அன்றொருநாள்: ஆகஸ்ட் 07:1

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
Enevlope thumb-8-.jpg


சில சமயங்களில் சுற்றி வளைக்காமல் பேசுவதே சாலத்தகும். இந்தியாவுக்கும், பங்களா தேஷ்ஷுக்கும் தேசீய கீதங்களை என்றோ அளித்தவரும், இருண்ட கண்டமென இந்தியா கருதப்பட்ட காலகட்டத்திலேயே - 1913 - நோபல் பரிசு பெற்றவரும், அக்காலத்திலேயே உலகம் போற்றிய கவிஞரும், இலக்கிய கர்த்தாவும், கவின்கலை (aesthetics)/நுண்கலை ரசிகமணியுமான, தனது எழுபது வயதில் உலகம் போற்றும் ஓவியரும் ஆன ‘குருதேவ்’ ரவீந்தரநாத் தாகூர் அவர்கள் அமரரான தினம், ஆகஸ்ட் 7, 1941. வம்சாவளியை பாருங்கள். தாத்தா துவாரகாநாத் தாகூர் ‘ராஜா’. இந்திய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர். ஆகஸ்ட் 7, 1846 அன்று லண்டன் டைம்ஸ், அவரின் வம்சாவளியை புகழ்ந்தது. தந்தை தேவந்திரநாத் தாகூரோ, ‘மஹரிஷி’. ஜனக மஹரிஷி மாதிரி அவரது வாழ்நெறி. நரேந்திரனுக்கு (பிற்காலம் ஸ்வாமி விவேகாநந்தர்) மார்கபந்து. சகோதரர்களில் த்விஜேந்திரனாத் புலவர், இசை அறிஞர்; ஸத்யேந்தரநாத் இந்தியாவின் முதல் ஐ.ஸீ.எஸ். அதிகாரி/புலவர்; ஹேமந்திரநாத் விஞ்ஞானி, யோகி, ஆன்மீக செம்மல்; ஜ்யோதீந்தரநாத் புலவர், கலைஞர், இசை வல்லுனர், நாடக தலைமாந்தன். சகோதரிகளான ஸெளதாமினி, சரத்குமாரி, ஸ்வர்ணகுமாரி,பர்னகுமாரி ஆகியோர் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல. இந்த குடும்பத்தின் மரபு அணுவின் உன்னதம் யாதோ? குருதேவின் 150வது ஆண்டு விழா கொண்டாடும் இவ்வருடம், அவரை பற்றி கட்டுரைகள் வந்த வண்ணம் இருப்பதால், ஒரு சிறிய குறிப்பு மட்டும் வரைகிறேன். பொறுத்தாள்க. 
                                                                                                                            

