அன்றொரு நாள்: ஜூன் 16

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 

இன்னம்பூரான்


நன்முத்து


சென்னை மாநகரத்தின் கடற்கரையில் சொற்பொழிவுகள் நிகழ்த்தி, மக்களின் மனதை கொள்ளை கொண்டு போன வங்காளத்து சான்றோர்கள் சிலர்: ஸ்வாமி விவேகானந்தர், ஸுரேந்திரநாத் பானர்ஜி, பிபின் சந்திர பால், சித்தரஞ்சன் தாஸ். மஹாகவி பாரதியார் சூரத் காங்கிரஸ் பற்றி எழுதிய கட்டுரையில் சித்தரஞ்சன் தாஸ் அவர்களை பற்றி ஏழு/எட்டு வயதில் படித்ததாக ஞாபகம். இன்று அன்னாரின் அஞ்சலி தினம். நவம்பர் 5, 1870ல் ஜனித்த அவர் மறைந்த தினம், ஜூன் 16, 1925. இறுதி ஊர்வலத்தை முன்னின்று நடத்திச் சென்ற மஹாத்மா காந்தி கூறினார்,

‘ தேசபந்து’ புருஷோத்தமன். அவரது கனவும், நனவும் சுதந்திரம் மட்டுமே. அவருடைய இதயத்தில் ஹிந்துவும், முஸல்மானும் ஒருங்கே இடம் பெற்றிருந்தனர். ஆங்கிலேயனையும் அவர் வெறுக்கவில்லை.’

எப்படி இந்தியரான லாலா லஜ்பத் ராய் அவர்களை பாகிஸ்தான் கொண்டாடுகிறதோ, அம்மாதிரி, பங்களா தேஷ் சித்தரஞ்சன் தாஸ் அவர்களுக்கு ஒவ்வொரு ஜூன் 16ம் அஞ்சலி செலுத்துகிறது. மற்றதை பிறகு பேசுவோம். இங்கிலாந்தில் பாரிஸ்டர் சன்னது பெற்ற ஸி.ஆர். தாஸ் அலிபூர் சூழ்ச்சி வழக்கில் ஶ்ரீ அரவிந்தருக்காக ஆஜரான வழக்கறிஞர். அவரது வாக்கில் கலைமகள் குடியிருந்தாளோ! தன் உரையை முடிக்கும்போது அவர் பகர்ந்தது,

‘இந்த வழக்கு எல்லாம் காலப்போக்கில் கரைந்து விடும். கலவரமும், சச்சரவும் அடங்கி விடும். அவரும் ( ஶ்ரீ அரவிந்தர்) அமரராகி விடுவார். அந்த காலகட்டத்தில் உலகம் அவரை தேசபக்தியை அறைகூவிய வரகவியாகவும், மனித நேய பண்பாளராகவும் பார்க்கும். அவருடைய பூதவுடல் கரைந்து போய் பலகாலம் ஆனாலும், அவருடைய மணிவாசகங்கள், இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் எதிரொலிக்கும். ஐயா! அவர் கனம் கோர்ட்டார் முன்னுமட்டுமல்ல, வரலாற்று தர்ம மன்றத்தின் முன் அல்லவா நிற்கிறார்!’

கோர்ட்டில் எங்கெங்கும் சர்வ வியாபியாக பகவான் ஶ்ரீகிருஷ்ணனை மட்டுமே தரிசித்த ஶ்ரீ அரவிந்தரின் ஆன்மீக பயணத்தை, ஸீ. ஆர். தாஸ் உணர்ந்திருந்தார் போல. நம் நாட்டில் தேசபக்தர்கள் பலர். மக்கள் இவரை ஒரு படி உயர்த்தி, ‘தேசபந்து’ என்றனர். அன்னியநாட்டுத் துணிமணி பகிஷ்காரத்தையும், அதை தீயிட்டுக் கொளுத்துவதையும், காந்திஜி, இவரிடமிருந்து கற்றுக்கொண்டார். தேசபந்து இதழாளராகவும் இருந்து, ‘ஃபார்வேர்ட்’. ‘லிபர்ட்டி’, ‘நாரயணா’ என்ற இதழ்களை நடத்தினார். கவிதைகள் பல இயற்றியவர், 25 வயதிலேயே. இந்திய இலக்கிய அமைப்புகள் அவரை கெளரவித்தன. பிரும்ம சமாஜத்தில் இணைந்திருந்தவர், அதிலிருந்து விலகி, ஒரு ஆதர்ஷ ஶ்ரீவைஷ்ணவராக இலங்கினார். இங்கிலாந்திலேயே, தாதாபாய் நெளரோஜி அவர்களுக்காக, தேர்தல் பிரசாரம் செய்தவர். ஜாலியன்வாலா பாக் அட்டூழியத்தை விசாரித்த காங்கிரஸ் கமிட்டியில் அங்கத்தினர்.

