அன்றொரு நாள்: ஜூன் 29மரபு விக்கி இருந்துஅன்றொரு நாள்: ஜூன் 29 இங்கு அடுத்த தெரு; காவண்டிஷ் ரோடு. இதை கடக்கும் போதெல்லாம் சென்னையை நினைத்துக்கொள்வேன். அங்கு தான் 1950 களில் மாணவனாக இருப்பது நல்லதொரு கொடுப்பினை, பிரபலங்களுடன் அநாயசமாக பழக. அணுசக்தி விஞ்ஞானி நீல்ஸ் போஹ்ரிலிருந்து நம் நாட்டு பிரசன்ன சந்திர மஹலானோபிஸ் வரை. விசாலமான அறிவு தேட்டலுக்கும், தன்னம்பிக்கைக்கும் உரம் போட்ட மாதிரி. கேம்பிரிட்ஜில் உள்ள காவண்டிஷ் விஞ்ஞான பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்ய விழைந்தாலும், இந்தியாவுக்கு திரும்பிய பிரசன்ன சந்திர மஹலானோபிஸ் அவர்களின் ஜென்மதினம், இன்று (ஜூன் 29, 1893). மறைந்த தினம்: 28 June 1972. அவரது பேச்சை சென்னை செர்வெண்ட்ஸ் ஆஃப் இந்தியா மன்றத்தில் கேட்டு, கேள்விகள் கேட்டு துளைத்திருக்கிறேன். மின் தமிழில் ‘தடால், தடால்’ என்று சிலரால் விதிக்கப்படும் ‘தடா’ போல் அங்கு கிடையாது. யாரும் எதையும், குடைந்து, குடைந்து, கேட்கலாம். ஸர்.சீ.பி. ராமஸ்வாமி அய்யர் கூட எங்களிடம் மாட்டிக்கொண்டது உண்டு. இது நிற்க.
1922ல் வங்காளத்தில் ஒரு வெள்ளம். பொறியாளர்கள் மிகவும் செலவு செய்து கட்டும் தடை அணைகள் பற்றி திட்டமிட, மஹலானோபிஸ் 50 வருட மழை, வெள்ளம் ஆகியவற்றை அலசி, ஒரு எளிய திட்டம் வகுத்தார். அதன் அடிப்படை, அக்காலம் மேல்நாடுகளிலேயே பிரபலம் ஆகாத Operation Research. 1925ல் வேளாண்மைத்துறையில் புதிய சாதனைகளை படைத்தார். இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டம் 1956-61 மிக சிறந்தது. அதை வகுத்தவர், இவர் தான். அதற்கு பெயரே மஹலானோபிஸ் மாடல். அதனுடைய அடித்தளம்: சுய நம்பிக்கை, தீர்க்க தரிசனம், வளரும் மாபெரும் தொழிற்கூடங்கள், அரசு தொழிற்கூடங்கள், திட்டமிட்ட மேன்மை வளர்ச்சி. பேராசிரியர் ஸுரேஷ் டெண்டுல்கர் சொல்வது போல, இந்தியாவின் நாடு தழுவிய சர்வேக்கள், ஆதாரம் உள்ள அடிப்படை புள்ளி விபரங்கள் ஆகியவற்றின் தந்தை என்று பேராசிரியர் பத்மவிபூஷன் பிரசன்ன சந்திர மஹலானோபிஸ் அவர்களை, அவரது ஜென்மதினத்தன்று போற்றிடுவோம். இன்னம்பூரான் 29 06 2011 உசாத்துணை: http://www.india-today.com/itoday/millennium/100people/pc.html
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:28, 29 ஜூன் 2011 (UTC)
|
