்று: பீ பீ ஸீக்கு வந்த ‘யுத்தத்தில் மக்கள் அறிந்து கொண்டதாக’ 47 ஆயிரம் இடுகைகள், 15 ஆயிரம் படங்கள். அவற்றின் ஒட்டு மொத்தமான செய்தி: சர்ச்சிலுக்கு புகழாரம்; ஆட்லிக்கு பிரதமர் பதவி. சர்ச்சிலுக்கு நன்றி மறவாத மக்கள், யுத்தம் முடிந்த பின் அமைதி கால ஆட்சிக்கு தொழிற்கட்சியை தான் விரும்பினார்கள். உலக புகழ் பீவரிட்ஜ் ரிப்போர்ட் வெளி வந்த காலம் (அது பற்றி இந்தியர்கள் அறிந்தால், அவர்களுக்கு நல்லது.). மக்கள் நலம் நாடும் திட்டங்கள் வகுக்க, அமல் படுத்த, ஆட்லியின் ஆளுமையை மக்கள் விரும்பினர். தமது வாக்குரிமையை நிலை நாட்டினர்.


இதை கூட உலகவரலாற்றின் திருப்பு முனை எனலாம். 1945ல் சர்ச்சில் பதவிக்கு வந்திருந்தால், 1947ல் இந்திய சுதந்திரம் துர்லபமே. ஆட்லி இந்தியாவின் நண்பர். சில வருடங்கள் முன் இந்தியாவின் நண்பரும், நேருவின் தோழருமான கிங்ஸ்லீ மார்ட்டின் என்ற இதழாசிரியரை பற்றி ஆய்வு செய்தேன். பற்பல வருடங்களுக்கு முன் அவரை சென்னையில் சந்தித்ததின் தொடர்பு எனலாம். அப்போது கிடைத்த செய்தி ஒன்று. கிங்ஸ்லீ மார்ட்டினின் இதழ் The New Statesman வழங்கும் மதிய உணவு சந்திப்புக்களுக்கு ஏகப்பட்ட மதிப்பு. ஒரு தடவை முதல் விருந்தினர் ஜவஹர்லால் நேரு. மூலையில் அமர்ந்திருந்த மெளனி: க்ளெமெண்ட் ஆட்லி, இந்தியாவுக்கு விடுதலை அளித்த ஆங்கில பிரதமர். மற்ற திருப்பு முனைகள்: பீவரிட்ஜ் ரிப்போர்ட், ஃபேபியன் சொஸைடியின் தீர்மானங்கள்,, மக்கள் நல திட்டங்கள், அனுரீன் பீவானின் தேசிய மருத்துவ/சுகாதார அமைப்பு, ஹெரால்ட் லாஸ்கியின் குருஸ்தானம் ஆகியவை. ஒரு அறுபது வருடங்களுக்கு பிறகு அசை போட்டாலும், ஆட்லி தலைமை வகித்த தொழிலாளர் கட்சிக்கு கிடைத்த அமோக வெற்றி சாலத்தகும்.


இத்தருணம் ஒரு தனிச்செய்தி. மேல் நாடுகளில் சான்றோர்களின் ஆவணங்கள் பத்திரப்படுத்தப்படுகின்றன. ஆய்வுக்கு தருகின்றனர். மிகப்பழைய இதழ்கள் காப்பாற்றப்படுகின்றன. சான்றாக, மிகப்பழைய The New Statesman இதழ்கள் போர்ட்ஸ்மத் பல்கலைகழக நூலகத்தில், பாதுகாப்பாக உள்ளன. எந்த நூல் கேட்டாலும், கனிவுடன், வரவழைத்துத் தருகிறார்கள். நாமோ, புதுமை பித்தனின் கையெழுத்துப்பிரதிகள் காணோம், தேசபக்தன், நவசக்தி காணோம் என்று மூக்கால் அழுகிறோம். வாரிசுதாரர்களுக்கு துட்டு கொடுத்து, உதட்டளவில், தற்கால இலக்கியங்களை ‘நாட்டு உரிமை’ யாக செய்வதோடு நிற்காமல், அரசு ஏன் நூலக கருவூலங்களை வாங்கக்கூடாது?


இன்னம்பூரான்

26 07 2011


உசாத்துணை:

http://trove.nla.gov.au/ndp/del/article/967373








--பவள சங்கரி திருநாவுக்கரசு. 16:46, 28 ஜூலை 2011 (UTC)














பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=அன்றொரு_நாள்:_ஜூலை_26&oldid=7611" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 28 ஜூலை 2011, 16:46 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,860 முறைகள் அணுகப்பட்டது.