அன்றொரு நாள்: ஆகஸ்ட் 17மரபு விக்கி இருந்துஇன்னம்பூரான்
ஒரு நாள் என் தந்தையிடமிருந்து ஒரு கண்டனக்கடிதம்: ‘நீ ஒரு குண்டா. நானே வந்து உன்னை போலீசில் ஒப்படைக்கிறேன்.’ 1947ம் வருடம் ஒரு சிக்கலான வருடம். விடுதலை நெருங்க, நெருங்க ஆனந்தம். பிரிவினையும், உலகம் கண்டிராத வகையில் இன்னலும், வன்முறையும் மிகுந்த புலன் பெயர்தலும் சோகம். நானும் ராஷ்டீரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் சேர்ந்து, சர்ச்ச்ங்கச்சாலக் (தலைவர்) குரு. எம். எஸ். கோல்வால்கரை தரிசிக்கத் திருச்சி பயணம். அங்கே ஆப்தே என்பவர் ஒரு கேலி சித்திரம் காண்பித்தார்: காந்திஜி அழுத்திப்பிடிக்க, நேருஜி பாரதமாதாவின் கைகளை துண்டிப்பது போல். அதை எதிர்த்து நான் வெளியேறி விட்டேன். ஆனால், வீட்டு வாசலில் போலீஸ். அம்மா என்னை அடித்தாள். வெள்ளைக்காரன் போலீஸ் வந்த போது கவலை பட்டார், அப்பா. கோபிக்க வில்லை. இந்திய போலீஸ் வந்தபோது கவலையுடன், கோபமும் சேர்ந்து கொண்டது. அப்போது எனக்கு ஸர் சிரில் ராட்கிளிஃப்பை பற்றி தெரியாது. அவரும் முன் பின் அறியாத சிக்கலான பணியை தப்பும் தவறுமாக செய்திருக்கலாம்/ அது அரசியல்/ ஆளுமை அவசரமாக இருந்திருக்கலாம் அல்லது அது வெத்து சடங்காக இருந்திருக்கலாம் என்பதெல்லம் தெரியாது.
அவரின் மேன்மைகள் பல. ஆனால், அவர் இந்தியாவுக்கு வந்தவரே இல்லை. அதையே தகுதியாக்கி விட்டார்கள் போல, பாரபக்ஷமின்றி நடப்பார் என்று!. ஜூலை 8 ஆம் தேதி இந்தியா வந்த பின் அவரிடம் ஆகஸ்ட் 15 கெடு நாள் என்று சொல்லப்பட்டது. ஐயகோ! காரியம் கெட்டு விடும்; நடவாது என்றார், பாவம். ஆனால், நேரு, ஜின்னா, மெளண்ட்பேட்டன் ஒன்று கூடி, கெடு கெடு தான் என்றனர். அவருக்கு பின்னணி செய்திகள்/தகவல்கள்/ஆவணங்கள் முறையாகக் கொடுக்கப்படவில்லை. உதவிக்கு திறன்மிக்க ஆள் கிடைக்கவில்லை. ராட்கிளிஃப் கமிஷனில் நான்கு நீதிபதிகள்: காங்கிரஸுக்கு இரண்டு; முஸ்லீம் லீக்குக்கு இரண்டு. அவர்களின் இழுபறியின் விளைவு, சிக்கலான முடிவுகளை ராட்கிளிஃப் எடுக்க வேண்டும். அவர் ஹிந்து/முஸ்லீம்/சீக்கியருக்கு பாரபக்ஷம் காட்டவில்லையெனினும், பிரிட்டீஷ்ஷுக்கு அனுசரித்தார். அரசாணையில், ராட்கிளிஃப் கமிஷன் ‘மற்ற விஷயங்களையும்’ (other factors) கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும் என ஷரத்து. அது பற்றி அவர் என்ன செய்தார்? தெரியாது. அவர் தான், (தன் வழக்கப்படி?) எல்லா ஆவணங்களையும் அழித்து விட்டாரே. ஆனால், எல்லாரும் புகார் வாசித்தார்கள், அவர் ‘மற்ற விஷயங்களையும்’கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று! ஆணைக்கு உட்பட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி ராட்கிளிஃப் தன் திட்டத்தை கொடுத்து விட்டார். மெளண்ட்பேட்டன் ஆகஸ்ட் 15க்கு பிறகு கொடுங்கள் என்றார்! இவர் மறுத்து விடவே, மெளண்ட்பேட்டன் அதை ஆகஸ்ட் 17 ஆம் தேதி அறிவித்தார். பஞ்சாப்பின் 62% நிலம் (51% ஜனத்தொகை) இந்தியாவுக்கு. லாஹூர் பாகிஸ்தானுக்கு, அமிர்தசரஸ் இந்தியாவுக்கு. ஃபெரோஸ்பூர் ஜில்லாவில் கணிசமான பகுதி இந்தியாவுக்கு, குருதாஸ்பூரின் கணிசமான பகுதி, இந்தியாவுக்கு. அது காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவுக்கு உதவும் என்று கூப்பாடு.சரி. உண்மை நிலை யாதெனில், பஞ்சாப் மாநிலத்தை ஹிந்து/முஸ்லீம்/சீக்கியர் தளங்களாக பிரிக்க இயலாது. தேசியம் (nationality) என்று பார்க்கப்போனால், பஞ்சாப்பை கூறு போட இயலாது. அந்த அளவுக்கு எல்லாரும், எங்கேயும். பற்று ஒன்றே.அதிலே பன்க்ச்சர் போட்டுட்டாரே, ராட்கிளிஃப்! ஆக மொத்தம், முதல் கோணல் முற்றும் கோணலாக அமைந்தது. டென்ஷன் குறையவில்லை.
இன்னம்பூரான் 17 08 2011
http://www.unc.edu/depts/diplomat/archives_roll/2002_01-03/chester_partition/chester_partition.html
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 14:26, 24 ஆகஸ்ட் 2011 (UTC) |