அன்றொரு நாள்: ஆகஸ்ட் 14.1மரபு விக்கி இருந்துஇன்னம்பூரான்
வித்து ஓரிடம்; வளரும் விருக்ஷம் வேறிடம். வரலாறு முன் நின்று பேசும்; தள்ளி நின்று, தனி மொழியும் பகரும்; தோழி வாயிலென்று ஒன்றும் உண்டு. ஆக மொத்தம், அலசலும், ஆய்வும், ஆதாரங்களும் திருப்புமுனைகளை மீள்பார்வை செய்வது நலமே. அதற்கான மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதும், சற்றே விட்டேற்றியாக, தள்ளி நின்று வரலாற்றை புரிந்து கொள்வதும், மேலும் நலமே.
இங்கிலாந்தின் பிரதமர் சர்ச்சில் கலோனியத்தில் ஊறின கட்டை. அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட், நவநாகரீக கலோனியத்தை, அமெரிக்காவின் நலனுக்காக ஆதரிப்பவர் என்று கூறினால், அதை மறுப்பது எளிதல்ல. அவர்கள் இருவரும் தலைமறைவாயினர், 1941ல் இம்மாதம், உலகப்போர் மும்முரத்தின் போது. வரலாற்று தலமாயிற்று, ந்யூஃபெளண்ட்லாந்தின் ப்ளசெந்தியா விரிகுடா. அகஸ்டா என்ற அமெரிக்கக் கப்பலும், ‘வேல்ஸ் இளவரசர்’ என்ற பிரிட்டீஷ் போர்க்கப்பலும், அவர்களின் ரகஸ்ய பேச்சு நடந்த இடங்கள். பற்பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டாலும், இங்கிலாந்தின் கலோனிய ஆக்ரமிப்பு மனப்பான்மையை இனம் கண்டு கொண்ட அதிபர் ரூஸ்வெல்ட் தன் மனக்கிடக்கையை சர்ச்சிலுடன் பகிர்ந்து கொண்டார் என்றும், நாஜியின் ஆக்ரமிப்புக்கும், இங்கிலாந்தின் கலோனியத்துவத்துக்கும் ஒப்புமை கூறி, அதை குறை கூறினார் என்றும், அதன் பயனாகவே இந்த பிரகடனத்தின் ஷரத்துக்கள் 2,3 &4 ஆவணப்படுத்தப்பட்டன என்று பிறகு தெரிய வந்தது. அதன் விளைவாகவே, 1947ல் இந்திய விடுதலை, பின்னர் கலோனிய அஸ்தமனம் என்கிறது ஒரு வரலாற்று பதிவு. சுருங்கச்சொல்லின், இரண்டாம் உலகயுத்தத்தில் வெற்றி பெற அமெரிக்க தயவு தேவை, இங்கிலாந்துக்கு. அதற்கான விலை இந்திய விடுதலை என்பது அன்று நடந்த அளவளாவுதலிருந்து தெரிய வருகிறது. வரலாறு தனி மொழியும் பகருமல்லவா! அமெரிக்காவுக்கு இந்தியாவின் ஏஜெண்ட்-ஜெனெரல் ஸர் கிரிஜா சங்கர் பாஜ்பாய், 1941ல் நேருவும், படேலும் அவரை மதித்தனர். அதிபர் ரூஸ்வெல்ட்டின் பிரத்யேக பிரதிநிதி, இந்தியாவுக்கு: கர்னல் ஜான்ஸன், 1941ல் அவருக்கு இடப்பட்ட முதல் பணி: விடுதலைப் போரை பற்றி அறிந்து கொள்வதும், நேரு முதலான தேசீயத்தலைவர்களுடன் அறிமுகம் செய்து கொள்வதும். இது தோழி வாயில். ராஜதந்திர உபாயங்களுக்கு உகந்த குறுக்குப்பாதை. வரலாற்றில் மறவாமல் பதிவு செய்ய வேண்டிய ஒரு முனி புங்கவர், மணி ஐயர் எனப்படும் ஸர்.டாக்டர். ஜஸ்டிஸ். சுப்ரமணிய ஐயர். அகில இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவதியதில் அவருடைய பங்கு மகத்தானது. ஆனால், வெளியில் தெரியாதது. 1920 களிலேயே அமெரிக்க அதிபர் உட்ரோ வில்ஸனுக்கு ஒரு மடல் எழுதி கலோனிய அரசை மாட்டி வைத்தார். அது பற்றி ஒரு நாள் பார்க்கலாமா? http://colnect.com/en/stamps/stamp/95334-WWIIAtlantic_Charter-Series_of_1903-United_States
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 14:05, 16 ஆகஸ்ட் 2011 (UTC) |