அன்றொரு நாள்: ஜனவரி:13

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

இன்னம்பூரான் 


நீயோ அரசு! நீயே கள்வன்!


வாயிலோயே வாயிலோயே
அறிவு அறை போகிய பொறியறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே
இணையரிச் சிலம்பொன்று ஏந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத்தாள் என்று
அறிவிப்பாயே அறிவிப்பாயே

(சிலப்பதிகாரம்: வழக்குரை காதை : 24-29)


ஜனவரி 13, 1898 ஒரு கரி நாள், ஃபிரான்ஸ் நாட்டின் வரலாற்றில். எமிலி ஜோலா என்ற பிரபல இலக்கியவாதி அக்காலத்து அரசின் மீது ‘ ‘பழி சுமத்துகிறேன்’ (J'ACCUSE ...!")- என்று ஒரு சிறிய காட்டமான கட்டுரையில் கரும்புள்ளி குத்தி,குற்றம் சாட்டினார். அன்றைய தினமே, அங்கு ‘வைகறை’ என்ற புகழ்வாய்ந்த இலக்கிய இதழ் அதை பிரசுரித்தது. உலகத்தின் இதழியல் வரலாற்றில் இது பெரிய சாதனை. கூகிளாண்டவரிடம் J'ACCUSE ...!" என்ற சொல்லை தேடினால் இருபது லக்ஷம் வரவுகள். அந்த அளவுக்கு அந்த சொற்றொடர்- சகுனி, கூனி, விபீஷணன், வாலி வதம், quisling, ஆகியவை போல - அகராதியில் புதுவரவாகி விட்டது. இல்லை? ‘அறிவு அறை போகிய’ நிலை, ஒரே அடியாக, உலகெங்கும் அதிகரித்து வருகிறதா?


எமிலி ஜோலாவின் கட்டுரை அந்நாட்டு ஜனாதிபதிக்கு எழுதிய பகிரங்கக்கடிதம். சர்ச்சையின் சிகரம். மனதை இளக வைக்கும் இலக்கியம். உண்மை விளம்பி. இந்த அளவுக்கு சட்டம், தார்மீகம், சமுதாய நோக்கு ஆகியவற்றை பாதித்த இதழியல் கட்டுரை யாதும் வந்தது இல்லை. நடந்தது என்ன?


கேப்டன் ஆல்ஃப்ரெட் ட்ரேஃபுஸ் என்ற யூதர் பீரங்கிப்படையில் பணியாற்றி வந்தார். 1894ல் ஜெர்மனிக்கு வேவு பார்த்ததாகக் குற்றம் சாட்டி, அவமதிக்கப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டார். அவர் முற்றிலும் குற்றமற்றவர். வழக்கு முறைகேடாக நடந்தது. சாக்ஷியம், பொய்யும், புனைசுருட்டும். அவருக்கு உண்மை உரைக்க வாய்ப்பு அளிக்கவில்லை. ராணுவத்திலிருந்து அவமதித்தபின் தூக்கி எறியப்பட்டார். ஆயுட்தண்டனை விதிக்கப்பட்டது. நான்கு வருடங்கள் கூளித்தீவில் கடுங்காவலில் வைக்கப்பட்டார். அநீதியை பற்றி 1896ல் தெரியவந்தாலும், உயர் அதிகாரிகள் மாபெரும் தவறுகளை, உண்மை குற்றவாளி எஸ்டெர்ஹெசி என்று தெரியவந்ததையும், மூடி மறைத்தனர். எமிலி ஜோலாவின் சான்றுகளும், வாதத்திறனும், சொல்லாட்சியும் இறவா வரம் பெற்றவை. ஓரிடத்தில், ‘உண்மை பீடுநடை போடுகிறது. அதை தடுத்து நிறுத்த இயலாது’ ("la verite est en marche et rien ne l'arretera") என்றார். அண்ணல் காந்தி மாதிரி, இருமுனைப்போர். 1. தர்மம் வெல்லவேண்டும். 2. துணிவு இருந்தால், அரசு தன் மீதே வழக்குத்தொடரட்டும். பல உண்மைகளை வெளிக்கொணரலாம். அதே மாதிரி செய்தார்கள். ஒரு வரியை பிடித்துக்கொண்டுக் காளிங்க நர்த்தனம் செய்தார்கள். அதற்குள், உலகமே விழித்துக்கொண்டது. லண்டன் டைம்ஸ்: ‘உண்மையையும், மனித உரிமையையும் போற்றி பாதுகாத்தது தான், ஜோலாவின் குற்றம். சுதந்திர ஆத்மாக்கள் அவரை பாராட்டுவார்கள்...’. ஜோலா வழக்கை கண்காணிக்க, உலகமே திரண்டு வந்தது. என்ன பயன்? யூத எதிர்ப்பு பேயரசாக இயங்கியது. அவருக்கு ஒரு வருட சிறை தண்டனை. அவரோ இங்கிலாந்துக்கு புலன் பெயர்ந்து, அங்கிருந்து சண்டை போட்டார். ஜூன், 1899ல் ட் ரேஃபுஸ், ஒரு தடுமாற்றத் தீர்ப்புக்குப் பின், விடுதலை ஆனபின் தான், திரும்பி வந்தார். கஜானா காலி.