வரலாறு விந்தை நிறைந்தது. காந்திஜிக்கும் இவருக்கும் இருந்த கருத்து வேற்றுமை, அதன் பரிமாணங்கள் பற்றி நுட்பமாக படித்து அறிவது நமது கடமை. அஹமதாபாத் காங்கிரஸுக்கு அக்ராசனராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், சிறைவாசம் முட்டுக்கட்டை போட்டது. அடுத்த வருடம் கயை காங்கிரஸுக்கு அக்ராசனம் வகித்த அவர், காந்திஜியுடன் இருந்த கருத்து வேற்றுமையினால், அந்த பதவியிலிருந்து ராஜிநாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. காங்கிரஸிலிருந்து பிரிந்து, 1923ல் ஸ்வராஜ்யா கட்சியை இவர் துவக்கிய போது, சகபாடி, மோதிலால் நேரு. அவரோ காந்திஜியின் அத்யந்த சிஷ்யன். மற்றொரு கூட்டாளி, ஸுஹ்ரவர்த்தி. (அந்த பிரகிருதி தான் 1947 வங்காள பிரதமர். ஹிந்துக்களை கொல்ல வந்த கூட்டங்களை இவர் ஆதரிக்கவே, காந்திஜி நவகாளி சென்று உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டியிருந்தது!) காங்கிரஸ் என்றால் காந்தி கட்சி அல்லவா! எதிர்ப்பு எல்லாம் தணிந்து விடும் என்று நினைத்தார்கள். ஆனால், எப்படியாவது பூரண ஸ்வராஜ்யம் பெற்று விடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு, கலோனிய அரசுக்கு சிம்மசொப்பனமாக இருந்த தேசபந்து அவர்களின் கட்சி பல தேர்தல்களில் வாகை சூடியது. இரண்டே வருடங்களில் கல்கத்தாவில் காந்திஜி- ஸீ.ஆர். தாஸ் உடன்பாடு கையெழுத்தாகி, 1925ம் வருட கான்பூர் காங்கிரஸ்ஸில் இரு கட்சிகளும் இணைந்தன. அத்தருணம், ஸீ.ஆர்.தாஸ் அவர்களும் அஹிம்சா மூர்த்தியானார். ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு உழைத்தார். வாழ்நாள் முழுதும், இந்த வியாதியும், அந்த நோவுமாக, நோஞ்சானாக இருந்த தேசபந்து நாட்டுக்காக, மக்கள் நலனுக்காக, இடை விடாது உழைத்தார். தன் சொத்து முழுதையும் மக்களுக்கு அர்ப்பணித்தார். அங்கு பெரிய ஆஸ்பத்திரி, இன்று நிற்கிறது. அவரது நினைவு என் நெஞ்சை விட்டு அகலாது.


இன்னம்பூரான்

16 06 2012



http://www.mahakavibharathiyar.info/photos2.htm

http://www.mahakavibharathiyar.info/photos2.htm

http://kayatana.com/images/india/india00125.jpg



உசாத்துணை:

http://www.preservearticles.com/201104235825/short-biography-of-c-r-das.h



--பவள சங்கரி திருநாவுக்கரசு. 06:38, 16 ஜூன் 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=அன்றொரு_நாள்:_ஜூன்_16&oldid=11021" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 16 ஜூன் 2012, 06:38 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,722 முறைகள் அணுகப்பட்டது.