இனி டிசம்பர் 10, 1913 க்கு டைம் மிஷீனில் பயணம். அன்று குருதேவரை பற்றி நோபல் கமிட்டி தலைவர் ஹெரால்ட் ஹ்யார்னெயின் அறிமுகப்பேச்சின் சாராம்சம்: ரபீந்த்ரநாத் தாகூருக்கு இப்பரிசில் அளிப்பது, ஆல்ஃப்ரெட் நோபல் அவர்கள் தன் உயிலில் உரைத்ததை பூர்த்தி செய்வது என்க...அவரோ தகுதி ஒன்று தான் குறி, தேசம் அல்ல என்று விதித்தவர்...தொலை நாட்டவர், நமக்கு அதிகம் தெரியப்பட்டவர் அல்ல என்பதை நாங்கள் பொருட்படுத்தவில்லை...கீதாஞ்சலி (1912) எங்களை மயக்கி விட்டது...கவிதை இலக்கியத்தின் தலைமாந்தன் இவர் என்று இலக்கிய உலகமே பேசுகிறது...கவிதையில் பெண்மையின் எழிலும், உரைநடையில் ஆண்மையின் மறமும் கலந்த ரசவாதம் என்கிறார், ஒரு ஆங்கில விமர்சகர். சொல்லாட்சியில் கட்டுக்கோப்பு; அபார ரசனை;புதுமை மின்னும் பழமை கலந்த, யாராலும் எளிதில் காப்பியடிக்க முடியாத தனித்தன்மையான படைப்பாற்றல்; அதுவும் அன்னிய மொழியில் கூட...அடுத்து 1913 இல் வந்த ‘தோட்டக்காரன்’, ‘காதலும் வாழ்வும்’, வங்காள வாழ்வியலின் கண்ணாடி’, ‘நிலா’ ‘சாதனா’ போன்ற இலக்கியங்களில், அவருடைய பன்முகங்களை கண்டு வியந்து போனோம்...வாழ்வியலும், ஆன்மீகமும் சங்கமித்தல்லவா ஓடுகின்றன...இத்தகைய வண்ணஜாலங்களும், வித விதமான கருத்துக்குவியல்களும், பாப்பாவின் சேட்டையிலிருந்து ஆத்மாவின் தாகம் வரை எல்லா ஆசாபாசங்களையும், அழுகுற, கனிவு ததும்ப, அற்புதமான சமன்பாட்டுடன் வளைய வரும் படைப்பாற்றலை, யாம் வேறெங்கும் கண்டதில்லை;கேட்டதில்லை...(‘...Seldom indeed in the realm of imaginative literature are attained so great a range and diversity of note and of colour, capable of expressing with equal harmony and grace the emotions of every mood from the longing of the soul after eternity to the joyous merriment prompted by the innocent child at play...’)...ஆஹா! கிழக்குக்கும், மேற்குக்கும் பாலம் கட்டிவிட்டாரே...(சற்றே கிருத்துவ இலக்கியத்தின் தாக்கத்தைப் பற்றி சொன்ன பிறகு)...சுனை ஊற்றெடுத்து வந்து கொண்டே இருக்கிறது. இனி தான் விமர்சனத்தின் தரம் உயரவேண்டும்...தாகூர் ஒரு ஆச்சார்யன்; தீர்க்கதரிசி...தனிமை நாட தவமிழைத்து, அதன் பழத்தை சமுதாயத்திற்கு அளித்து, ஒரு முன்னோடி கல்விச்சாலை அமைத்தவர் அல்லவா...(இனி, என்னுடைய உரைநடை மொழியாக்கம்: ரபீந்தரநாத் தாகூர் தேடிய தெய்வாம்சத்தை பரிபாடலில் நோக்குக: ஒரு நாள் அது பற்றி விவரமாக எழுதவேண்டும், வாசகர்கள் அனுமதித்தால்.)


ஹெரால்ட் ஹ்யார்னெயின் குருதேவரின் கவிதை ஒன்றை அங்கு வழங்குகிறார். முதலில் வேறு வழியில்லாமல் என் மொழியாக்கம். யதுகை, மோனை நிலைகள் கடந்த நிலை: குற்றம் குறைகளை மன்னித்தருள்க.


முடிவற்ற காலம் உன் கையில், தேவனே!
நிமிடமும், வினாடியும் உனக்கேது, பெருமானே!
யுகங்கள் மலர்ந்தும், மடிந்தும் போயின; பகலேது, இரவேது, ஐயனே!
விகசிக்கும் மலர் நீ; பல்லாண்டும் பல கோடி நூறாண்டும் சரணம், சரணமையா!
ஏழை பரதேசி, ஐயா!, தாமஸிக்கலாகாது, ஐயா! ஏணியேறி வாரோமையா!
நேரமில்லை, வாசுதேவா!
காலியாச்சு உன் ஆராதனைக்கூடை, நேரமாக, நேரமாக; அவனுக்கும், இவனுக்கும் கேட்டதை கொடுத்தாச்சு.
அந்தி வேளை! நடை சாத்துவாங்க என்றே, ஓடியாரேன், பயந்து.
சாந்தி! ‘நானிருக்க பயமேன்’ என்றாய்,புருஷோத்தமனே.
அவரின் சொல்லிலே:


Time is endless in thy hands, my lord.
There is none to count thy minutes.
Days and nights pass and ages bloom and fade like flowers. Thou knowest how to wait.
Thy centuries follow each other perfecting a small wild flower.
We have no time to lose, and having no time, we must scramble for our chances. We are too poor to be late.
And thus it is that time goes try, while I give it to every querulous man who claims it, and thine altar is empty of all offerings to the last.
At the end of the day I hasten in fear lest thy gate be shut; but if I find that yet there is time.



இன்னம்பூரான்
07 08 2011

உசாத்துணை:
http://nobelprize.org/nobel_prizes/literature/laureates/1913/press.html


--பவள சங்கரி திருநாவுக்கரசு. 17:25, 11 ஆகஸ்ட் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=அன்றொருநாள்:_ஆகஸ்ட்_07:1&oldid=7846" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 11 ஆகஸ்ட் 2011, 17:37 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,278 முறைகள் அணுகப்பட்டது.