அன்றொருநாள்: ஆகஸ்ட் 04:Iமரபு விக்கி இருந்து
இந்திய விஞ்ஞானி ஹோமி.ஜே.பாபா ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார். சடலம் பல வருடங்களுக்கு பிறகு கிடைத்தது. அமரரான வயது தோற்றம், இளமை. ஏனெனில், பனியில் உறைந்து விட்டது. நினைவுகள் உறைந்துவிட்டால், கால தேவன் என் செய்ய இயலும்? இன்று இருந்திருந்தால், அவள் வயது 83 இருக்கும். என் மனம் அவளை 14 வயது சிறுமியாகத்தான் காண்கிறது. உருவமே அப்படித்தான், கண் முன். இன்றைய தினம், ஆகஸ்ட் 4, 1944 அன்று அவளை அபகரித்து, கொடுங்கோல் அசுரன் எங்கோ கடத்திக்கொண்டு போனான். அநேகரின் ஜன்ம தினம் தெரியாவிடினும், மறைந்த தினம் தெரியும். ஆன் ஃபிராங்கின் பிறந்த தினம் தெரியும்; மறைந்த தினம் தெரியாது. ஆனால், உலகம் முழுதும் அவளை அறியும். இத்தனைக்கும் அவள் சாதனை ஒன்றும் செய்யவில்லை. அடைந்து கிடந்தாள், ஜூலை 6, 1942 லிருந்து ஆகஸ்ட் 4, 1944 வரை. குடும்பமே அஞ்ஞாத வாசத்தில், உயிருக்கு அஞ்சி. செய்த குற்றம், ஜெர்மனியில் யூதர் மதத்தில் பிறந்தது. நெதெர்லாந்துக்கு 1933 இல் ஓடிப் போயும், பயனில்லை. ஜெர்மனி அந்த நாட்டையே கபளீகரம் செய்து விட்டதே. ஒரே வழி, யூதரில்லாதவர்களின் உதவியில் ஒளிந்து வாழ்வது; அது தஞ்சம் கொடுத்தவர்களுக்கும் ஆபத்து. யாரோ துரோகம் செய்து விட, அவளும், மேலும் ஏழு பேர்களும் சிக்கினர், அன்று. ஹாலந்து, போலந்து, ஜெர்மனி என்று பல இடங்களில் உள்ள கொலைக்களங்களுக்கு அனுப்பபட்டனர். ஒருவர் மட்டும் உயிர் தப்பினார், அவள் தந்தை. ஆன்னும் அவளுடைய சகோதரி மர்கோட்டும் பெர்கன் -பெல்ஸன் கொலைக்களத்தில் மார்ச், 1945ல் மாண்டு போனார்கள்.
உசாத்துணை:
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 10:31, 10 ஆகஸ்ட் 2011 (UTC) |