1906ம் ஆண்டு, ஃப்ரென்ச் அரசு ட் ரேஃபுஸ் குற்றமற்றவர் என்று சொல்லி, விருது அளித்து, ராணுவத்தில் உயர் பதவியில் அமர்த்தியது. அதற்கு நான்கு வருடங்களுக்கு முன்னால், ஜோலா மறைந்து விட்டார். ட் ரேஃபுஸ் வந்திருந்தார். அத்தருணம், இரங்கல் உரை ஆற்றிய அனடோல் ஃப்ரான்ஸ் என்ற சான்றோன், ‘...ஜோலா மனித இனத்தின் மனசாட்சியில் ஒரு நொடி...’ என்றார்.


காலத்தின் கோலமடா! ஜூன் 4, 1908 அன்று ஜோலாவின் சடலம் ‘பாந்தியன் புனித மையத்திற்கு’ மாற்றப்பட்டது. அந்த நிகழ்வுக்கு வந்திருந்த ட் ரேஃபுஸ்ஸை க்ரகெரி என்றவன் சுட்டுக் காயப்படுத்தினான். அவன் தண்டிக்கப்படவில்லை. தப்ப விடப்பட்டான்!


எதற்கு இந்தக்கதை என்று உம்மில் யாராவது கேட்கலாம். அஃறிணையிலும், உயர்திணையிலும், ஆண்பால், பெண்பால் இரண்டிலும் கணக்கில் அடங்காத ட் ரேஃபுஸ் பலிகடாக்கள். ‘க்ரகெரி‘ போன்றவர்கள், மறைமுக அதிகார மையங்களில். J'ACCUSE ...!" என்று கொடி பிடித்து, ஆக்கபூர்வமான, மனித இனத்தின் மனசாட்சியின் நொடிகளாக, அச்சமின்றி இயங்கும் எமிலி ஜோலாக்கள், அவசரத்தேவை.

எங்கே என்று கேட்கிறீர்களா? ~ இந்தியாவில் தான்!


இன்னம்பூரான்

13 01 2012

http://img3.allvoices.com/thumbs/image/609/480/74439538-jaccuse.jpg



உசாத்துணை:

Wilkes, D.E. (1998): Flagpole Magazine: (February 11, 1998):"J'ACCUSE ...!": EMILE ZOLA, ALFRED DREYFUS,AND THE GREATEST NEWSPAPER ARTICLE IN HISTORY”






--பவள சங்கரி திருநாவுக்கரசு. 16:37, 13 ஜனவரி 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=அன்றொரு_நாள்:_ஜனவரி:13&oldid=9216" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 13 ஜனவரி 2012, 16:37 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,825 முறைகள் அணுகப்பட்டது.